spot_img

அவதூறு மலைகளின் மீதேறி அரியணை ஏறும் தமிழ்த்தேசியம்!

செப்டம்பர் 2025

அவதூறு மலைகளின் மீதேறி அரியணை ஏறும் தமிழ்த்தேசியம்!

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக இருக்கப்போகிறது என்பதை அண்மை நிகழ்ச்சிகள் காலக் கண்ணாடியாக நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமிரில் தமிழ்நாட்டு ஊடகங்களையெல்லாம் காசால் அடித்து காலடியில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திமுக, தனக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு சிக்கலையும் மூடிமறைத்து மக்களிடம் சேராவண்ணம் இவற்றைப் பயன்படுத்தி வருவதை விவரம் தெரிந்தவர்கள் விரிவாக அறிவார்கள். ஆயினும் நாளுக்கு நாள் இந்த அடிமை ஊடகங்களின் செயல்பாடுகள், திமுகவின் அடிமட்ட உடன்பிறப்புகளினும் கீழாகச் சென்று விட்டதை நினைக்கையில் ஆத்திரம் அதிகமாகிறது.

நாட்டை ஆளும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளை எவ்விதம் அணுகுகிறார்கள், எத்தகைய தீர்வுகளை முன்வைக்கிறார்கள், எவ்விதமான ஆட்சி நடத்துகிறார்கள் என அறிய வேண்டியது குடிமக்களின் கடமை. ஆனால் அன்றாடத் தேவைகளின் பொருட்டு நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் எளிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாக இன்றும் இந்திய ஒன்றியம் இருக்கிறது. எனவே மக்களுக்குப் புரியும் விதத்தில் மக்களாட்சியின் செயல்பாடுகளை விளக்குவதே ஊடகங்களின் மிக முக்கியமான பணி. ஆனால் அவை அதிகாரத்தின் ஊதுகுழல்களாக, அரசுகளின் கொடிய முகங்களை மறைக்கும் முகமூடிகளாக மாறிக்கிடக்கின்றன.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த இந்திரா காலக் காங்கிரசிடமிருந்து பாடம் கற்ற பாஜக, ஊடகங்களைத் தன்வயப்படுத்தும் கேவலத்தில் உச்சநிலை தொட்டது. அதன் அடியொற்றி திமுகவும் ஊடகங்களை கருத்துருவாக்கங்களைக் கட்டுப்படுத்தும் அடியாட்களாகப் பயன்படுத்துகிற வித்தைகளில் கரைகாண முயல்கிறது. எனவே முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் பென் நிறுவனத்தை வைத்து அச்சு மற்றும் காட்சியூடகங்களின் மூலம் தங்களின் குறைகளை ஒளித்து மறைக்க முயல்கிறது திமுக. அதன்படி இவ்வூடகங்களும் தர்க்க உரையாடல் நிகழ்வுகளில் எல்லாம் தமிழ்நாட்டின் முக்கியமான சிக்கல்களைப் பற்றிப் பேசாது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் கூட்டணிக் கணக்குகள் பற்றியே பேசுவதும், எதிர்க்கட்சிகளின் உட்கட்சிக் குழப்பங்களைப் பெரிதுபடுத்தி விவாதப் பொருளாக்குவதுமான வெட்டி வேலையைச் செய்து வருகின்றன. இதனால் மக்கள் பிரச்சனைகள் உரிய கவனம்பெறுவதும், தீர்வை நோக்கிய செயல்பாடுகளும் தடுத்து முடக்கப்படுகின்றன. அதோடு திமுக அரசின் தவறுகளை, நிர்வாகத் திறனின்மையை, , இயலாமையை, கையாலாகாத்தனத்தைத் தொடர்ந்து தக்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசிவரும் சீமான் அண்ணன் அவர்களைப் பற்றி நாளும் பொழுதும் அவதூறு பரப்புவதையும் தொடர்ந்து செய்துவருகின்றன.

