தமிழர்கள் இந்துக்களா?
இவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையிருக்கும். அவ்வாறு தமிழர்களுக்கும் உண்டு. தமிழர்கள் இயற்கையை வழிபடுபவர்கள். முன்னோர்களை போற்றி வழிபடுபவர்கள். நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள்.
தமிழ்த்தேசிய இனமக்கள் இந்துக்களா?
தமிழர்கள் இந்துக்களாக ஒருபோதும் இருக்கவில்லை. கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் எவ்வித மத அடையாளங்களும் காணப்படவில்லை. ஆயினும் வேலுடன் ஓர் உருவம் பாய்வதைப் போன்றதொரு உருவம் பொறிக்கப்பட்ட அடையாளச் சான்றுகள் கிடைத்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தங்களை வழிநடத்தி வாழ்ந்த முன்னோர்களை தெய்வமாக வழிபட்டார்கள் என்று அறிகிறோம், தொல்தமிழர்கள் ஓர் மதத்தை சார்ந்து இருந்ததில்லை ஆயினும் பிற்காலத்தில் ஆசீவகம், சைவம், வைணவம், கிறுத்துவம், பௌத்தம், சமணம் போன்ற சமயங்களையும் மற்றும் இசுலாமிய மார்க்கத்தையும் தழுவினார்கள்.
தமிழர்களின் திணைக்கடவுள்கள்:
தமிழர்கள் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐவகைகளாக நிலங்களை பிரித்து வாழ்ந்தனர். குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடத்தையும், முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடத்தையும், மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். குறிஞ்சி நிலத்தின் திணைக்கடவுள் முருகன், முல்லை நிலத்திற்கு மால் எனும் திருமால், மருத நிலக்கடவுள் வேந்தன் எனும் இந்திரன் நெய்தல் நிலக்கடவுள் வருணன் மற்றும் பாலை நிலக்கடவுள் கொற்றவை ஆவர். ஆரிய வருகைக்குப்பின் தமிழர்களின் திணைக் கடவுள்களை ஆரியர்கள் புராணங்களுக்குள் புகுத்தி வருணாசிரம கோட்பாட்டுக்குள் கொண்டு வந்து தங்களுக்கான கடவுள்களாக தன்வயப்படுத்திக்கொண்டனர். பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக எவரெல்லாம் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், பார்சி, ஆங்கிலோ இந்தியர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என வகைப்படுத்தினர்.
கொல்கத்தாவின் ஆளுநராக இருந்த சர் வில்லியம் சோன்சு என்பவரிடம் ஆரிய பார்ப்பனர்கள் எங்களை இந்துக்கள் என்று அழைக்க வேண்டும் என்று முறையிட்டனர். இந்தியா இந்துக்களின் தேசமென்று அவரிடம் கூறினர். அதன்பிறகு உன்நாட்டு நீதிநெறிகளைத் தொகுத்து “இந்து சட்டம் (Hindu law) என பெயரிட்டனர்.
மறைந்துபோன சங்கராச்சாரியர், தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பெயர் வைத்ததால் நாம் தப்பித்தோம் என்று குறிப்பிடுகிறார். இந்து என்ற மதத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஆரியர்கள் தங்களை வளித்துக்கொண்டு தலைவராக்கிக்கொண்டு இங்குள்ள மக்களை சாதியாகப் பிளந்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த இந்து மதத்தின் அடிப்படைக்கோட்பாடான மனுசுமிருதி மக்களை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பாகுபடுத்தி உயர்வு, தாழ்வு வேறுபாடு நிலையை நிறுவுகிறது. ஆனால் தொல் தமிழர்களுக்குப் பாணன், துடியன், பறையன், கடம்பன் என நான்கு குடிகளே இருந்துள்ளன. இன்றளவும் இந்திய மொழிகளில் இந்து என்ற சொல் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்து என்ற பதம் சாதியின் அடிப்படையில் கட்டப்பட்டது. தீண்டாமைக்கு இது அடித்தளமாக அமைந்துள்ளது. தமிழர்கள் இந்துக்களில்லை, ஒரு கெடுவாய்ப்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி நாம் இந்துவாக்கப்பட்டோம். அதாவது இங்கு கடவுள் மறுப்பளர்கள் கூட இந்துதான். நாம் இந்துக்கள் அல்ல; நமக்கு உளவியல் விடுதலை தேவைப்படுகின்றது.
இக்காரணத்திற்காகவே நாம் தமிழர் கட்சி நாம் இழந்த பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக வீரத்தமிழர் முன்னணி என்றதொரு அமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றது. பண்பாட்டு புரட்சியில்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்ற அம்பேத்கர் கூற்றுக்கிணங்க நாம் தமிழர் கட்சி தமிழர் பண்பாட்டு மீட்சியில் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது அவற்றுள் திருமுருகப்பெருவிழா, மாயோன் பெருவிழா, சிவ இரவு, கண்ணகிப்பெருவிழா போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை.
“தமிழர்கள் இந்துக்கள் அல்ல” என உரக்க கூறுவோம். நாம் தமிழர்!
திரு. கு.பாண்டியன்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.