மே 2025
தமிழினப் படுகொலை – பெற்ற விழிப்புணர்வும் பெற வேண்டிய விழிப்புணர்வும்
இம்மண்ணில் வாழ்கின்ற எல்லா உயிர்களிலும் தான் தான் மேன்மை மிகுந்தது என்று நினைக்கின்ற மாந்தரினம், தன்னினத்தைக் கொன்று குவிப்பதில் கைதேர்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அறிவுலகத்தின் பார்வையில் ஓரினத்தின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள முற்படுகின்ற பொழுது, உண்மையும் பொய்மையும் கலந்தே ஒவ்வொரு இனத்திற்கும் வரலாறு கட்டமைக்கப்படுகிறது.


மனித வரலாற்றில் பல நூற்றுக்கணக்கான இனப்படுகொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இவை நூறு விழுக்காடு தவறு என்று தெரிந்திருந்தும் ஏன் நடக்கிறது என்ற வினாவுக்கு இன்றுவரை விடையில்லை. கடந்த நூற்றாண்டில் மட்டும் பல இனப்படுகொலைகளை உலகு பார்த்துவிட்டது. ருவாண்டா இனப்படுகொலை, அர்மேனிய இனப்படுகொலை, போஸ்னிய இனப்படுகொலை, வியட்நாம் இனப்படுகொலை, ஆப்கானிஸ்தான் இனப்படுகொலை, பாலத்தீன இனப்படுகொலை,தமிழீழப் படுகொலை, ரோகிங்ய இனப்படுகொலை என பட்டியல் நீண்டுக்கொண்டேதான் செல்கிறது.
உலக அரசியலில் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து திரைப்படங்கள், கதைகள், நாடகம், நூல்கள், பாடல்கள் மூலமாகப் பல பரிமாணத்தில் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்ட யூத இனப்படுகொலை தவிர்த்து, மற்ற இனப்படுகொலைகளில் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பகுதி கூட கணக்கில் காட்டப்படுவதில்லை. இனப்படுகொலையின் நேரடி மற்றும் மறைமுக இழப்புக் கணக்கீடுகள் என்றுமே உண்மைக்கு மிக தூரத்தில் இருக்கின்றன.
ஏன் இந்தப் பாகுபாடும் பாரபட்சமும்? ருவாண்டா மக்கள் மாந்தரினம் கிடையாதா? போஸ்னிய மக்கள் மாந்தரினம் கிடையாதா? பாலத்தீன மக்கள் மாந்தரினம் கிடையாதா? அர்மேனியர்கள் மாந்தரினம் கிடையாதா? ரோகிங்யா மக்கள் மாந்தரினம் கிடையாதா? உலகத்தின் முதல் குடி மூத்தக்குடி தமிழ்க்குடி மாந்தரினம் கிடையாதா? தமிழர்களை கொன்று குவித்த பொழுது உலக நாடுகள் என்ன செய்தன? ஓரினத்தை வீழ்த்துவதற்கு உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆயுதங்களை கொடுத்துக் கொன்றொழித்ததை எப்படி கடந்துபோக முடியும்?


கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டாடி மகிழ்ந்த மற்ற இனங்களும் உண்டு; தமிழருக்குத்தானே நடக்கிறது என்று அமைதி காத்த இனங்களும் உண்டு. எங்களின் கல்விக்கூடங்கள் கல்லறைகள் ஆயின; மருத்துவமனைகள் மண்ணாய்ப் போயின; எங்களின் தளிர்கள் எல்லாம் தணலில் எரிந்தன; பதுங்குகுழிகள் கூட்டுச்சவக் குழிகளாக மாறின; இறுதிச்சடங்குகள் செய்யக்கூட வாய்ப்பற்ற நிலை; உயிரற்ற உடல்கள் மீது செய்யப்பட்ட வன்புணர்வு உள்ளிட்ட அவமானங்களுக்கு வரைமுறையே இல்லை. எங்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை; எந்த இனமும் குரல் கொடுக்கவில்லை; ஆரிய – திராவிடச் சாத்தான்கள் கடவுள் வேடமிட்டு, அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி இலங்கை அரசபயங்கரவாதப்பேய் எங்கள் பிணங்களைத் தின்பதை இரசித்தன.
இவ்வளவு நடந்தப்பிறகும் நம்மினத்தின் மீதுள்ள வன்மம் தீரவில்லை. உலகமே கண்டு வியந்த ஓர் அறத்தலைவனின் பெயரை நாய்க்கு சூட்டுவது, அவன் வீரத்தை எதிர்கொள்ள முடியாத கோழைகள் தீவிரவாதி பயங்கரவாதி என்று திரைப்படம் எடுப்பது, ஈழப்பெண்களை கொச்சைப்படுத்திக் காட்டுவது, பிழைக்கப்போன இனத்தில் நாடு கேட்டு போராடுகிறோம் என்று வரலாற்றை மாற்றிப் பேசுவது, உண்மைத் தகவல்களைத் திரித்து அவதூறு பரப்புவது என இன்றும் நம்மீதான உளவியல் தாக்குதல்களும், போலிப்பிம்பக் கட்டமைப்புகளும் தொடர்கின்றன.
அண்மையில் வெளிவந்த ஜாட் என்ற திரைப்படத்தில் இராஜீவ் காந்தியை கொல்லவந்த விடுதலைப்புலிகள் ஆந்திராவில் தங்கிவிட்டார்கள் என்ற பொய்யான செய்தியைக் காட்சிப்படுத்தக் காரணம் என்ன? எல்லாம் தமிழரையும், அவர்தம் இன விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் நோக்கமன்றி வேறென்ன?
மாற்று இனமெல்லாம் இனவழிப்பை மற்றுமொரு நாளேட்டுச் செய்தியென கடந்து செல்கையில் நாம் என்ன செய்தோம்? அவர்களோடு சேர்ந்து மானாட மயிலாட பார்த்தோம்… செத்துக்கொண்டிருப்பது நமது உறவுகள் என்று தெரிந்தும் தெரியாமல் வாழ்ந்தோம்… இதில் பலருக்கு அவர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவென்பதுகூடத் தெரியாது… வரலாறு தெரிந்த சிலரும் சாதி வெறியர்களாகவும் மத வெறியர்களாகவும் மட்டுமே இருந்துவிட்டோம். ஈழத்தாயகத்தில் மட்டுமா இந்த இனவழிப்பு? இங்கே தமிழ்நாட்டிலும் ஐம்பதாண்டுகளாக நிகழ்கிறதே மறைமுகமாக ஓர் இனவழிப்பு!
போர் செய்து ஒட்டுமொத்தமாகக் கொன்று குவிப்பது மட்டும்தான் இனப்படுகொலையா? ஆந்திர காடுகளில் நம்மைக்கொன்றது இனப்படுகொலை இல்லையா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இனப்படுகொலை இல்லையா? பென்னீக்ஸ் ஜெயராஜ் ஶ்ரீமதியைக் கொன்றது இனப்படுகொலை இல்லையா? ஏறக்குறைய இன்றுவரை தொள்ளாயிரம் மீனவர்களைக் கொன்றது இனப்படுகொலை இல்லையா? சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக்கொலைகள் இனப்படுகொலை இல்லையா? கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கொல்வது இனப்படுகொலை இல்லையா? வகைவகையான போதைப்பொருட்களையும், புட்டி புட்டியாகச் சாராயத்தையும் விற்றுத் தமிழ்க்குடும்பங்களைச் சீரழிப்பது தான் ஆகப்பெரிய இனவழிப்பு.
உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா இனமக்களும் தாங்கள் அடிமையென தெரிந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவதற்குப் போராடுகின்றார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நம்மை அடிமைகளாக்கி, நம்மைத் தாழ்த்தி நமக்குள்ளே பிரிவினைகளை உண்டாக்கியவர்கள் என்று தெரிந்திருந்தும் வாக்கு செலுத்தி அவர்களை வெல்ல வைத்துக் கொண்டிருக்கின்றோம்; ஐந்திற்கும் பத்திற்கும் அரிசிக்கும் பருப்பிற்கும் வேட்டிக்கும் சேலைக்கும் கையேந்தி நிற்கின்றோம். மது போதைக்கு அடிமையாகி, திரைமோகத்தில் சிக்கித் திசை தெரியாமல் சிதைந்து கொண்டிருக்கின்றோம். நம்மினத்தின் வரலாறு என்னவென்று தெரியவில்லை; நாம் கடந்து வந்த பாதை எதுவென்று புரியவில்லை.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்று நடமாடும் உயிர்களை மட்டும் நேசிக்கவில்லை இவ்வினம். மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் (நற்:226) என்று நகர முடியாத மரத்துக்கும் கருணை காட்டி வாழ்ந்த இவ்வினத்தை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். நல்லெருது நடைவளம் வாய்த்தென உழவர்..புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு( நற்:315) என உழைத்து உழைத்து களைத்துப்போன எருதிற்கு ஓய்வு கொடுத்து காவல்காக்க காவலாளிகள் போட்டுப் பார்த்துக்கொண்ட ஓரினத்தை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்று பழி சொன்னார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்( புற:192) என ஒட்டுமொத்த உலக மக்களையும் உறவாக எண்ணிய தமிழரைப் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தினார்கள்.
நமது வரலாற்றுத் தலைவர்களை எல்லாம் ஏன் சிறுமைப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் தெரியுமா உறவுகளே? நம்மை கண்டு அவர்களுக்கு அச்சமில்லை..நமது நீண்ட நெடிய வரலாற்றைக் கணடு தான் அச்சப்படுகிறார்கள்.. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல
கரிகாலச்சோழனைப் போல, அருண்மொழிச் சோழனைப்போல, அரசேந்திர சோழனைப்போல, தீரன் சின்னமலை போல, மருது சகோதரர்கள் போல, பூலித்தேவன் போல, வேலுநாச்சியார் போல,குயிலி நாச்சியார்போல, வெட்டுடையாள் போல, அங்கையற்கண்ணி போல, மாலதி போல, இசைப்பிரியாவைப் போல இவ்வினத்தில் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருப்பார்கள் என்ற அச்சத்தால் தான் நம்மை அழிக்கத் துடிக்கின்றார்கள்.
தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் மெளரியர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தோற்கடிக்க, சேர சோழ பாண்டியர்கள் மற்றும் வேளிர்கள் ஒன்று சேர்ந்து மெளரியர்களை விரட்டி அடித்ததுபோல், இன்று ஈழத்தமிழ் உறவுகளும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒன்று சேர்ந்து தமக்கென ஒரு நாட்டையோ பெற்றுக்கொள்வார்களோ என்று அச்சம் கொள்கிறார்கள். இவ்வச்சத்திற்கு இன்னும் உரமிட்டு வளர்ப்போம் வாருங்கள் உறவுகளே…
மே பதினெட்டு – எங்களை வீழ்த்திவிட்டதாக உலக வல்லாதிக நாடுகளும், மற்ற இனங்களும் நினைத்துக்கொண்டிருக்கின்றன… இல்லை… இல்லவே இல்லை… நாங்கள் வீறுகொண்டு வளர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் பறிகொடுத்த உயிர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பலநூறு மடங்கு பட்டைத்தீட்டி எங்களை வளர்த்துக்கொண்டு வருகையில் மனச்சோர்வுகளையும் சாதிசமயப் பிணக்குகளையும் நீக்கி இனத்தின் விடுதலைக்கு உரமாக்கி உழைப்போம்… முள்வேலி கம்பிகளும் புறமுதுகில் எய்திய அம்புகளும் ஆயிரம் விழுக்காடு மன உறுதியைக் கொடுத்து ஊக்குவிக்குமேயன்றி, எங்களின் அறத்தையும் மறத்தையும் ஒருபொழுதும் மாற்றிவிடாது…
போர் செய்வோம் வாருங்கள் உறவுகளே!
அறப்போர் செய்வோம் வாருங்கள் உறவுகளே!
ஆண்டாண்டாய் அடிமைப்பட்டு கிடக்கும்
தமிழ் மண்ணை மீட்டெடுத்து மறுவாழ்வளிக்க
போர் செய்வோம் வாருங்கள் உறவுகளே!
அறப்போர் செய்வோம் வாருங்கள் உறவுகளே!
வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு
எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் இன்று…
சாதி மதப் பிணக்குகளை பிணமாக்குவோம்!
தமிழராய் ஒன்றிணைந்து வாழ்ந்து காட்டுவோம்!
இது தலைவன் போட்ட கட்டளை!
இனி தமிழ்நாடு பெறும் விடுதலை!
திருமதி. ஆயிஷா சுல்தான்,
செந்தமிழர் பாசறை – பக்ரைன்.