தமிழோவியம்
நற்செயல்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.
நற்றிணை 210 (தோழி கூற்று – மருதத் திணை)
பொருளுரை:
தலைவன் சண்டையிட்டு தலைவியைப் பிரிந்து விடுகிறான்.தோழி தலைவனிடம் சென்று அவளை ஆற்றுப்படுத்த இவ்வாறு வேண்டுகிறாள்:
“அறுவடை முடிந்ததும் நிலத்தை மீண்டும் உழுவர், உழவர்.விதைத்தல் முடிந்து இல்லம் திரும்பும்போது விதைத்தலுக்கு விதைகள் நிரப்பி எடுத்து வந்த விதைப்பெட்டிகளில் வயலில் பிடித்த மீன்களை நிரப்பி எடுத்துச் செல்வர். அத்தகைய வளமான மருத நிலத்தின் தலைவனே ! நீ தீரமாக உரைப்பதும் செல்வம் மிகுந்து வாழ்வதும் உன் நற்செயல்களால் விளைந்தது.இருப்பினும் நம்மை அறிந்தவர்களின் இடர்களை இன்சொல் கூறி நீங்க செய்வதே நற்பண்பு என்று சான்றோர் கூற்று ஆகவே தலைவியை தேற்றுவாயாக !”.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.