நவம்பர் 2023
ஆனையிறவு சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
போரின் உக்கிரம் தகிக்கும் இக்கட்டான களங்களில் தனி வீரம் காட்டி பலமுறை வெற்றியைத் தங்கள் பக்கம் திருப்பிய விடுதலைப்புலி வீரனை நீங்கள் பார்த்ததுண்டா? தாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட சூழலிலும், கட்டளைப் பீடத்தில் இருந்தபடி சூழ்நிலைகளைக் கேட்டவாறு சண்டை வியூகங்களை மாற்றி அமைத்து, தன்னம்பிக்கை தெறிக்கும் வார்த்தைகளால் போராளிகளை வழிநடத்திச் சண்டைகளை வென்ற தளபதியைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு வீரன் தமிழீழத்தில் இருந்தான். அவன் பெயர் பால்ராஜ்… மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்!
தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும், போரியல் நுட்பங்களாலும் அறியப்பட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தளபதிகள் பலரில் மிக முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ். புதிய இராணுவ உத்திகளை வகுத்து பல போர்களில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுடன், தமிழீழ விடுதலைப்புலிகளின் போராடும் ஆற்றலையும் மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர்; எல்லாவற்றிற்கும் மேலாக “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடு நாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத் தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்; ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பின் ஊடாக விடுதலைப்புலிகளின் கெரில்லா இராணுவப்பிரிவை மரபு வழி இராணுவமாக மாற்றியவர்களுள் முதன்மையானவர் போன்ற பெருமைக்குரியவர், பால்ராஜ் அவர்கள்.
இளமைக்காலமும் இயக்கத்தில் இணைதலும்:
முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை அழகு கொஞ்சும் கடலோர கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான், வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை நமக்கு ஈன்று புறந்தந்தது. நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 1965ல் கந்தையா மற்றும் கண்ணகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த பால்ராஜின் இயற்பெயர், பாலசேகரம். இவரை வாழ்வியல் சூழல் இளம் வயதிலேயே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதியிலுள்ள காடுகள், மலைகள் என்று ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் அவர் முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார். வேட்டையாடுவதற்குத் தேவையான அடிப்படை விடயங்களான உய்த்துணர்வு, கடுமையான முயற்சி, சிக்கலான கட்டங்களைத் தாண்டும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கு ஏற்ப தந்திரங்களைப் பயன்படுத்தி வேட்டையாடுதல், அவற்றின் தடயங்களைப் பின்தொடர்ந்து செல்லுதல் மற்றும் பொறுமை, போன்ற பண்புகள், சிறு வயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அதுபோல வேட்டைக்குச் சென்றால் ஒருபோதும் வெறும் கையுடன் திரும்ப மாட்டார் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி பெறும் முனைப்பு வாய்ந்தவர்.
இவர் பிறந்து வளர்ந்த கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், முந்திரைக்குளம் போன்ற இயற்கை வளம் கொழிக்கும் விளைநிலங்களைக் கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை, விரட்டி அடித்துவிட்டு சிங்கள குடியேற்றங்களைத் திட்டமிட்டு ஏற்படுத்தி, தமிழர் தாயகங்களைத் துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசு செயல்பட்டது. இதனால் இவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும், அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்களை, சொத்துக்களை இழந்து ஓர் இரவில் அகதிகளாக்கப்பட்டனர். அச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, அவர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே நமது பகுதிகளைப் பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த அவரது தந்தையார் “நீ போராடத் தீர்மானித்தால் பிரபாகரனுடன் சேர்ந்து போராடு; அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” எனச் சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் பின்னாளில் நினைவு கூர்ந்து இருந்தார். 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
தொடக்ககாலப் பணிகளும் பயணமும்
1984 ஆம் ஆண்டு ஓதிய மலையில் உளவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த போது, இலங்கை ராணுவத்தின் பதுங்குத் தாக்குதலில் லெப். காண்டீபன் உட்பட ஒன்பது போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா வந்தார் பால்ராஜ். பின்னர் இந்தியப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு, நாடு திரும்பி வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளைச் செய்து வந்தார். இவரது பல்வேறு திறமைகளை அறிந்த முல்லைத் தீவு மாவட்டத் தளபதியாக இருந்த பசீலன் அண்ணை அவர்கள், முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற பால்ராஜை அழைத்துச் சென்றார்.
முந்திரிகைகுளத்தில் நடைபெற்ற பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி நகர் முற்றுகை முறியடிப்பு தாக்குதல் எனப் பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்ததோடு, இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த சமரில் டாங்கி ஒன்றைத் தகர்த்து, தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார் பால்ராஜ். 1987 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இந்திய அமைதிப்படையுடன் நடந்த தாக்குதலில் பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் புலிகள் தடுமாறிப் போவார்கள் என்று இந்திய இராணுவம் நினைத்தபோது, உடனடியாக களமுனை கட்டளைத் தளபதியாக மாறிய பால்ராஜ் தனக்கே உரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினார்.
தலைவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக பால்ராஜ்
இந்திய அமைதிப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு, தலைவரைக் குறிவைத்து பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது, தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்பு பால்ராஜிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இச்சமயம் தலைவர் காட்டில் இருப்பது பாதுகாப்பில்லை; எனவே வெளியேறி வேறு நாட்டுக்குச் செல்லுமாறு சில நலம்விரும்பிகள் கேட்டுக் கொண்ட போது, “என்னைப் பாதுகாக்க பால்ராஜும் மற்ற புலிகளும் இருக்கிறார்கள். என் இனத்தின் பெருமையையும், என்னையும் விற்க வேண்டாம். எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும். பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக் கூடாது; போராடி வென்றான் அல்லது வீர மரணமடைந்தான் என்று தான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்று தலைவர் ஆவேசமாகப் பேசியதை பின்னாளில் போராளிகளிடம் பகிர்ந்து கொண்டார் பால்ராஜ்.
முல்லைத்தீவு நெடுஞ்சேரி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப் படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில், தளபதி லெப் கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அதன் பின்னர் பால்ராஜை அழைத்த தலைவர், இந்திய இராணுவத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் முல்லைத்தீவில் மட்டுமல்ல, வன்னியெங்கும் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறி, வன்னிப் பெரு நிலப்பரப்பின் தளபதியாக பால்ராஜை நியமித்தார். பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக் கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம் மற்றும் அரசியல் திறன்கள் போன்றன, அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது.
பொறுப்பை ஏற்ற பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டிய மாவட்டங்களில் இருந்த போராளிகளைச் சந்தித்து, தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும், அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைபயணம் ஒன்றை மேற்கொண்டார். ஆனாலும் நடைபயணம் என்ற நோக்கத்தைத் தாண்டி, சென்ற இடங்களில் எல்லாம் தென்படும் எதிரியின் மீது உடனடித் தாக்குதல்களை மேற்கொண்டு போராளிகளுக்குப் புதுத்தெம்பைக் கொடுத்தார். பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக வரித்துக் கொண்ட தளபதி பிரகேடியர் தீபன் அவர்கள், இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதல் பற்றித் தெரிவிக்கும் போது ” இந்தியப் படையினர் மீதான தாக்குதல் என்று வரும்போது, வேவு பார்த்து திட்டமிட்டுத் தாக்குவது வழக்கம். எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடத்துவது கடினம்; ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் அவர்கள் நினைப்பதில்லை; எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து; அதில் அவர் வென்று கொண்டே இருந்தார்” எனக் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்துடனான போர்களில் காட்டிய களமுனைத் தீரம்:
இலங்கை இராணுவத்துடனான இரண்டாம் ஈழப்போர் 1990களில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையைத் தொடர்ந்து நடத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து புலிகள் சண்டையிலிருந்து பின்வாங்கினர். கிளிநொச்சி படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலும் வெற்றி அளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலை புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல், மக்களும் இலங்கை இராணுவத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டது. எனவே கொக்காவில் உள்ள இராணுவ முகாமை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் தாக்குதலை ஆரம்பித்தனர் புலிகள்.
முதல் நாள் கடுமையான சண்டை; சில பகுதிகள் கைப்பற்றப்பட்டாலும் துணைத் தளபதிகளாக இருந்த தளபதி தீபன் அவர்களும், வேறு சில தளபதிகளும், வீரர்களும் காயம் அடைந்திருந்தனர். மோதல் நடந்திருந்த சூழல் நிலைமையை உணர்ந்த பால்ராஜ் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத் தீவு முகாம்களைக் கைப்பற்ற முடியவில்லை; இதிலும் தோல்வி கண்டால் போராளிகளின் உளவுரம் பாதிக்கப்படலாம்; அதுமட்டுமல்ல இலங்கை இராணுவத்தின் உளவுரம் அதிகரிக்கலாம்; அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற எண்ணத்துடன் களத்துக்கு வந்தார்.
மரபு வழி இராணுவப் போர்களில் பொதுவாக கட்டளைகள் வழங்கும் போர்த் தளபதிகள் போர் நடக்கும் களத்திற்குச் செல்வதில்லை; வெளியில் இருந்தே கட்டளைகளைப் பிறப்பிப்பார்கள்; ஆனால் அதற்கு விதிவிலக்கானவர் பால்ராஜ். ஒருபக்கம் போர்க்களத்தின் முன்முனையில் பால்ராஜின் துவக்கிலிருந்து குண்டுகள் பாய்ந்து கொண்டிருக்கும்; மறுபக்கம் வீரர்களுக்குக் கட்டளைகள் பறந்து கொண்டிருக்கும். பால்ராஜ் நேரடியாகக் களத்துக்குள் இறங்கிச் சண்டையிடுகின்றார் என்ற செய்தி தெரிந்தால் போராளிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் மூர்க்கத்தனமானவும் முழு வேகத்துடனும் இருக்கும். இதற்கிடையில் காயம் பட்ட தளபதிகளான தீபனுடன் மற்றவர்களும் காயத்துடனையே களமுனைக்கு வருகிறார்கள். மூன்று மணி நேரப் போரின் முடிவில் இலங்கை இராணுவ முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அந்த இடம் முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
ஆனையிறவு குடாரப்பு ஊடறுப்பு தாக்குதல் வெற்றி எனும் மகுடம்:
இப்படி தனது வீரதீர சாகசங்களால் பல வெற்றிகளை பால்ராஜ் புலிகள் வசமாக்கிக் கொடுத்தாலும், முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுவது ஆனையிறவு குடாரப்பு ஊடறுப்புத் தாக்குதல் தான். “இத்தாவில் பெட்டிச்சண்டை” என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதல், உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு முக்கிய தரையிறக்கச் சண்டையாகப் பதிவு செய்யப்படும் அளவிற்கு உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது. இன்றும் பல வல்லரசு நாடுகள் தங்கள் படைகளின் நெஞ்சுறுதியை அதிகரிக்க புலிகளின் ஆனையிறவு குடாரப்பு ஊடறுப்பு தாக்குதலில் போரியல் நுணுக்கத்தைச் சொல்லும் அளவுக்குப் பெயர் பெற்ற தாக்குதல் அது.
“சத்ஜெய” என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து, கிளிநொச்சி வரை நகர்ந்து தமிழர்களின் நிலங்களை விழுங்கிய சிங்களப் படைகள், அங்கே நிலை கொண்டிருந்தன. ஆனையிறவு, கிளிநொச்சி படைத்தளம் நீண்டு ஒடுங்கி இருந்தது. அதைக் குறுக்கறுத்து கிளிநொச்சித் தளத்தை அழித்து ஒழிக்க தலைவர் அற்புதமான போர்த்திட்டத்தை வகுத்து அதைப் பால்ராஜிடம் ஒப்படைத்தார். குறுக்கறுப்பு தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் போல அபாயம் நிறைந்ததாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாக இருந்தது. பால்ராஜால் மட்டும் தான் அதைச் செய்ய முடியும் என்பது தலைவரின் நம்பிக்கை.
ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு படகின் மூலம் கடலில் போய், குடாரப்பில் தரை இறங்கி அங்கே இருபுறமும் உள்ள சிங்களப் படை முகாம் பகுதிகளுக்கு இடையே இருந்த சதுப்பு நிலப் பகுதிகளில் வழியாக 10 கிலோமீட்டர் தூரம் நடந்து, இத்தாவில் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த பெட்டியின் நடுவில் நின்றார் பால்ராஜ். எதிரியின் இரண்டு கண்களுக்கு நடுவே நெற்றிப்பொட்டில் கூடாரம் அமைத்து குடிபோவது போல் அது இருந்து. இலங்கை ராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் நாற்பதாயிரம் சிங்களப் படைகளின் நடுவே வெறும் ஆயிரத்து இருநூறு போராளிகளுடன் பால்ராஜ் என்ற வீரன்! புலிகளா? சிங்களப் படைகளா? யார் வீரர்கள்? என்பதை உறுதி செய்யப் போகின்ற போர் தொடங்கியது.
பால்ராஜையும் அவர்களுடன் இருந்த 1200 புலி வீரர்களையும் அந்த பெட்டிக்குள் வைத்து சமாதி கட்டத் துடித்தது சிங்களப் படை. எதிரிகள் ஏவிய பல ஆயிரக்கணக்கான எறிகணை மழையின் மத்தியில் பெரும் வீரனாய், போர் கண்ட சிங்கமாய் அசையாமல் நின்றார் பால்ராஜ். எதிரியின் நவீன ஆயுதங்களோ, போர்க்கருவிகளோ, பெரும்படைகளோ பால்ராஜின் நெஞ்சுறுதியைச் சீண்டக்கூட முடியவில்லை. 34ம் நாள் சண்டையின் முடிவில் எதிரிப்படையை துவம்சம் செய்து, வெற்றி வீரனாக கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டு வெளியேறினார் பால்ராஜ். அந்தப் போரில் புலிகள் அடைந்த வெற்றி, இலங்கை தீவை மட்டுமின்றி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியது. 40,000 வீரர்களையும், நவீன ஆயுதங்களையும் 1200 பேர் கொண்ட படை ஒன்றால் வெல்ல இயலும் என்றால் அது உள்ளபடியே அதிசயம் தானே. இந்த வெற்றி தமிழர்களின் வீரத்திற்கும், போர்குணத்திற்கும் கிடைத்த மணிமகுடம் என்றால் அது மிகையில்லை.
இறுதிக்காலமும் இனத்துக்கு அவரது இழப்பு தந்த துயரமும்:
உண்மையில் தளபதி பால்ராஜ் அவர்களை விடுதலை இலட்சியத்தின் மீது கொண்ட தெளிவும், தமிழ் மக்கள் மீதான நேசமுமே இரவுபகல் பாராது உழைக்க வைத்தது. எதிரிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் அதிக அளவில் நேரத்தை அவர் செலவிடுவார். பால்ராஜ் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளுக்குச் சண்டையிடும் முறையைச் சொல்லிக் கொடுப்பார். அடிக்கடி அவர்களைச் சந்தித்து அவர்களின் தேவையை நிறைவேற்றி போராளிகளை எப்போதும் உச்ச மனத்திடத்துடன் வைத்திருப்பார். திட்டமிட்ட சண்டைகளுக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த, தான் நேரடியாகக் களத்திற்கு சென்று வேவு பார்ப்பதையே வழக்கமாக அவர் வைத்திருந்தார்.
குறிப்பாக அவரது கால் காயத்தினால் சீராக இயங்க முடியாத போதும், கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று, இந்த இடம் சண்டைக்குப் பொருத்தமானதா என முடிவெடுப்பது அவரது வழக்கம். தேசியத் தலைவரால் என்னையும் மிஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதியின் திறமை எதிரிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருமை வாய்ந்தது. அதிலும் இத்தாவில் பெட்டிச் சண்டையின் போது இலங்கை தளபதிகள் அந்நாட்டு இராணுவ அமைச்சகத்திடம் போர் பற்றிய தகவல்களை வழங்கும்போது “வந்தது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றால் கூட நாம் எதிர்த்துச் சண்டையிடலாம். ஆனால் வந்திருப்பது பால்ராஜ். பால்ராஜ் ஒரு இடத்திற்குப் போர் செய்ய வந்து விட்டால் அவனை வீழ்த்துவதோ அல்லது அப்புறப்படுத்துவதோ கடினம்” என்று கூறினார்கள். இப்படிப் போர்க்களங்களிலெல்லாம் வீழாத ஒரு வீரனை இயற்கை வீழ்த்தியது. மே மாதம் 20 ஆம் தேதி 2008இல் மாரடைப்பால் இயற்கை எய்தினார் பால்ராஜ்.
பால்ராஜின் இழப்பும் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தோல்வியடைய ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது. 2009ல் இறுதிப் போரில் நாம் அடைந்த பின்னடைவு சிங்களம் தனித்து நின்று தந்ததல்ல. சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக மற்றும் நேரடி இராணுவ உதவி, புலனாய்வு உதவி ஆகியவற்றோடு உலக புவிசார் அரசியல் போட்டியின் விளைவாகவே சிங்களத்திற்கு வெற்றி கிடைத்தது. சிங்களர்கள் தனித்து நின்று நேரடியாக ஒருபோதும் விடுதலைப் புலிகளை வீழ்த்தவில்லை; வீழ்த்தவும் இயலாது என்பது அவர்களுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே தெரியும்.
இந்த மாவீரர் மாதத்தில், தாயக விடுதலைக்காக தமது உயிர்களை ஈகத்துடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளை, மக்களின் பேரிழப்புகளை மனதில் நிறுத்தி நம்பிக்கை இழக்காமல் எம்மால் முடியும்; எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என உறுதி எடுப்பதே பிரகேடியர் பால்ராஜுக்கும், மாவீரர்களுக்கும் மற்றும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் நாம் உளப்பூர்வமாக செலுத்தக்கூடிய வணக்கமாகவும், வழங்கக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.
திரு. அருண் தெலஸ்போர்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.