spot_img

அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க வள்ளலார்

சனவரி 2023

அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நின்றவர். பசி என்று வந்தவருக்கு உணவளித்து  மகிழ்ந்தவர். அன்பே சிவம் என்ற கருத்தையும், சித்தர்களின் யோக முறைகள் சார்ந்த ஒருமை நோக்கத்தையும் நடைமுறையில் இணைத்தவர் வள்ளலார். ராமலிங்க அடிகளார் கல்லாது உணரவும்  சொல்லாது உணரவும் உணர்த்தவும் வல்லவர். சிறு வயதிலேயே பள்ளிக்குச் செல்லாமல் யாரிடமும் கல்வி கற்காமல் உலகில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்.

இராமலிங்க வள்ளலார் பாடிய 6000 பாடல்கள் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. வள்ளலார் தொடங்கிய சத்திய ஞான சபை  இன்றும் வடலூரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அவர் எரியவிட்ட அடுப்பு  150 வருடங்களாக  அணையாமல் பாதுகாக்கப்பட்டு உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. எல்லா உயிரையும் தன்னுயிர் போல் எண்ண வேண்டும் என்று சொன்ன இராமலிங்க வள்ளலார், அக்டோபர் 5, 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வை கைக்கொள்ள வேண்டும் என்று கூறியவர். கடவுள் ஒருவரே; அக்கடவுளை ஒளிவடிவமாய் வழிபட வேண்டும் என்று உணர்த்தியவர். இராமலிங்க அடிகள் சாதிய பாகுபாடுகளை மறுத்தார். இந்து மதத்தில் இருந்து வந்த ஆசாரங்களை ஒப்புக்கொள்ளாமல் எந்த வழிபாட்டு சடங்குகளையும் கடைபிடிக்காமல் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டை முன் வைத்தார்.

1858 முதல் 1867 வரை கருங்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்கி இருந்தபோது அருகில் உள்ள வடலூரில் பார்வைகுடிபுரம் என்ற கிராமத்து மக்களிடம் 800 காணி நிலத்தை தானமாக பெற்று, மே 23, 1867இல் வைகாசி 11ஆம் தேதி அங்கு சமரச வேத தர்மசாலையை தொடங்கினார் பின்பு அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்தியதர்மச் சாலை என பெயர் மாற்றம் செய்தார். உலகில் வேறு எங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. இந்த தர்மச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி மத மொழி இனம் நாடு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவருக்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது. உணவிட்டமையால் இராமலிங்க அடிகளார் வள்ளலார் என அழைக்கப்படலானார். வள்ளலாரின் இரக்கம் பசித்தவனோடு மட்டும் நிற்கவில்லை;  கள்வனோடும் கனிவை காட்டுகிறார். கள்வன் ஒருவன் வள்ளலாரின் காதில் இருந்த ஒரு கடுக்கனை கழற்றினான். வள்ளலார் இன்னொரு காதில் இருந்த கடுக்கனை  கழற்றி கொடுத்து, அப்பா இவற்றை விற்று உன் வறுமையை போக்கிக் கொள்; இனி திருடாதே என்று உபதேசித்தார்.

ஒரு முறை மொழிகளுக்கெல்லாம்  தாய்மொழி சமஸ்கிருதம் தான் என்றார் சங்கராச்சாரியார். சட்டென்று வள்ளலார் உலகிற்கு தந்தை மொழி தமிழ் என்றார். சிறு தெய்வங்களுக்கு உயிர் பலியிடுவதை தடுத்து கருணையே வடிவான கடவுள் யாருடைய உயிரையும் பலி கேட்பதில்லை என்று வள்ளலார் உயிர்க்கொலையை தடுத்து நிறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்பது எல்லா புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த இராமலிங்க அடிகள் அன்னதான சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.  1872 தை மாதம் 13 ஆம் நாள் தைப்பூச தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

