சூலை 2022
தமிழர் வாழ்வியலில் விளையாட்டு
விளையாட்டின் தோற்றம்
வரலாற்றுப் பெருமைமிக்க தமிழினம், ஆகச்சிறந்த பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆதிகாலம் தொட்டு, தமிழர்களின் வாழ்வியலில் விளையாட்டு என்னும் செயல்பாடு முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வில் வேட்டையாடுதல், போர், உழவு, இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு அவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல் போன்ற செயல்பாடுகளில் மனிதன் தனக்கு ஏற்படும் மன மற்றும் உடல் சோர்வைப் போக்குவதற்கும். புத்துணர்ச்சியோடு மேலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தன்னை தயார் செய்து கொள்ளும் செயலாகவும் தோன்றியதுதான் விளையாட்டு.
பல்வேறு வினையாட்டுகள் நடத்துவதன் மூலம் மனிதர்களின் மனம் மற்றும் உடல் வலிமை, திறமைகள் இவற்றை அறிந்து, அதற்கேற்ப செயல்பாடுகளில் அவரை ஈடுபடுத்துவதையும் தமிழ்ச் சமூகம் வழக்கமாகக் கொண்டிருந்தது. மொழிப்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் விளை என்றால் விருப்பம் எனப் பொருள் கொண்டு விரும்பி ஆடும் விளையாட்டு என்று விளக்குகிறார்.

சங்க நூல்களில் விளையாட்டு
தமிழில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் விளையாட்டு பற்றிய சில செய்திகள் சான்றாகக் காணக்கிடைக்கின்றன.
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே” மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் உவகை எனும் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களன்களில் விளையாட்டும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பழங்கால மக்கள் விளையாடும் விளையாட்டு முறைகளை வைத்து அவற்றைக் கெடவரல் என்றும், பண்ணை என்றும் குறிப்பிடுகிறார்.
“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு“
கெடவரல் என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டையும், பண்ணை என்பது நீரில் விளையாடும் விளையாட்டையும் குறிக்கின்றது. இது போன்ற விளையாட்டு பற்றிய சான்றுகள் சங்க இலக்கிய நூலான நற்றிணை உள்ளிட்ட மேலும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விலக்கியச் சான்றுகள், தமிழர்களின் தொன்மை காலம் முதலே விளையாட்டின் தோற்றம் இருந்ததை உறுதிசெய்கிறது.
பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் பட்டியல் மிக நீண்டதாகவும், பல்வேறு நற்பலன்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. விளையாட்டை, அதில் பங்கு பெறுவோர், நிகழும் இடம், எண்ணிக்கை என பல கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
நீர் விளையாட்டு, நில விளையாட்டு, தனி விளையாட்டு, குழு விளையாட்டு, உள்ளக விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
தாயக்கட்டை ஆடுபுலி ஆட்டம், ஏணி பாம்பு ஆட்டம், பல்லாங்குழி, பம்பரம், பட்டம், பாண்டியாட்டம் / நொண்டி, கிட்டிப்புள்ளு, கோலி ஆட்டம், கண்ணாமூச்சி, பச்சைக்குதிரை, கபடி, உறியடித்தல், சல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு மற்றும் பல.

தமிழர் வரலாற்றில் விளையாட்டு
தற்போது, தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர் தாய்மடி என வர்ணிக்கப்படும் கீழடியில் கிடைத்த, விளையாட்டிற்குப் பயன்படும் ஆட்டக்காய்கள் இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்த்தவை. தொல்பொருள் சான்றுகள் தமிழர் விளையாட்டின்பாற் கொண்ட ஈடுபாட்டின் ஆழத்தை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.
தமிழர் விளையாட்டின் முக்கியத்துவம்
தமிழர்களின் தொன்மை, பண்பாடு, வீரம், அறிவாற்றல் இவற்றை பறைசாற்றும் விளையாட்டுகள் மிகவும் இன்றியமையாதது. பாலினம், வயது, வாழிடம் 67607 வேற்றுமைகள் இல்லாது, அனைவருக்குமான விளையாட்டு முறைகளை உள்ளடக்கியதாகத் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் இருப்பது நம் பெருமையாகும்.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், சிறுவர் முதல் பெரியவர் வரை பல மணி நேரம் திறன்பேசியில் விளையாட்டுகளை விளையாடி உடற்சோர்வு அடைவதுடன், உளவியல் ரீதியான வன்முறை, வெறுப்பு, அச்சம் என பலவாறு பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையாகி வருகின்றனர்.
“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!
ஒரு குழந்தையை வையாதே பாப்பா !
கூடி விளையாடு பாப்பா”
என்ற மகாகவி புரட்சி வரிகளுக்கேற்ப, தமிழர் விளையாட்டுக்கள், நம் பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றையும் சுமந்து, சமூக ஒருமைப்பாட்டை பேணப் பயன்படுவதாக உள்ளது. எனவே, தமிழராகிய நாம் இதை மனதில் கொண்டு, நமது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்வோம் என உறுதிகொள்வோம்.
திரு. பாரதிராசன் வல்லவன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.