நவம்பர் 2022
கனவிற்கும் எட்டாத பேரொளியாம் எம் தலைவரும் தமிழினப் படுகொலையும்
133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் தொடங்கின. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்களச் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு, ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாத தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன.
தமிழர்களின் தாயகமான வடகிழக்கு பகுதிகளில் பலவந்த குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன. அத்துடன் தனிச் சிங்களச் சட்டம் போன்ற அணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகவும் பாதித்தன. தமிழ் மக்கள் அரசியல் உரிமையற்றவர்களாக, அரசியல் அதிகாரம் இழந்தவர்களாக மாற்றப்பட்டனர். இக் காலகட்டத்தில் ‘ஈழத்துக் காந்தி’ என தமிழர்களால் அழைக்கப்பட்ட தந்தை செல்வதாயகம் சனநாயக ரீதியிலான போராட்டத்தை தொடங்கினார். ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைக்காக சனநாயக ரீதியாகத் தீவிரமாகக் குரல் கொடுத்தார்.
சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கண்டு அதனைச் சமாதானப்படுத்தும் விதமாக தத்தை செல்வநாயகத்துடன் முன்னாள் பிரதமர் பண்டார நாயக்க சேர்ந்து பண்டா செல்வா என்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். இது தீவிர இனவாதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் பௌத்த பிக்குகளின் கடுமையான பேரினவாத எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது. தந்தை செல்வாவின் தொடர் போராட்டத்தை அடுத்து டட்லி செல்வா ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தமிழர்களுடன் செய்யப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் சிங்களப் பேரினவாதிகள் கிழித்தெறிந்னர்.
1970ல் நடந்த தேர்தலில் சிறிமாவோ பண்டார நாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அந்த புதிய அரசாங்கமானது தமிழர்களுக்கெதிரான இரண்டு சட்டங்களை இயற்றியது. முதலாவது, தரப்படுத்துதல் கொள்கை என்ற இரட்டை அளவுகோள் கொள்கை. அதாவது பல்கலைக்கழகங்களில் சேரவேண்டுமானால், சிங்கள மாணவர்களை விடத் தமிழ் மாணவர்கள் கூடுதலான மதிப்பெண் எடுக்கவேண்டி இருந்தது.
இரண்டாவதாக, அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் தமிழ் பேசும் மக்களுக்கு பத்து விழுக்காடுக்கும் குறைவான வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த கொள்கைகளை தமிழர்கள் தரப்பு கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக, தந்தை செல்வா அக்டோபர் 1972 இல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். அதன் பிறகு விரைவிலேயே. 1973 இக்குப் பிறகு, தமிழர்களுக்கான கட்சிகள் தங்களுக்கென்று ஒரு தனித் தமிழ் ஈழ நாட்டைக் கோரியது.
இதன் நீட்சியாக தந்தை செல்வா தலைமையில் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனுமிடத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும்’ என்பதே அத்தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாகும்.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் உறுதியேற்கப்பட்டது.
பின்னர் 1977ல் நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழர்கள் ஏகோபித்த ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கிறார்கள். அதே ஆண்டில் தந்தை செல்வா இறந்து விடுகிறார்கள். தமிழர்கள் தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலொழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் தமிழ் இளையோர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலையை சிங்களப் பேரினவாதமே உருவாக்கிவிட்டது. அதன் விளைவாக முப்பதிற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் உருவாகிறது. அதில் எண்ணற்ற குழுக்கள் இந்திய இலங்கையின் கூட்டுச் சதியால் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகவும், உளவு சக்தியாகவும், பிளவு சக்தியாகவும் மாறின. ஆனால் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கட்டியெழுப்பிய ‘விடுதலைப் புலிகள்” என்ற மக்கள் இராணுவமே உண்மையாகவும், உளப்பூர்வமாகவும். முழு அர்ப்பணிப்புடனும் களத்தில் தின்றார்கள். உண்மையிருந்த தேசியத் தலைவரின் படைக்கே உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரவாக இருந்தார்கள் என்பதே வரலாற்றுப் பேருண்மை.
தலைவர் அவர்கள், நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது என போதித்தார், மக்களும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். மேலும் எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த தலைமுறை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று கருதினார்கள்.. குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை நமது தேசியத்தலைவரின் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே சாரும்.
பிரபாகான் என்ற புறநானூற்று வீரன் ஒரு சாதாரண பிறப்பு அல்ல. அவர் ஓர் அகராதி. எந்த ஒரு வல்லாதிக்க உதவியும் இல்லாமல் கடற்படை, வான் படை, தரைப்படை, கரும்புலிப்படை, பீரங்கிப்படை, தமிழீழ காவல்துறை போன்ற காப்பரண்களைக் கொண்ட தமிழீழத்தைக் கட்டமைத்து, புலிகளின் ஒழுக்கம், அதன் நிர்வாகம், துறைகள், தமிழீழ வைப்பகம், தமிழீழ நீதிமன்றம், தமிழீழ சட்டக்கோவை, தமிழீழ காவல்துறை, மருத்துவ சேவை, செஞ்சோலை, அன்புச்சோலை
முதியோர் பேணலகம், புலிகள் நடத்திய பத்திரிக்கைகள், மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம், கலைக்கு கொடுத்த கௌரவம். வனவள பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம், புலிகள் காலத்தில் இருந்த பெண்கள் முன்னேற்றம் / பாதுகாப்பு / சுதந்திரம், சாதியில்லா சமநிலை, புலிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, வழிபாட்டு சுதந்திரம், மாவிரர் தின உரைகள், பத்திரிக்கையாளர்கள் இடையேயான நேர்காணல்கள், தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள், சிங்கன பொதுமக்கள் பற்றிய புலிகளின் பார்வை, புலிகளின் அரசியல் பிரிவு, சர்வதேச நாடுகள் உடனான அமைதி பேச்சு வார்த்தைகள் இவைகள் எல்லாமே தமிழர் என்ற தேசிய இனத்தின் பெருங்கனவாம் சுதந்திர தனித் தமிழீழ சோசலிசக் குடியரசை நிறுவி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று பன்னாட்டுச் சமூகத்தில் எல்லோரையும் போல, தமிழர்களும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்பதற்காக, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கட்டியெழுப்பிய தமிழ்த்தேசத்திற்கு, கெடுவாய்ப்பாக சர்வதேச அங்கீகாரம் மட்டுமே கிடைக்கப்பெறவில்லை.
40 வருட போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகள், தமிழர்களைக் கொல்லும் சிங்கள் இராணுவமே எம் எதிரி ஆனால் சிங்கள மக்கள் மேல் சிறு கீறு கூட விழுமளவிற்கு நடந்துகொண்டதில்லை.. எந்த ஒரு பெண்ணும் விடுதலைப்புலிகளால் பாலியல் துன்பங்களுக்கு உள்ளானார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இளம்பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கும் எந்தப் பயமும் இன்றி வீதியில் நடந்து செல்வமுடியும், விடுதலைப் புலிகள் ஆட்சியில் எந்த ஒரு தமிழ்ச் சிறுவனும் புகைபிடித்த வரலாறு இல்லை. புலிப்படையில் இருக்கும் எந்தப் போராளியும் மது, புகைப்பழக்கம் அறவே அற்றவர்கள். புலிகளின் ஒழுக்க நெறிகளைக் கண்ட தாய்மார்கள் தங்களின் பெண் பிள்ளைகளை படைக்கு அனுப்பினார்கள். ஆண் பெண் என பாலின வேறுபாடுகள் இன்றித் தலைவர் சரிக்குச் சமமாக வழிநடத்தினார்கள். தமிழீழ நாட்டில் தலைவர் பிரபாகரன் ஆட்சியில் பிச்சைக்காரனை யாம் கண்டதில்லை. தமிழ் மாணவர்கள் குண்டு மழைக்கு இடையில் கல்வி பயின்றாலும் அவர்களை மாபெரும் பண்பாட்டில் வளர்த்தார் தலைவர். இராசராசச் சோழன் தொடங்கி மனுநீதிச் சோழன் வரை அத்தனையும் ஒன்றாகி நின்ற வரலாற்று பெருமகனே தலைவர் பிரபாகரன்.
21 நாடுகள் சேர்ந்து ஒடுக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்டம்.. மீண்டும் அமையுமா தெரியாது! ஆனால் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக பல கோடி ஆண்டுகள் வேண்டும். கனவில் கூட இப்படி ஒரு கண்ணியம் மிகுந்த போர் வீரன் வரமாட்டார்.. தம் கனவிற்கும் எட்டாத பேரொளி பிரபாகரன்; ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம் பிரபாகரன்.
தமிழர் இறையாண்மையுடன் கூடிய தமிழீழம் அமைக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் குறிக்கோன் தலைவர் நினைத்திருந்தால் மேற்குலக நாடுகளிடம் சில சமரசங்கள் செய்து கொண்டு என்றோ தனிநாடு பெற்றிருக்கலாம். ஆனால் தலைவரின் புலிப்படை, இறையாண்மையை விட்டு கொடுக்காமல் உறுதியாக போராடியது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பீக்கான் திட்டம் உருவாக்கப்படுகிறது. பீக்கான் (Beacon) என்றால், ‘திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள்.
சிறீலங்கா, இந்தியா உள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இத்திட்டத்தை தீட்டினர். 10 சதியாலோசனை செய்து பீக்கான் திட்டத்தின் நோக்கம் விடுதலைப்புலிகளை அழிப்பது’ மட்டுமல்ல, அதன் முதன்மை நோக்கம் தமிழீழத் தேசிய இனத்தையே அழிப்பது தான்!
பீக்கான் திட்டத்தின் மற்றைய அம்சம் என்னவெனில், ‘தாக்குதலின் போது, அதிகப்படியிலான விமானக் குண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும் ஈடுபடுவது அவசியம்’ என்பதாகும்.
இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில் பொதுமக்களைப் படுகொலை செய்வது என்பதே! இதன் வழி சிங்கள இந்திய வல்லாதிக்கக் கூட்டு நாடுகள் அடைய விரும்பிய நலன்கள்:
1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.
3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து, மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.
4. போரின்போது, விடுதலைப்புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக் கொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புளிகளைக் களத்திற்கு வரச் செய்து கொல்வது.
சரியாக 2006 முதல் 2009 வரையில் மூன்று ஆண்டுகளில் பீக்கான் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தியா இலங்கை உள்ளிட்ட நயவஞ்சக நாடுகளின் திட்டம். இத்திட்டத்தின் படி நடந்ததே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை.
ஈழத்தில் 2009ல் நடந்த தமிழினப் படுகொலை என்பது இந்த உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் துயரச் சம்பவம். 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலைப்போரை உலக வல்லாதிக்க நாடுகள் ஓரணியில் திரண்டு நயவஞ்சமாக ஒரு மாபெரும் இனப்படுகொலையை செய்து முடித்தது.
உலகில் எந்த மூலையில் யார் பாதிக்கப்பட்டாலும் அனுதாபப்படும் தமிழர்களுக்குத் தன் சொந்த இளமக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டது. தெரியாமல் இருந்தது பெரும் அவமானம். இன்னும் பெரும்பாலான தமிழர்கள் ஈழம் விடுதலைப்புலிகள், தலைவர் பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகளையே அறியாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்ணன் சீமான் அவர்கள், தமிழ்நாட்டில் 2009லேயே தாம் தமிழர் எனும் புரட்சிப் படையை அமைத்து இன்று வரையிலும் இலட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி, ஈழம் எமக்கு அரசியல் அல்ல, அது அவசியம், அது தமிழினத்தின் பெருங்கனவு என்று முழங்குகிறார்.
அதிகாரத்தில் இல்லாத நாம் தமிழர் கட்சி, ஆட்சியாளர்கள் செய்ய இயலாத நற்செயல்களைச் செய்து சாதித்துமுள்ளது. மேலும் தமிழ் இளையோர்களை அரசியல்படுத்தும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இராசீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆண்டுகள்கொடுஞ்சிறையில் இருந்த ஏழு தமிழர் விடுதலை, எம் இனத்தின் விடுதலை என்று முழங்கிய அண்ணன் சீமான் அவர்கள், எழுவரின் விடுதலையையும் சாத்தியப்படுத்தியுள்ளது தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் வெற்றியே! இதுபோல் இனத்தின் பெருங்கனவான ஈழத்தையும் தமிழர்கள் நாங்கள் அடைந்தே தீருவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!!
திரு. கல்யாண முருகேசன்,
பொருளாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.