அக்டோபர் 2023
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
தமிழீழப் போராட்ட வரலாற்றில் களத்தில் வீரகாவியமான முதற்பெண் போராளியான 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்படுகின்றது. அவர் வீரச்சாவைத் தழுவி 36ஆம் ஆண்டுகள் ஆகின்றன.
“நான் காயப்பட்டிட்டன்… என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ… என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ… என்ர ஆயுதம் பத்திரம்… என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” இவை தான் அவரது உதட்டிலிருந்து உதிர்ந்த இறுதிச் சொற்கள்.

தான் வீரமரணம் எய்தினாலும் தன் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தான், தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி அருகிலுள்ளோரிடம் கூறினார் போராளி மாலதி.
ஆயுதத்தைக் கொடுத்து அது உறுதியாக இன்னொருவரைச் சேரும் என்ற நிறைவில் தனது கழுத்திலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவுக்காக உழைத்த மகிழ்வில் தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள் அம்மறத்தி.

‘பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை. பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண்போராளிகள், தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்’ என்று தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் பெண் விடுதலை குறித்துக் கூறியுள்ளார். அவரது பாலின சமத்துவத்துடன் கூடிய தமிழின விடுதலைக் கனவை நனவாக்க நடந்த பெருவேள்வியில், தனது உயிரை ஊற்றி உறுதவப்பயனடைந்த முதற்பெண் மாலதி, புரட்சி வானில் ஒரு வழிகாட்டும் வடமீன்.