ஆகத்து 2025
ஆடு மாடு வளர்ப்பு: நடமாடும் செல்வம் மற்றும் பொருளாதார மேம்பாடு
மனித வாழ்விற்கு ஆடு, மாடுகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல; அவை நடமாடும் செல்வங்கள். தேவைப்படும்போது பணமாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சேமிப்பாகவும், மனிதர்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களான பால், இறைச்சி போன்றவற்றையும், விவசாயத்திற்கு முக்கியமான இயற்கை உரங்களையும் நமக்குக் கொடுக்கின்றன. நம்முடைய வாழ்வில் பின்னிப் பிணைந்த மாடுகளைத் தமிழ் சமுதாயம் பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்து வந்திருக்கிறது. ஆனால், சுதந்திர இந்தியாவில் ஆடு, மாடுகளைச் சுதந்திரமாக மேய்க்க முடியவில்லை. அரசு கட்டுப்பாடுகளை விதித்து விவசாயிகளையும், மாடு வளர்ப்போரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவற்றிலிருந்து மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்ற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகெங்கிலும் பல நாடுகள் ஆடு, மாடு வளர்ப்பை ஒரு முக்கிய பொருளாதார ஆதாரமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக டென்மார்க், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகள் கால்நடை வளர்ப்பில் போட்டி போட்டுக் கொண்டு சந்தையை விரிவுபடுத்துகின்றன.
கால்நடைகளால் பெரும் நன்மைகள்:
நிலையான வருமானம்:
பால், முட்டை, இறைச்சி போன்றவற்றை விற்பதன் மூலம் விவசாயிகள் தினசரி அல்லது வாராந்திர வருமானத்தைப் பெறுகிறார்கள். இது அவர்களின் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்:
கால்நடை வளர்ப்பு, நேரடி மற்றும் மறைமுகமாகப் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. தீவனம் தயாரித்தல், பால் சேகரிப்பு, இறைச்சி விற்பனை போன்ற தொழில்கள் உருவாகின்றன. இதில் “வருமானமும் வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது என்பதனை நாம் தமிழர் கட்சி ஆணித்தரமாக நம்புகிறது”. பால் பொருளாதாரத்தை விட்டுவிட்டு சாராயப் பொருளாதாரத்தைச் சார்ந்து இருக்கும் மடையர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
உரம், உணவு உற்பத்தி:
கால்நடைகளின் சாணத்திலிருந்து எரிகாற்று (மீத்தேன்) எடுத்து வணிகப் பயன்பாட்டுக்கும் கொடுக்க முடியும். சாணம் இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ரசாயன உரங்களுக்கான செலவைக் குறைப்பதோடு, மண்ணின் வளத்தையும் மேம்படுத்துகிறது. வளமான மண்ணில் உற்பத்தி செய்யப்படுகின்ற தரமான பொருட்களாகவும், வேளாண் மக்களுக்குக் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்க உதவுகிறது. நஞ்சில்லாத நல்ல உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதன் வழியாக ஆரோக்கியமான சமூகம் உருவாக இது உதவுகிறது.
பெண்களின் கூடுதல் வருமானம்:
பண்டிகைக் காலங்களில் அல்லது அவசரத் தேவைகளுக்காகக் கால்நடைகளை விற்பனை செய்வது, விவசாயிகளுக்கு ஒரு திடீர் நிதி ஆதாரமாக அமைகிறது. பல கிராமப்புறங்களில், கால்நடை வளர்ப்பு பெரும்பாலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது. கால்நடை வளர்ப்பு, வெறும் ஒரு தொழிலாக இல்லாமல், கிராமப்புற சமூகங்களின் கலாச்சார அடையாளமாகவும், பொருளாதாரப் பாதுகாப்பின் ஒரு தூணாகவும் விளங்குகிறது. இந்த “நடமாடும் செல்வங்களை” முறையாகப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நில வளம், அதன் உற்பத்தியாகும் பொருள்கள் சார்ந்த தொழிற்சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும். ஆடு, மாடுகளைப் பாதுகாத்து அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆள்கின்ற திராவிடக் கூட்டத்தை அகற்ற உறுதி ஏற்போம்! நாம் தமிழர் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த ஒன்றிணைவோம்!
திரு. க. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை வளைகுடா.