1874 ஆம் வருடம் தை மாதம் 19 ஆம் நாள் புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் ஆசி வழங்கினார். அன்று இரவு சித்தி வளாகத் திருமலை திருவறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி அவரது பிரதம சீடர்களான தொழுவூர் வேலாயுதமும் மற்ற தொண்டர்களும் மூடப்பட்ட அறையின் வெளிப்புற கதவை பூட்டினார்கள். அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் வந்து பிரார்த்தனை செய்ய தகுந்த இடம் இது. எண் கோண வடிவிலான இந்த கட்டிடத்தை வள்ளலாரே வடிவமைத்தார். மையத்தின் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன் மீது பன்னிருகால் மண்டபமும் ஒன்றுக்குள்  ஒன்றாக உள்ளன. நாற்காலி மண்டபத்தின் மையத்தில் தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார். மண்டபத்தில் ஒரு சுற்று பிரகாரமும் பக்தர்கள் அமர்ந்து ஆண்டவனை தரிசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. வடலூரில் தலைமை நிலையம் இருந்தாலும் உலகமெங்கும் அவரது கொள்கையை பின்பற்றுகிறவர்கள் வடலூர் போல அன்ன சாலைகளை நடத்துகிறார்கள்.

சாதிய ஆதிக்கம் பழமைவாதம் ஒற்றைப்படையாக்கம் ஆகியவற்றுக்கு எதிரான எழுச்சியாக உருவானதே இராமலிங்க வள்ளலாரின் குரல். அவர் ஆலய வழிபாடு சடங்குகளுக்கு எதிராக தனி மனிதனின் பக்தியையும் யோக சாதனைகளையும் முன் வைத்தார். மத ஆதிக்கத்திற்கு எதிராக சமத்துவ கருத்துக்களையும் தனிமனித ஆன்மீக மீட்பையும் முன் வைத்தார் வள்ளலார். நவீன ஜனநாயக யுகத்திற்குரிய நவீன ஆன்மீகம். ஆகவே தான் அவரை அப்போதும் பின்னரும் இருந்த முற்போக்காளர்களும் சீர்த்திருத்தவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

இராமலிங்க வள்ளலார் தன் உணவளிக்கும் சேவையை தொடங்கிய காலகட்டத்தில் இந்தியா எங்கும் பெரும் பஞ்சம் நிலவியது. வங்காளம் முதல் தமிழ்நாடு வரை லட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் மடிந்தனர். இந்தியாவில் இருந்த மத நிறுவனங்கள் பஞ்சத்துக்கு எதிரான நிவாரண பணிகளில் பெருமளவில் ஈடுபடவில்லை. அன்றிருந்த மத ஆச்சாரங்களும், தீண்டாமை முதலிய சாதிய விலக்குகளும், கொள்கைகளும் அதற்கு தடையாக இருந்தன. இராமலிங்க வள்ளலார் தன் உணவுக் கொடை வழியாக அனைத்து அறங்களிலும் முதன்மையானது எளியோருக்கு உணவிடுவது என வலியுறுத்தினார். இன்னொரு மனிதன் பட்டினியாக இருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது பெரும் பாவம் என கூறினார். எத்தனை வழிபாடுகள் செய்தாலும் அந்த பழி கொண்டவர்களுக்கு மீட்பில்லை என்றார். அன்று வழிபாடுகள் சடங்குகளையே ஆன்மிகம் என எண்ணி இருந்த மரபுவாதிகளுக்கு அதன் வழியாக காலத்துக்கு உகந்த அழுத்தமான செய்தியை உணர்த்தினார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வடலூர் சபையில் உணவு அளிக்கப்பட்டது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாடு முழுக்க ஏராளமான உணவுக் கொடைகள் தொடங்கப்பட்டன. வள்ளலார் அளித்த உணவுக் கொடை என்பது மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மத நம்பிக்கையின் அறிவிப்பு. இந்திய அரசு இராமலிங்க வள்ளலாருக்கு 17-ஆகஸ்டு 2007ல் அஞ்சல் தலை வெளியிட்டது. வள்ளலார் உணவுக் கொடை கொடுத்த வள்ளல் –  தமிழ் சமயத்திற்கும் பண்பாட்டிற்கும்  சமூகத்திற்கும் இவர் ஆற்றிய பணி காலத்தை வென்று நிற்கும்.

திருமதி. இராஜலட்சுமி கருணாகரன்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles