ஆகத்து 2022
அரச பயங்கரவாதத்தின் சான்று செஞ்சோலை படுகொலை…
செஞ்சோலை தோன்றிய வரலாறு
10.7.1990ம் ஆண்டு வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வீரகாவியம் படைத்த கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், அவர்கள் தன் இலக்கு நோக்கி விரையுமுன் தலைவர் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட தனது ஆசை, “அண்ண. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும். அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர். என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில் அநாதைகளாக வாழுறாங்கள்.அப்பா, அம்மா இல்லாம, ஆதரவில்லாம சொந்தக்காரரின் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம், படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும். துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ண. “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்கு வைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை.” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தேசியத் தலைவரால், கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன் அவர்களின் கனவை நினைவாக்க உருவாக்கப்பட்டதே செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, அன்புச்சோலை, வெற்றிமனை. லெப். கேணல் நவம் அறிவுக்கூடம் போன்றவை.
1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன் அவர்களின் நினைவு நாளில், யாழ்ப்பாணத்தில் சிறிய இடம் ஒன்றில் 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. பாடசாலையின் செயற்பாடுகள் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தபோது மாணவியர் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே செஞ்சோலைப் பெண் குழந்தைகளுக்காக வேண்டி யாழ் சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு ஐப்பசி 22ம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது 23 பிள்ளைகள் கொண்ட பூஞ்சோலையாகத் திகழ்ந்த செஞ்சோலை, காலப்போக்கில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது. எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவு ஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும் என்ற தனது சிந்தைக்குச் செயல்வடிவம் தந்தார் தலைவர். அதன்வழி அவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்பட்டனர் குழந்தைகள், குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி நடக்கிறார்கள். பல்வேறு சூழலிருந்து இவர்கள் வந்திருந்தாலும் ஒரே குடும்பமாக செஞ்சோலைக் குடும்பத்தில் இணைந்துள்ளார்கள். முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவுயூட்டப்பட்டது. கைக் கலைகள் பலவும் அவரவர் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப கற்பிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் பல்வேறு கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றையும் விரும்பி மேற்கொண்டனர் செஞ்சோலை மாணவியர், நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன. இந்த சமயம் போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்பந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
இலங்கை அரசபடை பலாலியிலிருந்து முன்னகர்வுகளை மேற்கொண்டு தாக்குதலை உக்கிரப்படுத்திய வேளை மக்களோடு மக்களாக சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய் போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993, 1994, 1995ம் ஆண்டுக் காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவில்லிலும் செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டாலும் அதுவும் நீடிக்கவில்லை. 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து மல்லாவியில் வடகாடு முல்லைத்தீவு வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளியுளம் கிளிநொச்சி என ஓடி ஓடிக் களைத்தாலும் மாணவியரின் கல்விச் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன. 2006 ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி காலை 7 மணியளவில் இனவெறி பிடித்த இலங்கை இராணுவம் நடத்திய, வல்லிபுனம் செஞ்சோலைப் படுகொலை நிகழ்வு ஈழவிடுதலைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது…
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் செஞ்சோலை வளாகம் என்பது தமிழீழத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த பகுதி அது, மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த பகுதி. அந்த வருடம் (2006) ஜனவரியில், செஞ்சோலை வளாகத்தில் முன்பு இயங்கிக் கொண்டிருந்த சிறுமியர் இல்லம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே சிறுமியர் இவ்லமாக செயற்பட்டதாலும், மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இருந்தமையாலும், வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படும் இடமாக மாற்றப்பட்டு இங்கு பல பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த வளாகம் ஐ.நா. அமைப்பின் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும் இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 20ந்தேதி வரை கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலையங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளுக்கும் வேறு கல்வி நிலையத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கும் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது.
பயிற்சிப்பட்டறையின் 4 ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி காலை 7.00 மணியளவில், மாணவிகள் ஒன்று கூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் அப்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். செஞ்சோலை வளாகத்தை சுற்றி வனைத்த அப்போது இலங்கை இராணுவத்தின் கிபீர் விமானங்கள் குண்டுகளை அடுத்தடுத்து விசின. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது மாணவிகள் வாயிலின் ஊடாக ஓடமுடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்துக்குள் நான்கு திசைகளுக்கும் போடப்பட்டு ஆறாவதுகுண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது மாணவிகள் எந்த திசை ஊடாகவும் வெளியே ஓடமுடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப்பட்டது. சம்பவ இடத்திலேயே 61 பாடசாலை மாணவிகளின் உயிரிழந்தனர். 155 அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தனர். மாணவிகளின் மரணஓலம் வானைப் பிளந்தது. பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப்போய் இடந்தன. துள்ளிக்குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாக கிடந்தன. கனவுகளை சுமந்த நெஞ்சு, குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக்கொண்டு கிடந்தது.
இந்த தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து, இப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார். செஞ்சோலையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார். மகிந்த ராஜபக்ச புள்ளலையுடன் பதில் அளித்தார். அவர்கள் புலிகள். நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் கொன்றிருக்கிறோம். இந்த தாக்குதல் சரியானது. இந்த தாக்குதல் எனக்கு 100 வீதம் திருப்தி தருகிறது என்றார். அதேபோல் அப்போது பதவியில் இருந்த இராணுவப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல இது விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் குழந்தைப் போராளிகள் என்றும் வாய் கூசாமல் கூறினார். சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகளான, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அணைவரும் அப்பாவி மாணவிகளே என்பதை உறுதி செய்தன.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் இவர்கள் என்பதையும், இவர்கள் தலைமைத்துவப் பயிற்சிக்காக சென்றமையும் கிளிநொச்சி வலையக் கல்வி அலுவலகம் உறுதி செய்தது. அத்துடன் அதற்கான முறையான பதிவுகள், கடிதங்கள் யாவும் பேணப்பட்டிருந்தன. போரில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுதி செய்தது. இது இலங்கை இராணுவத்தால் திட்டமிடப்பட்டு மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கு பல சான்றுகள் இருந்தும் இப்படுகொலைக்கு இன்றுவரை நியதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் சர்வதேச சிறுவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என எவையும் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன.
திரு. குப்புசாமி
செய்தித் தொடர்பாளர்
செந்தமிழர் பாசறை, சவூதி அரேபியா.