spot_img

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப்

சனவரி 2024

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப்

யாழ் குடாநாட்டின் மீது சந்திரிகா அரசு மேற்கொண்ட பெரும் தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள், தமிழர்களின் விடியலுக்காய் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்துச் சாவைத் தழுவிக் கொண்டார். அந்த அணையா நெருப்பு  அப்துல் ரவூப்பின் 28ம் ஆண்டு வீரவணக்க நாளை நினைவு கூரும் வேளையில் அன்னாரைப் பற்றி அறிவது நம் கடமையாகும்.
 
ஈழத்தமிழர் உயிர் காக்க “புரட்சித்தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல் ரவூப். 1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடா நாட்டிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்த அதே வேளையில்,  தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக இலங்கை சிங்கள கிரிக்கெட் அணி, இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் விளையாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.  தொலைக்காட்சியிலோ 150 விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத் தாக்குதலில் மரணமடைந்தனர் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் காணப்பொறுக்காமல் இருபத்தி நான்கு வயதுடைய இளைஞன் ஒருவன் மனச்சோர்வோடு காணப்பட்டான்.

1995, திசம்பர் 15ஆம் நாள் பொழுது புலர்ந்த பின், தான் பணிபுரிந்து வந்த இலண்டன் கணினிப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றான் அந்த இளைஞன். அங்கிருக்கும் ஒரு அறைக்குச் சென்று தாம் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன்னுடல் முழுவதும் ஊற்றினான்; நனைந்த ஆடையோடு அருகிலுள்ள காமராசர் வளைவுக்கு ஓடோடி வந்து தீயைப் பற்ற வைத்தான்; கருகிக் கொண்டிருக்கும் உடலைக் கண்டவுடன் நண்பர்கள் சிலர் காப்பாற்ற ஓடோடி வந்தனர். அப்போது அந்த இளைஞன் “என்னைக் காப்பாற்றாதீர்கள்; ஈழத்தமிழரைக் காப்பாற்றுங்கள்” என்று உருக்கமாகப் பேசிச் சரிந்தான்.  

உடனடியாக அரசு மருத்துவமனையில் உடல் முழுவதும் வெந்த நிலையில் சேர்க்கப்பட்டதும் காவல் துறையினர் மோப்பம் பிடித்து ஓடோடி வந்தனர். “தம்பி! நீ எந்த கட்சியப்பா?” என்றதும், “கட்சிகள் பேரைச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர்! முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தேன்!” என்று இறுதி வாக்குமூலம் தந்தான். பின் அந்த இளைஞன் யாரென்று விசாரித்தபோது, அவன் பெயர் அப்துல் ரவூப்; பிறப்பு 05.12.1971; தந்தை பெயர் அசன்முகம்மது; பெரம்பலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் – தி.மு.க. ஆதரவாளரும் கூட எனத் தெரிய வந்தது.

அப்துல் ரவூப் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்; சிறுவயது முதலே எதையும் தீவிமாகச் சிந்திக்கும் குணமுடையவர்; யாரிடமும் அதிமாக பேசாதவர். ஆனால் எதைப் பற்றிக் கேட்டாலும் தெளிவாக பதில் தருபவர்; தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவர்; புத்தக வாசிப்பு நிறைய உடையவர்; இந்திய அணி மட்டைப்பந்துப் போட்டியில் தோற்பதைக் கூடத் தாங்க மாட்டாதவர்; தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள அரசின் கொடூரக் கொலைகள் வெளிவந்த வண்ணம் இருந்தபோது அவ்விடயத்தில் இந்தியாவின் கல்மனம் கரையாதிருப்பது கண்டு மிகவும் வருத்தம் கொண்டார்; அன்றிலிருந்து சிங்கள அரசு போலவே இந்தியாவும் ஏன் தமிழர்களை வெறுக்கிறது? போன்ற பல கேள்விகள் அவர் மனதுள் வெடித்துக் கிளம்பின.

அப்துல் ரவூப் நாகப்பட்டினம் ஐ.ஐ.டி.யில் சுருக்கெழுத்தர் பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒருநாள் காணாமல் போனார். அவரைத் தேடி ஊரெங்கும் அலைந்து பரிதவித்த தந்தையார் அசன் முகம்மதுக்கு அவர் மும்பையில் உள்ள “கொலாபா” பகுதியில் இருப்பதாகத் தகவல் வந்தது. சமாதானம் பேசி ஒருவழியாய் அசன்முகமது தனது மகனை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது அப்துல் ரவூப், “நான் பிரபாகரன் அணியில் சேர்ந்து போராடுவதற்காகப் போனேன். இப்படித் தடுத்துவிட்டீர்களே? ” என்று கூறியது தந்தையைத் திகைக்க வைத்தது. அப்துல் ரவூப்பிற்கு ஈழ விடுதலை உணர்வு நெஞ்சில் கனன்று கொண்டிருப்பதைத் தந்தை புரிந்து கொண்டார். சாவின் விளிம்பிலும் கூட அப்துல் ரவூப்பின் கண்ணில் ஈரம் கசியவில்லை என்பதை பல பேட்டிகளில் அவரின் தந்தை வெளிப்படுத்தினார்.

அப்துல் ரவூப் ஈழத்தமிழர் விடுதலை மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் கொண்ட தீராப்பற்றைப் பாராட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுப் பணியகம் விடுத்த அறிக்கை பின்வருமாறு: “கலந்திருக்கும் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருப்பவைகள் யாவும் சத்தின்றி சருகாகப் போகும் என்பதைத் தான் அப்துல் ரவூப்பின் தியாகம் எடுத்துரைக்கிறது.” அப்துல் ரவூப் ஏந்திய தீப்பந்தம் இன்னும் அணையவில்லை; அது எதிரிகளை எரிக்கும்! தன்பகை முடிக்கும்! வெல்லும் தமிழீழம்! கிடைக்கும் தமிழ்த்தேசம்! செயற்கரிய ஈகத்தைத் தமிழ் பேசும் தன்னின மக்களுக்காகச் செய்த அந்த அப்துல் ரவூப் தான் நமது நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் குறியீடு! ஈழம் அடைவதை உறுதி செய்தலே இழக்கப்பட்ட இன்னுயிருக்கு நாம் செய்யும் ஈடு!

திரு. வன.லெனின்,

ஊடகம் மற்றும் இணையதளப் பிரிவு, செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles