டிசம்பர் 2023
அமீரக புத்தகத் திருவிழாவில் சிந்தனை விருந்தகம் பதிப்பகம்
ஐக்கிய அரபு அமீரக நாட்டில், நாற்பது ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் (உலகின் மூன்றாவது பெரிய புத்தகத் திருவிழா), பத்து ஆண்டுகளாகத் தமிழகத்திலிருந்து பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும் தமிழ்த்தேசியக் கருத்தியல் சார்ந்த புத்தகங்கள், அந்நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடுகளாலோ அல்லது தமிழ்த்தேசிய நூல்களுக்கான சந்தை குறித்த ஐயம் காரணமாகவோ அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்படாத சூழல் இருந்து வந்தது.
நமக்கான தளத்தினை நாமே தான் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, செய்தித் தொடர்பாளர் அண்ணன் சே. பாக்கியராசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், சிந்தனை விருந்தகம் பதிப்பகத்தாருடன் இணைந்து, செந்தமிழர் பாசறை வளைகுடாவின் தலைவர் அண்ணன் திருமாறன் அவர்களின் முன்னெடுப்பில், செந்தமிழர் பாசறை அமீரக உறவுகளின் உதவியோடு, இந்த ஆண்டு சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நமது அரங்கு அமைப்பதற்கான அனுமதியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் முறைப்படி பெற்றோம்.
உரிய நேரத்தில் சிந்தனை விருந்தகம் திரு. சரவணன் தங்கப்பா அவர்கள் புத்தகங்களை ஏற்பாடு செய்ய, ஏ.ஆர் ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் அண்ணன் இக்பால் அவர்கள் இரண்டு நாட்களுக்குள் அரங்கத்துள்ளே அவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். நமது பொறுப்பாளர்கள் தெளிவான திட்டமிடல் மற்றும் சிறப்பான செயலாக்கத்தினால் கண்காட்சி தொடங்குவதற்கு முதல் நாளே அனைத்து புத்தகங்களையும் சீரிய முறையில் அடுக்கி அரங்கினை ஆயத்தம் செய்து விட்டார்கள்.
அரங்கிற்குள் ஐயன் திருவள்ளுவர், ஐயா நம்மாழ்வார், மகாகவி பாரதியார், சிலம்புச்செல்வர் ம.பொ.சி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசான் ஐயா பெ.மணியரசன், அண்ணன் செந்தமிழன் சீமான் ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டன. அமீரகத் தமிழ் வாசகர்களுக்கு வரலாற்றாய்வாளர் மன்னர் மன்னன், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ஆய்வறிஞர் குணா, ஆசான் ம.செந்தமிழன், ஐயா பெ. மணியரசன், அண்ணன் சீமான் ஆகியோரது புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள நமது விற்பனையகம் குறித்த அனைத்து தகவல்களும் அமீரக ரேடியோ கில்லி பண்பலையிலும், நாம் தமிழர் இணையதளப் பாசறையினரால் முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டன.
எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமான வாசகர்கள், நமது அரங்கிற்கு வருகை தந்து தமிழ்த்தேசிய கருத்தியல் சார்ந்த நூல்களை பெருமகிழ்வோடு வாங்கிச் சென்றார்கள்.
வாசகர்களுக்கு அடுக்கப்பட்டிருந்த அனைத்து புத்தகங்களைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து அவர்களுக்குத் தேவையான நூல்களை அறிமுகம் செய்யும் பணியை சிறப்பாகச் செய்தார், தாயகத்திலிருந்து வந்திருந்த தம்பி ஆறுமுகம் ஆதிமூலம்.

தமிழ்த்தேசிய அரசியல் மீது மக்களின் பார்வை ஆழமாகப் பதிந்து கொண்டிருக்கிறது என்பதனையும், நாம் எடுக்கும் சரியான முன்னெடுப்புகளுக்கு வெகு மக்களின் ஆதரவு கட்டாயம் உண்டு என்பதனையும் நன்கு உணர வைத்துள்ளது இந்த முதல் முயற்சி. புத்தக வெளியீட்டிற்காக வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.வைகைச் செல்வன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. திருச்சி சிவா ஆகியோர் நமது அரங்கிற்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். சொல்லி வைத்தாற்போல இருவரும், “நம்ம தம்பியின் அரங்கமா?” எனக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
நவம்பர் 11 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இடும்பாவனம் கார்த்திக், நமது அரங்கிற்கு வருகை தந்து, வாசகர்களுக்கு அவர் எழுதிய புத்தகமான “சீமான் கேள்வி பதில்கள்” எனும் நூலைக் கையெழுத்திட்டு வழங்கினார். மேலும் விரும்பி எடுத்தவர்களுக்கு ஆய்வறிஞர் ஐயா குணா அவர்களின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எனும் நூல் விலையில்லாமல் வழங்கப்பட்டது.
நம்முடன் மேலும் ஆறு பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலிருந்து இம்முறை அரங்கம் அமைத்திருந்தார்கள். கொள்கையளவில் அவர்களுடன் நெருங்க இயலவில்லை என்றாலும் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்தோம்; அவர்களின் அனுபவம் பெரிது என்பதால், தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்தும் கொண்டோம். வெளிப்படையாக நமது அரங்கில் அதிகளவில் விற்பனையான புத்தகங்கள் குறித்த தகவல்கள், விற்பனை விவரங்களை அவர்களிடம் பகிர்ந்து, தமிழ்த்தேசிய புத்தகங்களுக்கான தேவை, சந்தை குறித்து தகவல்களை வழங்கி, இனி வரும் ஆண்டுகளில் அவர்களது அரங்கிலும் விற்பனைக்கு வைக்குமாறு கோரினோம்.
நிச்சயம் வரும் ஆண்டுகளில் அனைத்து அரங்குகளிலும் ஐயா பெ.மணியரசன், மன்னர் மன்னன், ஐயா குணா, நம்மாழ்வார் புத்தகங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்.
வாய்ப்பினை வழங்கிய சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி அமைப்பாளர்களுக்கு நன்றி!!!
ஒன்றுகூடி உழைத்திட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
திரு. இரவிவர்மன்,
செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.