spot_img

கிராமப் பஞ்சாயத்து முறைகள் & கிராம சபைக் கூட்டம் நடக்கும் தேதிகள்

சூன் 2022

1. சனவரி 26 (குடியரசு நாள்)

2. மே! (உழைப்பாளர் நாள்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 2 (காந்தி செயந்தி)

இதைத்தவிர கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கூட்டத்தை நடத்தலாம். அதற்குச் சிறப்பு கிராம சபைக் கூட்டம்” என்று அழைக்கப்படும்.

1. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

2. பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாயக் கூடத்திலோ அல்லது வேறு பொது இடத்திலோ கிராமசபை கூட்டலாம்.

3. கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், அனைத்துக் குடிமக்களும் கலந்து கொள்ளலாம்.

4. கிராமப் பஞ்சாயத்துத் தலைவரே கிராம சபையின் தலைவராவர்,

5. கிராம சபைத் தலைவர் இல்லாதபோது, துணைத் தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பர்.

6. துணைத் தலைவரும் இல்லாதபோது, வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராகச் செயல்படலாம்.

7. கிராம சபைத் தலைவரும், துணைத்தலைவரும், வார்டு உறுப்பினர்கள் யாருமில்லாத சமயத்தில், கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர், கிராம சபையின் தலைவராகச் செயல்படலாம்.

8. கிராமப் பஞ்சாயத்தின் மக்கள் தொகை, தோராயமாக 500 நபர்கள் என்றால் குறைந்தப்பட்சம் 50 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

9 மக்கள் தொகை 501 மேல் 3000 வரை இருந்தால், 100 பேர் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும், 10,000க்கு மேல் உள்ள கிராமங்களில் 300 பேரும் கலந்து கொள்ள வேண்டும்.

10. சட்டமன்ற, நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபைத் தீர்மானத்திற்கு உண்டு.

11. அரசியல் அமைப்புச் சட்டதிற்கு உட்பட்ட தீர்மானங்கள் கொண்ட எந்தவொரு கிராமசபை தீர்மானங்களும் எல்லா நீதிமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

12, அரசு அலுவலகங்களிலும், கிராமசபை தீர்மானத்திற்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

13. கிராமசபைத் தீர்மானங்களின் மூலமாக உங்கள் கிராமத்துப் பிரச்சனைகளுக்கு மட்டும்தான் தீர்மானம் கொண்டு வரமுடியும். பக்கத்து கிராமத்து பிரச்சனைகளுக்கோ அல்லது மாநில அளவிலான பிரச்சனைகளுக்கோ தீர்மானம் கொண்டுவர முடியாது. நீங்கள் உங்கள் கிராமத்து மதுக்கடைகளை மூடச்சொல்லி தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால் மாநிலத்திலுள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லி தீர்மானம் நிறைவேற்ற முடியாது.

14. மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனிநபர் உரிமை போன்ற விடயங்களை மீறுவதாக கிராமசபை தீர்மானங்கள் இருக்கக்கூடாது.

15. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை, பஞ்சாயத்து தலைவரோ அல்லது அதிகாரிகளோ திராகரிக்கமுடியாது.

16. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

17. பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர். வார்டு உறுப்பினர்கள் அதன் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.

18. கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள், முயற்சியெடுத்து அரசு அதிகாரிகளுக்கு மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்டல் செய்து, கிராமசபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

19. கிராமசபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றிவிட்ட தீர்மானத்தை சூழலின் தன்மைக்கருதி விவாதித்து, வேறொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயலிழக்கக்கூடும்.

20. சிறப்புக் கிராமசபை கூட்டம் தேவைப்படும்போது பஞ்சாயத்துத் தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு நியமித்துக்கொண்டு தலைவரை ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.

21. மாவட்ட மக்கள் கூறுவதை தலைவர் மற்றும் அதிகாரிகள் மிக கூர்மையாக கேட்க வேண்டும். மக்களின் ஐய்யங்களுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும். மகளிர் மற்றும் பட்டியல் பிரிவின (ஆதித்தமிழ்குடி மக்களுக்கு) சரியான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும். வரவு, செலவு கணக்குகளை மக்கள்முன் வாசித்துக் காட்டவேண்டும்.

22. கிராமப் பஞ்சாயத்தின் வாக்காளர்கள் அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள் ஆவார்கள். ஆகையால் அனைவரும் கிராமசபையில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர்கள் ஆவார்கள்.

23. 1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து சட்டத்தில், முன்பிருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சட்டங்களை கொண்டிருப்பதால், இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் 676 அழைக்கப்படுகின்றன. குறிப்பாக மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராமசபை மகளிர் மற்றும் பட்டியல் (ஆதித்தமிழ்குடி) பிரிவினருக்கு இட ஒதுக்கீடு போன்ற சட்டங்களை கொண்டிருப்பதால் புதிய பஞ்சாயத்து அமைப்பு என அழைக்கப்படுகின்றன.

24. கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது பஞ்சாயத்து நிர்வாகம்.

25. ஒரு கிராமப் பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை பெற்றிருக்குமென்றால், இது ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் கொண்ட பஞ்சாயத்தும் உண்டு. பல உட்கிராமங்கள் கொண்ட பஞ்சாயத்தும் உண்டு.

26. சராசரியாக ஏழு அல்லது எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து, ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு நான்கு கோடியே ஐம்பது இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமங்கள் முன்னேற்றமடையாமல் இருப்பதற்கு காரணம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் காரணமில்லை, வாக்களித்த வாக்காளர்களும், இளைஞர்களும் தான் காரணம்.

கிராமப் பஞ்சாயத்து முறைகள் சோழர்காலத்தில், பராந்தகச் சோழர் ஆட்சியில் மிகச்சிறப்பாக இருந்ததாக உத்திரமேரூர் (வெங்கடேச பெருமாள் ஆலயம்) கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு மட்டுமல்லாமல் தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளிலும் குறிப்புகள் உள்ளதாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பொதுப்பணிகளை செய்பவர்கள் 35 வயதிலிருந்து 70 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வேட்பாளர் தமது அசையும் சொத்து, அசையா சொத்துகளை கிராம சபையில் சமர்ப்பிக்க வேண்டும். சொத்துகளுக்குத் திரை செலுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் பணியை செய்ய முன்வருவோர், அவரது குடும்பம், அவருக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மற்ற உறவுகள் என யாரும் குற்றப்பணியில் இருக்கக்கூடாது.

சோழர்கால கிராமப் பஞ்சாயத்துகள் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் கொண்டவை. அரசர் நினைத்தால்கூட கிராமப் பஞ்சாயத்து முடிவில், அதன் உரிமையில் தலையிட முடியாது.

பஞ்சாயத்துகளுக்கு ஐந்து விதமான வரிகளை நிர்ணயித்து வசூலிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

1. பொதுப்பணிக்குழு.

2. பஞ்சம் மற்றும் பேரிடர் நிவாரணக்குழு.

3. தங்கம் மற்றும் சொத்து மதிப்பு நிர்ணயக்குழு.

4. நீதி வழங்கும் குழு.

5. மற்றும் துணை அமைப்புகள்.

முகலாயர்கள் ஆட்சிகாலத்திலும், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் பஞ்சாயத்து ஆட்சிமுறை தொடர்ந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ஊராட்சி அமைப்புகளை சீரமைக்க, 1816ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தில் தொடங்கி 1920ஆம் ஆண்டு சென்னை உள்ளாட்சிக்கழக சட்டம் வரை படிப்படியாக பல சட்டங்கள் கொண்டு வந்தனர். இதனால் உள்ளாட்சிமுறை வழக்கத்தில் இருந்தது.

உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளம் பஞ்சாயத்து முறைதான் என்பதை அனைவரும் உணர வேண்டும். 1950ல் வரையறுக்கப்பட்ட குடியரசு அரசியல் நிர்ணய சட்டத்தில், பஞ்சாயத்திற்கு உரிய இடம் தரப்படவில்லை. மக்களின் கருத்து பஞ்சாயத்திற்கு ஆதரவாக இருந்தது. அதனால் வழிகாட்டும் நெறிமுறைகளின் நாற்பதாம் கூறாக, ஊராட்சி அமைப்பினைச் சேர்ததாக கூறினார்கள்.

1950ல் தொடங்கிய சமுதாய வளர்ச்சி திட்டத்தின்போது ஒவ்வொரு கிராமத்திலும், அரசியல் அதிகாரப் பரவலுக்கு பஞ் சாயத்தும், பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கமும், சமுதாய விழிப்புணர்ச்சிக்குப் பள்ளியும் அவசியம் என்று நேரு அவர்கள் கூறினார்கள்.

1957ல் பல்வந்தராய் மேத்தாக் குழு, மக்களாட்சி பரவலாக்கல் அடிப்படையில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை பரிந்துரைத்தது, அதன்படி மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றின. 1987ல் பஞ்சாயத்து அமைப்பை சீர்த்திருத்தம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவந்தார் ராஜீவ்காந்தி அவர்கள். ஆனால் உடனே நிறைவேறவில்லை. அதன்பின்னர் 1993ல் 73வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக நிறைவேறியது. இதற்கான சட்டங்களை மாநில அரசுகளும் நிறைவேற்றின.

பஞ்சாயத்து அமைப்பு முறையை சட்டமாக்கி செயல்படுத்தப்பட்டபோதிலும் மக்களிடம் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை. அளிக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தன்னாட்சி முறையின் மூலம் முன்னேற்றம் அடைய வழிநடத்தக்கூடிய தக்க தலைவர்கள் யாரென்று மக்களுக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்த அரசுகளும் முயற்சி செய்யவில்லை.

அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊழல், கையூட்டு ஆகியவை உள்ளாட்சி முறைகளையும், ஆக்கிரமிப்பு செய்து விட்டது. அதிகாரிகள் பஞ்சாயத்துக்கான அதிகாரங்களோடு செயல்பட வாய்ப்பளிக்கவில்லை.

பஞ்சாயத்துக்கான போதுமான நிதிகளை அரசுகள் ஒதுக்குவதில்லை. ஒதுக்குகிற பணத்தையும் சரியான திட்டங்களுக்கு செயல்படுத்தப்படுவதில்லை. உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெறுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குத் தக்க பயிற்சி அளிப்பதில்லை. சரியான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் தான் கிராமங்கள் முன்னேறாமல் இருக்கின்றன.

திருமதி. தமிழ்மொழி ஆயிஷா சுல்தான்,

மகளிர் பாசறை பொறுப்பாளர்

செந்தமிழர் பாசறைபகரைன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles