spot_img

அவர்கள் துயிலவில்லை!

நவம்பர் 2022

அவர்கள் துயிலவில்லை!

வீரகாவியமாகிய மாவீரர்களின் வித்துடல்களை விதைப்பதற்கான முடிவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? அதன் பின்னணி மற்றும் சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் மாவீரர் துயிலும் இல்லங்களை மதிக்குமா என்பது தொடர்பான எதிர்வுகூவல் என தொலைநோக்குடன் தேசியத் தலைவரால் முன்மொழியப்பட்டு, விடுதலைப் புலிகள் (குரல்: 26 ஐப்பசி கார்த்திகை 1991) இதழில் வெளியான கட்டுரை.

வீரமரணமடையும் புலிவீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட “மாவீரர் துயிலும் இல்லங்களில்” இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுக்கற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலைபெறும்.

மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.

இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத வழக்கங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்துவந்தது.

ஆனால் இனிமேல் வீரமரணமடையும் அனைத்து புலி வீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அப்போராளிகளின் பெயர் கூறும் கல்லறைகள் எழுதப்பட்டு அவை தேசியச் சின்னங்களாக பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

தாங்கள் வீரமரணம் அடைந்தால் தங்களுடைய உடல்களை “மாவீரர் துயிலும் இல்லங்களில்” புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்டதொன்றல்ல; இந்திய அமைதிப்படை புலிகள் போர்க்காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ்விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன.

பிரதானமாக தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்றுக் காட்டுக்குள்ளேயே இவ்விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல் வடிவங்களும் கொடுக்கப்பட்டன. இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகக் கடும் சமர் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம் கண்ட வெற்றி தான்.

இந்தச் சமரில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் இரண்டறக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் என போராளிகள் விரும்பினார்கள். மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கு சென்று போராடி வீரமரணம் அடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுக்குள் தான் புதைக்கப்பட வேண்டும் என எழுத்து மூலமும், வாய்மூலமும் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு “மாவீரர் துயிலும் இல்லம்” போராட்டக் கதைகளை கூறிக் கொண்டே இருக்கின்றது. இதே போன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போராளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்ம திருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களைத் தகனம் செய்வதற்கும் புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும் அதன் பிரதிபலிப்புக்களையும் மனோவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டு கொள்ளலாம்.

மரபு வழியாக தமிழர்களிடம் இருந்து வரும் வழக்கங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்தது தான். ஆனால் அந்த வாதத்தை இம்மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் விடயத்தில் ஒப்பு நோக்க முடியாது.

போராளிகள் தனி மனிதர்களல்ல; அவர்கள் இனத்தின் காவலர்கள்: தமிழ் இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருட்டி கர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரண நிகழ்வுகள் அல்ல, இவர்களது நிகழ்வுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கும். அதாவது போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளின் உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச்சின்னமாக நிலை நிறுத்த நாங்கள் விரும்புகின்றோம்.

இன்று வரை 3750ற்கும் மேற்பட்ட புலி வீரர்கள் வீரமரணம் அடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த் தியாகத்தால் எமது விடுதலைப்போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா? எனக் கேட்டால் “இல்லை” என்று தான் பதில் கிடைக்கும். இப்போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர் விலையையும் உணர்வுப்பூர்வமாகத் தெரிந்து கொள்வார்கள்.

இது ஒருபுறமிருக்க எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதை பாதித்திருக்கின்றன. அதாவது பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்ணுற்றிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ தின்று தகன நிகழ்ச்சிகளை நடத்தினாலும்கூட அப்போராளிகளைப் பெற்றெடுத்து சீராட்டி வளர்த்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ அங்கே இல்லாதது எமது மனதை நெருடுகின்றது.

போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வர முடியாது விட்டாலும் நாளை இப்பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம்? ஒன்றன் பின் ஒன்றாய் நூற்றுக்கணக்கான போராளிகளை தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப்போகின்றோம்? அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும் அங்கலாய்ப்பையும் அனுபவ வாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம். எனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காவிட்டாலும்கூட, அவனது உடல் செந்தமிழ் முரசு

புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரனவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப்பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள்.

கல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா? என ஒரு கேள்வி எழலாம். அன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானதுதான். ஆனால் அந்த சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாதுதானே!

கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும். எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகளம் செய்வதற்குப் பதிலாக புதைப்பதென்பது தமிழர் பண்பாட்டிற்கு முரணான செயல் அல்லவா? என யாராவது வினா எழுப்பலாம். நீண்ட காலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாளி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் நடுகற்களும் இதை நிருபிக்கப் போதுமானது.

ஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒருபுறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூகச் சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டுமே பொருந்தும். பொதுமக்களிற்கல்ல; எனவே இங்கே பண்பாட்டுப் பிரச்சனை எழ நியாயமில்லை. சரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுலம் அழிக்காதா? அப்படி நடந்தால் வீரமரணம் அடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா? எனவே இந்த அவமதிப்பிற்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா? எனவும் கேள்வி எழலாம். தியாகி சிவகுமாரனுக்கு உரும்பிராயில் அமைக்கப்பட்ட சிலையும், மன்னார் தனபதி லெப்.கேணல் விக்ரரது கல்லறையும் சிங்களப்படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.

போரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூற முடியாது தான், ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதனால் கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச்சின்னங்களை இந்தியப்படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெரியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். ஆனால் எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத்தூண்களையும் கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலை கொள்ளத் தேவையில்லை; வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும்.

இறுதியாக ஒன்று சொல்கின்றோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய் மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணம் அடையும் ஒரு வீரவேங்கை கேட்டது ஆறடி நிலத்தை மட்டுமே.

அன்புக்குரிய எமது பெற்றோர்களே, மக்களே!.

எமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலம் காலமாக இருந்து வந்த சம்பிரதாயம் சாத்திரங்களுக்கு முரணாக இருக்கின்றது நீங்கள் கருதலாம். ஆனால் உங்களது பிள்ளைகளான புலி வீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள் சாத்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிஷமாக இருக்கின்றார்கள்.

பல்லாயிரக்கணக்கான இப்பொக்கிஷங்கள் வெறும் நினைவுகளாகவும் எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க கூடாது. அவை பொருள் வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல; அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சுதந்திர தியாகத்தின் சின்னம்.

“நன்றி”

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

தேசியத் தலைவர் அன்றே கூறியது போன்று, இன்றைய நிலையில் பல மாவீரர்களின் துயிலுமிடங்கள் சிங்கள இனவெறியினரால் சிதைக்கப்பட்டபோதும், பல்வேறு தடைகளையும் மீறி இன்றும் ஈழத்திலும், தமிழர் தாய் நிலத்திலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியிருக்கும் மானத் தமிழர்களால் மாவீரர் நாள் நவம்பர் 27 ஆம் நாளன்று ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இனத்தின் விடியலுக்காக, நெஞ்சுறுதியை உரமாக்கி, குருதியைக் குளமாக்கி, உடலை விதைத்து, உயிரை ஒளியாக்கி, மங்காப் புகழடைந்த மாவீரர்களை இந்த மாவீரர் மாதத்தில் போற்றி, அவர்களின் கனவை நெஞ்சில் ஏற்றி, அவர்களின் இலட்சியத்தை நிறைவடையச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அவர்கள் துயிலவில்லை!!

துடித்துக் கொண்டிருக்கிறார்கள்!!

ஈழத்தின் விடியலை எதிர் நோக்கி!!

அவர்கள் துயிலவில்லை!!!

திரு. .இராமகிருசுணன்,

ஆன்றோர் பேரவைத் தலைவர்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles