ஆகத்து 2023
இசுலாமிய கிருத்துவ மக்களை இழிவுபடுத்திப் பேசினாரா அண்ணன் சீமான்?
‘இசுலாமியர்களை, கிருத்துவர்களை இழிவுப்படுத்திப் பேசிவிட்டார் சீமான் ’ என்பதுதான் ஒருவார காலமாக திராவிடக்கூட்டத்தினரால் பரப்பப்பட்டு வரும் பெரும் அவதூறுப்பரப்புரை! ஏற்கனவே, பாஜகவின் ‘பி’ டீம் எனும் கலப்படமில்லாத பொய்யைப் பரப்பிப் புளங்காகிதம் அடைந்து வருபவர்கள், அத்தோடு இதனையும் பொருத்தி, தங்களது அரசியல் தன் இலாபத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் துளியும் அடிப்படையில்லாத ஒரு கருத்துருவாக்கத்தையும், கட்டமைப்பையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். மணிப்பூரில் நடந்து வரும் மனிதப் பேரவலத்துக்கெதிராக 30-07-23 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஆற்றிய 51 நிமிட உரையில், சில நொடிகளை மட்டும் கத்தரித்து எடுத்துக்கொண்டு, அதனைப் பரப்பி, அதில் கூறப்பட்ட ‘சாத்தானின் பிள்ளைகள்’ எனும் வாக்கியத்தின் உட்பொருளையே மொத்தமாக மாற்றி, அவதூறுச்சேற்றை வாரியிறைக்கிற வேலையை கனக்கச்சிதமாகச் செய்து வருகிறார்கள் பகுத்தறிவு பகலவனின் கொள்கை (?) வாரிசுகள்!
அடிப்படையில், சாத்தான், பேய், பிசாசு, பூதம், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, கர்மா, விதி என புராணங்களும், இதிகாசங்களும் கற்பித்து வைத்திருக்கும் கற்பிதங்களை முற்றாக மறுதலிக்கிறது நாம் தமிழர் கட்சி! இன்னும் சொல்லப் போனால், இறந்துபோன தமிழின முன்னோரே தமிழர் இறை எனும் அறிவியல் சார்ந்த மெய்யியல் கோட்பாட்டை முன்வைத்து, “உலகைக் கடவுள் படைத்ததாகக் கூறப்படும் படைப்புத் தத்துவத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை” என அறிவித்தார் அண்ணன் சீமான் . அவர், ‘சாத்தானின் பிள்ளைகள்’ எனும் சொற்பதத்தைப் பயன்படுத்தியது உவமைக்காகத்தானே ஒழிய, நேரடிப் பொருளில் இல்லை! ஏனென்றால், ‘சாத்தான்’ எனும் கற்பிதத்திலேயே அவருக்கு நம்பிக்கையில்லை. அப்படியிருக்க, அந்தச் சொல்லாடலை எப்படி இசுலாமிய கிருத்துவ மதத்தினரைக் காயப்படுத்தப் பயன் படுத்தியதாக எண்ண முடியும்? அநீதிக்குத் துணைபோவதைக் குறிக்க, ஊழல்பேர்வழிகளுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதைக் கண்டிக்க உரிமையோடும், உளப்பூர்வமான அக்கறையோடும் சுட்டினார் அவ்வளவே! மத நூல்களில், அநீதியாளர்களையும், கெடுமதியாளர்களையும், கொடுங்கோலர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும், ‘சாத்தான்’ எனும் சொல்லைக் கொண்டு, தமிழ்நாட்டை இன்றைக்கு ஆளும் ஆட்சியாளர்களோடு அதனை ஒப்புமைசெய்து, அவர்களுக்கு இசுலாமிய, கிருத்துவ உறவுகள் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைத் தந்து, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கும் தவறைக் குறிக்க, ‘அநீதிக்குத் துணைபோய் சாத்தானின் பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள்!’ என்று குறிப்பிட்டார் அண்ணன் சீமான் . மற்றபடி, அவர்களை சபிக்கவோ, இழிவுசெய்யவோ என்ன இருக்கிறது? “தவறானவர்களோடு சேர்ந்து, நீயும் தவறாக ஆகிவிட்டாயே!” என ஒரு தந்தை, தனது பிள்ளையை நோக்கிக் கடும் சொற்களை வீசினால், அதில் மேலோங்கி நிற்பது வெறுப்போ, துவேசமோ அல்ல; மகன் மீதான அக்கறையும், அன்பும் மட்டும்தான்! அதுபோல, அண்ணன் சீமான் அவர்களது பேச்சில் தொனிப்பது திமுக, காங்கிரசை நம்பி நம்பி, ‘நமது உறவுகள் ஏமாந்து போகிறார்களே’ எனும் ஆதங்கமும், ஆழ்மனக்குமுறலும் மட்டும்தானே ஒழிய, வேறு எதுவுமில்லை. அப்புறம், எதற்காக இத்தனைப் பேர், ‘நாம் தமிழர் கட்சி இசுலாமிய, கிருத்துவ மக்களை இழித்துரைத்துவிட்டதாகக் கிளம்புகிறார்கள்?’ எனக் கேட்டால், அவ்வாறு கட்டமைப்பு செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி’ டீம் என முத்திரைக் குத்தி, ஒரு பொய்யை உண்மைபோல தோற்றம் காணச் செய்ய வேண்டியதன் அவசியம் அவர்களுக்கு இருக்கிறது.
பாஜக எதிர்ப்பில் நாம் தமிழர் கட்சி ஒருநாளும் துளியளவும் சமரசம் செய்து கொண்டதில்லை என்பதற்கு நாம் தமிழர் கட்சியின் 13 ஆண்டுகால அரசியல் பயணமே சாட்சி! வீழ்த்தப்பட வேண்டிய முதன்மை எதிரி பாஜகதான் என்பதிலும், நாம் தமிழர் கட்சிக்கு மாற்றுக் கருத்தில்லை. அதனால் தான், ‘எங்களது கருத்தியல் எதிரி பாஜக’ என அறிவித்து, ‘திராவிடக்கட்சிகளுக்கும், எங்களுக்குமான மோதல் பங்காளிச்சண்டை; இதில் பகையாளியான பாஜகவை ஒருநாளும் உள்ளேவிட முடியாது’ எனப் பேரறிவிப்பு செய்தார் அண்ணன் சீமான் . ஆனால், அதற்கு மாற்றாக, காங்கிரசையும், திமுகவையும் இந்த நிலத்தில் தேர்வுசெய்வது மிகத்தவறானது என்பதே நமது நிலைப்பாடாகும். காங்கிரசு கட்சி, தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சம் முற்போக்கு வேடம் தரித்து நின்றாலும், அதனை உற்றுநோக்கினால், அது பாஜகவின் மிதவாத வடிவமென்பதையும், இந்துத்துவாவை எதிர்க்காது, ஆதரித்து ஆட்கொள்ளும் ஆபத்து அதனுள் உட்பொதிந்துள்ளது என்பதையும் அறியலாம். இந்தியாவை இந்து நாடென ராகுல் காந்தி விளித்ததும், ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவோடு காங்கிரசு ஒத்துப்போவதுமான இரு நிகழ்வுகளே அதற்கான சரிநிகர் சான்றாகும்.
திமுகவானது பாஜகவை எதிர்ப்பது போலக் காட்டிக்கொண்டு, அதோடு கள்ளத்தனமாக உறவாடி, வாசல் திறந்துவிடும் என்பதுதான் வரலாறு சொல்லும் பாலபாடம்! அதுதான் கடந்தகாலம் தொட்டு, இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. வாஜ்பாய்க்குப் புனிதர் பட்டம் கட்டி, பாஜகவின் கரங்களில் ஐந்தாண்டு காலம் அதிகாரத்தைக் கொடுத்தவர்கள்தானே இவர்கள்? மறக்க முடியுமா? மோடி முதல்வராக இருக்கும்போது குஜராத்தில் இசுலாமிய மக்களின் உயிர்களைப் பலியெடுத்த மதவெறிப்படுகொலைகளைக் கண்டிக்காது, பாஜகவோடு கூட்டணியில் இருந்துகொண்டு மோடியைக் காப்பாற்றிக் கரைசேர்க்க கருணாநிதி செய்த கரசேவையை மன்னித்துவிட முடியுமா? அவ்வளவு ஏன்? அதே குஜராத் படுகொலை குறித்து மோடியின் பிம்பத்தைத் தோலுரிக்கும் விதமாக, பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டபோது, அதனை தமிழ்நாட்டில் திரையிடக் கெடுபிடி விதித்து, திரையிட்டவர்களைக் கைதுசெய்த அரசுதானே ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுக அரசும்?
இன்றைக்கு எட்டுவழிச்சாலை, பரந்தூர் வானூர்தி நிலையம், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், புதியக் கல்விக்கொள்கை எனும் பாஜக அரசின் செயல்திட்டங்களும், இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுப்பதும், தூத்துக்குடி தாமிர ஆலைப்போராட்டத்தில் தொடர்புடைய எவரையும் தண்டிக்காதிருப்பதுமான பாஜகவின் நிலைப்பாடுகளும் தமிழ்நாட்டில் திமுக அரசாலேயேதானே அமலாக்கம் செய்யப்படுகின்றன! “மத்திய அரசின் திட்டங்களை மத்திய அரசோடு இணைந்து சீரும் சிறப்புமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலின் அவர்களே!” என பிரதமர் நரேந்திரமோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் மேடையில் வைத்துக்கொண்டு இவ்வாண்டு ஏப்ரல் மாதம், சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியது இதனை மனதிற்கொண்டுதானே! அப்படிப்பட்ட திமுகவை பாஜகவை எதிர்க்கும் ஆற்றலாக எப்படி நம்ப முடியும்? என்பதே நாம் முன்வைக்கும் தார்மீகக்கேள்வி! பாஜகவின் அநீதியை எதிர்ப்பதற்கு திமுக, காங்கிரசு எனும் மற்றுமொரு அநீதியை சகித்துக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் அரசியல் அறம்தானா? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதனைத்தான் எடுத்துரைக்கிறோம். இந்தியப் பெருநிலத்திலேயே நாம் தமிழர் கட்சி அளவுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும், இயக்கமும் பாஜகவை எதிர்த்ததில்லை; கோட்பாட்டு ரீதியாகவும், நிர்வாகச்செயல்பாட்டின் அடிப்படையிலும் பாஜக மீது மிகக் கடுமையான விமர்சனங்களை மக்கள் மன்றத்திலேயே தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ரூபாய் தாள்களை செல்லாது என அறிவிக்கும் பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அமல்படுத்தியவுடன், அச்சமயம் பொருளாதார நிபுணர்களே, ‘பணமதிப்பிழப்பு சரியா? தவறா?’ எனக் கணிக்க முடியாது தடுமாறி நின்றபோது, ‘பணமதிப்பிழப்பு ஒரு மோசடித்திட்டம்’ என மூன்றாவது நாளிலேயே சாடினார் அண்ணன் சீமான் . அதுமட்டுமா? பாஜகவின் பொருளாதாரக்கொள்கையைக் கண்டித்து, ‘மோடி ஒரு பன்னாட்டுத்தரகர்’ என எவரும் வைக்கத் தயங்கும் விமர்சனத்தை மக்கள் மன்றத்தில் வைத்தார்.
‘தமிழர்கள் இந்துக்கள்’, ‘இந்துக்கள்தான் தமிழர்கள்’ என பாஜக பரப்புரையை முன்வைத்தபோது, ‘தமிழர்கள் இந்துக்களே இல்லை; சட்டப்படி இந்துக்கள் ஆக்கப்பட்டிருக்கிறோமே ஒழிய, சரித்திரப்படி அல்ல’ என அறிவித்தார் அண்ணன் சீமான் . அத்தோடு நில்லாது, ‘தமிழின முன்னோர் முருகன் கூட இந்து இல்லை’ என பழனியில் முருகன் கோயில் அடிவாரத்தில் பொதுக்கூட்டம் போட்டு, இந்துத்துவத்தின் வேரை அறுக்கும் பரப்புரை செய்ததும் அண்ணன் சீமான் தான்! பாஜக இராமரை மையப்படுத்திய அரசியலை செய்கிறபோது, ‘நீங்கள் இராம்லீலா நடத்தினால், நாங்கள் இராவணப்பெருவிழா நடத்துவோம்’ எனக் கூறும் பேராண்மை இந்தியப் பெருநிலத்திலேயே சீமானுக்கு மட்டும்தானே இருந்தது. ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியப் பெருநாட்டின் விடுதலைக்கு ஆற்றியப் பங்கென்ன? வெள்ளையர்களின் சப்பாத்துகளை நாவால் துடைத்ததைத் தவிர!’ என சீறிய சீமானை இந்துத்துவவாதியாகச் சித்தரித்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையின்போது, ‘சாலையைப் பராமரிப்பு செய்யுங்கள்; மின்விளக்குகள் பழுதுபடாது பார்த்துக் கொள்ளுங்கள்’ என சுற்றறிக்கைவிட்ட திமுக அரசை பாஜகவின் எதிரியென நம்பித் தொலைப்பது கேலிக்கூத்து இல்லையா? 2014ஆம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டக் காலத்தில், குஜராத் படுகொலையைச் சுட்டி, மோடியை ராஜபக்சேவுக்கு நிகரான இனப்படுகொலையாளன் என அண்ணன் சீமான் வர்ணித்ததும், அதே தேர்தலில் பாஜகவின் குஜராத் மாடலுக்கு எதிராகப் பரப்புரை செய்ததும் நினைவிருக்கிறதா? எப்போதும் பாஜகவுக்கு எதிர்நிலையிலேயே இருக்கும் ஒருவர் எப்படி பாஜகவுக்கு ஆதரவான ஆளாக இருக்க முடியும்? துளியும் தர்க்க நியாயமே இல்லாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு, ஆகப்பெரும் பழியைச் சுமத்துவதா?
இசுலாமிய, கிருத்துவ மக்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளையும்போதெல்லாம் நாம் தமிழர் கட்சியே முனைப்போடு களத்தில் நின்றிருக்கிறது; நிற்கிறது. பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமி சிறைக்குள்ளேயே பாஜக அரசின் கொடுங்கோல்போக்கால் சாகடிக்கப்பட்டபோதும், அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசியபோது இங்கே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திமுக அரசால் கைதுசெய்யப்பட்டபோதும் குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சிதானே! முத்தலாக் தடை, குடியுரிமை திருத்தச்சட்டம், காஷ்மீரின் மாநிலத் தன்னுரிமைப் பறிப்பு, நபிகள் நாயகம் அவர்களைக் கொச்சைப்படுத்தி கல்யாணராமன் முதல் நுபுர் சர்மா. வரை பேசியபோது எதிர்ப்பு, ஹிஜாப் உடை உரிமைக்கு ஆதரவு நிலைப்பாடு, இராமர் கோயில் கட்ட அனுமதிக்கிற தீர்ப்புக்கு எதிர்ப்பு, பொது உரிமையியல் சட்டத்துக்கு எதிர்ப்பு, மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு என்பதோடு மட்டுமல்லாது, ரோகிங்கிய இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், இலங்கையில் இசுலாமிய மக்கள் படுகொலைசெய்யப்பட்டபோதும் இசுலாமிய மக்களின் குரலாய் ஒலித்து, அவர்களது உணர்வோடு நின்றது அண்ணன் சீமான் ! நாம் தமிழர் கட்சி!! இதுமட்டுமா, சதாம் உசேன் தூக்கு, யாகூப் மேனன் தூக்கு, அப்சல் குரு தூக்கு, புர்கான் வானி கொலை என அரசதிகாரத்தின் கொடும் அநீதி எங்கு நிகழ்த்தப்பட்டாலும், பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்களின் உணர்வோடு நின்றது நாம் தமிழர் கட்சி! காஷ்மீரிய விடுதலைப்போராளி யாசின் மாலிக்கை, ‘பயங்கரவாதி’, ‘தீவிரவாதி’ என்றெண்ணி மற்றோறெல்லாம் அவரது பெயரைக்கூறவே பயந்தபோது, ‘யாசின் மாலிக் எனது சகோதரன்’ என விளித்து, அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, காஷ்மீரிகளுக்காக தமிழ்நாட்டில் பேசியவரும், அதே காஷ்மீரைச் சேர்ந்த முதுபெரும் போராளி சையது அலி கிலானியோடு டெல்லியில் நடைபெற்ற தேசிய இனங்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்று தமிழர்களின் உரிமைச்சிக்கலைப் பேசியவரும் அண்ணன் சீமான் தானே!
இசுலாமிய மக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து வெளிவந்த திரைப்படங்களான விஸ்வரூபம் முதல் தி கேரளா ஸ்டோரி வரை, அவற்றிற்கு எதிராகத் தயக்கமின்றி எதிர்ப்பினைப் பதிவுசெய்தது அண்ணன் சீமான் ! நாம் தமிழர் கட்சி! இசுலாமிய மக்களுக்காக இயங்கக்கூடிய இயக்கமான, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ இயக்கத்தின் மீதான தடைக்கெதிராகவும், எஸ்.டி.பி.ஐ. இயக்கத்தினர் மீதான கொடும் அடக்குமுறையைக் கண்டித்தும் குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சிதானே! அவ்வளவு ஏன்? இன்றைக்கு நாம் தமிழர் கட்சி மீது அவதூறுப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிடுகிற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு ஹவாலா வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் அறிவித்தபோது, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சி! அண்ணன் சீமான் ! அதே மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லாவுக்கும், தமீமுன் அன்சாரிக்கும் இடையே முரண் ஏற்பட்டு இயக்கம் பிளவுபட இருந்தவேளையில், அப்பிளவை சரிகட்டி இயக்கத்தை ஓர்மைப்படுத்த முயற்சி எடுத்தவர் அண்ணன் சீமான் . இத்தனைக்கும் திராவிடக்கட்சிகளுள் ஒன்றைத்தான் அப்போது அவ்வியக்கம் ஆதரித்தது. இருந்தபோதிலும், இசுலாமிய மக்களுக்கான வலிமையான இயக்கம் வேண்டுமெனும் அடிப்படையில் அம்முயற்சியை எடுத்த அறம் சார்ந்த அரசியல் தலைவர் அண்ணன் சீமான்.
இவ்வளவு ஆண்டுகாலத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகள், ‘சிறுபான்மையினர்’ எனக் கூறி, இசுலாமிய, கிருத்துவ மக்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள்ளும், பாதுகாப்பின்மை உணர்வுக்குள்ளும் தள்ளியபோது, அவர்கள் தமிழர்கள்; இம்மண்ணின் மைந்தர்கள்! பெரும்பான்மை தமிழ்த்தேசிய இனத்தின் மக்கள்’ என ஆரத்தழுவி, அரவணைத்தவர் அண்ணன் சீமான் . தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது விடுதலைப்புலிகள் படைப்பிரிவில், ‘இம்ரான் பாண்டியன் படையணி’ இருந்ததுபோல, நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பாசறைகளில் ஒன்றான மாணவர் பாசறைக்கு அப்துல் ரவூப்பைக் குறியீடாக நிறுத்தினார் அண்ணன் சீமான் . புரட்சியாளர் பழனிபாபாவின் பெயரை இசுலாமிய இயக்கங்களே உச்சரிக்கத் தயங்கியபோது, “என் அண்ணன் பழனிபாபா” என உரிமையோடு விளித்து, தமிழர் நிலமெங்கும் மதத்தைக் கடந்து, எல்லா மக்களிடமும் அவரைக் கொண்டு போய் சேர்த்தார் அண்ணன் சீமான் . “எங்கள் தாத்தா காயிதே மில்லத் அவர்கள், ‘அல்லா’ என்று அழைப்பதற்கு முன்பே, ‘அம்மா’ என்று அழைத்தவர்” எனக்கூறி, ‘இசுலாம் வழி; இன்பத்தமிழே மொழியென நிற்பவர்கள் இங்குள்ள இசுலாமியர்கள்’ என முழங்கி, அவர்களை இம்மண்ணின் பூர்வக்குடிகளெனப் பறைசாற்றி, சங் பரிவார் இயக்கங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தவிடுபொடியாக்கினார் அண்ணன் சீமான் . வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் புகழைப் போற்றுகிறபோதெல்லாம், அவருக்கு திப்பு சுல்தான் உதவியதைக்கூறி, நன்றிப்பெருக்கோடு அப்பங்களிப்பை நினைவுகூர்ந்தார் அண்ணன் சீமான் .
