ஆகத்து 2023
கவிதாயினி தாமரை
பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து, கொள்கை என்பது இருக்கும். சாதாரணமானவர்கள் எந்தக் கொள்கையை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதை வெளிப்படையாகப் பேசுவதால் பெரும்பாலும் எவ்வித சிக்கல்களும் வருவதில்லை. ஒரு சில சின்னச்சின்ன இடையூறுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும். ஆனால் கொஞ்சம் பிரபலமானவர்கள், பொதுவாழ்க்கையில் இருப்போர், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அவர்களுடைய கொள்கையையோ அரசியல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாகக் கூறிவிட்டால் அவர்களது தொழில், நட்பு வட்டம், பொருளாதாரம், பிற வாய்ப்புகள் எனப் பல்வேறு இடங்களில் இழப்புகளும் சங்கடங்களும் ஏற்படுகின்றன.
முளைத்தால் மழை, வெயில், பஞ்சம், வறட்சி, புயல் என பல இடையூறுகளைத் தாங்க வேண்டும் என நினைக்கும் விதை மண்ணோடு மண்ணாகி விடுகிறது; அனைத்தையும் பார்ப்போம் என நினைக்கும் விதை முளைத்துப் பெரிய மரமாகிறது. அதுபோலவே தன் பொருளாதாரம், வாய்ப்புகள், சுற்றம் எனப் பார்ப்போர் சாதாரண நபர்களாகவே இருக்கிறார்கள்; இவை அனைத்தையும் விட “என் வாழ்வின் கொள்கை தான் பெரிது” என நினைப்பவர்கள் போராளியாகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு போராளியால் தான் இராமனைக் கொண்டாடும் நாட்டில் இருந்துகொண்டு, அவர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தபோதும் “இசையாக பலப்பல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என் மகன்” எனத் துணிவாக எழுதி அதை வெற்றிப் பாடலாக்கவும் முடிந்தது.
பொதுவாக தாமரை என்றால் தமிழர்க்கும் தமிழ் நிலத்திற்கும் தேவையில்லாத ஒன்றாகவே இருந்துள்ளது என்றாலும், இந்தத் தாமரை தமிழராய்ப் பிறந்து தமிழால் வளர்ந்து, இன்று தமிழுக்காகவே இருக்கும் தமிழ்த்தாமரை. 1965 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த தாமரை ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப்படிப்பு முடித்தபின் கோவையிலேயே ஆறு ஆண்டுகள் பணி புரிந்த அவர், ஒரு கட்டத்தில் தமிழின் மீதான நம்பிக்கையோடு, கவிதையைத் துணையாகக் கொண்டு சென்னை நோக்கி வருகிறார். இங்கு வந்து பல போராட்டங்கள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள் எனக் கடந்து கடைசியாக அண்ணன் சீமான் இயக்கிய “இனியவளே” திரைப்படத்திற்காக, “தென்றல் எந்தன் நடையைக் கேட்டது” என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக அறிமுகமாகி பின்னர் மெல்ல மெல்ல தன் திறமையால் முன்னேறி, இன்று தமிழ்த்திரையுலகில் தவிர்க்க இயலாத ஆளுமையாக உயர்ந்துள்ளார்.
சிறு வயதுதொட்டு தன் தனி வாழ்விலும், வேலைக்குச் சென்ற இடத்திலும், பொது வாழ்விலும் தொடர்ந்து ஏமாற்றங்களோடும் போராட்டங்களோடும் உழன்று வந்த தாமரைக்கு, சிறு வயது முதல் கவிதை மட்டுமே துணையாக இருந்திருக்க வேண்டும். தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தான் எழுதும் பாடல்களில் தமிழ் தவிர்த்து ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்துவதில்லை எனும் உயர் கொள்கை கொண்டிருப்பதால் தான் தமிழ்த் திரையுலகில் பிறரிடமிருந்து தாமரை தனித்து நிற்கிறார்.
தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட பலர் தமிழ்த் திரையுலகில் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் தங்கள் ஆதரவை வெளிகாட்டிக் கொள்வதில்லை. ஆனால் “தமிழர் நலனே” எனது முதன்மை இலட்சியம் என வெளிப்படையாகக் கூறியுள்ள தாமரை, தான் திரையுலகில் வெற்றி பெற்ற பிறகு இந்நிலைப்பாட்டை எடுக்கவில்லை; அவரது ஆரம்ப காலக் கவிதைத் தொகுப்பான “ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்” என்னும் நூலிலேயே ஈழம் சார்ந்த கவிதைகளை அதிகம் காணலாம். அதிலும் குறிப்பாக “அறைத் தோழியாய் வந்தவள் என்னைவிடச் சின்னவள், அகதிகள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருக்கிறது, யாரோ யாழ்ப்பாணத்துக்காரியாம்! இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்ச் சொட்டிய கதைகள்…” எனும் கவிதையை அவரது கல்லூரி நாட்களிலேயே எழுதியிருக்க கூடும். அந்தக் காலங்களிலேயே தமிழ்த் தேச சிந்தனை கொண்டவராக தாமரை இருந்துள்ளார்.

“நடுங்கும் என் விரல்களைத் துப்பாக்கி பிடித்துக் காய்த்துப் போன உன் கையோடு கோர்த்துக்கொள் தோழி! உன்னோடு என்னையும் அழைத்துப் போ!” எனும் வரிகளை ஈழத்துப் பெண்ணாகவே மாறி அவர்களின் வலியை எழுதியிருப்பார். “சாவையும் வாழ்ந்தவன் நீ மட்டும் தான் திலீபா!!!” எனக் கூறும் வரிகளின் மூலம் ஈழப் போராட்டத்தைப் பற்றி, அன்று பல முன்னணிக் கவிஞர்களே பேச பயந்த சமயத்தில், தனது முதல் கவிதை புத்தகத்திலேயே அழுத்தமாக எழுதியவர் கவிஞர் தாமரை.
இலங்கை சிங்கப்பூர் போன்ற தமிழர் வசிக்கும் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள தாமரை, “ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்”, “சந்திரக் கற்கள்”, “என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்” என கவிதை மற்றும் சிறுகதைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
தனது ஆரம்ப காலம் முதலே பணிபுரியும் இடத்தில் பல சிக்கல்களைக் கடந்து, இருமுறை மண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் கடந்து இன்னும் பல போராட்டங்களையும் கடந்து, தனி ஒரு பெண்ணாகக் கொண்ட கொள்கை தவறாது தன் மகனையும் வளர்த்தெடுத்து, இன்றுவரை தனது இலட்சியப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தாமரையின் வரலாறு ஒவ்வொரு தமிழரும் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் கட்டாயம் படித்தறிய வேண்டிய ஒன்று.
இதுவரை இவரை இத்தமிழ்ச் சமூகம் சரியாகக் கொண்டாடியதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் காலம் அவருக்குக் கொடுத்த பரிசு கடந்த அவரது பிறந்தநாளன்று வெளியான அறுவர் விடுதலைக்கான தீர்ப்பு என்று நான் பார்க்கிறேன். எங்கெங்கோ இருக்கும் யார்யாரையோ பற்றி எல்லாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும் நாம், இனிமேலாவது தாமரை போன்றோரைக் கொண்டாடிக் கொண்டு சேர்ப்போம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளிடம்; அதன் மூலம் வளர்த்தெடுப்போம் இன்னும் பல இளைய தாமரைகளை! அதுவே அவரது தமிழ்ப்பணிக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடன்.
திரு.காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.