மரபார்ந்த ஊடகத்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்த நிலையில், தொழில்முறை ஊடகங்கள் அல்லாத சமூக ஊடகங்கள் மூலம் தான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் செய்திகளை அறிய நினைக்கின்றனர். அங்கும்
பொய்ச்செய்திகள், போலி கருத்துக்கணிப்புகள் என திமுகவின் இணையக் கூலிப்படையினர் கருத்துத் திணிப்பு செய்கின்றனர். இயல்பிலேயே ஒடுக்கப்பட்டோர், பெண்கள், சமூக ஆர்வலர்கள், அறிவாளுமைகள் மீது ஒவ்வாமை கொண்ட திமுக இணைய உபிக்கள் மட்டமான பதிவுகள் மற்றும் கெட்டவார்த்தைப் பின்னூட்டங்களின் மூலம் அருவெறுக்கத்தக்க ஆபாசத்தை அள்ளித் தெளிக்க, சராசரி மக்கள் முதல் அறிஞர்கள் வரை பலரும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதுவும் நாம் தமிழர் கட்சி மீதான இவர்களின் வன்மத்துக்கு இது தான் இவ்வளவு தான் என்ற வரைமுறையே இல்லை. இதற்கென முறைப்படுத்தப்பட்ட செயல்முறையுடன் ஒரு பெரும் கட்டமைப்பே வலையொளி, கீச்சு, முகநூல் மற்றும் படவரி தளங்களில் இயங்குகிறது. இத்தனை வெறுப்புப் பரப்புரைகளைத் தாண்டித் தான் நாம் தமிழர் கட்சி தனது களச்செயல்பாடுகள் மூலம் பற்பல சதிகளை முறியடித்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வருகிறது.

அருந்தமிழ் வழங்கும் நம் தாய்த்திருநாடாம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பல உள்ளன. சாதிக்கும் சாமிக்கும் பரிந்து பேசும் கட்சிகளுக்கு மத்தியில் மண்ணுக்கும் மக்களுக்குமாக சமரசமற்றுப் போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. அற்பக் காசைக் காட்டி, இலவசம் சலுகை என ஆசை வார்த்தை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் ஏறி நாட்டைச் சூறையாடிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு நடுவே, துருவ விண்மீனாகத் தோன்றி, மொழி, இனம், நாடு, உரிமை, கடமை, கனவு, இலக்கு என முற்றிலும் புதிய பாதை ஒன்றைத் தானே உருவாக்கி அதில் புலிப்பாய்ச்சலாக வளர்ச்சியைப் பதிவு செய்தபடி தமிழ்நாட்டின் வாக்கரசியல் வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் கட்சி தான் நாம் தமிழர்.

அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆட்சி அதிகார அரசியல் அனுபவம் பெற்றிருந்தாலும், இடைத்தேர்தலில் போட்டியிட்டுப் பின்னடைவைச் சந்திக்க விரும்பாத பழைய கட்சிகளுக்கும், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நேரடிக் களத்தில் இறங்கினால் தனது பிம்ப அரசியல் சாயம் வெளுத்துப் போய்விடும் என்று இடைத்தேர்தல் என்றால் கூட பயந்து பின்வாங்கும் புதிய கட்சிகளுக்கும் நடுவே, 2016க்குப் பின் நடந்த எந்தத் தேர்தலிலும் புறங்காட்டாது, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் சந்திக்கும் துணிவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உண்டு. வென்றாலும் தோற்றாலும் மீண்டும் மீண்டும் தன்னைத் தோற்கடித்த மக்களுக்காகவே உழைக்கத் தலைப்பட்டு, அவர்தம் போராட்டங்கள் அத்தனையிலும் முதல் ஆளாய் முன்னணியில் நின்று உரிமைக்குரல் எழுப்பும் பெருந்தன்மையும் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கே உரிய தகைமை என்பதை உலகறியும்.