எல்லாம் போகட்டும்! எந்தக் கூட்டத்தில் பேசப்பட்டப் பேச்சை வைத்து சர்ச்சையாக மாற்றிக் கருத்துருவாக்கம் செய்தார்களோ அதே கூட்டத்தில், “இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்கட்டும். நாமேகூட திமுகவுக்கு வாக்குச்செலுத்தலாம்” என உரக்கக் கூறினார் அண்ணன் சீமான் . அந்தளவுக்கு இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையை முதன்மையானதாகக் கருதி, களத்தில் நிற்கிறார். மறந்தும்கூட எவரும் அதனைப் பேசவுமில்லை; பேசுபொருளாக்கவுமில்லை. அதில்தான் ஒளிந்திருக்கிறது திராவிடக் கூட்டத்தின் நுட்ப அரசியல்! உண்மை இவ்வாறிருக்க, சீமானை இசுலாமிய, கிருத்துவ மக்களுக்கு எதிரி போல சித்தரித்தே தீர வேண்டுமெனும் ஒற்றை இலக்கை அடிப்படையாகக் கொண்டு திராவிடக்கூட்டம் பரப்பும் இத்தகையப் பொய்மைவாதங்கள் அப்பட்டமான மோசடித்தனம் இல்லையா? அறமற்ற அரசியல் பிழைப்புவாதச்செயல்பாடு இல்லையா?
அன்பான சொந்தங்களே! நபிகள் பெருமகனார், “புறம் பேசக்கூடாது; அவதூறு பரப்பக்கூடாது” என்று போதிக்கிறார். இந்த அவதூறுகளை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு, திறந்த மனதோடு சிந்தியுங்கள்! அதிகாரத்தில் இல்லாதபோதும் போராட்டக்களத்தில் உணர்வோடு நிற்கும் நாம் தமிழர் கட்சியை எதிரியாகப் பாவித்துவிட்டு, இசுலாமிய சிறைவாசிகளை விடுவிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதிகாரம் கையிலிருந்தும் அதனைச் செய்ய மறுத்து வரும் இந்த ஆட்சியாளர்களையா நம்புகிறீர்கள்? அன்றைக்கு கோவை குண்டுவெடிப்பின்போது இசுலாமிய மக்களைத் தேடித் தேடி வேட்டையாடிச் சிறைப்படுத்தியதும், இன்றைக்கு 20 ஆண்டுகாலத்தைக் கடந்த சிறைவாசிகளாக அவர்கள் முதுமையோடும், நோயோடும் போராடுகிறபோது இன்றைக்கு விடுவிக்க மறுப்பதும் இதே திமுகவின் ஆட்சியாளர்கள்தான்! “வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பதற்குக் காரணங்களைத் தேடுபவன் கொடுமையாளன்” எனும் நபிகளின் கூற்று உங்கள் நினைவுக்கு வரவில்லையா? இவர்களையா இன்னும் நம்புகிறீர்கள்? கடந்த மாதம் திருச்சியில் தர்கா ஒன்று நள்ளிரவில் எவருக்கும் தெரியாது இடிக்கப்பட்டு, இன்றுவரை அதற்கான நீதியை திமுக அரசு பெற்றுத்தரவில்லை. அதேநேரம், நாம் தமிழர் கட்சி அதற்கான நீதிகோரிப் போராட்டம் நடத்தியது. இதில் யார் எதிரி? சிந்தியுங்கள்! நபிகள்தான் கூறுகிறார்! “ஒரு நொடிச்சிந்தனை என்பது ஓராண்டு இறைவணக்கத்தைவிடச் சிறந்தது” என்று!
சிந்தியுங்கள் அன்புச்சொந்தங்களே! சிந்தியுங்கள்! உண்மை எதுவென்று உங்களுக்குத் தெளிவாகப் புலப்படும்! சிந்தியுங்கள்!
திரு.இடும்பாவனம் கார்த்திக்,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.