செப்டம்பர் 2023
ஆசான் ம.செந்தமிழன்
தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் அண்மைக்காலமாக தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த்தேசியக் களத்தில் தற்போது முதன்மையாக உள்ள நாம் தமிழர் கட்சி தொடங்கி பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும் தமிழர் நலம், தமிழர் உரிமை, தமிழ் மொழி, வரலாறு, தமிழர் நில வளங்கள் என நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் சார்ந்த கருத்துக்களையே முன்வைக்கின்றனர். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது அஃதோடு மட்டும் நின்று விடுவதில்லை; தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சார மீட்பும் கூட தமிழ்த்தேசியக் கருத்தியலிலே அடங்கும் என்பது மறுக்க இயலா உண்மை. ஆனால் பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரில் பெரும்பாலும் ஏதோ ஆரியத்திணிப்பை நினைத்துக் கொண்டிருக்கும் நாம், தமிழ் முன்னோர்களின் வாழ்வியல் மீட்பே கலாச்சார மீட்பு என்பதை அறிவதில்லை.
நம் முன்னோர்கள் தாம் கண்டு, கேட்டு, பட்டு அறிந்த அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்தியுள்ளனர். ஆனால் கடந்த ஓரிரு தலைமுறையாக அந்நியப் பண்பாட்டு மோகத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியலை நாம் துறந்தும் மறந்தும் விட்டோம். தமிழர்களாகிய நாம் ஒவ்வொன்றிலும் நமக்கான அரசியல் உரிமைகளைப் பெறுவதோடு, வேளாண்மை, மருத்துவம், கட்டிடக்கலை, மெய்யியல், இறையியல் போன்ற எல்லாவற்றிலும் தமிழர் வாழ்வியலையும் மீட்டெடுப்பதும் தமிழ்த்தேசியக் கருத்தியலே. அந்த வகையில் தமிழரின் வாழ்வியல் மரபுகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருபவர் தான் ஆசான் ம.செந்தமிழன்.
விவசாயி, ஊடகவியலாளர், திரைப்பட,தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஆவணப் பட இயக்குனர், அரசியல் மற்றும் சூழியல் சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், பேச்சாளர், மரபியல் மருத்துவர் எனப் பன்முகப் பேராளுமை கொண்டவர்தான் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரான ஐயா பெ.மணியரசன் அவர்களின் மகனான செந்தமிழன், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ்த்தேசியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த இவர், தனது சிறு வயது முதலே தமிழ்த்தேசியத்தில் மிகுந்த ஈடுபாடும், தேர்ந்த கொள்கைத் தெளிவும் கொண்டிருந்தார்.
1990களில் தனது பள்ளிப் பருவத்திலேயே தமிழக மாணவர் முன்னணி அமைப்பின் தீவிர செயல்பாட்டாளராக இருந்த செந்தமிழன், அப்போதே பல சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 1995-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டிற்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து கைதானதன் மூலம் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார்.
அதன்பிறகு தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் ஊடகத்துறையில் ஏற்ப்பட்ட ஆர்வத்தால், சென்னை சென்று பல்வேறு ஊடகங்களில் பணிபுரிகிறார். சில ஆண்டுகளிலேயே தொலைக்காட்சித் தொடர் மற்றும் சில ஆவணப்படங்களை இயக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. அடிப்படையிலேயே சூழியல் மீது மிகுந்த நாட்டம் கொண்ட செந்தமிழன் தனது ஒவ்வொரு படைப்பிலும் சூழியல் சார்ந்த பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்டே வந்துள்ளார். ஐயா நம்மாழ்வார், பாமயன் போன்றோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டும், ஜான் பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” தந்த தாக்கத்தாலும் 2007ம் ஆண்டு வாக்கில் தனது சென்னை வாழ்க்கையைத் துறந்து சொந்த கிராமத்தில் இயற்கை வழியில் விவசாயம் செய்யத் தொடங்குகிறார் செந்தமிழன். அதனோடே சூழியல் மற்றும் தமிழர் மரபியல் சார்ந்த ஆவணப்படங்களையும் இயக்கிவருகிறார்.
2009 ஆம் ஆண்டில் ஈழப்போர் நிறுத்தக்கோரி மாவீரன் முத்துக்குமாரின் தீக்குளித்ததைத் தொடர்ந்து உருவான இளந்தமிழர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பாளராகச் செயல் பட்டு, ஈழப்போரில் காங்கிர சார் செய்த உதவிகளை ஆதாரங்களோடு விளக்கும் “தீர்ப்பு எழுதுங்கள்” என்னும் ஆவணப்படத்தையும் இயக்குகிறார். நவீன உலகமயமாதல் மூலம் ஏற்படும் சூழியல் சீர்கேடு களை மரபியல் ரீதியாகவே மாற்ற முடியும் என முடிவெடுக்கும் செந்தமிழன் “செம்மை வனம்” என்னும் செம்மை மரபுப்பள்ளியைத் தொடங்குகிறார். இயற்கை வழியில் விவசாயமும் பிற மரபுப் பொருட்களையும் உற்பத்தி செய்து அதை நேரடியாக நுகர்வோர்களுக்குச் சந்தைப் படுத்த மரபு சந்தையையும் தோற்றுவிக்கும் செந்தமிழன், 2011 ஆம் ஆண்டில் “பாலை” என்னும் முதல் தமிழ் சங்ககாலத் திரைப்படத்தை இயக்குகிறார். தொடர்ந்து சூழியல் தமிழர் மரபு மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்து பேசியும் எழுதியும் வரும் செந்தமிழன் விகடன் இதழில் எழுதிய “ஆயிரம் சந்திரன் ஆயிரம் சூரியன் ஒரு பூமி” என்ற தொடரின் மூலம் 2016 ஆம் ஆண்டிற்கான விகடன் இளைஞர் நம்பிக்கை விருதைப் பெற்றுள்ளார்.
ஆரம்ப காலம் தொட்டே நாம் தமிழர் கட்சியின் பல மேடைகளில் பேசியுள்ள செந்தமிழன், தற்போது வாக்கு அரசியலில் பெரிதாக விருப்பம் காட்டாமல் இருந்தாலும், தமிழர் மரபியல் சார்ந்தும், வேளாண்மை மற்றும் மருத்துவம் சார்ந்தும் தொடர்ந்து பல தளங்களில் பேசியும் எழுதியும் வருவதன் மூலம் தமிழ்த்தேசியக் களத்தில் வேறு யாரும் செய்ய இயலாத, முக்கியமானதொரு மாபெரும் பணியைச் செய்து வருகிறார். எந்த வொரு தலைப்பில் இவர் பேசினாலும் அல்லது எழுதினாலும் தமிழரின் தொன்மையை முன்வைத் துப் பேசுவதே இவரது தனிச்சிறப்பு.
திராவிடம் மற்றும் ஆரியத்திற்கு எதிராகவும், தமிழர் மரபியல் சார்ந்தும், சூழியல் சார்ந்தும் ஐம்பதுக் கும் மேற்பட்ட புத்தகங் களை எழுதியுள்ள செந் தமிழன், தமிழர் மரபியல், மருத்துவம் மற்றும் கட்டிடக்கலைகள் குறித்துப் பேசியும் எழுதியும் இன்னும் குறிப்பாக வகுப்புகளும் கூட நடத்தி வருகிறார். மனித வாழ்க்கைக் கூறுகள், உணவுப்பழக்கங்கள், உளவியல்கள் குறித்தும் கூடப் பேசியுள்ளார் செந்தமிழன். ஆனால் இவரது பேச்சுக்களோ, புத்த கங்களோ அல்லது இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு நடக்கும் கதையில் இப்போதைய ஈழப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழின் முதல் சங்ககாலத் திரைப்படமான பாலை படமோ கூட, பெரிய அளவில் தமிழ்த்தேசியக் களத்தில் உள்ளோர்களிடமே சென்று சேரவில்லை என்பது தான் வருந்தத்தக்க ஒன்று.
ஆசான் ம.செந்தமிழன் அவர்களது புத்தகங்களை வாங்கி படிப்பதன் மூலமும், சமூக வலைதளங்களில் உள்ள அவரது ஏராளமான பேச்சுக்களைக் கேட்பது மற்றும் பிறருடன் பகிர்வதன் மூலமும் ஆசானையும் அவரது கருத்துக்களையும் ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டு சேர்த்து தமிழர்களின் மரபியலை, வாழ்வியலை மீட்டெடுப்போமாக!
திரு ப.காந்திமோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.