மார்ச் 2024
சூழல் காக்க – வர வேண்டும் நாம் தமிழர்!
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடத்தப்பட்ட இணையவழி தொடர் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தின் முதல் அமர்வான “சூழல் காக்க – வர வேண்டும் நாம் தமிழர்! “பிப்ரவரி 16, 2024 வெள்ளி அன்று தாயக நேரம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்கத்தின் தனித்த மற்றும் பெருமைமிகு அடையாளமான நமது சுற்றுச்சூழல் பாசறையில் இருந்து, நேரடிக் களப் போராளிகள் ஐவர் தத்தமது கருத்துக்களை இந்நிகழ்வில் பதிவு செய்தனர். நமது இயக்கத்தின் வழக்கப்படி அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி சொன்ன பின், நிகழ்வை செந்தமிழர் பாசறை அமீரகத்தைச் சார்ந்த கற்பகம் – கண்ணன் போஸ் இணையரின் மகனும், மாணவர் பாசறை உறவுமான தம்பி கார்த்திக் அவர்கள்,
“கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. (அதிகாரம் – நாடு; குறள் எண் 736)
பகைவரால் கெடுக்கப்படாததாகவும், மீறிக் கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாகவும் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்”
என்ற தமிழர் மறையாம் குறள் ஒன்றைச் சொல்லித் தொடங்கி வைத்தார். அதன்பின் கருத்துரையாளர்கள் ஒவ்வொருவராய் குவியம் வழி தத்தமது தகவல்கள் செறிந்த உரைகளை வழங்கினர்.
தமிழர் வாழ்வியலில் மிக முக்கிய இடம் வகிக்கும் பனை குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பனை சதீஷ், சூழலியல் பார்வையில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை விளக்கிய மரு. சந்தோசு திருநாவுக்கரசு, சூழலியல் சார்ந்த சட்டங்களும், அவை வளச்சுரண்டலின் பொருட்டு எவ்வாறு பெருமுதலாளிகளுக்காக வளைக்கப்படுகின்றன என்பது குறித்து ஆழமாக விவரித்த பா. விக்னேஷ், சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களின் குரல் ஏன் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என எடுத்துரைத்த வருண் சுப்ரமணியம் ஆகியோரோடு, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை உருவாக்கம், இயங்கியல், இலக்குகள் மற்றும் களப்பணிகள் பற்றி உரையாற்றிய வெண்ணிலா தாயுமானவன் ஆகிய சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள், கள நிலவரத்தைத் தேர்ந்த தரவுகளோடும், தகுந்த எடுத்துக்காட்டுகளோடும் எடுத்துச் சொல்லி, நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டிய அவசியத்தை அழுத்தந்திருத்தமாக கேட்போருக்குக் கடத்தினர்.
அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி சொல்லி, வரவேற்புரை மற்றும் நன்றியுரையும் பகர்ந்து, முழு நிகழ்வையும் செந்தமிழர் பாசறை – வளைகுடாவின் செய்தித் தொடர்பாளர் அருண் தெலஸ்போர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்களுக்கும், வளைகுடா மற்றும் தாயகத்தினின்று இணைந்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும், கருத்தரங்கத்தினை செம்மையான முறையில் ஒருங்கிணைக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் செந்தமிழர் பாசறை வளைகுடாவின் நட்பு கலந்த நன்றிகள்!
ஆளட்டும் நாம் தமிழர்!
வாழட்டும் தமிழ்ப்பேரினம்!
நாம் தமிழர்!!!