மே 2025
“குடியாட்சிக் களத்தில் ஓர் அறிவாயுதப் போர்” – தமிழ் மக்கள் செய்ய வேண்டிய பணியும் செல்ல வேண்டிய பாதையும்
குடியாட்சி என்பது மக்கள் அனைவரும் ஒன்று கூடி எந்த ஒரு புறத்தூண்டுதலும் கட்டாயமும் இன்றித் தன்னிச்சையாகத் தமக்கான நலனை சமூகத்துக்கான பொது நலனை முன்னெடுத்துச் செல்லச் செயலாற்றும் ஓரு தலைவனைத் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறை. இப்போதுள்ள குடியாட்சித் தேர்வுக்கு “குடவோலை” முறையின் “திருவுளச்சீட்டு” ஓரு முன்னத்தி ஏர். அதற்குச் சான்றாக பின்வரும் சங்க இலக்கியத் தொடரை அறிகின்றோம்.

” கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவன மாக்கள்”.
மக்கள் தான் ஒரு குடியாட்சியின் மையம் மற்றும் முக்கியமான உயிர்க்கூறு. குடியாட்சி முறையின் கீழ் வாழும் ஒவ்வொருவரும் ஓரு நாட்டின் வளர்ச்சியையும், அதன் சமூக அறத்தையும் வழிநடத்தும் பொறுப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்கின்றனர் என்ற அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் வேண்டும். இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகள், மொழி அடையாளங்கள், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாக்க அற வழியில் கல்வி, மெய்யறிவு, அடிப்படைச் சட்ட அறிவு, சமூக ஊடகம்/ தனி ஊடகம் ஆகிய அறிவாயுதங்களை ஏந்தித் தொடர்ந்து சமர் செய்து வருகிறோம்.
ஆயுதங்களிற் சிறந்தது அறிவாயுதம்:
பண்டைய காலம் முதல் சமருக்கு வேலும், வாளும் கவசமும், வேதிப்பொருட்கள் கண்டுபிடிப்புக்குப் பின்னர் வெடிகளும், துவக்கு (சுடுகலன்) துமுக்கி, பீரங்கி (கணையெக்கி, தகரூர்தி, தெறுவேயம்) போன்றவை இருந்தது போல, இன்றைய காலத்தில் மெய்யறிவும், முன்னவர்களிடத்து பெற்ற பட்டறிவும், அனுபவமும், அறிவுரைகளும், சமூக மாற்றத்தை மெல்ல மெல்ல ஏற்படுத்தும் பெரும் சக்தியாக மாறியுள்ளன என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுவும் தகவல் தொழில்நுட்பம் பெருவளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தே, அறிவாயுதம் நம் பிழைப்புக்கும் தழைப்புக்கும் அதிமுக்கியமான தேவை.
திரள்நெறிக்கான தூண்டுகோலாக அறிவு:
நாம் அறிந்தவரை சிவன், முருகன், அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், நக்கீரர், ஒட்டக்கூத்தர், கம்பர், பாரதி, பாரதிதாசன் போன்றோர் அறிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சுற்றத்தில் விழிப்புணர்வை உருவாக்கினர். இவர்கள் வரிசையில் உ வே சாமிநாதன், தேவநேயப் பாவாணர், திரு வி க, நாமக்கல் கவிஞர் போன்ற நம் தற்காலத் தமிழ்ப்பேரறிஞர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்களின் பணி மற்றும் தொண்டினைத் தொடர்ச்சியாக இன்றைய தலைமுறையினர்க்கு கல்வியூடாகவும் திரள்(சமூக) ஊடகங்கள் ஊடாகவும் நெறிமன்ற வழிகாட்டல்களில் ஊடாகவும் கவனத்துக்குக் கொண்டுவரவும், அவர்தம் அன்றாட உரையாடல்களில் பங்குபெற வைக்கவும் நாம் போராடுகிறோம். இதற்குத் தக்க சான்று வலையொளி ஊடகம் வழியாக தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறுதல், உணர்தல் பின்பு உணர்த்தல்.
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் இயக்கங்கள், இட /உரிமைப் பங்கீடு குறித்த தமிழ்க் குடிகளின் அறவழிப் போராட்டம், ஊடக வழியாக உண்மைத் தகவல்களை ஆராய்ந்து அறியும் முன்னெடுப்புகள் மற்றும் வழக்கு தொடுத்தல் இவை போன்றவை அனைத்தும் அறிவின் துணை கொண்டு நடக்கும் சமர்களே. இதில் கவனத்துக்குரிய ஒன்று மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு அறத்தின்பாற்பட்ட கருத்துக்களை நல்ல தமிழில் முன் வைப்பதாகும். இதில் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்கு இன்றியமையாதது.
மொழி, பண்பாடு மற்றும் மரபுக்கான அறிவுச் செயல்பாடுகள்வழி தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், மொழி உரிமைகளைக் காக்கவும் தமிழர்கள் அறிவாயுதம் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏறுதழுவல் போராட்டம் மொழி, மரபு மற்றும் தமிழ் உணர்வின் அடையாளமாக இருந்தது. இது இயற்கை வளக்கொள்ளைகளை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உயிர்ம நேயத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
திறல் ஊடகம் (சமூக ஊடகம்) – புதிய சமர்கள் – நவீன போர்க்களங்கள்:

இணையம் இன்று நவீன அறிவாயுதமாக மாறியுள்ளது. பல இளைஞர்கள் இயக்கங்கள் திறல் ஊடகங்கள் வலைதளங்கள் வலையொலி போன்றவற்றைப் பயன்படுத்தி, தொழில்முறை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை விடத் திறம்படவும், உடனுக்குடனும் உண்மை தகவல்களைப் பகிர்கின்றனர். இது ஒரு புதுவகை அறிவு மற்றும் தான் ஏற்றுள்ள அரசியல் தத்துவத்துக்கான பங்களிப்பு. இதில் தமிழ்த்தேசியவாதிகள் தனித்திறனுடன் பங்காற்றுகிறார்கள்.
செயல் வழி ஞானம்:
தமிழர்களின் அறிவாயுதப் போர் என்பது வாதத்தின் வார்த்தைகளில் மட்டும் அல்ல; அரசியல் தளத்தில் மேடைகளின் வாயிலாக, பாசறைகள் பயிற்சிகளின் மூலமாக, செயலில் தென்படல் வேண்டும். இவை தமிழ் நிலம் யாவும் பரவி இன்றைய தலைமுறையினர் கல்வி அறிவு, சமூக விழிப்புணர்வு, ஊடகப் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்குப் பயன்பட வேண்டும். அதுவே உண்மையான குடியாட்சியில் பல நன்மைகளை வழங்கும். தமிழர்கள் இவ்வகை அறிவாயுதப் போர்முறையில் முன்னிலை வகித்து, குடியாட்சியின் உண்மையான பொருளை உள்வாங்கிக் கொண்ட முன்னோடிகளாக விளங்கினார்கள்; விளங்குகிறார்கள்; இனியும் மேன்மேலும் வலுவுடன் செயலாற்றி விளங்குவார்கள். ஏனெனில் வேலால் வாளால் குண்டுகளால் துவக்குகளால் பெற்ற வெற்றி ஒரு காலத்திற்கு மட்டும் தான். ஆனால் மெய்யறிவால் பெரும் வெற்றி தான், பல தலைமுறைகள் கடந்து செல்லும்.
எளிய மக்கள் செய்ய வேண்டிய பணிகளும் செல்ல வேண்டிய பாதையும்:
பொதுவாக தமிழ் மக்கள் இந்திய ஒன்றியக் குடியாட்சி கட்டமைப்பில் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். குடியாட்சிக் கட்டமைப்பு சற்று சிக்கலான முறையாகத் தொடக்கத்தில் தோன்றலாம்; இதில் வெறும் வாக்குச் செலுத்துவது மட்டும் போதாது; அன்றாட வாழ்வில் விழிப்புணர்வுடன் கூடிய மெய்யறிவு மற்றும் பொறுப்புணர்வுடன் மக்கள் செயல்பட வேண்டும். அறிவாயுதப் போரில் எளிய தமிழ் மக்கள் முக்கியமான பங்காற்ற தற்போதைய அரசியல் சூழலும், அதில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்திவரும் தாக்கமும் அளப்பரிய வாய்ப்புகளை நல்கியுள்ளது.
” பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பம் வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் கையகலக் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி” – ஐயனாரிதனார்( புறப்பொருள் வெண்பாமாலை)
இப்படிப்பட்ட தொல்குடி என்ற பெரும்பேற்றை வெறும் புகழ்ச்சொற்களாக அல்லது பகையோரது கேளிக்கை அல்லது நகைப்பதற்கான சொற்றொடராக மட்டும் கருதிவிடக் கூடாது. இதன் மெய்ப்பொருளை அனைத்து தமிழ் மக்களும் உணர்தல் மிக அவசியம்; உணர்ந்த மெய்ப்பொருளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களுக்கு நல்ல விதமாகக் கடத்துதல் வேண்டும். நம் பகையோர் விரிக்கும் சூழ்ச்சி வலைகளில் சிக்கித் திசை மாறிப் போகாமல் நல்வழி செலல் அனைவருக்கும் நலம் பயக்கும்.
கல்வி மற்றும் மெய்யறிவு வழியிலான அரசியல் விழிப்புணர்வு:
பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி புகட்டிட வேண்டும். கல்வி என்பது பள்ளிக்கல்வி மட்டுமல்ல; வாழ்வியல், அறம், திறல், விழிப்புணர்வு மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவையும் கல்வியில் அடங்கும். குறிப்பாக ஊரகப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, துறைசார்நூல்கள், சிறப்பு வகுப்புகள், களப்பயிற்சி, ஆளுமை வளர்ப்பு வழிகாட்டுதல்கள் போன்ற கல்வி சார்ந்த மேலதிக ஆதரவு வழங்க வேண்டும். நம்மாழ்வார் ஐயா சொல்லுவதைப் போல “விதைகளை நம் பேராயுதம்”. அந்த விதைகளில் மிக முக்கியமானவை நம் குழந்தைகளே! ஆகையால் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியின் இன்றியமையா நெறிகளைக் கடுமையான முறையிலன்றி விளையாட்டு வழியில் உணர்த்திடல் வேண்டும்.
மாற்றங்கள் தன்னளவில் தொடங்கிடத் தலைமுறைக்கு வரும் ஏற்றம்:
தமிழர்கள் அனைவரும் தமிழில் கலப்பின்றிப் பேசுதல், அதற்கான முயற்சியில் உளமாக ஈடுபடுதல் வேண்டும். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்துக்கும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக, அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்தல் வேண்டும். நம் முன்னோர்கள் தொல்குடிகள் நமக்காக விட்டுச் சென்றுள்ள வாழ்வியல் முறைகளைத் தேடி, முறையான வழிப்படித் தெளிவு பெற வேண்டும். முடிந்த அளவு எளிய முறையில் இக்காலத்திற்கு ஏற்றார் போல் ஆவணப்படுத்தவும் வேண்டும்.
மரபுக் கல்வி குறித்த தேடலை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் அத்தகைய முறைகளைப் பயிற்றுவிக்கும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுதல் மிகவும் பயனளிக்கும். தமிழர் அறம் குறித்த தேடலைக் குழந்தைகளது மனதின் ஆழத்தில் விதைக்க வேண்டும். இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை உணர்தல், உணர்த்துதல் வேண்டும். அறத்தின் வழியே எளிய வாழ்க்கை முறையை அமைத்திடல் குறித்துத் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும்.
உழைப்பு, உரிமை பற்றிய முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துதல் வேண்டும். வாசிப்பின் அடிப்படைத் தேவையை, பலனை உணர்த்திட வீட்டுக்கொரு சிறிய நூலகத்தைத் தொடங்க வேண்டும். தினம் ஒரு திருக்குளோடு ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும். திருக்குறளின் உள்ளார்ந்த மெய்ப்பொருளை உணர்த்திடல் வேண்டும். விடுமுறை நாட்களில் தமிழ், தமிழர் நலம் சார்ந்த நிகழ்வுகளுக்குப் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்துக் குடும்பத்துடன் பங்கு பெறுதல் அவசியமாகும். மரம் நடுவதில் ஆர்வத்தை மனதில் வளர்த்துச் செயல்படுத்துதல் வேண்டும்.
கையூட்டு பற்றிய புரிதல் மற்றும் அதனால் விளையும் கேடுகளைத் தெளிவாக உணர்த்துதல் வேண்டும். வாக்கு உரிமையைச் சரியாகப் பயன்படுத்தி, தமக்கான தலைவர் அல்லது முன்னவர்களைக் கண்டறிய உதவிட வேண்டும். வாக்குக்குக் கையூட்டு பெறுவது பாவம் மற்றும் இழிசெயல் என உணர்த்துதல் வேண்டும். வாக்காளராக நாம் எப்பொழுதும் நேர்மையான விழிப்புணர்வுள்ள தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். வெறும் குடி, மதம் போன்ற அடிப்படைவாதப்போக்கு இல்லாமல் ஒருவரின் அறச்செயல், சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவற்றைப் பார்த்து உணர்ந்து வாக்களிக்க வேண்டும். எளிய மக்கள் பேசும் வார்த்தைகளைச் செவிமடுத்துக் கேட்க அணியமாக இருக்கும் தலைமையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஊராட்சி, சிற்றூர், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று நலத்திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன? அரச நிர்வாகக் கட்டமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பதை அறிய வேண்டும். கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், சாலை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்ற புரிதல் வேண்டும். தவறுகள், குற்றங்கள் நிகழும்போது உரிய இடத்தில் புகார் அளித்து நிலையைச் சரி செய்ய முயல வேண்டும்.
குட்டை, குளம், ஊரணி, ஏந்தல், தாங்கல், கரணை, கண்மாய், ஏரி போன்ற நீர்நிலைகளைச் சீரமைத்தல் குறித்த விழிப்புணர்வு வேண்டும். இது குறித்த பணிகளில் தன்னார்வத்துடன் கலந்து கொள்ளுதல், பிறரையும் பங்கு கொள்ள வழி செயல் வேண்டும். நகரங்களில் உள்ள மக்கள், விடுமுறை நாட்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உழவுக் குடிகளின் வாழ்க்கை முறை எப்படியிருக்கிறது என்று அறிய அடிப்படை வேளாண் வேலைகளில் குடும்பத்துடன் பங்கு பெறுதல் வேண்டும். “குடும்ப உழவன்” போன்ற திட்டங்கள் மூலம் பேரூர் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள், தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் வேளாண்பொருட்களை நேரடியாகவே உழவர்களிடம் பெற்றுக் கொண்டு இருவருமே நல்ல பலன் பெறலாம். ஒருவகையில் இது தற்சார்புப் தாய்ப்பொருளாதாரத்துக்கும், நஞ்சில்லா உணவு – நோயில்லா வாழ்க்கை முறைக்கும், தீவிர நுகர்வுக் கட்டுப்பாட்டுக்கும் வழிவகை செய்யும்.

தமிழர் உரிமைகளை உணர்ந்து காத்தல்:
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற சட்ட வல்லுனர்களின் உதவியுடன் பெரும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும். வட்டம், மாவட்டம், மண்டலம் போன்ற நிர்வாக அலகுகளில் அரசியல் பதவி வகிப்பவர்களது கடமைகள் மற்றும் பணிகள் குறித்த நடைமுறை விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும். அவர்கள் மக்களுக்காக வேலை செய்யவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் மக்கள் வரிப்பணத்தில் தான் ஊதியம் பெறுகின்றனர் என்ற தெளிவு வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், சலுகைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குதல் வேண்டும்.
மெய்யறிவின் பாதையில் தமிழர் முன்னேற வேண்டும். தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுகப் பொறுப்புடைய குடிமகன் மற்றும் குடிமகளாக நமது கடமைகளைச் செய்வதே ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு உதவும். ஒரு அறிவாயுதப் போராளியாக, அறவழியில் சிந்தித்துச் செயல்படும் நல்ல மனிதர்களாக ஒவ்வொருவரும் மாறுவதே ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான வழி.
திரு. மோகன் பிரபு,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.