spot_img

எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசன்

அக்டோபர் 2023

எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசன்

பெருந்தலைவர் காமராசர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். இவர் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர்; தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, தனது உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று வரலாற்றுப் புகழை அடைந்தார், காமராசர்.

சிறுவயதில், காமராசர் தனது மாமாவின் உணவுக் கடையில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் அவர் இந்திய தன்னாட்சி இயக்கத்தைப் பற்றிய பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். காமராசர் தினசரி செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம், சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து அறியும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரது வாழ்க்கையில் தீர்க்கமான திருப்புமுனையாக இருந்தது. அவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடவும், அந்நிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் உறுதி எடுத்தார். 1920 இல், அவருக்கு 17 வயதாக இருந்தபோது, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட எண்ணி காங்கிரசில் முழுநேர அரசியல் ஊழியராகச் சேர்ந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிச் செயலராகவும், 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சித் தலைவராகவும், 1946-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினராகவும், 1952-ல் மக்களவை உறுப்பினராகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் மக்களவை உறுப்பினராகவும், பொறுப்பு வகித்தவர் காமராசர். 1972-ல் தாமிரப் பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டி, பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார். உழவுக்கு உரியவை செய்த அவர், என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். அவர் செய்ததில் மிக முக்கியப் பணியாக இன்றளவும் கருதப்படுவது, தமிழக மாணவர்களின் கல்விக் கண் திறக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளே.

இராஜாஜி அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது பன்னிரண்டாயிரம் பள்ளிகளை நிர்வகிக்க முடியாமல் மூடிவிட்டார். அவற்றையும் திறந்து மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்ட நடவடிக்கை எடுத்ததோடு, ஏற்கெனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு‌ தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது அவரது முக்கிய கொள்கையாக இருந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார் காமராசர். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தையும் தொடங்கினார். அனைவருக்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே பதவியை அவர் கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார்.

நேரு அவர்களின் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சூழல் பற்றி பேசப்பட்டது. இந்திய ஒன்றியத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருந்ததால், “தென்னிந்தியாவின் கருப்பு தங்கம்” “கிங் மேக்கர் காமராசர்” போன்ற அடைமொழிகள் அவருக்குக் கிடைத்தன. வகுத்திட்ட கொள்கைகள்பால் வாழ்ந்து, காலமெல்லாம் மக்களின் நலன் சார்ந்த கனவு கண்ட அந்தப் பெருந்தலைவன், நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு வர வாய்ப்பு இருந்தும் தவிர்த்துவிட்டு லால் பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரைக் கொண்டுவந்தார். காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றிய அந்த மாபெரும் தலைவர், 1975-ஆம் ஆண்டு தனது ஆசான் சத்தியமூர்த்தியின் ஆசானான காந்தியின் பிறந்த நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார். பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் விருதுநகர் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராசர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம் அரசு விழாவாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.

திரு. நாகராஜ் அன்பழகன்,

செந்தமிழர் பாசறைகத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles