சூலை 2025
செந்தமிழர் பாசறை எனும் பயிற்சிப் பட்டறை
“திரைகடலோடியும் திரவியம் தேடு” என கடல் கடந்து வணிகத்தில் செழித்த நம் முன்னோர் வாழ்ந்த திருநாட்டில், என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் என இருந்த தமிழினம்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையாலும், வளச் சுரண்டலாலும் நலிவுற்று 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தேயிலைத் தோட்ட கூலிகளாக கரும்பு வெட்டும் பணியாளராக இரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக புலம் பெயர்ந்து சிதறியது தமிழினம்.
விடுதலைக்கு பின்னான, 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்திய ஒன்றியத்தின் வஞ்சனையாலும், முறையான வளர்ச்சித் திட்டங்களின்றியும், வணிகத்தில் வடவர்களின் பரவலாலும், திராவிட ஆட்சியாளர்களின் கொள்(ளை)கையினாலும் வளம், நிலம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் பின்தள்ளப்பட்ட தமிழர்கள். தாய் நிலத்தில் வளம் கொழித்த நெல்வயலை விற்று வறண்ட பாலைவனத்தில் எண்ணெய் வயல்களில் வேலையைத் தேடிப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆடு மாடு வளர்ப்பு அவமானமென்று
ஒட்டகம் மேய்க்கும் அடிமைகளான காலமது!
அதிலும் ஏமாற்று, ஏய்ப்பு, திருட்டு, மிரட்டல் என இன்றும் இந்த அவல நிலை தொடர்கிறது.
நமது ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்தோரின் அன்னிய செலாவணி வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கிறதே தவிர, அவர்கள் படும் இன்னல்கள், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதில்லை என்பது கண்கூடு.
வாழ்வாதாரம் தேடி வளைகுடா வந்து பொருந்தா உணவு, புறாக்கூண்டு உறைவிடம், ஓய்வற்ற பணிச் சுமை, வியர்வையாக குருதி சுரக்கும் கடும் வெப்பநிலை என புதிய உலகத்தில் நான் நுழைந்தேன்.
காலம் கரைந்தது ஆனால் கனவுகள் கரையவில்லை!
செக்கு மாட்டு வாழ்க்கை என்றானது. தொலைபேசிக் கூண்டில் திரையில் ஓடும் பணத்திலும், நேரத்திலும் கண்வைத்துக் கொண்டே தாய் தந்தை மனைவி மக்கள் உறவுகளிடம் விழி நிறைந்து வலி மறைத்து அளந்தளந்து பேசிய காலம்.
ஓய்வு கிடைக்கும் நாளில் அலறித் துடிக்கும் கடிகார முள்ளை அணைத்து வைத்து அலாதியான ஆழ்ந்த தூக்கம். அசதி தீர தூங்கியதே அசதியாக மாறும்! குறுவட்டுகளில் ஒரு திரைப்படம், சில பாடல்கள் என ஓய்வு நாளும் கரைந்து போகும். எங்கோ ஒரு தமிழ்க் குரல், முகம் கண்டு மலரும் இன்பம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அன்று இல்லை.
அத்தகைய நாள்களில் தான் தாயகத்தில் இருந்து என் தம்பி தையலர் இராசா தற்போது திருவெற்றியூர் தொகுதிச் செயலாளர் எனக்கு கொடுத்தனுப்பிய பொதியில் ஒரு குறுவட்டும் வைத்து அனுப்பி இருந்தார். இந்த குறுவட்டைப் பார்க்கவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
செந்நிறத்தில் இருந்த அந்த குறுவட்டு தம்பி முத்துக்குமாரின் ஈகத்தை சுமந்து அவருடைய குருதியால் சிவந்திருந்தது.
அவன் ஈகத்தில் எழுந்த பேரெழுச்சி துரோகத்தால் நசுக்கப்பட்டதையும் அறிந்தேன்.
அண்ணன் சீமான் அவர்களின் இராமேசுவரம் எழுச்சியுரையையும் திரும்ப திரும்ப பார்க்க தொடங்கினேன்.
ஈழத்தின் வலி இனத்தின் வலியென உணர்ந்தேன். எங்கெங்கு வீழ்ந்தோம்! வீழ்த்தப்பட்டோம்! என படிப்படியாக உணரத் தொடங்கிய காலம்.
2009 மே மாதத்தி்ல் இனப்படுகொலை கொடுந்துயரத்தை எதிர்கொண்டோம்.
தலைவர்களெல்லாம் தமிழினமல்ல!
தமிழரில் ஒருவரும்
தலைவர்களல்ல!
என்பதை உணர்ந்த நாள்!
வீழ்ந்த நாளில் எழுந்த புலிக்கொடி
உரக்கச் சொன்னது நாம் தமிழர் என்று!
குடும்ப உறவுகள் எல்லாம் நாம் தமிழரானது!
நாம் தமிழர் உறவுகள் எல்லாம் குடும்பமானது!
முகநூல் வழியே காணொளி பகிர்ந்து தமிழ்
முகங்களை கண்டால் பரப்புரை தொடர்ந்தது.
அமீரக செந்தமிழர் பாசறை உள்வாங்கியது
அடங்கிக்கிடந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது
பாசறை எம்மை இயக்கியது
எண்ணமும் செயலும் இனத்திற்காக இயங்கியது
கடமைகளை வலிந்து செய்தோம்
களப்பணிக்கு உவந்து சென்றோம்.
ஈர்த்துக் கொண்டது இதழியல்துறை
இழுத்துச் சென்றது எழுத்தோலை வரை
ஊக்கம் தந்தது கலை இலக்கியக் குழு
ஆக்கம் பெற்றது தமிழர் பாரம்பரிய கலை
வழிமுறைகள் அறிந்ததுமில்லை
வடிவமைப்பும் செய்தது இல்லை
அடிப்படை பொருட்கள் தெரியவில்லை
அட்டைப் பெட்டிகளே அடிப்படையாக அமைந்தன
வடிவமைப்பில் கண் வைக்க தடுமாற்றம்
விளையாட்டு கண்ணாடியே
கைகொடுத்தது மாற்றாக
பொங்கல் விழாவில் பொங்கியது ஆரவாரம்
மழலைகளை மகிழ்வித்தது முதற் காளை
அடுத்தடுத்த படைப்புகளில் சிரத்தை கொண்டு
குறைகளைக் குறைத்து
மெருகு கொண்டது
சிந்தையின் எண்ண ஓட்டங்கள்
கைகளின் விரல்கள் ஓடின
தகுந்த ஒப்பனைப் பொருள்கள் தேடி
கடைகடையாக கால்கள் ஓடின
காளைகளாக காவடிகளாக
பொய்க்கால் குதிரைகளாக
தோகைவிரித்தாடும் மயிலாக
கலைப் பொருட்களாக மிளிர்ந்தன
காண்போர் உள்ளத்தைக் கவர்ந்தன
நேரம் காலம் பார்க்காமல் உழைத்த உழைப்பு
மன நிறைவையும் மகிழ்வையும் தந்தது.
கல்லில் கலைவண்ணம் கண்ட சிற்பி போன்று
என்னைச் செதுக்கியது அமீரக செந்தமிழர் பாசறை
பல்வேறு பொறுப்புகள் இனத்திற்கான கடமையாற்ற வாய்ப்பு
ஒருங்கிணைப்பு செயல்பாடு களப்பணி கலந்தாய்வு என இயக்கியது
ஆம். பாசறை மட்டுமல்ல! அது ஒரு
பயிற்சிப் பட்டறை!
நிறுவனம் எனக்கு ஓய்வென்று அறிவித்தது
இனத்தின் கடமைக்கு ஓய்வென்ப தேது?
இறுதி மூச்சுவரை இன மீட்சிக் களத்தில்
இணைந்தே நடப்போம் நாம் தமிழராக
வளைகுடா நாடுகளின் செந்தமிழர் பாசறை மூலம்
எண்ணற்ற உறவுகளை தமிழால் அடைந்தேன்
அத்தனை பேருக்கும் அன்புடன் நன்றியை நவில்கிறேன்!
நாம் தமிழராட்சி விரைவில் மலரட்டும் எனும் இலட்சிய வெறியோடு
தாய் நிலம் நோக்கி ஆவலுடன் செல்கிறேன்.
இலக்கு ஒன்று தான்!
இனத்தின் விடுதலை!
ஆழமாக சிந்திப்போம்!
ஈழத்தில் சந்திப்போம்!
நன்றி
நாம் தமிழர்!!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.