மே 2025
ஆயுதப்போருக்குப் பின் அறிவாயுதப் போர்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அநீதிகளின் பின்புலத்தில் ஆயுதப்போர்:

அப்பாவித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வதைகளையும் கொடுமைகளையும் அநீதிகளையும் கேட்டறிந்தபோது இளம் பிரபாகரனின் இதயத்தில் வெஞ்சினம் பொங்கியது. ஒடுக்கப்பட்ட தனது மக்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இக்கொடுமைகளை அனுபவிக்காது, அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடவேண்டுமென்று பிரபாகரன் எண்ணினார். மனிதர்கள் தமது விருப்புகள், ஆசைகளுக்கு அமைவாக சுயாதீனமாக வாழும் உரிமைதான் சுதந்திரமென அவர் கருதினார்.
வெளி அழுத்தங்களிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும்பொழுதுதான் உண்மையான விடுதலையை மனிதர்கள் அடைகிறார்கள் என்று அவர் நினைத்தார். அதனாலேயே கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழின விடுதலைப் போராட்டத்தை ஆயுதவழியில் நடத்தினார். இருந்தாலும், சமாதான வழியின் மூலம் ஈழம் விடுதலை அடையக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் அவர் தவறாமல் பயன்படுத்தினார் என்றும், முடிந்தபோது சில வாய்ப்புகளை அவரே உருவாக்கினார் என்றும் காய்தல் உவத்தல் இல்லாமல் தமிழின விடுதலைப் போரை அணுகுவோர்க்குப் புரியும். ஒவ்வொரு முறையும் சமாதானத்துக்கான கதவை ஓங்கி அறைந்து அடைப்பதையே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு வழக்கமாக வைத்திருந்தது என்பதையும், தலைமைகள் மாறி வந்தாலும் அவர்கள் இலங்கையின் கொடூரமான அரசபயங்கரவாத முகத்தை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு முகமூடிகள் மட்டுமே என்பதையும் நடுநிலைப் போக்கோடு ஈழப்பிரச்சனையைப் புரிந்து கொள்ள முயல்வோர் அறிவர்.
ஆயுதப்போருக்குப் பின் அறிவாயுதப் போர்:
வரலாற்றுப் பின்னணியினூடே பார்க்கும்பொழுது, எந்த மொழியில் இலங்கை அரசு தமிழர்களிடம் பேசியதோ, எந்த மொழியில் தமது தமிழ் மற்றும் தமிழர்கள் சார்ந்த நிலைப்பாட்டை அது உணர்த்தியதோ, அதே மொழியில் நமது மறுமொழியைத் தந்தால் மட்டுமே அதற்குப் புரியும் என்பதாலேயே தேசியத் தலைவர் ஆயுதவழியைத் தேர்ந்தெடுத்தார். அதுவும் முப்பதாண்டுக்குமேலான அமைதிவழிப் போராட்ட வழிமுறைகள் குறிப்பிடத்தக்க வெற்றியையோ அல்லது முன்னேற்றத்தையோ தமிழர் விடுதலையின் பொருட்டு தராததாலேயே வேறு வழியின்றி இலங்கை அரச பயங்கரவாததினின்று தமிழர்களைக் காக்கும் மக்கள் இராணுவமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தலைவர் கட்டமைத்தார்; வழிநடத்தினார். இறுதிகட்டப் போரின் முடிவில் நமக்குத் தலைவர் சொல்லிவிட்டுப்போன செய்தி, இலக்கை நோக்கிய ஓட்டத்தில் கருவிகள் மாறலாமேயன்றி குறிக்கோள் என்றும் மாறுவதில்லை என்பது தான்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப இலங்கை நாட்டில் தமிழர் சிறுபான்மையாக இருந்தாலும், ஓர் அணியில் திரண்டு ஒற்றுமையாகச் செயல்பட்டு, ஒரு சிறப்பான தலைமையைத் தேர்ந்தெடுத்து அதன் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால், எத்தனை விதமான சூழ்ச்சிகளையும் அரசியல் அடக்குமுறைகளையும் உறுதியுடன் எதிர்த்து நிற்க இயலும் என்பதைத் தலைவர் தம் செயலில் காட்டியிருக்கிறார்.
புவிசார் அரசியல் மாற்றம் மற்றும் உலக நாடுகளின் சூழ்ச்சியால் தமிழ்த் தேசிய ஆயுதப் புரட்சியது அன்று வீழ்த்தப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக மாற்றுவழிகளில் அறிவாயுதப்போர் ஏந்திக் குடியாட்சித் தளத்தில் களமாட, இன்று நாம் தமிழர் கட்சி போன்று பல அமைப்புகள் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டன. விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் முன்னெடுத்த தமிழின விடுதலைப் போரின் மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம் மாற்றமடைந்து வருகின்றது என்பதற்கு கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் ஈழம்சார் செயல்பாடுகளே சிறந்த எடுத்துக்காட்டு.




அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு வகையான மனித மாண்பற்ற அநீதிகளும் அடக்குமுறைகளும், அறமற்ற அரசியல் சூழ்ச்சிகளும் நடக்கும் போது, தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த அமைப்பு தான் புலிகள் இயக்கம் என்று நமது எண்ணம், சொல், செயல்களின் வழியாகத் தமிழர்களாகிய நாம் நமது பக்க நியாயத்தை உலகுக்கு உரக்கச் சொல்லி தொடர்ந்து வரலாற்றில் பதிய வைக்க வேண்டும். அப்போது தான், நமது விடுதலையைச் சாத்தியப்படுத்தும் சாளரங்கள் நமக்குத் திறக்கும்! அதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறாமல் பயன்படுத்தி நமக்கான அரசியலை நாமே பேசுவதே, இனவிடுதலைப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு தமிழ்த்தேசியரின் தலையாயக் கடமை.
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
திரு. சி.தோ. முருகன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.