சூன் 2023
டோரிஜோஸ் எனும் புரட்சியாளன்
தென்னமெரிக்காவில் தோன்றிய தொலைநோக்கர்:
வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டி எனும் சுழலில் சிக்கி உழலும் சின்னஞ்சிறு நாடுகளையும், அந்நாடுகளில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களையும், அவற்றை நீக்க எத்தனித்து பிற நாட்டு மக்களைப் போலவே தங்கள் நாட்டு மக்களும், தன்னாட்சி, இறையாண்மை, விடுதலை பெற்று வளத்தோடு வாழ வேண்டும் என நினைக்கும் மக்கள் தலைவர்களையும், அடிபணிய மறுக்கும் புரட்சிகரமான தலைவர்களை ஒடுக்க நினைக்கும் வல்லாதிக்கங்களின் மனநிலையும் இக்கட்டுரை ஒருங்கே படம்பிடித்துக் காட்டுகிறது.
பனாமாவின் வரலாறு:
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் பரவியுள்ள நாடு பனாமா. இது மேற்கில் கோஸ்டாரிகா, தென்கிழக்கில் கொலம்பியா, வடக்கில் கரீபியன் கடல் மற்றும் தெற்கே பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. பழங்குடியினரே வசித்து வந்த பனாமாவில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்தனர். பின்னர் 1821 இல் ஸ்பெயினில் இருந்து பிரிந்து கிரான் கொலம்பியா குடியரசில் பனாமா இணைந்தது. பத்தாண்டுகளில் மீண்டும் கலைக்கப்பட்டு, பனாமா கொலம்பியா குடியரசாக மாறியது. அமெரிக்காவின் ஆதரவுடன், பனாமா 1903 இல் கொலம்பியாவிலிருந்து பிரிந்து பனாமா குடியரசாக அமைந்தது. வர்த்தகம், வங்கி மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கிய துறைகளாக இருந்தாலும், பனாமாவின் பொருளாதாரம் கால்வாய் சுங்கவரிகளின் வருவாய் மூலமே பெரிதும் ஈட்டப்படுகிறது. பல்வேறு நாடுகள் கைவிட்ட பிறகு கால்வாய் திட்டத்தை அமெரிக்கா தன் கையில் எடுத்து அதை முழுமையாக நிறைவேற்றியது.

மக்கள் தலைவன் டோரிஜோஸ் கடந்து வந்த பாதை:
பனாமா கால்வாய் திட்டம் அமெரிக்க வல்லரசுக்குப் பெரும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தியது. பனாமா புரட்சியின் பெருந்தலைவர் என்று அறியப்படும் ஒமர் டோரிஜோஸ் பனாமாவின் இராணுவத் தலைவராக இருந்தும், மக்கள் தலைவராக இருந்தும் பல சமூக சீர்திருத்தங்களைச் செய்தவர். டோரிஜோஸ் பனாமாவில் உள்ள சாண்டியாகோவில், ஒரு சாதாரண குடும்பத்தின் பதினொரு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தார். டோரிஜோஸ் சிறுவனாக இருந்தபோது தன் தாயாருடன் பனாமா கால்வாய் அருகில் சென்று கொண்டிருக்கையில், அமெரிக்கக் காவல் அதிகாரி ஒருவர், தன் தாயாரை மரியாதைக் குறைவாக நடத்தியது தன் மனதில் நீங்காத வடுவாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார்.
அன்று முதல், ஒரு நாட்டை ஏன் மற்றொரு நாடு கைப்பற்றத் துடிக்கிறது என்ற கேள்வி தன் மனதில் எழுந்து கொண்டே இருந்தது என்றும் நினைவு கூர்கிறார். அவர் உள்ளூர்ப் பள்ளியில் அடிப்படைக் கல்வி பயின்று, பதினெட்டு வயதில் இராணுவப் பயிலக உதவித்தொகை பெற்று உயர்கல்வியைப் பயின்றார். 1952 இல் பனாமாவின் இராணுவமான நேஷனல் கார்டில் சேர்ந்தார். நான்காண்டுகளில் இராணுவத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் 1965 இல் அமெரிக்காவில் இராணுவப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் 1966 இல் பனாமா தேசிய பாதுகாப்புப் படையின் நிர்வாகச் செயலாளராகப் பதவியேற்றார். அக்காலக்கட்டத்தில் இருந்து 1981 இல் விமான விபத்திற்குள்ளாகும் வரை, பனாமா அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஓமர் டோரிஜோஸ்.
அதிகாரவர்க்கமும் அடித்தட்டுமக்களும்:
பணம் படைத்தவர்களும் அதிகாரவர்க்கத்தினரும் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மண்ணின் பூர்வ குடிமக்களை அடிமைப்படுத்தி நில வளங்களைச் சுரண்டிப் பிழைக்கும் நிலை தான் அதுவரை பனாமாவில் நிலவி வந்தது. இந்நிலை மாற அடிப்படை மாற்றம் தேவை என்பதை உணர்ந்த டோரிஜோஸ், தனக்கிருந்த இராணுவ அதிகாரத்தின் மூலம், கீழ் மற்றும் நடுத்தட்டு மக்களைத் திரட்டிக் கூட்டமைப்பாக இயங்க முற்பட்டார். பெரும் வல்லரசை எதிர்த்துப் போராட உறுதியான எளிய மக்களின் கூட்டமைப்பு போதுமானது என்பதை நன்கு அறிந்திருந்தார்.
பூர்வீகத் தொழிலாளர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கி 70 ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்கள் நிர்வகித்து வந்த அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி, வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்குவதே என்பதை அறிந்த அவர், மத்திய அமெரிக்கா கூட்டமைப்பை ஒன்றுதிரட்டினார். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என மக்களை ஒன்று சேர்த்து வலுவான அரசியல் அமைப்பை உருவாக்கினார். வரலாற்றில் எவ்வாறு நினைவுகூரப்பட விரும்புகிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது டோரிஜோஸ், “நான் வரலாற்றில் இறங்க விரும்பவில்லை, நான் கால்வாய் மண்டலத்திற்குள் செல்ல விரும்புகிறேன்.” என்று பதிலளித்தார்.
டோரிஜோசின் மக்கள் பணிகள்:
அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்குக் கால்வாயின் வருவாய் முக்கிய பங்களிக்கும் என்பதை உணர்ந்த டோரிஜோஸ், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து கால்வாய்க்கான முழு அதிகாரத்தையும் திரும்பிப் பெற அரசியல் அமைப்பை ஏற்படுத்தினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்ட சூழலில், டோரிஜோஸ் ஏற்படுத்திய மக்கள் கூட்டணி வலுப்பெற்று மக்களிடம் நன்மதிப்போடு விளங்கியது. அவர் அரசுப்பணிகளை எளிய மக்களுக்குப் பெற்றுத் தந்து அவர்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்றார்; பலவிதமான சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
ஏழைகளின் விவசாய நிலங்களை மறுபங்கீடு செய்தார்; சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்த பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பங்கள் மீது வழக்கு தொடர்ந்தார்; கல்வி, மருத்துவம், மக்கள் நலப் பணிகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கி, மக்களின் வாழ்வு மேம்பட உழைத்தார்; பொது மனைத் திட்டங்கள் மூலம் நகர்ப்புற மக்களின் நன்மதிப்பை பெற்றார்; தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்; தொழிலாளர் மற்றும் விவசாயச் சங்கங்களை அங்கீகரித்தார்; நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பழங்குடி சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் ஊக்குவித்தார்; அடுத்தடுத்து செய்த சீர்திருத்தங்களால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது; அதுவே அவரைப் பல ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் நிலைக்கச் செய்தது.

கார்டர்- டோரிஜோஸ் ஒப்பந்தம்:
அன்றைய காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த கார்டர்- டோரிஜோஸ் இருவருக்கும் இடையேயான நல்லிணக்கம் காரணமாக டோரிஜோஸ்-கார்ட்டர் உடன்படிக்கை எனப்படும் கால்வாய் ஒப்பந்தம் 1977 ஆம் ஆண்டு போடப்பட்டது. இவ்வுடன்படிக்கையின் மூலம் பல்லாண்டு கனவான பனாமா கால்வாய் மீது முழு இறையாண்மையை பனாமா பெற்றது. 1999 க்குப் பிறகு பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைப் பெறும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 1903 முதல் அமெரிக்கா கடைப்பிடித்து வந்த கால்வாயின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது டோரிஜோஸ் என்றால் மிகையாகாது. ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டமாக, டிசம்பர் 31, 1999 அன்று, அமெரிக்கா கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மண்டலத்தில் இருந்த அனைத்து பகுதிகள் மேலிருந்த கட்டுப்பாட்டைக் கைவிட்டது. பனாமாவின் இறையாண்மையைப் பெற அமெரிக்காவிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்டார் டோரிஜோஸ்.
ஏகாதிபத்தியத்தின் கொடூரக் கரங்களால் நசுக்கப்பட்ட புரட்சியாளன்:
பனாமாவின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் ஆளுமைமிக்க பனாமேனியத் தலைவராக டொரிஜோஸ் கருதப்பட்டார்; அகதிகளை வரவேற்றார்; அவர் அண்டை மாகாணங்களான நிகரகுவாவில் உள்ள சாண்டினிஸ்டா கெரில்லாக்களுக்கும், குவாத்தமாலாவில் உள்ள பிற கிளர்ச்சிப் படைகளுக்கும் உதவினார். மேலும் கியூபாவுடனான உறவுகளைப் புதுப்பித்தார். டோரிஜோஸ் எந்நேரமும் மரணத்தை தழுவ நேரிடும் என்பதை அரசியல் சூழல்களிலிருந்து முன்னரே அறிந்திருந்தார். தனது 52வது வயதில், பனாமா விமானப்படையின் விமானம் விழுந்து நொறுங்கியபோது இறந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து நொறுங்கியது என்று சொல்லப்பட்ட போதும், ஏகாதிபத்தியம் தன்னை எதிர்த்தவருக்கு வழக்கம்போலக் கொடுத்த பரிசாகவே இன்றும் கருதப்படுகிறது. புரட்சியாளரின் மரணம் நாடு முழுவதும், குறிப்பாக ஏழை மக்களிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
முடிவுரை
மக்கள் புரட்சி வெல்லும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக பனாமாவின் வரலாறு அமைகிறது. நாட்டு மக்களின் தேவையறிந்து மக்களை ஒன்று திரட்டி இழந்த உரிமைகளை மீட்டெடுக்க நல்ல தலைவர்கள் இருப்பார்களேயானால் நாடு செழித்தோங்கும். இழப்புகள் நேரிட்ட போதிலும் இலட்சியத்தை அடைய மக்களின் கூட்டு முயற்சியே பயனளிக்கும் என்பதை பனாமாவின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
திருமதி. பவ்யா,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.