மே 2025
இன விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி – நாம் தமிழர் கட்சி
அநீதியில் இருந்து தான் புரட்சி பிறக்கிறது; ஒரு ஆட்சியாளனின் கொடுங்கோன்மை தான் புதிய ஆட்சியாளனுக்கான தேவையை ஏற்படுத்துகிறது. இன்னமும் சொல்லப்போனால் ஒன்றன் அழிவு தான் மற்றொன்றின் தொடக்கம். இதில் இரண்டு வகை உண்டு; ஒன்று தீமையை அழித்து நன்மை வளரும்; மற்றொன்று தீமையால் அழிந்த நன்மைக்கு மாற்றாக மீண்டும் நன்மை அதீத உத்வேகத்துடன் எழும். இந்த இரண்டு வகைகளிலும் பொருந்தும்படி 2009 இன அழிப்பிற்குப் பிறகு தமிழ்த்தேசிய இன விடுதலை என்னும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பெருங்கனவை மைய நோக்காகக் கொண்டும், தமிழ்ப் பேரினத்திற்கு எதிரான திராவிட – ஆரிய கொடுங்கோலரசுகளை எதிர்த்தும் உதித்தது தான் நாம் தமிழர் கட்சி.
ஒரு காலத்தில் தெற்காசியாவையே கட்டி ஆண்ட உலகின் முதல் மூத்த இனமான தமிழ் இனம், பல ஆண்டுகளாகத் தனக்கெனத் தனி நிலப்பரப்பு கூட இல்லாது பிறரின் அடக்குமுறைக்கு உட்பட்டு இருந்தபோது, இந்தத் தமிழ் இனத்தின் விடுதலை என்பது நமக்கென்று ஒரு தனி நாடு இருந்தால் மட்டுமே சாத்தியம் என ஒரு வரலாற்று பேரினத்தின் பெருங்கனவைச் சுமந்து போராடி அதில் வெற்றியும் கண்ட பெருமகன், நமது தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
ஒரு இனத்தின் விடுதலை என்பது பல படிநிலைகளைக் கொண்டது. சமூகத்தில் உள்ள சாதீய ஏற்றத்தாழ்வுகள், பணக்காரன் – ஏழை என்ற பொருளாதார வர்க்க வேறுபாடு, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஒழிப்பதோடு, அனைத்திற்கும் முதலாக தற்சார்புடன் கூடிய பொருளாதார விடுதலையும் அவசியமாகிறது. இவை எல்லாவற்றையும் வென்றெடுத்த ஒப்பிலாப் பெருமகன் நம் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள், உலக நாடுகளிடமிருந்து தனித் தமிழீழம் என்னும் அரசியல் அங்கீகாரம் ஒன்றையே இன விடுதலையின் இறுதி இலக்காகக் கொண்டிருந்தார். அந்த ஒன்று மட்டும் இல்லாத காரணத்தினால் தான், அன்று இந்த உலக நாடுகள் எம் இனத்திற்கு எதிரான இன அழிப்பிற்கான உரிய நீதியைக் கேட்க, குறைந்த பட்சம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை இன அழிப்பு என உலக அரங்கில் பதிவு செய்யக் கூட இயலாமல் போனது.
நமது தேசியத்தலைவரின் கூற்றுப்படி வரலாறே நமக்கு ஆகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. நம் இன விடுதலைக்கான போராட்டக் களத்தில் அரசியல் விடுதலை என்ற ஒன்றைத் தாண்டி மீதி அனைத்தையும் வென்ற தலைவர் விட்டுச் சென்ற கனவின் அதே இலக்கோடு, மிக முக்கியமாக அரசியல் விடுதலையையே முதன்மைக் குறிக்கோளாக எடுத்துக்கொண்டு, தமிழ் இன விடுதலை என்னும் பெருங்கனவைக் கொன்ற 2009 இன அழிப்பின் வலியில் இருந்து பிரசவிக்கப்பட்டது தான், நாம் தமிழர் கட்சி.
நாம் விரும்பாத ஒன்று நம்மீது வலிந்து திணிக்கப்படும் போது, அதன் மூலமாகவே அதிகாரத்திற்கு வந்து பின்னர் அதை மாற்று என்பது இட்லரின் கூற்று. எந்த அரசியல் அதிகாரங்களை வைத்து எமது இனத்தைக் கொன்றொழித்தார்களோ அதே அரசியலில் எமக்கான அங்கீகாரத்தை வென்று அதிலிருந்து இன விடுதலைக்கான வழிமுறைகளைத் தொடங்குவது தான், நாம் தமிழர் கட்சியின் இலக்கு. அந்த பெரும் பயணத்தில் நம் தலைவரின் வழியில் சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவரையும் தமிழர் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி.

ஆணுக்குப் பெண் சமம் இல்லை; ஆணும் பெண்ணும் சமம் என்கிற தேசியத்தலைவரின் புரட்சிகர வழியில் அனைத்து தேர்தல்களிலும் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, அண்மையில் அனைத்து மண்டலத் தலைவர் பொறுப்புகளிலும் ஒரு ஆண் ஒரு பெண் என பாலின சமத்துவத்தோடு பொறுப்பு கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு பணக்காரன் – ஏழை என்கின்ற வர்க்க வேறுபாடு ஏதுமின்றி கொள்கைக்கு உண்மையாக உழைக்கும் தகுதி உடைய யாருக்கும் வாய்ப்பு வழங்குகிறது நாம் தமிழர் கட்சி.
எமக்கு எதிரான போரில் பிற நாடுகளிடம் பிச்சை பெற்றுப் போரை நடத்திய சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிராக, பாட்டி வடை சுட்டு விற்றுக் கொடுத்த காசில் படை கட்டிப் போரிட்ட எம் தலைவனின் வழியில், இந்த திருட்டு திராவிட ஆரிய கட்சிகள் போல் தனியார் பெருமுதலாளிகளிடம் பணம் கையூட்டாக வாங்காமல், எம் மக்களின் உதவியிலேயே கட்சியும் நடத்தி தேர்தலைச் சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி.

உலக வரலாற்றில் எது ஒன்றும் சாத்தியத்திலிருந்து பிறப்பதில்லை; தேவையிலிருந்து தான் பிறக்கிறது. சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கு எதிராக தமிழீழ விடுதலை என்னும் தேவையில் தான் விடுதலைப் புலிகள் என்னும் விடுதலை இயக்கம் பிறந்தது; அந்த இன அழிப்பின் வலியில் இருந்து அதன் தொடர்ச்சியாகக் தான் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர்தம் உரிமைக்கான தேவையையும் பேச நாம் தமிழர் கட்சி பிறந்தது. எமது வெற்றியும் அதுபோலத் தான்… சாத்தியமா என்பதைத் தாண்டி தேவையா என்று பார்த்தால், அது தமிழர்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது. எமது வெற்றி தள்ளிப் போகலாம்; இடையூறாக ஆயிரம் தடைகள் வரலாம்; ஆனால் எம் வெற்றி என்பது உறுதியான ஒன்று. இது பலபேர் தூக்கிச் சுமந்த தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுக் கனவு. விதைகளை விதைகளாகவே வைத்திருப்பதில் பயன் இல்லை; அவை விதைக்கப்படும் போது தான் மரமாகின்றன. அவ்வாறு அன்று விதைக்கப்பட்ட விதைகளினின்று துளிர்த்தெழுந்தது தான் இன்று பெருமரமாகியிருக்கும் நாம் தமிழர் கட்சி.
“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”
திரு. ப. காந்திமோகன்
செந்தமிழர் பாசறை – ஓமன்.