மீனவர்கள் தொடங்கி மாணவர்கள் வரை, அரசுப்பணியாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள் வரை, உழவர்கள் தொடங்கி மருத்துவர்கள் வரை, பெண்கள் தொடங்கி குழந்தைகள் வரை தமிழ்நாட்டில் யாருக்கேனும் ஒரு சிறு சிக்கல் என்றால், ஆழ்ந்த அறிவோடும், தெளிந்த தரவுகளோடும், தொலைநோக்குப் பார்வையோடும், சீரிய கருத்துக்களோடும், நேர்மையான நிலைப்பாட்டோடும் வெளியாகும் அண்ணனின் அறிக்கைகள், பல நேரங்களில் எளிய மக்களின் துயர் துடைத்துள்ளன என்பதற்கு செஞ்சி கோனேரிக்கோன் கோட்டை சம்பவமே அண்மைக் கால எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டு அரசே சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய குருதிக்கொடைப் பாசறை, பனை விதைத்தல், மரம் நடுதல், குளம் தூர்வாரல் என இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளைச் சோர்வின்றிச் செய்தும், பல நாசகாரத் திட்டங்களை நிறுத்தியும் வைக்கும் சுற்றுச்சூழல் பாசறை, கோடிகளைக் கொட்டியும் எட்ட முடியாத உயரங்களை அனாயாசமாக ஓரிரு மணித்துளிகளில் எட்டிவிட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாகும் தகவல்தொழில்நுட்பப் பாசறை, அசாத்திய திறனோடும் துல்லியமான தரவுகளோடும் எதிர்த்தரப்பைக் கருத்தியலால் வீழ்த்தி விளையாடும் பேச்சாளர்களைக் கொண்ட மாணவர் பாசறை, தமிழகத்தின் ஒரு ஓரத்தில் நடக்கும் தெருமுனைக் கூட்டமானாலும், மக்கள்வெள்ளம் அலையடித்துத் திணறும் பொதுக்கூட்டமானாலும், தொலைக்காட்சிகள் நடத்தும் விவாதம் மற்றும் பட்டிமன்றமானாலும் காத்திரமான கருத்துருவாக்கங்களோடு முழங்கும் தமிழ்த்தேசியக் கொள்கைப் போராளிகளைக் கொண்ட இளைஞர் பாசறை என சுழன்று சுழன்று இயங்கி மக்களரசியல் களமாடும் தன்மையது நாம் தமிழர்.

ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே இவை. மேலும் மகளிர் பாசறை, தமிழ் மீட்சிப் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை, பாதுகாப்பு & பேரிடர் மீட்புப் பாசறை, வழக்கறிஞர் பாசறை, வணிகர் பாசறை, மீனவர் பாசறை, உழவர் பாசறை, தொழிலாளர் பாசறை, மருத்துவப் பாசறை, செந்தமிழர் பாசறை, விளையாட்டுப் பாசறை, வீரக்கலை பாசறை, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை, தமிழ் ஆட்சிமொழிப் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பணியாளர் பாசறை, தமிழ்ப்பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை, மழலையர் பாசறை என பல்வேறுபட்ட களப்போராளிகள் தத்தமது தளங்களில் நூற்றுக்கணக்கான நற்பணிகளை பொதுநல நோக்கோடு செய்துவருகின்றனர்.

மேற்கண்ட பத்திகளில் சொல்லப்பட்டவை ஒரு சிறு துளி மட்டுமே. இவையன்றி இன்னும் பலப்பல முன்னெடுப்புகளைச் செய்து வரும் நாம் தமிழர் கட்சி பற்றி அவதூறுகளை மட்டுமே வெளியிடும் ஊடகங்கள், தான் சார்ந்த துறைக்கான அறத்தினின்று வழுவி நிற்பது வெட்கக் கேடு. ஆண்ட ஆளும் கட்சிகளை, தேசிய திராவிடக் கட்சிகளின் திருட்டுத்தனத்தைத் தனது ஒவ்வொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் தோலுரிக்கும் சீமான் அண்ணனைப் பற்றி இந்த ஊடகங்கள் அண்மையில் அதிகம் காட்டியது முன்னாள் நடிகையொருவர் தொடுத்த வழக்கு மற்றும் தலைவருடன் எடுத்த புகைப்படம் போலி போன்ற அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டுகள் பற்றித்தான்.

செஞ்சிக் கோட்டை மீட்புப் போராட்டத்தில் பொதுக்கூட்ட மேடையிலிருந்து இறங்கிவிட்டார், ஊடகவியலாளர்களை அடித்துவிட்டார், காணொளியில் குரல் பொருந்தவில்லை, காமராசர் அண்ணா இறப்பு பற்றி தவறான தகவல் கொடுத்து விட்டார், கிறித்தவர்களுடனான உரையாடலில் சினங்கொண்டு ஏசினார் என நொடிக்குநொடி அலறும் ஊடகங்கள், துளியும் ஓய்வின்றி அடுத்தடுத்து அண்ணன் நடத்திய போராட்டங்கள் பற்றி விவாதித்ததுண்டா?

2025 சனவரி முதல் இன்று வரை அண்ணன் நடத்திய போராட்டங்களின் பட்டியல் இது. வள்ளலார் பெருவெளி மீட்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை, மீனவர் வாழ்வுரிமை, மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் பொதுக்கூட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு & பஞ்சமி நில மீட்பு, மீனவர் வாழ்வுரிமை, வக்ப் வாரியச் சட்டத்திருத்த எதிர்ப்பு, அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு, பனை கனவுத் திருவிழா, தமிழில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு, தடையை மீறி கள் இறக்குதல், ஆடு மாடு மேய்ச்சல் நிலவுரிமை மீட்பு, தேவேந்திர குல வேளாளர் பட்டியலின வெளியேற்றம், மலையேறி மாடு மேய்த்தல், தூய்மைப் பணியாளர் கோரிக்கைகள், நெசவாளர் வாழ்வுரிமை, கவின் ஆணவப்படுகொலை, காவலர்களால் கொல்லப்பட்ட அஜீத்குமார், செம்மணி படுகொலை, செஞ்சி கோனேரிக்கோன் கோட்டை மீட்பு, மரங்களின் மாநாடு ஆகியவை தொடர்பான போராட்டங்களோடு, புலவர் கலியபெருமாள், ஆனைமுத்து ஐயா, அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், ம.சி.இராசா உள்ளிட்ட பல தமிழ்ப்பேராளுமைகளுக்கான நினைவேந்தல் உள்ளிட்ட பல கூட்டங்கள். இவை அண்ணன் முன்னின்று நடத்திய நிகழ்வுகள் மட்டுமே! தெருமுனைக் கூட்டங்கள், கொள்கை விளக்கக் கூட்டங்கள், வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள், நினைவேந்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், பிற கட்சி விழாக்கள் போன்றன தனிக்கணக்கு. நாம் தமிழர் இவற்றை நடத்தியிருப்பது குறித்து இந்த ஊடகங்கள் இதுவரை எத்தனை செய்திகளை வெளியிட்டுள்ளன?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சிக்கும், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவு பெற்ற அரசியல் தலைவருக்குமே இந்த நிலை என்றால், மிகவும் எளிய, எந்தப் பின்புலமுமற்ற அப்பாவிப் பொதுமக்களை இந்த அதிகாரத்துக்கு வாலாட்டும் ஊடகங்கள் எப்படி நடத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எப்படிப்பட்ட அடக்குமுறை என்றாலும் சட்டப்படி அதை எதிர்கொண்டு, இன்றுவரை சனநாயக முறையில் மட்டுமே எதிர்வினை ஆற்றும் அண்ணனது நிதானமும் நேர்மையும் மட்டுமே நாம் தமிழர் எனும் பெரும்படையைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் வேறு எந்த மாநிலத்தில் மட்டுமல்ல; உலகின் வேறு எந்தப் பகுதியிலும் கூட தனது நிலத்துக்காகத் தானே போராடுகிற மண்ணின் மைந்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சார்ந்த அமைப்பை, ஊடகங்கள் இவ்வாறு புறந்தள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் அந்த அவலம் நடக்கக் காரணம் ஆட்சி அதிகாரத் தலைமையில் மட்டுமின்றி ஊடகங்களின் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிறமொழியாளர்களின் தமிழர் வெறுப்பு வன்மச் சிந்தனை தான்.

ஊடகத்தீண்டாமை, போலிக் கருத்தாக்கங்கள், பொய்ச்செய்திகள் இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்று ஊடகங்கள் கட்டமைத்திருக்கும் உலகமகா அவதூறு என்பது நாதக திமுகவின் பி டீம் என்பது. நேற்று தொடங்கிய ஒன்றுமில்லாத கட்சி ஒன்றை விமர்சிக்க நாதகவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் சொல்லும் பொய்யைக் கேட்டால், அரசியலில் பாலபாடம் தெரியாதவர் கூட வாயால் மட்டும் சிரிக்க மாட்டார். கரைகாணாக் காலவெள்ளம் குப்பைகளை அடித்துச் சென்ற பின், கரும்பாறையாக நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சியின் பெருமையே நின்று நிலைக்கும். அன்று இதே ஊடகங்கள் எப்படி அண்ணன் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் நடத்தும் என்பதை நாமும் காணத்தானே போகிறோம்!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. ( நடுவுநிலைமை 118)

திருவள்ளுவர் சொன்ன துலாக்கோல் போல, எந்தப் பக்கச்சார்புமின்றி நடுவே நின்று உள்ளதை உள்ளபடி உரைக்கும் ஆன்றோர் சான்றோர் இன்றைய தமிழ் ஊடகத்துறையில் அதிகமில்லை என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு. தமிழக மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்; முன்பு போல அல்லாது நாம் தமிழர் கட்சி மூலமாக ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சி, மக்களை அரசியல்படுத்திக் கொண்டே வருகிறது. நம் மீதான அவதூறுகள் மழையாய்ப் பொழியும் இதே சமூக ஊடகங்களின் மூலம் தான் தமிழ்த்தேசியமும் எழுச்சி பெற்று வருகிறது.

பொருளாதாரம் கட்சி வளர்ச்சிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தாலும் கூட மரபார்ந்த ஊடகங்களை விட உடனுக்குடனும் உண்மையாகவும் செய்திகளைத் தரும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள் சமூக ஊடகப் புலத்தில் இறங்கி வேலை செய்ய, அண்ணன் சீமான் உள்ளிட்ட களப்போராளிகள் செய்யும் பெருஞ்சமர்களையும் மக்கள் உற்றுநோக்கிய வண்ணமே உள்ளனர். தனக்கு எவர் துயர் விளைவித்தார்? அதைத் தக்க நேரத்தில் வந்து எவர் துடைத்தார் என்பதை எளிய மக்கள் மறந்துவிடுவார்களா என்ன? இதே தமிழ்நாட்டில் 2026ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில், காசுக்குப் பல்லிளிக்கும் ஊடகங்கள் கட்டமைத்த அவதூறு மலைகளின் மீதே ஏறி அரியணையைப் பிடிக்கும் தமிழ்த்தேசியம்! அப்போது ஊடகங்கள் இல்லை வேறு எந்தக் கொம்பாதி கொம்பனாலும் நாம் தமிழர் கட்சி மூலம் தமிழ் ஆளும் இடத்தில் வந்தமர்வதைத் தடுக்கவும் முடியாது! எங்களை, எங்கள் கொள்கைகளைப் பற்றிப் பேசாமல் தவிர்க்கவும் முடியாது!

திருமதி. விமலினி செந்தில்குமார்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா
.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles