சூலை 2025
கள் எங்கள் உணவு – கள் எங்கள் உரிமை
பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை பைந்தமிழ் இனத்துக்குப் பனை மரமே பண்பாட்டு மரம் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சாட்சி. உடலை உறுதி செய்ய இயற்கையாகவே (கள்) பாலூட்டும் மரம் தான் பனை. கள், ஒரு போதை தரும் பானமாக மட்டும் அல்லாமல், பல உடல்நலம்சார்ந்த
நன்மைகளையும் கொண்டுள்ளது. கள்ளில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் இருக்கும் லோரிக் அமிலம் கள் உள்ளிட்ட சில பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது.
செரிமானத்தைத் தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய கள் ஒரு புத்துணர்ச்சி பானமாகவும் இது கருதப்படுகிறது. கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தி, கலப்படம் இல்லாமல், சுகாதாரமான முறையில் மக்களுக்குக் கள் கிடைத்தால், அது தமிழ்ச்சமூகத்தைச் சீரழித்து வரும் சீமைச் சாராயத்துக்கு மிகச்சிறந்த மாற்றாக இருக்கும். இந்திய ஒன்றியத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத கள்ளுக்கான தடை, மதுபான ஆலை உரிமையாளர்கள் சுரண்டிக் கொழுக்க வேண்டி தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறையில் இருக்கிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் கள் சார்ந்த பொருளாதாரத்தின் மதிப்பு ஆயிரம் கோடிக்கும் மேல். தற்சார்புப் பசுமைப் பொருளாதார வாய்ப்பளித்து, உழவர்குடிக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் கள் மீதான தடை நீக்கப்பட்ட வேண்டும் என்பதற்காகவே, தடையை மீறி அண்ணன் சீமான் அவர்கள் தானே பனையேறிக் கள் இறக்கிப் போராட்டம் நடத்தினார். ஏனெனில் கள் எங்கள் உணவு; கள் எங்கள் உரிமை!
திரு. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா