பிப்ரவரி 2024
இது குடியரசா? இல்லை “குடி”அரசா?
இந்த நாடு குடிகளின் அரசாக உள்ளதா? குடிகாரர்களின் அரசாக உள்ளதா? இத்தனை ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை வளமாக்க எண்ணியதுண்டா? அவர்கள் குடிமக்களின் வாழ்வை உயர்த்திட கொள்கைகளை வகுத்ததில்லை; கொள்ளை அடிப்பதற்கும், மக்களின் உழைப்பை வரி என்ற பெயரில் சுரண்டுவதற்கும் தான் அவர்களின் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தெருவெங்கும் அன்று அரசு சாராயக்கடைகள், அதன் பிறகு இன்று அரசு மதுபானக் கடைகள். இன்று ஊருக்கொரு கட்சியைப் பார்க்க முடிகின்றது. அதைப்போல் வீதிக்கொரு அரசு மதுபானக் கடைகளையும் பார்க்க முடிகின்றது.
அரசே தயாரிக்கும் மதுபானப் போத்தல்களில் எத்தனை மாற்றங்கள்? மதுபானக் கடைகளுக்கு உள்ளே அமர்ந்து குடிக்க எத்தனை வசதிகள்? இதைத்தான் இவர்கள் வளர்ச்சி என்கின்றார்களா?
மக்களை முன்னேற்றுகின்றோம் என்று மேடைதோறும் பேசிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலையே நடக்கின்றது. மதுபானக் கடைகளை முன்னேற்றும் நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்தத் திராவிட ஆட்சியாளர்கள் எண்ணியதில்லை… எண்ணவும் மாட்டார்கள். மதுக்கடைகளில் ஆண்டுதோறும் தீபாவளி,பொங்கல் நேரத்தில் கோடிகளை இலக்காக வைத்து அரசே வியாபாரம் செய்வது எவ்வளவு பெரிய அவமானம். வருமானத்தை எண்ணுகின்றவர்கள் தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டது தான் மிச்சம்.
எழுபத்தைந்தாம் ஆண்டு குடியரசு நாளில், “நாம் குடிமக்களை முன்னிறுத்தும் குடியரசில் வாழ்கின்றோமா…? இல்லை… குடிகார மக்களின் அரசாக மாறிப்போன நாட்டில் வாழ்கின்றோமா?” என்ற கேள்வியை நமக்குள்ளே ஒரு முறை அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணாக்கர்கள் மதுவிற்கு அடிமையாகிப் போனார்கள் என்று வருந்திய காலம் போய், பள்ளி மாணாக்கர்கள் இன்று அந்த இடத்தை பிடித்து விட்ட காலத்தில் இருக்கிறோம். பள்ளியில் படிக்கும் இளம் சிறார்களின் கைகளில் இன்று மதுக்குப்பிகளைச் சாதாரணமாகக் காணமுடிகின்றது.
படிக்கும் வயதில் பாட்டிலும் கையுமாக உலா வருகின்றார்கள். இதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை. திரைப்படங்களில் கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள், கண்டகண்ட கருமத்தை “கருத்து” என்ற பெயரில் விதைக்கின்றார்கள். அதையே இன்றைய இளைஞர்களும் உண்மையென நம்புகின்றார்கள். சோகம் என்றவுடன் குடிப்பது, பிறகு கத்தியைக் கையில் எடுப்பது, பிறகு சிறைக்குச் செல்வது எனக் குற்றச் சமூகத்தைக் கட்டமைக்கும் உளவியல் சிக்கல்களை, இப்படங்கள் உருவாக்குவது தான் கொடுமையிலும் கொடுமை.
நாள்தோறும் குடும்ப வறுமையினால் கூலி வேலைக்குச் செல்பவர்களின் சொற்ப வருமானத்தை, அன்றைய பொழுதே மதுபானக் கடையில் பறித்து விடுகின்றார்கள். அவர்களின் குடும்பம் மீண்டும் மீண்டும் வறுமையில் உழன்று துன்பப்படுகின்றது. பாவம் என் மக்கள் பாவப்பட்ட தேசத்தின் மக்களாகிப் போனார்கள்… மக்களைப் படிக்க வைத்த தலைவர்கள் வாழ்ந்த நாட்டில், இன்று குடிக்க வைத்துப் பாழாக்கி விட்டார்கள் இந்தத் திராவிட ஆட்சியாளர்கள்! எங்கே போய்க் கொண்டிருக்கிறது எங்களின் தேசம்? இது மது என்னும் விசம் பரவிய குடிகாரத் தேசமாகிப் போனதுதான் மிச்சம்!
வாழ்த்துகள் மக்களே! வாழ்த்துவோம் மக்களை!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.