நவம்பர் 2023
ஈழத்துப் பாவலர் புதுவை இரத்தினதுரை
“எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசியப் பிரக்ஞையை விழிப்புறச் செய்தவர்” – இது கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றிய தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது கூற்று.
ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கு அறிவுத்தளத்தில் மட்டுமின்றி, வெகுசனக் களத்திலும் தத்துவார்த்த கலை வடிவங்கள் அதுவும் குறிப்பாகக் கவிதைகள், தலைமுறைகள் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என வரலாறு நெடுகச் சான்றுகள் உண்டு.
எப்படி மகாகவி பாரதியார் கவிதைகள் இந்திய ஒன்றிய விடுதலைப் போரில் தமிழக மக்களை எழுச்சி பெற வைத்ததோ, அதற்குப் பின்னாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் இன்றும் தமிழர்களைத் திரண்டெழச் செய்கிறதோ, அது போல தமிழீழ விடுதலைப் போரின் போது துவண்டு கிடந்த, தூங்கிக் கிடந்த தமிழர்களை விழிப்புறச் செய்தது ஐயா புதுவை இரத்தினதுரை அவர்களது புரட்சிக் கவிதைகள் தாம். அடிப்படையில் தனது தீந்தமிழால் தமிழர் விடுதலைப் போராட்ட வேள்வித்தீயை கொழுந்துவிட்டெரியச் செய்த கலையுலகப் போராளி தான், புதுவை இரத்தினத்துரை அவர்கள்.
தமிழீழப் புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டம், புத்தூரில் 1948 திசம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று கந்தையா வரதலிங்கம் – பாக்கியம் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தந்தையைப் போலவே சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த இவர், தனது பதினான்கு வயது முதலேயே கவிதைகளும் எழுதி வந்துள்ளார். 1985ல் தனது 37ஆவது அகவையில் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர், பல ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்துள்ளார். அதுபற்றி அவரே “அமைப்பிற்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்பிற்குள் நுழைந்த பின்னும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது; இப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
இயக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றதோடு புரட்சிகரப் பாடல்கள் பல எழுதி தமிழ் மக்களை எழுச்சி கொள்ளச் செய்து போராட்டங்களில் பங்கேற்க வைத்தவர் அவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்! எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்!” என்று கூறும் ஐயா இரத்தினதுரை அவர்கள், “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக” என்று எழுச்சியூட்டுகிறார். தாயகத்தைக் காதலிக்க வலியுறுத்தும் கவிஞர், விழிப்புணர்வின்றி இருக்கும் தமிழர்க்கு “நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்; பலமிழந்து போனால் இனமழிந்து போகும்” என்று அறிவுறுத்துகிறார். தமிழ் நிலத்தையையும் தமிழர்களையும் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட நிலத்தின் மக்களை உணர்வு கொண்டு நேசிக்கும் கவிஞன் “ஈழத்தில் மட்டுமல்ல! எங்கெல்லாம் மானுடம் வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்!” என்கிறார்.

புரட்சிக் கவிஞரின் எழுத்து தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றோடு சேர்ந்து தமிழ் மக்களின் குரலாக, புலிகளின் குரலாக இறுதிவரை தொடர்ந்து இருந்துள்ளது. மக்களுக்கு உணர்வூட்டுவதாக, போராளிகளுக்கு ஊக்கமூட்டுவதாக, தமிழ்த்தேசிய எழுச்சியின் நம்பிக்கையை பறைசாற்றுவதாக, தமிழீழ மக்களின் அன்றாட இன்னல்களை எடுத்துரைப்பதாக, போராட்டத்தின் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக, புலிகளின் வெற்றியை மக்களிடத்தே கொண்டாட வைப்பதாக, தோல்விக்கு ஆறுதல் கூறுவதாக என கடைசிவரை அவரது தூவல் பயணித்துள்ளது. ஆயுத போராட்டம் என்பதையும் தாண்டி தமிழீழக் கட்டமைப்பு, நிலவியல் அமைப்பு, மக்களது கலாச்சார வாழ்வியல் மற்றும் அரசியல் போன்றவற்றையும் இலக்கியமாக்கியது ஐயாவின் எழுத்து. சொல்லப்போனால் முக்கியமான அந்தக் காலகட்ட நிகழ்வுகளை இலக்கிய வடிவில் அவர் ஆவணப்படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.
ஐயா பற்றி புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில், “எமது விடுதலைப் போர் எதிர்காலத்தில் மாணவர்களுக்கான ஆய்வுப்பொருளாகும் காலம் வரும்; அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த வரலாற்றுப் பாதைகளின் போக்குகளையும், இந்தப் போருடன் வாழ்ந்த மனிதர்களின் மன உணர்வுகளையும் சொல்லும் பெட்டகமாக அன்னாரது கவிதைகள் திகழும்” என்று கூறியுள்ளார். ஐயா பல போராளிகளின் வீரப்போராட்டங்களையும், தியாகங்களையும் உணர்வு மிக்க பாடல்களாக்கி தமிழர் உள்ளங்களில் கொண்டு சேர்த்தவர். “விடுதலைக்குக் கிளர்ந்தெழும் மனங்களில் திலீபன் சீவிக்கின்றான்”, “திண்ணை ஏறி அட்டையை தட்ட கூட அன்னையை கூப்பிட்ட தங்கைகளிலிருந்து அங்கயற்கண்ணிகள் அணி வகுத்தது எப்படி?” என்றெல்லாம் எடுத்துக் கூறும் கவிஞர், “உலகத் தமிழனுக்கு தனித்த குடிலாக எம் தமிழீழத் தாயகம் எழுந்து வரும்” என்று தான் உணர்வூட்டிய தமிழ் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறார்.
பணத்திற்கும், பகட்டிற்கும் பாட்டெழுதிய பாவலர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், தன் சமூகத்தின் விடிவிற்காகப் பாட்டெழுதிய பாவலன் நமது ஐயா ஆவார். போர்க்களங்களே இவர் கவிதைகளின் களங்கள்; துப்பாக்கிகளும் தோட்டாக்களுமே கருப்பொருட்கள்; சமரசமற்ற சமர்களே உவமைகள்; போரில் சிந்தப்பட்ட உதிரமே இவர் எழுத்துக்குத் திரட்சியான மை. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தமிழர்களின் போராட்ட வாழ்வியலை, அடக்குமுறை அவலங்களை எழுத்தாக மொழிபெயர்த்து தனது கவிதைகளில் அவர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தார். வானம் சிவக்கிறது, இரத்த புஷ்பங்கள், ஒரு தோழனின் காதற்கடிதம், நினைவழியா நாட்கள், உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் போன்றவை இவரது கவிதை தொகுப்புகள் ஆகும்.

“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும்”, என்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர். “இறந்த பின் என்னை எரிக்க கூடாது… ஏனெனில் என் தாயகம் எரிகாயங்களுக்கு உள்ளாகக் கூடாது; என்னைப் புதைப்பதையே விரும்புகிறேன்!” என்று கூறிய புதுவை இரத்தினதுரை அவர்கள், 2009 இறுதி கட்டப் போர் முடிந்த பின்னர் சிங்கள இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு இன்று வரை திரும்பவே இல்லை. இது தொடர்பில் எழுப்பப்பட்ட பல வினாக்களுக்கும் விடையில்லை. ஆனால் அறிவுத்தளத்தில் பங்களிப்பு செய்த ஒருவனுக்கு, அதுவும் தான் நம்பிய ஒரு தத்துவத்துக்காகத் தமிழை ஒரு ஆயுதமாக ஏந்திய கவியுலகச் சமரனுக்கு இறப்பும் இல்லை; மறப்பும் இல்லை. அதனால் தான் அவர் நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல; முக்காலத்துக்குமான தமிழ்த்தேசிய ஆளுமை.
மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிப்போராளிகளின் இறுதிச் சடங்குகளின் போதும் ஒலிக்கப்படும் மாவீரர் துயிலுமில்லப் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” மற்றும் தமிழீழப் புலிக்கொடி ஏற்றப்படும்போது பாடப்படும் தேசியக்கொடி வணக்கப்பாடலான “ஏறுதுபார் கொடி ஏறுதுபார்” ஆகியன ஐயா புதுவை இரத்தினதுரை எழுதியவையே. இதனால் தமிழீழ தேசியக் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டு, தமிழ்த்தேசியத் தலைவரின் மிகுந்த நெருக்கத்திற்குரியவராக இருந்த ஐயா புதுவை இரத்தினதுரை அவர்களைப் பற்றி இன்று தமிழ்த்தேசியம் சார்ந்து பயணிப்போர் மட்டுமின்றி, தமிழர் அனைவருமே வாசித்தறிய வேண்டும். ஈழப்போராட்டத்தின் சுவடுகளைச் சுமந்து நிற்கும் இவரது கவிதைகளை நாம் ஆழ உள்வாங்க வேண்டும். ஐயாவையும் ஐயாவின் எழுத்துக்களையும் கொண்டாடி ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலம் வென்றெடுப்போம் தமிழர் தாயகத்தை!!! கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!!!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”.
திரு ப.காந்திமோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.