அக்டோபர் 2022
குரலற்றுக் கிடக்கும் குமரித்தாய்! கூடி நின்று காப்போம் வாரீர்!!
இயற்கையை நேசித்து பூசித்து வணங்கிவரும் தமிழ்ப் பிள்ளைகள் நாம். அந்த இயற்கை அன்னைக்கு ஏற்படும் இடர்களையும் அதற்கெதிரான மக்கள் திரள் போராட்டங்கள் பற்றியும் விளக்குகிறது இக்கட்டுரை, ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது அந்தாட்டின் வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது. ஒரு நாட்டின் நலம் என்பது அந்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் சமையலறையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டின் நில வளத்தைப் பொருத்தது. ஒரு நாட்டின் நிலவளம் என்பது அந்நாட்டின் நீர் வளத்தைப் பொருத்தது அந்நாட்டின் நீர் வளம் என்பது அந்த நாடு பெறும் மழை வனத்தைப் பொருத்தது. அந்நாடு பெறும் மழை வளம் என்பது அந்நாடு பெற்றிருக்கிற மலைகளின் வளத்தைப் பொருத்தது. இதுதான் இயற்கையின் தொடர்ச்சி.
இயற்கையின் பெருங்கொடை தான் மலைகள், மலைகள் என்பது வெறும் பாறைகள் மட்டுமே அல்ல, பல லட்சக்கணக்கான உயிர்களின் தாய், உலகில் பல்லுயிர் வளமிக்க 8 இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று, இம்மலைத் தொடரில் சுமார் 500 வகைப் பூக்கும் தாவரங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 வகைப் பறவைகள்,176 வகை இருவாழ்விகள், 332 இன பட்டாம்பூச்சி, 290 வகை மீன்கள்,203 வகை ஊர்வனவைகள் என அனைத்திற்கும் உறைவிடமாக மேற்குத்தொடர்ச்சி மலையே உள்ளது. இம்மலைத்தொடரை பாரம்பரிய சின்னமாகக் கடந்த 2012ஆம் ஆண்டு யுனெஸ்கோ அங்கீகரித்து சிறப்பித்தது.
மேற்குத்தொடர்ச்சி மலைகளை மிக அதிக அளவில் தன்னுள் கொண்ட பகுதி உதகமண்டலம் இதற்கு அடுத்தது கன்னியாகுமரி தான், களியல் முதல் ஆரல்வாய்மொழி வரை வளர்ந்து நிற்கும் அழகான மலைத்தொடர் இதுவாகும்.
முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடல் அலைகள் கொஞ்சி அழகு சேர்த்திடும், குமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலைகள். இம்மலைகளால் ஆண்டின் 365 நாட்களும் சீரான மழையைப் பெற்று எழில் கொஞ்சும் நகரமாக திகழ்ந்து வருகிறது குமரி. ஆதியில் தமிழர்கள் தாம் வாழுமிடங்களை, குறிஞ்சி, முல்லை. மருதம்,நெய்தல் மற்றும் பாலை என ஐந்திணைகளாகப் பிரித்து வாழ்ந்தார்கள். அதில் நான்கு திணைகளைத் தன்னகத்தேக் கொண்டது, தமிழ்நாட்டின் ஒரே மாவட்டம் குமரி மாவட்டம் தான். இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் பல ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் பல நூறு குளங்களின் தாயாகும். இத்தனைச் சிறப்பு மிக்கதும் மக்களின் வாழ்க்கைக்கு காப்பரணாகவும் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தகர்த்து அதிலுள்ள கனிமங்கள், குண்டு கற்கள், பாறை மணல் (MSAND) என பல்வேறு வகைகளில் நம் வளங்கள் கேரளாவின் சிறப்பு திட்டமான கேஇரயில் கடட்டுமானத்திற்கும், கேரளாவில் உள்ள விழிஞ்சம் என்ற இடத்திற்கும் கடத்தப் படுகிறது. தரைக்கு கீழேயுள்ள குழிப்பாறைகளை வெட்டி மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். தவறில்லை. ஆனால் தரைக்கு மேலேயுள்ள பாறைகளை எந்த வித அனுமதியுமின்றி, 5000 கண மீட்டர்கள் அளவில் ஆயிரக்கணக்கான பார உந்துகளில் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 30 டன்கள் வரை அதிகமாக ஏற்றிச் செல்லப்படுகிறது. இங்கிருந்து கேரளாவிற்கு கனிமங்களை அள்ளிச் செல்லும் பார் உந்துகள் திரும்பி தமிழ்நாட்டிற்கு திரும்பும் போது அங்குள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளையும் கொண்டு நம் நிலங்களில் கொட்டி நமது மண்ணை மலடாக்கும் நாசகார வேலைகளும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

கேரளா விழிஞ்சத்தில் என்ன நடக்கிறது?
உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ள தனியார் முதலாளி அதானிக்குச் சொந்தமாக கட்டிக் கொண்டிருக்கின்ற துறைமுகத்திற்கு, நம் குமரியிலிருந்து பூமித்தாயின் ஈரக் குலையை அறுத்து, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களின் அனுமதியுடன் கடத்தப்படுவது தான் கொடுமையின் உச்சம். இந்த விழிஞ்சம் துறைமுகம் போன்ற இன்னும் பல துறைமுகங்களைக் கட்டமைக்கத் தேவையான பாறைகள், குண்டுக் கற்கள் மற்றும் மணல் வகைகள் எல்லாம் கேரளாவில் கிடைக்கும் போது ஏன் தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படுகிறது? மலைகளின் நாடாகத் திகழும் கேரளாவில் எந்தக் கனிமவளக்கொள்ளையும் நடைபெறுவதில்லை; காரணம் அவர்கள் இயற்கைக்குக் கொடுக்கும் முதன்மைத் துவமே. மேலும் அந்த மண்ணின் மகனே கேரளாவை ஆன்கிறான்; அதனால் மற்ற மாநிலத்துக்காரன் ஒரு பிடி மணலைக் கூடத் தொடமுடியாது. இதிலிருந்து நம்முடைய ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?
மேலும் இந்த விழிஞ்சம் துறைமுகம் ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதி தான். நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் இணைத்து, புதிய நீர் வழிப் பாதைகளை அமைத்து, புதிய துறைமுகங்களை உருவாக்கி அம்பானி அதானி போன்ற தனிப் பெரும் தனியார் முதலாளிகளிடம் கொடுத்தபின் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல எந்த ஒரு கட்டுபாடுகளுமின்றி ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வணிகம் செய்து மேலும் அவர்களுடைய குடும்பச் சொத்தைப் பெருக்குவது ஒன்று தான் ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் நோக்கம். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அரியவகைக் கனிமங்கள் பெருமளவு புதைந்து கிடக்கின்றன.
நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தமிழ்நாட்டு ஆறுகள் மூலம் இக்கனிமங்கள் பல லட்சம் ஆண்டுகளாகக் கடலில் சேர்க்கப்பட்டு, தென்தமிழகக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
கடந்த 1965 ஆம் ஆண்டுக் குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சியில் அணுசக்திக்குத் தேவையான தாதுப் பொருட்களைப் பிரித்தெடுப்பதற்கு அருமணல் தொழிற்சாலை இந்திய ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. அருமணல் தொழிற்சாலையில் தாதுமணலிருந்து கார்னட், சீர்கோனைட், இல்லுமினைட் மற்றும் சிலிக்கா என பல்வேறு அரியவகைக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையால் கதிரியக்கம் அதிகமாகிறது என இப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன.
தாதுமணல் அள்ளுவதினால் வெளிப்படும் கதிர்வீச்சுகளால் பிறக்கும் குழந்தைகள் மனநலம் குன்றியவர்களாகவும், முதுகுகட்டி, தீராத வாய்ப்புண், கழலைக் கட்டி, விழித்திரை பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வகை நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மக்களின் மரபணுவைத் தாக்கி அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும் பெருங்கொடுமையும் நிகழ்கிறது.
மேலும் கழிவு மணலால் நிலம் பாலைவனம் போலாகி, குமரி மாவட்டமே வாழத்தகுதியற்ற நிலமாக மாறிவிடும். இத்தகைய பேராபத்திலிருந்து மண்ணின் மக்களைக் காக்க ஆளும் திராவிட ஆட்சியாளர்கள் மறுத்தும் தவிர்த்தும் வருகிறார்கள்.
மேலுமொரு அதிர்ச்சி யாதெனில் தமிழ்நாட்டிலிருந்தே மிக அதிகமான கனிமவளங்கள் வெளிநாடுகள் மற்றும் கேரளாவிற்குச் செல்கின்றன.
ஏறத்தாழ 15 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் பாறைகளை உடைத்தெடுத்து இயற்கை அன்னைக்குத் தீங்கு விளைவிப்பது என்பது மானுடக்குலத்தின் அழிவின் தொடக்கமல்லவா?! “இயற்கை எனது நண்பன்” என நமக்கு போதித்த புரட்சியாளர் மேதகு வே. பிரபாகரனின் பிள்ளைகள் நாம் இந்த வளக்கொள்ளையை எதிர்த்து போராட வேண்டாமா? ஆம். இந்திய ஒன்றியத்திலேயே, சூழலியலைக் காப்பதற்காக “சுற்றுச்சூழல் பாசறை” என்று ஒரு வலிமையான படைப் பிரிவை உருவாக்கி குழலியலுக்கு எதிரான ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை மிகவும் காத்திரமாக எதிர்த்துப் போராடி வருவது நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் இராணுவம் தான்.
நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் இயற்கை அன்னையைப் பணப் பிசாசுகளிடமிருந்து பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள். கண்டன அறிக்கைகள், சட்டப் போராட்டங்கள் என அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் செய்யாத வேலையை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை செய்து வருகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவும் அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து மக்களின் வாக்குகளைப் பறித்து வெற்றியும் அடைகிறது. கொடுத்த வாக்குறுதிகளை குப்பையில் வீசிவிட்டு, அடிக்கும் கொள்ளையில் ஆளுக்கு பாதி என பங்கு போட்டு திருடித் கொழுக்கும் கட்சிகளுக்கிடையில் அல்லும் பகலும், தனியொரு சக்தியாகவும், மக்களோடு மக்களாகவும் நின்று போராடுகிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியும் அதன் போராளிகளும் தான். குமரியில் கனிமவளக் கொள்னைக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவருவது நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே.
கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் தேசியக்கட்சிகளும், திமுகவும், அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டையே எடுக்கின்றன.

சட்டப்பேரவையில் மூன்று குவாரிகளே இயங்குவதாகச் சொல்லிவிட்டு, அதன்பின்னர் நான்கு குவாரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இருபதுக்கும் அதிகமான குவாரிகள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் அனுதினமும் மலைவளத்தைச் குறையாடி கேரளம் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நாம் தமிழர் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இயற்கையைக் காக்கத் தவறிய அதிகாரத் திமிர் கொண்ட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நாம் தமிழர் கட்சியின் மக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதும், போராளிகளைத் தடுப்பதும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும் தான் இவர்களின் சாதனை.
நம் வீட்டை நாம் எப்படி அழகு படுத்தி, வலிமைப்படுத்தி, பராமரித்து, பாதுகாத்து, நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு கையளிக்கிறோமோ அதேபோல் தான் நம் தாய் நாடும், இந்த நாடு நமக்கானது அல்ல, அடுத்த தலைமுறைப் பிள்னைகளுக்கானது, நம் வீட்டைப் போலவே நம் நாட்டைக் காக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே நம் தாய் மண்ணையும், மக்களையும் காக்க ஓடோடி வாருங்கள் தமிழர்களே! இயற்கை அன்னையின் இளமையைக் காத்து, தூய காற்றை சுவாசிக்க, நஞ்சற்ற உணவருந்த, தன்னீரைப் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்ந்திட தீரமுடன் போரிடவே, தாய் நிலத்தைக் காத்திடவே அணியமாக வேண்டுகின்றேன்.
நாம் சாதி மதங்கடந்த தமிழர்
நாம் தமிழர் என்றே!!
குரலற்றுக் கிடக்கும் குமரித் தாயை!
கூடி நின்று காப்போம் வாரீர்!!
திரு. கல்யாண. முருகேசன்,
பொருளாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.