ஏப்ரல் 2024
தமிழர் ஆள – வர வேண்டும் நாம் தமிழர்!
செந்தமிழர் பாசறை – வளைகுடா ஒருங்கிணைத்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் விழிப்புணர்வு இணைய வழி தொடர் கருத்தரங்கத்தின் நான்காம் மற்றும் இறுதி அமர்வு மார்ச் 8, 2024 வெள்ளி அன்று, தாயக நேரம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
இந்திய ஒன்றியத்திலேயே மிக அதிகமான இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நமது நாம் தமிழர் கட்சியின் இரு பெரும் படைப்பிரிவுகளான மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை ஆகியவற்றிலிருந்து, மூன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தொகுத்தளித்த கருத்தரங்காக இந்நிகழ்வு அமைந்தது.
நமது இயக்க வழக்கப்படி அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி சொன்ன பின், செந்தமிழர் பாசறை – ஓமனின் மகளிர் பாசறையிலிருந்து திருமதி. கிருபா அவர்கள் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார். அவரையடுத்து, மழலையர் பாசறை உறவான செல்வன். சஞ்சீவ் அவர்கள்,
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியே வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியே!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே! வாழ்க நின்கூட்டம்!
வாழ்க தமிழர் நாடு!வாழ்கநின்
வையத்து மாப்புகழ் நன்றே!”
என்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் கவிதையோடு நிகழ்வைத் தொடங்கி வைக்க, அடுத்தடுத்து சிறப்பு விருந்தினர் அனைவரும் செறிவான கருத்துரைகளை வழங்கினர்.
“இந்திய ஒன்றியத்தில் தேர்தல் சனநாயகம்” எனும் துணைத் தலைப்பில் பேசிய மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் அவர்கள், ஆங்கிலேயர் காலம் முதல் மக்களாட்சிக் காலம் வரையிலான தேர்தல் நடைமுறைகளையும், சமகாலத்தில் வாக்கு இயந்திரத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், சின்னத்தின் பெயரால் நடக்கும் சூதாட்டங்கள், பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்கை வழிப்பறி செய்யும் அவலங்களையும் தனது உரையின் மூலம் தோலுரித்துக் காட்டினார்.
அடுத்ததாக “தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இதுவரை சொன்னதும் செய்ததும்” எனும் துணைத் தலைப்பில் உரையாற்றிய இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கானா அவர்கள், கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் வணிகமயமான வாக்கரசியல் மூலம் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் தாரை வார்த்து ஏமாற்றியதைத் தரவுகளோடு விளக்கினார்.
இறுதியாக “மாநிலத்தில் தன்னாட்சி – ஒன்றியத்தில் கூட்டாட்சி எனும் கோட்பாட்டின் வரலாறு” என்ற தலைப்பில் கருத்துரை நல்கிய மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள், கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, எவ்வாறு இன்று முற்றுமுழுதான ஒற்றையாட்சியாக இறுகியிருக்கிறது என்பதையும், அதனால் தமிழர் உள்ளிட்ட பிற தேசிய இனங்கள் இழந்ததென்ன என்பதையும் வரலாற்றுச் சான்றுகளோடு பட்டியலிட்டார். தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களால் இந்நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை.
அகவணக்கம் தொடங்கி நன்றியுரை ஈறாக முழு நிகழ்வையும் செந்தமிழர் பாசறை – வளைகுடாவின் செய்தித் தொடர்பாளர் விமலினி செந்தில்குமார் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். தாயகத்திலிருந்தும் அயலகத்திலிருந்து இக்கருத்தரங்கத்தில் இணைந்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும், திட்டமிட்டபடி நிகழ்வைச் சிறப்பாக நடத்த உதவிய ஒவ்வொருவருக்கும் செந்தமிழர் பாசறை வளைகுடாவின் அன்பும், நன்றியும்!
நாற்பதிலும் முன்னேறித் தடைகளை உடை!
நாற்புறமும் வெல்லட்டும் நாம் தமிழர் படை!