spot_img

அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

இணையதளப் பரப்புரை – #வெல்வான்_விவசாயி

அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலியில் கவின் செல்வ கணேஷ் என்ற பட்டியலின இளைஞர், தான் காதலித்த பெண்ணின் அண்ணனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி திண்டுக்கல் இராமச்சந்திரன், மயிலாடுதுறை வைரமுத்து, மதுரை அழகேந்திரன், திருப்பூர் வித்யா மற்றும் பலர், கடந்த நாலரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து, சாதிப் பாகுபாடு அடிப்படையிலான ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதை கண்கூடாக நாம் காண்கிறோம்.

கடலூர் மாவட்டத்தில் தனது சொந்த ஊரிலேயே பலர் பார்க்க 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட கண்ணகி – முருகேசன் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு 2025 ஆம் ஆண்டு தான் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

2013ம் ஆண்டு தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட, வட தமிழகம் முழுவதும் பெரும் கலவரம் உருவாகி, பல குடிசைகள் எரிக்கப்பட்டன. இளவரசன் மரணத்திற்கு நீதியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் இன்னும் கிடைத்த பாடில்லை.

2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆதிக்க சாதி அமைப்பினரால் கோகுல்ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த மாவட்ட காவல் அலுவலர் விஷ்ணுப்ரியா மன அழுத்தத்தில் தற்கொலை செய்தார். இவ்வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரித்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.

திருப்பூரில் 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டை சங்கர் பட்டப் பகலில் நட்ட நடுசாலையில் கொலை செய்யப்பட, அவரது மனைவி கௌசல்யா படுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு முதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது நடந்த அந்தக் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில், திமுக அரசு தாமதம் செய்வதாகச் சங்கரின் மனைவி கௌசல்யா தற்போது குற்றம் சாட்டியுள்ளார். இது திமுகவானாலும் அதிமுகவானாலும் சாதி ஆணவப் படுகொலை தொடர்பாக திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

2014 முதல் 2024 வரை மொத்தம் 59 ஆணவக்கொலைகளை, மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது. இவற்றுள் ஆறு வழக்குகள் மட்டுமே நீதிமன்ற விசாரணை வரை சென்றுள்ளன. பல்வேறு ஆணவ படுகொலை வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டிருந்தாலும் ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர், திருவாரூர் அபிராமி, நெல்லை கல்பனா, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி, கண்ணகி – முருகேசன் ஆகியோர் கொலை வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆணவப் படுகொலை தொடர்பாக தண்டனை பெற்ற ஒருவர் சிறையில் இருந்து தற்காலிகமாக வெளிவரும் பொழுது, வரவேற்பு அளித்து கொண்டாடும் சூழல், சாதி ஒழிப்பைச் சூளுரைத்த பெரியார் மண்ணில் தான் நடக்கிறது. சமூகநீதி சமூகநீதி என்று சத்தமிட்டுக் கொண்டே இருக்கும் திமுக ஆட்சியில் தான், சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததற்காக தேசிய கட்சியின் அலுவலகம் ஒன்று சூறையாடப்படுகிறது. சாதிய வர்ணாசிரம கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட பிராமணியத்தை எதிர்த்து ஆட்சி கட்டிலை கைப்பற்றினோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான், சாதி நிறுவனமயப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவே சாதிப் பெருமை பேசும் இயக்கங்கள் வளர்த்து விடப்பட்டிருக்கின்றன. வாக்கரசியலுக்காக வேண்டுமென்றே கொம்பு சீவி தமிழ்க் குடிகளை தங்களுக்குள் மோதவிட்டு, அதிகாரத்தை கையில் வைத்திருக்க சாதிய பாகுபாட்டை ஊட்டி ஊட்டி வளர்த்தெடுத்ததன் விளைவு தான் அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகள்.

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஆணவப் படுகொலைகளுக்குத் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று கூறிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகள் வரை, “இதற்கு தனிச்சட்டம் தேவையில்லை, இருக்கும் சட்டங்களே போதும்” என்று நழுவி வந்தது. கவினின் ஆணவ படுகொலைக்கு பின்னர், பொதுச் சமூகம் தந்த அழுத்தத்தால், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி ஆணையம் மற்றும் தனிச்சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு குழுவை அக்டோபர் 2025-ல் இவ்வரசு அமைத்தது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு சிக்கல் கொழுந்து விட்டு எரியும் பொழுது அதனை நீர்த்துப்போகச் செய்து, கடமை முடிந்தது என கைகழுவ, பல்வேறு குழுக்களை அமைப்பது திமுகவிற்கு வாடிக்கையாகிவிட்டது. ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில் இக்குழு எப்போது தனது அறிக்கையை சமர்ப்பிப்பது? எப்போது ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றப்படுவது?

பாஜக ஆதிக்கம் பெற்றுள்ள ஹிந்தி மாநிலங்களில் மிக முக்கியமான இராஜஸ்தானில் கூட, சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்கும் பொதுவாக ஒரு சட்டம் இல்லாவிடிலும், சக்தி வாகினி வழக்கில் வழிகாட்டி நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் உடனடியாக தனிச் சட்டம் ஒன்று இயற்றுவதை தடுப்பது எது என்று திமுக சொல்லுமா? ஆகஸ்ட் 2025ல் சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே உள்ளன என்றும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி அடிப்படையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்தும் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உண்மையில் சட்டதிட்டங்களை விடவும் மக்களின் மன மாற்றம் தான் நிரந்தரமான தீர்வுகளை இதுபோன்ற சாதிய சிக்கல்களுக்கு ஏற்படுத்தித் தரும். பட்டியலின சமூகங்களுக்கு உள்ளேயே கூட நடந்த திருமணம் காரணமாக ஆணவ படுகொலைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒரே சமூகத்தைச் சேர்ந்த மாரி செல்வமும் கார்த்திகாவும், கார்த்திகாவின் தந்தையால் கொலை செய்யப்பட்டனர். தன் வீட்டுப் பெண்களை மனித உயிர்களாக அன்றி உடைமை பொருளாக எண்ணி, தாமாக முடிவுகளை எடுக்க ஒப்புக் கொள்ளாத ஆணாதிக்க மனநிலை தான், சாதி மத வர்க்க அடிப்படையிலான ஆணவப் படுகொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. எனவே சமூகத்தின் ஒட்டுமொத்த மன மாற்றம் தான், இதுபோன்ற பேரவலங்களிலிருந்து தமிழ்ச் சமூகத்தை காக்கும். தேர்தல் வெற்றிகளுக்கு அப்பாற்பட்ட தொலைநோக்குடைய, உறுதியான செயல்திட்டம் உடைய தலைமையால் தான் அதனைச் சாதிக்க முடியும்.

கவின் ஆணவ படுகொலை நடந்த பொழுது, நெல்லைக்கு நேரில் வராத முதலமைச்சர் ஸ்டாலினையும், இரவோடு இரவாக அறிக்கை அளித்து நகர்ந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியையும், மதுரையில் மாநாடு போட்டாலும் ஆணவப் படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை வாசிக்கக் கூட துணிவற்று செய்தியாளர்களுக்கு ஒப்புக்கு வழங்கி விட்டுச் செல்லும் விஜயையும் வைத்துக்கொண்டு, ஆணவ படுகொலைக்கு எப்படி தனிச்சட்டம் இயற்ற இயலும்? கவின் ஆணவ படுகொலைக்கு மட்டும் இன்றி, தமிழ் சமூகத்தைக் கூறு போடும் பல்வேறு சாதிய சிக்கல்களுக்கு எதிராக, உறுதியான குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் ஒழிய இச்சிக்கலுக்கு தீர்வு கிடைப்பது கானல் நீரே!

திருமதி. விமலினி செந்தில்குமார்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles