நவம்பர் 2022
தமிழர்களுக்கெதிரான முதல் அஸ்திரம்!
வி ஜயநகரப் பேரரசுக்குப் பிறகுதான் தமிழர்களுக்கான அனைத்துவிதமான உரிமைகளும் பறிபோனது. அது மட்டுமின்றி பஞ்சமி நிலங்கள் அனைத்தும் தெலுங்கு நாயுடு நாயக்கர்கள் வசமானது. அவர்கள் இன்று பொருளாதாரத்திலும் அரசுத்துறையிலும் அதிகமாக உள்ளார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாநில மக்களின் உரிமைகள் அனைத்தும் சொந்த மண்ணின் மைந்தர்களுக்குத்தான் என்று இந்தியா முழுவதும் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சராக தமிழ்மகன் இல்லாத காரணத்தால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோனது.
இது ஏன் என்ற கேள்வி எழும்போது இங்கே அனைத்து மாநில மக்களும் வாழ்கின்றனர்; ஆகையால் இந்தக் கோப்புகளைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தள்ளிவைத்தது மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மாறாக தமிழகத்தில் மட்டும் வேற்று மாநில மக்களுக்கு 80 சதவீதமும் சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு 20 சதவிதம் என்ற சட்டத்தை மாற்றியமைத்து வாக்கு அரசியலுக்காக அப்போதே நம் உரிமைகள் அனைத்தையும் அடைமானம் வைத்தது அன்று இருந்த தமிழக அமைச்சரவை,
கல்வி மறுப்பு:
ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்க்குடிகளின் மீது கொண்டுவந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தின் காரணமாக தமிழர்களுக்கு கல்விகற்கும் உரிமைகள் முழுவதும் தடைபட்டது. பிறகு அதிகாரம் முழுவதும் பார்ப்பனர்கள் வசம் சென்றதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, மேலும் சிக்கல்களுக்கு ஆளானது தமிழ்ச்சமூகம். அன்றிலிருந்து நமக்கும் அவர்களுக்கும் தான் அதிக முரண்பாடுகள் இருந்தன. அந்த காலக்கட்டத்தில் தமிழர்கள் தன் இனப்பகையாலும் சாதிய ஏற்றத்தாழ்வு காரணத்தாலும் பிரித்தாளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போதுதான் திராவிடம் என்ற பிம்பமும் வேர்விட ஆரம்பித்தது.
பார்ப்பன எதிர்ப்பு என்ற நாடகம்:
தமிழ் மக்கள் மத்தியில் திராவிடம் என்ற மாயையைப் பரப்பி பார்ப்பனர்களுக்கு எதிரி நாங்கள் தான் என்ற பிம்பத்தை கட்டமைத்து அதற்கு ஆதரவாக தமிழ் அறிஞர்களையும் பேசவைத்து அறுவடை செய்தது திராவிடம். 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் வெற்றியும் பெற்றனர். மக்கள் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இந்தி மொழி திணிப்பு கைவிடப்பட்டது. திராவிட ஆதரவாளர்கள் இவற்றை தங்களின் வெற்றியாக அறுவடை செய்து கொண்டார்கள்.
சிந்திக்கும் திறன்:
தமிழகத்தில் மதுவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்லியே இன்று சாராய ஆலையைத் திறந்து தமிழக ஆண்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டது மட்டுமில்லாமல் பல பெண்களின் தாலியை அறுக்கத் துணை நின்றதும் இந்த இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையிலான அரசுகள் தான். அனைவரையும் மதுபோதைக்கு அடிமைப்படுத்தி சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடித்துக் கேள்வியே கேட்க முடியாத நிலைக்குத் தள்ளியதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடினால் தேசத்துரோகம் என்று சொல்லும் அளவுக்குக் கொண்டு வந்தவர்களும் இந்த இருபெரும் திராவிடக் கட்சிகள்தான்.
தமிழ் மொழி அழிப்பு:
தமிழ் தமிழ் என்று பேசியே இன்று தமிழகத்தில் தெருக்கள் தோறும் எவ்விடத்திலும் தமிழ் இல்லாமல் செய்ததுதான் திராவிடம் செய்த மறைமுக மொழி அழிப்பு. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியைத் துணைப்பாடமாகக் கூட இல்லாத அளவிற்கு மாற்றிவிட்டார்கள், இந்த திராவிட ஆட்சியாளர்கள். அரசாங்கக் கல்வி நிறுவனங்களையும், நிர்வாகத்தை ஒழுங்காகச் செய்யாமல் இருக்கும் பள்ளிக ளையும் மூடுவதற்கான வேலையை செய்கிறார்கள். தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் வெற்று அறிக்கையை மட்டுமே கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தங்களின் நிதியாக வைத்துக்கொள்கிறார்கள் கல்வி அமைச்சரே சொல்கிறார். 15 ஆயிரம் பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது என்றால் அவற்றுக்கு ஒதுக்கிய நிதி எங்கே?
வளர்ச்சி என்கிற வெற்றுவார்த்தைகள்:
சோமாலியா நாடு 1965 ஆம் ஆண்டு மிகப்பெரிய விவசாய நாடாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொருளாதாரக் கொள்கையால் அந்த நாட்டின் விவசாய நிலங்கள் அனைத்தும் மீத்தேன் மற்றும் ஈத்தேன் எடுக்கும் திட்டத்தின் மூலம் சுடுகாடாக மாறியுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது நம் கண்முன்னே வெனிசுலா நாட்டில் விவசாய நிலங்களை அழித்து மிகப்பெரிய கட்டிடங்கள் வளர்ச்சி என்ற பெயரில் கட்டினார்கள். இன்று அந்த நாட்டின் பணம் வீதிகளில் வீசப்பட்டது; ஒருவரும் எடுக்கவில்லை; ஆனால் மக்கள் விட்டு வைக்காமல் உடைத்துப் பொருட்களை அள்ளி சென்றார்களே தவிர பணத்தை யாரும் எடுக்கவில்லை. இது நம் கண்முன்னே நடந்த நிகழ்வு. உணவின் தேவை எவ்வளவு முக்கியம் என்று இப்போது நமக்குத் தெரியும். இதே நிலை நீடித்தால் உலகம் ஒரு மிகப்பெரிய போரைச் சந்திக்கும். அது நீருக்கும் சோறுக்குமாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
திரு. தர்மர் பொன்னையா,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – கத்தார்.