spot_img

சூழலியல் சார்ந்த கொள்கை வகுப்பு – ஆண்ட அரசுகளின் தோல்வியும், நாம் தமிழர் முன்வைக்கும் தீர்வுகளும்

ஏப்ரல் 2024

சூழலியல் சார்ந்த கொள்கை வகுப்பு – ஆண்ட அரசுகளின் தோல்வியும், நாம் தமிழர் முன்வைக்கும் தீர்வுகளும்

2023 திசம்பர் மாதத்தில், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை பெருவெள்ளம் மூழ்கடித்து நிலைகுலையச் செய்தது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை மிக்சாங் புயல் புரட்டிப் போட்டது என்றால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி பெருமழை பெய்து உருக்குலைத்துப் போட்டது. தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் சராசரி மழை அளவான 950 மிமீ அல்லது 95 செமீ, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் கொட்டித் தீர்த்தத்தின் மூலம், சமவெளிப் பகுதியில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான வீடுகள் முதல்தளம் வரை மூழ்கியதோடு, வாகனங்கள் உள்ளிட்ட பொருட்சேதங்கள் பல ஆயிரம் கோடிகளைத் தொடும். சென்னையேனும் 2015 பெருவெள்ளத்தைக் கண்டுள்ளது; ஆனால் தென்மாவட்டங்களில் இது வரலாறு காணாத மழை. பல குளங்கள் உடைப்பெடுத்து ஊருக்குள் புகுந்து, உடைமைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட, பலருக்கு ஒரே நாளில் வாழ்வாதாரம் தொலைந்துபோன அவலநிலை ஏற்பட்டதை நாம் மறுக்க முடியாது.

காலநிலை மாற்றம் – கண்முன் நிற்கும் உண்மை:

2022 இல் தெற்காசியாவில் மட்டும் ஒன்றேகால் கோடி மக்கள் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்றும், அதில் இந்திய ஒன்றியத்தில் மட்டும் இருபத்தைந்து இலட்சம் பேர் அடங்குவர் என்றும், வெள்ளமே இதில் 90 % இடப்பெயர்வுக்குக் காரணமாக இருக்கிறது என்றும் ஐ. நா சார்புடைய ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் உள்ளக இடப்பெயர்வு கண்காணிப்பு நடுவம் (IDMC) கூறுகிறது. உலகெங்கும் தீவிரமடைந்து வரும் இயற்கை பேரிடர்கள் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டவை எனத் தரவுகள் நிறுவுகின்றன. இதனால் 2030 ஆம் ஆண்டுக்குள் எட்டப்படவேண்டிய “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில்”(SDG) ஒன்றாக நேரடியாகவே சூழலியல் சார்ந்த நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மொத்தமுள்ள 17 இலக்குகளில் கிட்டத்தட்ட 7 சுற்றுச்சூழலோடு தொடர்புடையது என ஐ. நா சூழலியல் திட்டம்(UNEP) வரையறுத்துள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இயற்கையான முறையில் இயல்பாகவே புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்தாலும் கூட, 1750 களுக்குப் பின்னான தொழிற்புரட்சியினால் பல்கிப் பெருகிய தொழிற்சாலைகள் மற்றும் புதைப்படிம எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றால் மிதமிஞ்சிய அளவில் வளிமண்டலத்தில் சேர்க்கப்பட்ட கரியமில வாயு, பசுமைக்குடில் விளைவினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அதிகரித்த புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015 இல்  நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் சொல்கிறது. 2030 க்குள் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு கிட்டத்தட்ட 43% குறைக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் காலநிலை சார்ந்த ஆய்வுகளோ, புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவு உயர்ந்தாலே கடும் வறட்சி, பெருமழை போன்ற பேரிடர்களை உலகம் சந்திக்கும் என எச்சரித்திருக்கின்றன.

காற்றில் மட்டுமின்றி நிலத்திலும் நீரிலும் கட்டுப்பாடின்றிக் கொட்டப்பட்ட வேதிக்கழிவுகள் மீட்க முடியாத அளவுக்குச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, புதிய புதிய நோய்களை உண்டாக்கி வருகின்றன. நகரமயமாக்கல், சூழலுக்கு எதிரான நிலப்பயன்பாட்டு முறைகள் போன்றவை நிலைமையை இன்னும் சிக்கலாக்குவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப்பகுதிகளில் அதிக எதிர்மறை விளைவுகளை மிதவெப்ப மண்டலப்பகுதிகளைக் காட்டிலும் ஏற்படுத்திவருகின்றது என அண்மை நிகழ்வுகளின் மூலம் அறிய முடிகிறது. கடும் சூறாவளி, தீவிர புயல், மேகவெடிப்பு, அடிக்கடி பொய்க்கும் பருவமழை இவற்றால் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த வெப்பமண்டல நாடுகள் அல்லலுறுகின்றன. நீர் சுழற்சி தீவிரமடைவதும்,  21 – 24 செமீ வரைக்கும் உயர்ந்திருக்கும் கடல்நீர் மட்டமுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பனியற்ற கோடைகளை ஆர்க்டிக் பகுதி காணத்தொடங்கிவிட்டது என்பதால் உருகிக்கரையும் பனிப்பாளங்கள் உலகக் கடல்நீர் மட்டத்தை சில மீட்டர்கள் உயர்த்தி 2050 ஆம் ஆண்டுக்குள் பல கடலோர நகரங்களை மூழ்கடிக்கும் என்பதோடு, நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பேரழிவுகள் இனி ஒவ்வொரு வருடமும் நடக்கும்படியான அபாயத்தைக் கொண்டுவரும் என்கிறார்கள்.

பாரிஸ் ஒப்பந்தமும் – சூழலியல் அரசியலும்:

1988 இல் ஐ.நா தொடங்கிய காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு(UNFCC), சூழலியல் சார்ந்த முன்னகர்வுகளை எடுக்கச் சொல்லி பல முறை கோரியும், நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு புவி வெப்பமாதலைத் தவிர்க்கும் மற்றும் தணிக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் முழு வேகத்தில் இன்னும் செய்யப்படவில்லை. தொழிற்புரட்சியின் பலன்களை முழுமையாகப் பெற்ற மேற்கத்திய நாடுகள் சூழலுக்கு விளைவித்த கேட்டினைச் சரி செய்ய பெரும்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மிக அண்மையில் தான் வளர்ச்சியினைக் கண்டிருக்கிற எங்களது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டு, தக்க மாற்றங்களையும் பங்களிப்புக்களையும் செய்ய கால அவகாசமும் உதவிகளும் நல்கப்பட வேண்டும் என்று இந்திய ஒன்றியம், சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கோருகின்றன. ஆனால் இன்றைய பொழுதில் கரியமில வாயு உமிழ்வில் இந்நாடுகள் எங்களுக்கு நிகரான அளவில் இருக்கும்போது காலநிலை மாற்றத்துக்கான பங்களிப்பில் மட்டும் ஏன் வேறுபாடு காட்டப்படுகிறது என்றும், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை இது தொடர்பில் குற்றப்பொறுப்பைச் சுமத்தி எங்களைப் பொருளாதாரரீதியாக வஞ்சிக்கின்றன என்றும் மேற்கத்திய நாடுகள் குறை கூறுகின்றன. இதன் உச்சமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், “காலநிலை மாற்றம் என்பதே ஒரு ஏமாற்று! பாரிஸ் ஒப்பந்தம் என்பது முன்னேறாத நாடுகள் முன்னேறிய நாடுகளிடம் எளிமையாகப் பணம் பறிக்க உதவும் உத்தி” என்று கூறி அதிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2017 இல் அறிவித்தார். அதன்பின் 2020 இல் ஜோ பைடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல் நாளில், மீண்டும் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய ஒன்றியம் பரிசளிக்கும் பசப்பு வார்த்தைகள்:

உலக அரங்கில் இவ்வாறான அரசியல் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்திய ஒன்றியம் எதிர்கொள்ளும் சூழலியல் சார்ந்த மாற்றங்கள் நம்பிக்கை தருவதாக இல்லை. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் வெளியிடும் உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (2022 – Global Environment Performance Index) இந்திய ஒன்றியம் கடைசி இடமான 180 வது இடத்தைப் பெற்றுள்ளது. மோசமான காற்று மாசு, விரைவாக அதிகரிக்கும் பசுமை இல்ல வாயு  வெளியீடு ஆகிய காரணங்களினால் பட்டியலில் இறுதி இடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  2021 காற்று மாசு (World air quality report) அறிக்கையின்படி டெல்லி உலகிலேயே மிகவும் மாசுபட்ட தலைநகராக தொடர்ந்து நான்காண்டுகளாக முதலிடத்தில் இருப்பதோடு, உலகில் அதிகம் மாசுபட்ட நூறு நகரங்களில் 63 நகரங்கள் இந்திய ஒன்றியத்தில் இருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் சுற்றுச்சூழல் துறை சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், கொள்கை அளவிலும், செயற்பாட்டளவிலும் மாற்றங்கள் அதிகமின்றி ஏமாற்றங்கள் தரும் வெற்றுவார்த்தைகளே நமக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் மாற்று எரிபொருள் பயன்பாட்டுப் பசுமைத் திட்டங்களுக்கு அல்லாமல், நிலக்கரி உள்ளிட்ட புதைப்படிம எரிபொருள் பயன்பாடு சார்ந்த தொழிற்சாலைகளுக்கே அதிகம் செலவிடப்படுகிறது. ஏப்ரல் 2021 வரை 2900 கோடிகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்திய ஒன்றிய கொள்கை வகுப்பாளர்களது சூழலியல் அக்கறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இராமநாதபுரம் கமுதியில் தனது மிகப்பெரிய சூரிய ஒளிப்பூங்காவினை வைத்திருக்கும் அதானி போன்ற தனிப்பெருமுதலாளிகளால், பசுமை மின் உற்பத்தித்திட்டங்கள் முற்றுரிமையுடன் முன்னெடுக்கப்படுவதும் ஆரோக்கியமான அறிகுறி அன்று. மானிய உதவிகளினால் மின்னாற்றலில் இயங்கும் ஊர்திகள் வாங்குவது ஒன்றியத்தில் அதிகரித்திருந்தாலும், அவை 2022 இன் மொத்த விற்பனையில் 8 % கூட இல்லை என்பதும் கவலைக்குரியதே.

காங்கிரஸ் தனது 2024 தேர்தல் அறிக்கையில் முதன்முதலாக சூழலியல் குறித்த நடவடிக்கைகளை எடுத்தது எங்கள் கட்சி தான் என என 1982இல் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் இந்திராகாந்தி உரையாற்றியதைக் குறிப்பிடுகிறது. ஆனால் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை விபத்து வழக்கிலிருந்து ஆண்டர்சனைத் தப்பிக்க விட்டது அந்த இந்திரா காந்தியின் மகனான இராஜிவ் காந்தி தான் என்பதை வசதியாக காங்கிரஸ் மறந்தாலும் ஆனால் நாம் மறக்க இயலுமா? ஒன்றியத்தை அதிகமான ஆண்டுகள் ஆண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது தான், தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சிதைக்கும் பல்வேறு நாசகாரத் திட்டங்கள் திராவிடக் கட்சிகளின் துணையோடு தமிழ்நாட்டில் வலிந்து நடைமுறைப்படுத்தப்பட்டன. காங்கிரசும் பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு மற்ற மாநில மக்கள் போராட்டம் செய்து விரட்டியடித்த பல ஆபத்தான தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் திறக்க வேண்டி திராவிடக் கட்சிகளின் வாயைக் காசால் அடித்துக் கட்டின. தூத்துக்குடி ஸ்டெர்லைட், தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவை அதில் சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்.

சென்னை – தகிக்கும் சூழலியல் வன்முறைக் களம்

இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிர காலநிலை பேரழிவு நிகழ்வுகளால் மிக அதிகமாக பாதிப்படையக் கூடிய மாவட்டங்களின் பட்டியலில் சென்னை 7வது இடத்திலும், திருநெல்வேலி 23ஆம் இடத்திலும் உள்ளது என “Mapping India’s Climate Vulnerability’ எனும் தலைப்பில் ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவானது(Council on Energy, Environment and Water)  முதல்முறையாக நடத்திய மாவட்ட அளவிலான காலநிலை பாதிப்பு குறித்த மதிப்பீட்டாய்வில்  கூறப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அறியவும், பாதிப்பிலிருந்து தடுக்க மற்றும் தகவமைத்துக் கொள்ளவும் உதவியாக அமையும் என்று கூறும் இந்த ஆய்வை மேற்கொண்ட அமைப்பு, ஒரு மாநிலத்தின் சமூக – பொருளாதார நிலை, இயற்கை பேரிடர்களால் அம்மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த காலநிலை பாதிப்புக் குறியீட்டை அளவீடு செய்துள்ளது. சென்னையின் சங்கிலித் தொடர் சிக்கலாக பெருமழை, வெள்ளம், வறட்சி, நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஆகியன உள்ளன. இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தட ஆக்கிரமிப்பு, முறையற்ற திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, தொலைநோக்கற்ற மழைநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புப் பணிகள் ஆகியன தீவிரப்படுத்துகின்றன.

இதுவரை ஆண்ட அரசுகளின் ஊழல்வாத மக்கள் விரோதப் போக்கின் காரணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான கோடிகளில்  ஒதுக்கப்படும் நிதி, பெருமளவில் கையாடல் செய்யப்பட்டு விடுவதால் மோசமான தரமற்ற உட்கட்டமைப்பே மக்களுக்கு மிஞ்சுகிறது. மேலும் இவை ஏற்படுத்தும் விபத்துக்களினால் சிறு காயங்கள் முதல் உயிரிழப்புகள் வரை நடைபெறுவதும் இயல்பாக நிகழ்கிறது. தார்ச்சாலை போடும்போது ஏற்கனவே உள்ள சாலையைப் பெயர்த்து எடுத்துவிட்ட பின்னே, புதுச்சாலையைப் போட வேண்டும்; இல்லாவிடில் சாலையின் மட்டம் உயர்ந்து வீடுகளின் வாசல் மட்டம் பள்ளமாகி பெருமழையின்போது வெள்ளநீர் வீடுகளின் உட்புகுந்துவிடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒப்பந்ததாரர்களைத் தான் திட்ட நிறைவேற்றத்துக்கு தமிழக அரசுகள் பயன்படுத்துகின்றன.

சூழலியல் சிக்கல்களில் மக்களைக் கைவிடும் பொறுப்பற்ற திராவிட அரசுகள்:

தமிழகத்தில் ஓடும் 32 ஆறுகளிலும் திராவிட அரசுகளது ஆட்சிக்காலத்தில் வகைதொகையின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது. “உங்களது ஆட்கள் தொடர்ந்து மண் அள்ளியதால் தான் கரை பலமிழந்து உடைப்பெடுத்துக்கொண்டு நீர் ஊருக்குள் புகுந்தது” என நேரடியாகவே மக்கள், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வு செய்யும்போது சொல்லும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. தூத்துக்குடியில் தங்களது வாழிடத்தை நரகமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்ததற்கு மக்களைக் கொன்ற அதிமுக அரசுக்கும், அந்தக் கொடூர அரசபயங்கரவாத சம்பவத்தின்போது இந்தக் காவல் அதிகாரி குற்றமிழைத்திருக்கிறார் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தந்த பிறகும், அவருக்கு உயர்பொறுப்பு வழங்கி அழகுபார்க்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு?  ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கொடுக்கும் கோப்பில் கையெழுத்திட்ட ஸ்டாலினுக்கும், சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்குக் கையெழுத்திட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கும் கொள்கையளவில் என்ன மாறுபாடு? கூடங்குளம் அணுவுலை மற்றும் தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டங்களை மக்கள் எதிர்ப்பை மீறியும் செயல்படுத்திய அதிமுக ஆட்சியைப் போலவே தான், பரந்தூர் விமான நிலையம் அமைக்க உழவர்களிடமிருந்து பயிர் விளையும் நிலத்தைப் பிடுங்கும் ஆளும் திமுக அரசு, செய்யாறு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி தண்டிக்கிறது. இவ்விரு கட்சிகளும் வளக்கொள்ளை சுரண்டல் அரசியல் செய்கின்றனவே தவிர, சூழலியல் அக்கறையோடு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுவதில்லை; அது அவர்களுக்கு அவசியமானதும் இல்லை. காலநிலை மாற்றப் பின்புலத்தில் இத்தகு அரசுகள் மக்களை மிக அபாயகரமான கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளி, இந்த அமைப்பின் இயங்கியலையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஒரு இயற்கை பேரிடரோ அல்லது மனிதத் தவறால் நிகழும் செயற்கை பேரிடரோ நடவாமல் தடுக்கவும், மீறி ஏற்பட்டுவிட்டால் தணிக்கவும், இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்கவும் தான் “அரசு” எனும் அரசியல் இயந்திரம் மக்களாட்சியில் அமைக்கப்படுகிறது. அதாவது தனிமனிதர்கள் தனித்தனியாக நின்று செய்ய முடியாததை, அம்மக்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்படும் அதிகாரத்தின் வழி, குடிமக்கள் கொடுக்கும் வரி வருவாயினை வைத்துத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான் அரசு ஒன்றின் இயக்கப்பாடு. அதில் செய்யப்படும் சமரசங்கள் அக்குடிமக்களின் வாழ்வாதாரத்தைக் குலைத்து, வாழ்விடத்தைச் சீரழிக்கவும் வாய்ப்பளித்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னையில் எத்தனை நீர்நிலைகள் உள்ளன? அவற்றில் எத்தனை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன? இதனால் நீர்வழித்தடத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? பெருநிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு கட்டிட அனுமதி வழங்குவது எந்த அதிகாரி? அவருக்குத் துணையாக இருக்கும் அரசியல்வாதிகள் யார் யார்? ஒரு வெள்ளத்தின்போது இதனால் என்ன பாதிப்பு வரக்கூடும்? அதனை எப்படித் தடுத்து மக்களைக் காப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியது அரசின் முக்கியமான வேலையே தவிர, மக்களுக்கு முதன்மையான பணியன்று. 2015 ஆம் ஆண்டு சென்னை எதிர்கொண்ட பெருவெள்ளத்துக்குப் பின்பும் கூட அரசு பாடங்கற்காமல் இருப்பதால் தான் 2023 ஆம் ஆண்டு வெள்ளத்தில் மீண்டும் சென்னை தத்தளித்தது. நிலைமை ஏற்கனவே மோசமாக இருக்கும்போது, வெள்ள பாதிப்பைப் பன்மடங்காக்கும் அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதி அளிப்பது அறிவீனம் ஆகாதா?

சூழலியல் சமத்துவமின்மை – ஒரு கழுகுப் பார்வை:

வர்க்க வேறுபாடின்றி அனைவரையும் தாக்கிடும் விதமாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்கள் இருந்தாலும், அதிகம் பாதிக்கப்படுவோராக அடித்தட்டு மக்களே இருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குதல், துயர் துடைப்பு உதவிகள் போன்றன கூட எளிய மக்களுக்கு தாமதமாகவே கிடைக்கின்றன. “சூழலியல் அகதிகள்” ஆக அரசுகளின் மெத்தனத்தால் மாறுவோர், பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகளாக, அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுவோராக இருப்பது தற்செயல் இல்லை. எடுத்துக்காட்டாக தென்சென்னையில் வெள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட்ட வேகத்தில் வடசென்னையில் செய்யப்படவில்லை என்பது கண்கூடு. கொள்கை வகுப்பாளர்களும் இவர்களை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டாமைக்குக் காரணம், இவர்கள் அதிகார பலம் இல்லாத, அரசியல் முக்கியத்துவம் பெறாத குரலற்ற விளிம்புநிலை மனிதர்கள் என்பதால் தான். அதிலும் பேரிடர் காலத்தில் பெண்கள் படும் பாட்டைச் சொல்லி முடியாது.

உணவு தயாரிப்பதில் தொடங்கி, குழந்தைகள் பெரியவர்களை கவனிப்பது, பொருட்களைப் பாதுகாத்து வைப்பது, மீண்டும் மீண்டும் சுத்தம் செய்துகொண்டே இருப்பது என வரைமுறையற்ற வதை அது. எல்லாரும் உணவுப்பொருட்களை நிவாரணப்பொருட்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, “விடாய்க்கால அணையாடை (Sanitary napkins) இருக்கிறதா?” என மெல்லிய குரலில் பெண் தன்னார்வலர்களிடம் வந்து கெஞ்சும் அக்காக்கள் பேரிடர் கொண்டுவரும் துயரம் எப்படிப்பட்டது எனக் காட்டும் கண்ணாடிகள். வறட்சிக்காலங்களில் மணிக்கணக்கில் தண்ணீர் வேட்டைக்குச் செல்வதும், பெருவெள்ளக் காலங்களில் அதிகம் நோய்பாதிப்புக்கு உள்ளாவதும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். பேரிடர் காலப் பொருளாதாரச் சிக்கல்கள் வரும்போது உணவு, உறக்கம் முதல் கல்வி, வேலை வரை சமரசங்கள் செய்து கொள்வதில் பெரும்பான்மையோர் பெண்கள் என ஐ. நா பெண்கள் அமைப்பின் வெரோனா கொலண்டிஸ் தெரிவிக்கிறார். “சூழலியல் சமத்துவமின்மை” என்பது உலகெங்கும் இன்று பேசுபொருளாகியிருக்கும் நிலையில், நாம் கடக்க வேண்டிய தூரம் நீண்டதாக இருக்கிறது.

சுடும் களநிலவரமும், சூழும் பிரச்சனைகளும்:

உலகின் மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கனவே மாறிவிட்ட இந்திய ஒன்றியம், 2001 குஜராத் நிலநடுக்கம், 2007 பீகார் வெள்ளம், 2013 உத்தராகண்ட் மேகவெடிப்பு, 2014 காஷ்மீர் வெள்ளம், 2019 கேரளா வெள்ளம் போன்ற பேரிடர்களை அண்மையில் கண்டுள்ளது. 2227 பேர் 2022 இல் மட்டும் காலநிலை மாற்றம் சார்ந்த நிகழ்வுகளில் மரணித்துள்ளதாக இந்திய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2004 கடலோர மாவட்டங்களைத் தாக்கிய ஆழிப்பேரலை, 2011 கடலூரைக் குலைத்த தானே புயல், 2015 சென்னை பெருவெள்ளம், 2016 வர்தா புயல், 2017 ஓக்கி புயல், 2018 கஜா புயல், 2018 வடமாவட்டங்களில் கடும் வறட்சி, 2023 வட மற்றும் தென் மாவட்ட வெள்ளம் எனப் பேரிடர்கள் தொடர்வது, காலநிலை மாற்றம் கண்முன்னே நடத்தும் கோர தாண்டவத்தைக் காட்டுகிறது. எல்லாம் வல்ல இயற்கையின் ஆற்றலுக்கு முன் மனித இனம் தூசு போன்றது. அதனோடு ஒத்திசைவாக நாம் வாழும்வரை அது நம்மை அன்னையாகக் காக்கிறது; என்று நாம் பேராசை கொண்டு அதனைச் சுரண்டி அழிக்கத் தொடங்குகிறோமோ, அப்போதெல்லாம் அது ஆங்காரத்தோடு பொங்கியெழுந்து நம்மைத் தண்டிக்கிறது. 

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள், தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் கடந்து, உள்ளபடியே தீர்வுகளைத் தரும் பல உடனடி மாற்றங்களை ஒற்றுமையுடன் பயணித்துக் கொண்டுவர வேண்டியுள்ளது. தனிமனிதர்கள் பலர் தங்களது வாழ்வியலில் செய்யும் சின்னஞ்சிறு முயற்சிகள் பெரிய வேறுபாட்டினைக் கொண்டுவரும் ஆற்றல் கொண்டவை தான். ஆனால் தனிமனிதர்களை விடவும் கொள்கை வகுக்கும் இடத்தில் உள்ள அரசுகளும், அதன் பிரதிநிதிகளும் சூழலியல் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு திட்டங்களைத் தீட்டுவது, செயல்படுத்துவதன் மூலமே உண்மையிலேயே நாம் விரும்பும் நல்ல விளைவுகளை ஏற்படுத்த இயலும். நம் தலைக்கு மேலே விரிந்து பரவியிருக்கும் வானம் எல்லாருக்கும் பொதுவானது. அதனின்று கீழிறங்கும் குளிர்ந்த நீர் மழைக்கோ, அனலடிக்கும் நெருப்பு மழைக்கோ இப்புவியில் ஒரு உயிர் கூட தப்பவியலாது. இயற்கையின் கருணைப் பார்வையை எப்போதும் எதிர்நோக்கியிருக்கும் நாம், கோபப்பார்வையினைத் தாங்கும் ஆற்றலற்றவர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது, நிச்சயமில்லாத இவ்வாழ்வில் நன்மைகள் பல தரலாம். 

நாம் தமிழர் முன்வைக்கும் சூழலியல் சார்ந்த கொள்கை வகுப்பும், முன்மொழியும் தீர்வுகளும்:

சமகால அரசியல் சூழலில், சூழலியல் சார்ந்த அரசியலைத் தொடர்ந்து பேசியும், சூழல் மீட்பு மற்றும் காப்புப்பணிகளை நேரடியாகக் களத்தில் இறங்கிச் செய்வதும், இதற்கெனத் தனி பாசறையையே அமைத்தும், அதற்கு அத்துறைசார் வல்லுநரான அறிவாற்றல் மிகுந்த பெண் ஆளுமையைத் தலைமைப் பொறுப்பில் வைத்தும், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியின் சூழலியல் அக்கறை சார்ந்த நிலைப்பாடு, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்குமே மிகச்சிறந்த ஒரு முன்மாதிரி.

மேலும் தனது ஆட்சிவரைவில் நாம் தமிழர் கட்சி சொல்லியிருக்கும் பத்தாண்டுப் பசுமைத் திட்டம், பலகோடிப் பனைத்திட்டம், மறுசுழற்சி அடிப்படையிலான திட & திரவக்கழிவு மேலாண்மை, நீர்வழித்தர ஆக்கிரமிப்பு நீக்கம், நீர்நிலைகள் மீட்டெடுப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணைகள், மழைநீர் சேகரிப்பு, பல்லுயிர்ப்பெருக்க உயிர்ச்சூழல் பாதுகாப்பு, மறைநீராக நமது நீர்வளம் களவு போவதைத் தடுக்கும் சூழலுக்கேற்ற நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள், கனிமவளம் மற்றும் காட்டுவளப்பாதுகாப்பு, மாற்றுமின்பெருக்கம், தன்னிறைவையும் தற்காப்பையும் இலக்காகக் கொண்ட தற்சார்புப் பசுமை உற்பத்தித் தாய்ப்பொருளாதாரக் கொள்கை சார்ந்த முன்னோடித் திட்டங்கள் ஆகியன தமிழ்நாட்டுச் சூழலியல் சிக்கல்களுக்கு மட்டுமன்று; ஒட்டுமொத்த ஒன்றியத்துக்குமே தீர்வு தந்து நலம் பயக்கும் நல்ல திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக போன்றவை தரகுத் தொகைக்காக, தனிமுதலாளிகளின் வளர்ச்சிக்காக, மக்களின் வாழ்வாதாரத்தை, விலைமதிப்பற்ற உயிர்களைப் பணயம் வைப்பதை இனியும் தமிழக மக்கள் அனுமதிக்கக்கூடாது! எனவே இந்தத் தேர்தலில் தங்களது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாக்களிப்போரின் தகுதியான தேர்வாக நாம் தமிழர் வேட்பாளர்களே இருக்கின்றனர். அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாக ஒன்றியக் கொள்கை வகுப்பு நடக்கும் பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பி வைக்கும்போது தான், சூழலியல் நீதி மற்றும் அக்கறையோடு கூடிய அரசியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டைக் காக்க இயலும். அது தான் அடுத்த தலைமுறை வளமானதொரு வாழ்வைத் தலைநிமிர்ந்து வாழ ஒரே வழியும் கூட!

ஆளட்டும் நாம் தமிழர்!!!

வாழட்டும் தமிழ்ப்பேரினம்!!!

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles