spot_img

ஓமன் நாட்டில் உறவுகளுடன் சில  நாட்கள்  !!!

மே 2023

ஓமன் நாட்டில்  உறவுகளுடன்  சில  நாட்கள்  !!!

The prophet Muhammad peace be upon him said! If you were to come to the people of Oman, they would have never insulted nor abused you!

20-4-2023

இன்னும் இருள் விலகாத அதிகாலை, மசுகட் விமான நிலையத்தில் நான் வந்திறங்கிய போது சற்றேறக்குறைய 3 மணி இருக்கும்; வீட்டு வேலைகளுக்காகவும், சிறு வியாபாரத்திற்காகவும், தங்களுடைய குடும்ப உறுப்பினரைச் சந்திப்பதற்காகவும், பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்கள் பயணம் செய்த விமானம் அது. உண்மையில் பயணம் முழு வசதியுடன் அமைந்திருந்தது. சிறிது நேரத்தில் ஓமன் சுல்தானத்திற்குள் (Sultanate of Oman) முறைப்படி நுழைவதற்காக, பயணிகள் அனைவரும் அதிகாரிகளின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது தான் விமான நிலையச் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த, மேற்குறிப்பிட்ட வாசகம் என் கண்களில் பட்டது. ஒரு தேசம் இதற்கு மேல் எப்படி வெளியாரைக் கண்ணியத்தோடும் மரியாதையோடும் தன்னிடம் அழைத்துக் கொள்ள முடியும்? எவ்வித தயக்கமும் இன்றி ஒரு புதிய தேசத்திற்குள் நம்பிக்கையோடு கால் எடுத்து வைப்பதற்கான எண்ணவோட்டத்தை, மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிற அந்த வாசகம் கொடுத்தது.

சோதனைகள் முடித்து உடைமைகளோடு விமான நிலையத்திலிருந்து வெளியேறினேன். எதிரே ஓமனும் நண்பர் இரவியும் இன்முகத்தோடு வரவேற்றார்கள் (இரவிவர்மன் – வளைகுடா நாடுகளின் செந்தமிழர் பாசறைச் செயலாளர்). புன்னகை மற்றும் பயண விசாரிப்புகள் கடந்து மகிழுந்தில் ஏறினோம்;

சாலையின் இருமருங்கிலும் ஒளிரும் விளக்குகளுக்கு அப்பால் இருள் இன்னும் நீடித்திருந்தது. இரவு நேரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து நெருங்கும் மசுகட் நகரைப் பார்ப்பதற்கு, இளவரசிக்குச் சீதனமாகத் தரப்பட்ட தங்க வைரங்கள் மினுக்கி ஜொலிக்கும் ஆதிகாலத்து அரபு ஆபரணப் பெட்டகம் போலிருந்தது. 20 நிமிடங்கள் பயணப்பட்டு இரவியின் அடுக்குமாடிக் குடியிருப்பை வந்தடைந்தோம். அவர் எனக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அறையைக் காட்டி ஓய்வெடுத்துக் கொள்ளச் சொன்னார். அறை தூய்மையாகவும், அமைதியாகவும் இருந்தது‌.

எனக்கு தூரப்பயணங்கள் எப்போதும் ஒருவித வினோதக் கிளர்ச்சியை மனதின் அனைத்து பரப்புகளிலும் தரக்கூடியன. புதிய தேசத்தின் மீதான குறுகுறுப்பு எண்ணவோட்டத்தில் தொற்றிக்கொள்ள, பெரிதாக ஓய்வு ஒன்றும் தேவைப்படவில்லை; இருப்பினும் அடுத்த நாளின் புத்துணர்ச்சியை எண்ணிச்  சில மணி நேரங்கள் ஓய்வெடுத்துக்கொண்டேன். விடியும் பொழுதில், நான் தூங்கி எழுவதற்கு முன்பாகவே ஓமன் செந்தமிழர் பாசறை உறவுகள் ( சூர்யா, வினோத் இராசா, எடிசன் ) என்னைச் சந்திக்க இரவியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

செந்தமிழர் பாசறையின் செயல்பாடுகள், தமிழக அரசியல் களம் என அந்த உரையாடல் நீண்டது. அண்ணன் எடிசன்  தாவரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால் அதைப்பற்றி ஆர்வத்தோடு அவரால் பேச முடிந்தது. மதிய உணவு வேளையில், இரவியோடு அந்த வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்த அண்ணன் மலைச்சாமி அவர்கள், செய்நேர்த்தியோடு அருமையாகத் தான் சமைத்த உணவினைப் பரிமாறிக் கொண்டிருந்தார். ஒரு தேர்ந்த சமையல் கலைஞரின் பக்குவத்தோடு, அவர் உணவினை ஆயத்தம் செய்திருந்ததும், அதைப் பரிமாறிய விதமும் அந்த உணவிற்கு மேலும் சுவையினை கூட்டியது.

மாலை செந்தமிழர் பாசறை மூத்த நிர்வாகி ஐயா அருள்தாசு அவர்களை மரியாதை நிமித்தமாக, அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்த்தேசிய அரசியல் குறித்த தன்னுடைய பார்வையை மிகுந்த முதிர்ச்சியோடும், தேர்ந்த திட்டமிடலோடும் அவர் விளக்கிக் கொண்டிருந்தார். அவரின் கருத்துக்கள் அரசியல் தளத்தில் இயங்கக்கூடிய என் போன்ற இளையவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப்பட்டது.

பொழுது மங்கும் நேரம், அண்ணன் செந்தில்குமார் சாலை வழியாக துபாயிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அவர் உண்மையில் ஒரு கவர்ந்திழுக்கக்கூடிய ஆள். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வு தனி வகை. முன்னிரவு, ஒரு புகழ்மிக்க தர்க்கீசு உணவகத்தில் உணவருந்தினோம். காசி பாண்டியன் எங்களோடு சேர்ந்து கொண்டார். சுவைபட உண்டாக்கப்பட்ட அயல்நாட்டு உணவு, கொஞ்சம் பேச்சு என அந்த இரவு நின்று நிதானித்து நகர்ந்து கொண்டிருந்தது‌.

முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு புதிய நகரத்தை இரவு நேரத்தில் சுற்றி வருவதும், எவ்வித ஆரவாரமுமின்றி ஆழ்ந்த அமைதியில் இருக்கிற அதன் தெருக்களையும், சாலைகளையும் கண்டுகளிப்பதும், குளிர்ந்திருக்கிற அந்நகரத்துக் கடலில் கால் நனைப்பதும், மொத்தத்தில் அந்நகரத்தை அதன் அந்தரங்க தருணங்களில் அணைத்துக் கொள்வது போன்றது. சுற்றித் திரிந்து வீடு வந்து சேர்ந்தோம். அடுத்தநாள் காலையிலிருந்து தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன.

21-04-2023

காலையில் ஓமன் செந்தமிழர் பாசறைத் தலைவர் அண்ணன் திரு.சமீர் கான் எங்களுடன் இணைந்திருந்தார். உறவுகளோடு 150 கிமீ பயணம் செய்து ஓமனின்  இருமைசு பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் ஓமன்வாழ் தமிழ்த் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தேன். பர்கா பகுதியின் பொறுப்பாளர்கள் அண்ணன் கதிரேசன், மாரிமுத்து ஆகியோர் அந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாம் தமிழர் கட்சியில் – செந்தமிழர் பாசறையில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு ஆர்வமுள்ள உறவுகளுடனான உரையாடல், நல்லதொரு அரசியல் அனுபவமாக அமைந்தது. மேலும் பர்கா பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர்களின் அழைப்பின் பெயரில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினேன். கத்ரா பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களோடு அவர்களின் பணியிடத்தில் நடைபெற்ற சந்திப்பும் – உரையாடலும், ஓமன்வாழ் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்தியது.

மதிய உணவு செந்தமிழர் பாசறையை ஓமனில் உருவாக்கிய சகோதரர் இராசா அவர்களின் வீட்டில் இருந்து வந்திருந்தது. மாலையில் நிசுவா நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணத்தின் இடையே, அண்ணன் திரு.மார்க்சு அவர்களின் தொழிற்சாலையினைப் பார்வையிட்டேன். அவர் தீவிர உழைப்பின் மூலமாக அந்த இடத்திற்கு உயர்ந்து வந்தவர். தொடர்ச்சியாக நிசுவா மண்டல இரமலான் பெருநாள் நிகழ்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்று நாம் தமிழர் வெற்றிக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன? என்பது குறித்து சிறப்புரையாற்றினேன். அண்ணன் கிருசுணன் குட்டி, ஆண்ட்ரூ றீசு, நாகநாதன், சுரேசு, பிரியா, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சிறப்புற நடத்தித் தந்த அந்நிகழ்வு, உறவுகள் குடும்பத்தோடு பங்கெடுத்த, சீரிய முறையில் திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாக அமைந்தது.

22-04-2023

பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மசுகட் மண்டலச் சிறப்புக் கூட்டம் செந்தமிழர் பாசறை வளைகுடா (நிசிசி) செயலாளர் திரு.இரவிவர்மன் அவர்கள் தலைமையேற்க,  ஓமன் செந்தமிழர் பாசறைத் தலைவர் திரு.சமீர்கான் மற்றும் செயலாளர் திருமுருகன் அவர்கள் முன்னிலை வகிக்க, திருமதி.கிருபா வினோத் ராசா, திருமதி. அனிதா இராசா ஆகியோர் தொகுத்து வழங்க, முரசம் குழுவினரின் பறை இசை நிகழ்வோடும், குழந்தைகளின் பரதநாட்டியம் மற்றும் தனித்திறன் கலை  நிகழ்வுகளோடும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பமாகக் கலந்துகொண்ட நிகழ்வில், தமிழ்த்தேசியத்தின் தற்போதைய தேவை மற்றும் எதிர்காலம், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவைகளைப் பற்றிச் சிறப்புரையாற்றினேன். உறவுகளின் கேள்விகளுக்கு விடைளிக்கும் நிகழ்வுக்குப் பிறகு, சிறப்பான முறையில் பணி செய்த உறவுகளுக்கு, செந்தமிழர் பாசறை ஓமன் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

23-04-2023

காலை விமானத்தில் மசுகட்டில் இருந்து 1000கிமீ தொலைவில் உள்ள சலாலா மண்டலத்துக்குப் பயணப்பட்டேன். ஒட்டுமொத்த ஓமன் தேசத்திலும் சலாலா ஒரு வேறுபட்ட நிலப்பரப்பு. வேறு எங்கும் காண முடியாத பசுமையும், வனப்பும் அந்நகரத்திற்குரியது. ஓமனுக்கு, ஏமனில் இருந்து வந்து சேர்ந்த நகரம் அது. விமான நிலையத்தில் அண்ணன் விசயகுமார், செல்லப்பாண்டி, செந்தில் குமார், தனபாண்டி, திருச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். ஒரு தொழிற்பேட்டைப் பகுதியில் இருந்த பஞ்சாபி உணவகத்தில் சூடான ஒரு தேநீருக்கு பிறகு, அண்ணன் விசயகுமார் அவர்களின் வீட்டை அடைந்தோம். முன்னதுபோல் ஒரு அறை, நீளமான பருத்தித் துணியினாலான  சன்னல் விரிப்புகளின் வழியே மெல்லிய மஞ்சள் நிற ஒளி உள்ளே வர, ஒரு மரக்கட்டில், மேசை, முகம் பார்க்கும் கண்ணாடி சகிதம் சிறப்பாக இருந்தது அந்த அறை. மதியம் அண்ணன் தனபாண்டி அவர்களின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிறகு உறவுகளோடு சலாலா தமிழ்ச்சங்க நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களின் சமூகச் செயல்பாடுகள் பற்றிக் கேட்டறிந்து, அவர்களின் சமூகப் பங்களிப்பில் நாம் தமிழர் கட்சியினுடைய ஒத்துழைப்பு உறுதியாக இருக்கும் என்று நம்பிக்கை கூறினேன். அவர்களோடு சலாலாவில் தமிழ்ச் சமூகம் குறித்த உரையாடலுக்குப் பிறகு, அண்ணன் சீமான் அவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு ஓமன் துணைத் தலைவர் அண்ணன் விசயகுமார் அவர்களோடு மற்ற நிர்வாகிகளாலும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சலாலா மண்டலக் கூட்டத்தில், ஏன் வெல்ல வேண்டும் தமிழ்த்தேசியம்? ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்? என்பது குறித்துச் சிறப்புரையாற்றினேன். அண்ணன் விசயகுமார் தலைமையிலான குழுவினர் தாங்கள் பயின்ற பறையிசையினை அந்த நிகழ்வில் அரங்கேற்றினார்கள். சிறுவர்களின் தனித்திறன் கலை நிகழ்வுகள், பாடல்கள் என நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. நண்பர் சாவித் கானை அங்கே சந்திக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு. பழகுவதற்கு இனிமையானவர். சலாலா மண்டலத்தில் முதன்முதலாகச் செந்தமிழர் பாசறையை தோற்றுவித்தவரும் அவர்தான். அடுத்தடுத்த நிகழ்வுகளில் சலாலா தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது, சாவித் கான் தானறிந்த வரலாற்று விடயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

24-4-2023

காலையில், சகோதரர் இளையராசா எங்களோடு இணைந்து கொண்டார். அண்ணன் செந்தில் மற்றும் செல்லபாண்டி ஆகியோரை அவர்களின் பணியிடத்தில் இருக்கக்கூடிய அவர்களின் அறையில் சந்தித்தேன். வெளிநாட்டு வாழ்க்கை குறித்த தன்னுடைய சொந்த அனுபவங்களை அண்ணன் செந்தில் அவர்கள் பகிர்ந்து கொள்ளும்போது “வாழ்க்கையின் இரண்டு கரைகளுக்கு நடுவே நல்லது, கெட்டது என எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு கால நதி ஓடிக்கொண்டே இருக்கிறது; கடமைப்பாடுகளுக்குக் கட்டுப்பட்ட மனிதன் ஒரு மரக்கட்டை போல அந்த நதியில் மிதந்து கொண்டிருக்கிறான். அவன் பற்றியிருக்கின்ற கனவுகளும், எதிர்காலம் குறித்த ஆசைகளும்தான் இந்த ஊசலாட்டத்தில் ஓரளவுக்கேனும் அவனை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்கின்றன” என எண்ணத் தோன்றியது.

மதியம் சகோதரர் கண்ணன் அவர்களுடைய வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய மகள் மகாலட்சுமி மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர். அண்ணன் தனபாண்டியனின் குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். அவரது மகன் ஒரு சுட்டிக்குழந்தை. மதியத்திற்குப் பின் சலாலா சேவைச் சங்கத்தோடு ஒரு சந்திப்பு இருந்தது. நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, அன்றிரவு சலாலாவிலிருந்து புறப்பட்டு மீண்டும் மசுகட்டை வந்தடைந்தேன். அடுத்தநாள் காலை உணவின்போது அண்ணன் மார்க்சை, அவரது வீட்டில் சந்தித்தேன். அன்று மதியம் தொழிலதிபர் திரு.முத்து முருகனைச் சந்தித்து உரையாடக்கூடிய வாய்ப்பு அமைந்தது.

மாலை சகோதரர் கோபிநாத் அவர்களை அவரது வீட்டில் சந்தித்துப் பேசி, குழந்தைகளுடன் நேரம் செலவிட்டேன். அன்றைய நாள் முழுவதும் சந்திப்புகள், அரசியல் உரையாடல்கள், செந்தமிழர் பாசறை அயலகக் கட்டமைப்பு குறித்த ஆலோசனைகள் என நீண்டு, இரவு அண்ணன் சித்திக் மற்றும் அருள்பிரகாசு ஆகியோர் தன் நண்பர்களோடு என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். அண்ணன் சித்திக் அவர்களோடு நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தது நல்ல நினைவாக இருந்தது.

அன்றைய நாள் முழுவதும் என்னோடு இருந்த சுரேசு அவர்களுடைய வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகளோடு உரையாடிவிட்டு  இரவு வீடு திரும்பினேன். பயணத்தை முடித்துக்கொண்டு, நள்ளிரவு கடந்து விமான நிலையம் வரும் வழியில், தம்பி வளைகுடா பொருளாளர் கிருட்டிண மூர்த்தியைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டேன்.

உண்மையில் இந்தப் பயணம் சிறந்த ஒரு அரசியல் பயணமாகவும், தனிப்பட்ட முறையில் மனதுக்கு மிக நெருக்கமான பயணமாகவும் ஒருசேர மாறியிருந்தது. இந்தப் பயணத்தை வடிவமைத்த திரு.இரவிவர்மன் அவர்களுக்கும், மேலும்  இடர்பாடான சூழலிலும் தங்களின் தீவிரமான உழைப்பினால் நிகழ்வுகளைச் சிறப்புறச் சாத்தியப்படுத்திய அனைத்து மண்டலங்களின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வினைச் சுவைபட மாற்றிய குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஓமன் தேசத்து உறவுகளுக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துகளும். நமது இலட்சியத்தில் நாம் உறுதியாக வெல்வோம்!!!

நண்பர் இரவியும்,சுரேசும் விமான நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தனர். அவர்களிடம் விடைபெற்று, சோதனைகளை முடித்துக்கொண்டு, அந்த நள்ளிரவில் விமானத்திற்காகக் காத்திருந்தேன். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் இதே விமான நிலையத்தில் படித்த வாசகம் நினைவுக்கு வந்தது.

நான் அன்போடும், கண்ணியத்தோடும் நடத்தப்பட்டி ருந்தேன்.

(கட்டுரையின் நீளம் கருதிச் சில நிகழ்வுகள், சில சந்திப்புகள், சில உரையாடல்களைத் தவிர்த்து இருக்கிறேன்.)

திரு. துருவன் செல்வமணி,

மாநில கொள்கை பரப்புச் செயலாளர்,

நாம் தமிழர் கட்சி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles