இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி – தலைவர் மேதகு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மலைகள் அழிப்பு மற்றும் பாறைகளை வெடி வைத்து உடைத்து கேரளாவில் கட்டப்படும் அதானி துறைமுகத்துக்கு நாள் ஒன்றுக்கு 600 க்கும் மேற்பட்ட பாரவுந்துகளில் கடத்தி செல்கிறார்கள். இயற்கை வளம் இவ்வாறு கொள்ளை அடித்தல் என்ன நிகழும் என்பதற்கு சமீபத்திய வயநாடு நிலச்சரிவு ஒரு முன்னெச்சரிக்கை என்பது விளங்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒன்றிய அரசாங்கம் நியூட்ரினோ ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. வேளாண் நிலங்களையும், காடுகளை பாதுகாக்கிறோம் என்று சட்டம் இயற்றி விட்டு ஆனால், அதை ஆளும் கட்சியும் அமைச்சர்களும் தங்களது சுய இலாபத்துக்காக தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுப்பது சட்டப்படியும் தவறு, இயற்கை விதிப்படியும் மிகவும் தவறானதே.
இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாக்கத்தானே இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளும் வனத்துறை, வேளாண்மைத்துறை, கனிம வளத்துறை ஆகிய துறைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் தனியார் முதலாளிகள் இயற்கையை அழித்து கொள்ளைப் பணம் சம்பாதிக்க அனுமதி அளித்து அவர்களிடம் அடித்த கொள்ளையில் பங்கீடு பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஒன்றியத்திலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் ஆளும் கட்சியினர் வேலியே பயிரை மேய்கின்ற கதையாக, பாதுகாக்க வேண்டியவர்களே இயற்கை வளங்களை சூறையாடுகிறார்கள்.
இந்த எச்சரிக்கையை எள்ளி நகையாடிவிட்டு மலையாவது, காணாமல் போவதாவது, இவை என்றெல்லாம் அபத்தம் என்று கேலி பேசியதோடு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோர் மீது வதந்தியை பரப்புக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி சில மெத்தப் படித்த அதிமேதாவிகளும். காலம் தனக்கான நேரத்தைத் தானே வகுத்துக் கொள்ளும் என்பார்கள்; அது தான் வயநாடு விஷயத்தில் நடந்தது.
சரி, மேற்கு மலைத்தொடர் எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது? பார்க்கலாம்…
மூன்று புறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்ப இந்திய ஒன்றியத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் எல்லை பாதுகாப்பு அரண் போல் திகழ்கிறது. மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்காக 1600 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கிறது இத்தொடர். இந்த மலைகள் இந்திய ஒன்றிய நாட்டின் தென் முனையான கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

பல நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு கோண்டுவானா என்ற கண்டம் சிதறுண்ட போது இந்த மலைத்தொடர் உருவானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மகாராஷ்டிர மாநில எல்லை அருகே தபதி நதிக்குத் தெற்கில் ஆரம்பிக்கும் இந்த மலைத் தொடர், அம்மாநிலத்தில் ஸஹ்யாத்ரி என்றும், கர்நாடகத்தில் பிலிகிரி ரங்கணா பெட்டா என்றும், தமிழ்நாட்டில் நீலகிரி என்றும், கேரளத்தில் சஹாய பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை நீரைச் சுமந்து செல்லும் மேகங்களை தடுத்து அங்கே மழையாகப் பொழிய வைக்கிறது. தென்னிந்தியாவின் வற்றாத ஜீவ நதிகள் அனைத்துக்கும் உற்பத்தி இடமாக இந்தத் தொடர் அமைகிறது.
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் அவற்றின் உபநதிகள் துங்கபத்ரா, ஹேமாவதி, கபினி ஆகியவையும் இம்மலைத் தொடர் அளிக்கும் அற்புத கொடை. இந்த நதிகள் கிழக்கு நோக்கி பாய்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
இதே தொடரில் இருந்து உருவாகும் மாண்டோவி, ஜுவாரி போன்ற நதிகள் பாய்ந்து சென்று அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த மலைத் தொடரில் பல அணைகள், நீர் மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் பெருமளவில் உயரே இருந்து பெரிய நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து பெருகி, பிறகு நதிகளில் சேர்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரத்தில் இருந்து வீழும் இயற்கை நீர்வீழ்ச்சி ஜோக் அருவி எனக் கருதப்படுகிறது. இதைப் போலவே குஞ்சிக்கல், சிவசமுத்திரம் ஆகிய நீர்வீழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
இம்மலைத் தொடரில் விலங்கு மற்றும் பறவைகளுக்கு சரணாலயங்கள் பல உள்ளன. இவற்றில் மலபார் புனுகுப் பூனை, சிங்கவால் குரங்கு, யானை, புலி, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைச் சந்திக்கலாம். பல அபூர்வ தாவர வகைகளும் மலையெங்கும் பரவியுள்ளன. சுற்றுலாவாசிகள் உள்ளங் கவரும் லோனாவாலா, கண்டாலா, மஹாபலேஷ்வர், குத்ரேமுக், குடகு, ஊட்டி, மூணாறு போன்ற பல தலங்கள் இத்தொடரில் பரவியுள்ளன. காபி, தேயிலை தோட்டங்கள் மக்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன.
இயற்கை நமக்குத் தந்த கொடை மேற்கு மலைத்தொடர். இதை பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மகாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் தான். ஆனால் ஏதோ தமிழ்நாட்டில் தானே மேற்கு தொடர்ச்சி மலைகளை வெட்டி அழிக்கிறார்கள் நமக்கென்ன என்ற மனப்பான்மையினால் அலட்சியப்படுத்தியதின் விளைவு, மலைகள் இன்னொரு பக்கம் அப்படியே பகுதி பகுதியாகச் சரிந்து, தன் வருத்தத்தை காட்டிக் கொள்கிறது.
என்ன செய்ய, நூற்றுக்கணக்கான மனித உயிர்கள், உடைமைகள், பொது சொத்துக்கள் எல்லாம் பலிகொடுத்து, இயற்கையைப் போற்றி பாதுகாக்கும் படிப்பினையை வளர்த்துக் கொள்ள இயலாத அறியாமையில் தான் நாம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

இவ்வளவு பெரிய பாதிப்புகள் நடந்தும் மலையாள மக்கள் முல்லை பெரியாறு அணை தான் காரணம் அதனை இடிக்க வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன. ஆனால் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் வீடுகட்டி விற்கும் தனியார் நிறுவனங்கள் முல்லை பெரியாறு அணையையின் முழுக்கொள்ளளவு தண்ணீர் சேமித்தால் தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பதை மறைக்க அணை பலவீனமாக இருக்கிறது என்று புரளியை கிளப்பி விடுவதோடு பெரும் தொகை செலவழித்து ‘Dam 999’ போன்ற திரைப்படங்களை எடுத்து அதன் மூலம் அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள் என்ற உண்மை அந்த மக்களுக்கு புரிவதில்லை. மேலும் அணையின் கொள்ளளவு பாதிக்கு மேல் அதாவது அணையின் தரைமட்டத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை களிமண் சேர்ந்துள்ளது, சொல்லப்போனால் நீரின் அளவைவிட களிமண் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்று கேரள சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், அணையை இடிக்க வேண்டும் என்று வசைபாடும் இணையவாசிகள் மற்றும் பொதுமக்கள் இதை உணர வேண்டும். இதற்கு பதிலாக அணையை தூர்வாரினால் அணை உடையும் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பு: கல்லணை கால்வாய் கட்டி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது ஆனால் இதுவரை அந்த அணை உடையவோ, வெடிக்கவோ இல்லை என்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உணரவேண்டும்.
முல்லை பெரியாறு அணைக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு போதிய நிதி ஒதுக்காமல் திட்டத்தை பாதியில் கைவிட்ட நிலையில் அதை முன்னெடுத்து நடத்தி ‘ஜான் பென்னி குயிக்’ என்ற ஆங்கிலேய தளபதி இங்கிலாந்தில் தனக்கு சொந்தமான நிலங்கள், தனது மனைவியின் நகைகளை விற்று பணம் கொண்டு வந்து தரமான முறையில் கட்டிமுடிக்கப்பட்ட அணை என்பதால் அதன் உறுதித்தன்மை குறித்த வதந்திகளை கேரள மக்கள் நம்பி ஏமாறாமல் இருப்பதோடு, அண்டை மாநிலத்தின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் கேரளாவில் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியாத அளவுக்கு சமநிலைப்பகுதியான வேளாண்மை நிலங்கள் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவே. அப்படியான சூழலில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவை கேரளாவின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
முறையாக தமிழகத்திற்கு அணையை கட்ட அனுமதி கேட்டும் அதற்கான செலவை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தபோது மறுத்தது கேரள அரசு. அனுமதி கொடுத்து இருந்தால் விருதுநகர், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் செழிப்பாக இருந்திருக்கும்.
செண்பகவள்ளி அம்மன் கோவில் அணைக்கட்டு கட்டித்தர உங்களிடம் அனுமதி கேட்டோம், அணையை கட்டுவதற்கு 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக கொடுத்த நிதி 5 லட்சம் அதை கட்டி முடித்து விகிதாச்சார அடிப்படையில் நீரை பகிர்ந்து கொடுத்து இருந்தால் இன்றைய பம்பை மற்றும் பிளீச்சிங் அணையில் விரைவாக நிரம்பாமல் நெருக்கடியை தவிர்த்து இருக்கலாம், 20 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு கொடுத்த 5 இலட்சம் நிதியை திருப்பி கொடுத்து அனுப்பியது கேரள அரசு. இது போன்ற செயல்பாடுகள் மூலம் இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை மதிக்காமல் இருக்கிறது அவ்வரசு.
மேலும் கேரளாவை ஆளும் கட்சிகள் அது கம்யூனிஸ்டோ, காங்கிரஸோ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டை ஏதோ எதிரி நாடாகவே கருதுகிறார்களோ என்ற எண்ணமே தோன்றுகிறது. தமிழர்கள் வகுத்து கொடுத்த நீர் மேலாண்மையை பின்பற்றி இருந்தால் இன்று வயநாட்டில் பெரிய இழப்பு ஏற்படாமல் கூட இருந்திருக்கலாம். இயற்கை பாதுகாப்பில் கேரள அரசு தங்கள் மாநிலத்தை மட்டும் பாதுகாத்தால் போதும் என்ற மனப்பான்மையில் இருந்து வருகிறது. அதனால் தான் கேரளாவில் கட்டப்படும் தனியார் துறைமுகத்துக்கு அனுமதியளித்து விட்டு தங்கள் மாநிலத்துக்குள் மலைகளை வெட்ட அனுமதிக்காமல் தடுத்து விட்டோம் என்ற குறுகிய எண்ணத்தில் தமிழ்நாட்டில் வெட்டி எடுத்து வரப்படும் மலைகளை அனுமதித்தார்கள். ஆனால் இயற்கையை காக்கும் விடயத்தில் இப்படி மாநிலங்களாக பிரித்து பார்க்காமல் இது நாம் அனைவரது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டால் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்க்கலாம்.

இப்படி இயற்கை வளங்களை அழிக்கும் கட்சிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியினர் இதுபோன்ற தவறுகளை இழைத்தால் நமக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்காது என்ற அச்சத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு துணை போகமாட்டார்கள். அதையும் மீறிச் செய்தால் ஒட்டு மொத்த மக்களும் மீண்டும் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்க ஒரு வாக்குக் கூட அளிக்காமல் ஒருமுறை புறக்கணிப்போமேயானால், எந்த கட்சியினரும் அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
அந்த அச்ச உணர்வை ஆளும் வர்க்கத்துக்கு ஏற்படுத்தி விட்டாலே போதும் தானாக இயற்கை வளம் பாதுக்காக்கப்படும். ஆனால் மக்களாகிய நாம் இதுபோன்று சுற்றுச்சூழல் பற்றி சிறிதும் சிந்திக்காமல், விழிப்புணர்வு அற்று யார் வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்று தனக்குத்தானே ஒரு இழிவான சிந்தனையை கற்பித்துக் கொண்டு நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டியது ஏதோ கடவுளின் வேலை அல்லது அடுத்த நாட்டுக்காரர்கள் அல்ல; நமது வேலை தான் என்பதை மறந்துவிட்டோம்.
நமது கைகளில் தான் ஆகப்பெரிய சனநாயக ஆயுதம் (வாக்கு) உள்ளது என்பதை இனியாவது உணர்ந்து நமது வாழ்வியலுக்கும், நமது அடுத்த தலைமுறை வாழ்வதற்கும் இயற்கை வளங்கள் இன்றியமையாதது என்பதை பகுத்தறிந்து வாழ்வோம். நமது வாழ்வியலை காக்கும் அரண் இயற்கை மட்டுமே. நாம் பின்பற்றும் மதங்களோ, சாதிகளோ அல்ல என்பதை உணர்வோம்.
திரு. தர்மர் பொன்னையா,
செயலாளர்,
செந்தமிழர் பாசறை – கத்தார்.