ஆகத்து 2022
தமிழ்த்தேசியத்தின் எழுச்சி – முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு முன்னும் பின்னும்
“என் மொழி, என் இனம், என் நாடு நலிகையில், எதனையும் பெரிதென எண்ணமாட்டேன், வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்! வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ளமாட்டேன், இந்தப் பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்”
தமிழ்தேசியப் பெரும்பாட்டன் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றுக்கிணங்க தமிழ், தமிழர், தமிழர்நாட்டின் வளர்ச்சியைவிட தன் வளர்ச்சியை பெரிதென எண்ணாது, தமிழ்தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் உறவுகளுக்கும் எங்களை ஆதரித்து வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கும் அன்பு வணக்கம்.
தமிழ்தேசியத்தின் எழுச்சி முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு முன்னும் பின்னும் என்ற தலைப்பில் எனக்குள் உதித்தவையும், நான் கற்றவற்றையும் தங்களுக்குள் பற்ற வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
1920களில் தொடங்கி தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரின் நீட்சியாக தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்தேசியவாதிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தலைவர்கள் உருவானார்கள் குறிப்பாக புரட்சிப் பாவலன் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், தோழர் தியாகு, ஐயா பழ.நெடுமாறன், தமிழ்த்தேசிய பேராசான் பெ.மணியரசன் அவர்கள் உட்பட அனைவரும் தனித்தனி இயக்கம் கட்டி தமிழ், தமிழர் உரிமைக்காக சிறு, சிறு அரங்கங்களிலும் மேடைகளிலும் தமிழ்த்தேசியத்தின் அவசியத்தைப் பேசியும் கருத்துப்பரப்புரைகள் செய்தும் வந்தார்கள். ஆனால் தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்லி, அடித்தட்டு மக்களின் பேராயுதமான வாக்கு எனும் வலிமைமிக்க கருவியைத் தன் கையில் எடுத்து எந்த அதிகாரம் நமது மக்களை அடக்கி ஒடுக்கி பதவியை ருசித்து, மக்களுக்கெதிரான கொடுங்கோன்மையைச் செய்கிறதோ அந்த அதிகாரத்தை பெற வாக்கரசியலில் ஈடுபடாமல் விலகி நின்றூர்கள்.
தமிழீழத்தில் 1970களில் ஈழத்து காந்தி என தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்ட தந்தை செல்வா அவர்களால் தமிழீழத்தில் அறவழியிலும், அரசியல் நகர்வுகளிலும் தனிக்கவனம் செலுத்தி, ஆங்கிலேய அரசிடமிருந்து 1948ல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கையின் பூர்வகுடி மக்களான தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமைக்காகவும், தனித்தமிழ் சோசலிச குடியரசை நிறுவுவதற்கும் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்தும் வந்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியும் வந்தார். பல்வேறு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பல தீர்மானங்களையும் நிறைவேற்றி இலங்கையின் சிங்கன பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களிடம் கையளித்து அவை குப்பையில் வீசப்பட்டு, தந்தை செல்வா அவர்கள் அவமானப்படுத்தபட்டார். இதுபோல முப்பது வருட அறவழிப் போராட்டங்களை நடத்தி தோற்றுப்போனநிலையில், அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன், ஆர்த்தெழுந்து, படைதிரண்டு, பகைவருடன் மோதி வென்ற பொற்காலம் ஒன்றின் தலைமகன், தமிழரைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெடுத்த, தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீர யுகமொன்றினைப் படைத்தவன், எந்த ஆயுதத்தைக் கொண்டு எம்மக்களை அச்சுறுத்தி, அடிமைப்படுத்திக் கொன்றொழித்தானோ சிங்களன், அதே ஆயுதத்தை எடுத்து தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை மக்களிலிருந்தே மக்களுக்காக போராட வந்த ஒப்பற்றத் தலைவன், புறநானூற்று வீரன் தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மக்கள் இராணுவத்தைக் கட்டமைத்தார். தலைவர் பிரபாகரன் அவர்கள், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை வீழ்த்துவதையும், சிங்கள இன மக்களை அழித்தொழிப்பதையும் இலக்காகக் கொண்டு ஒருநாளும் ஆயுதமேந்தவில்லை; மாறாக, தமிழீழ விடுதலைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகவும், தன்னின மக்களைத் தற்காப்பதற்கான பாதுகாப்புக் காப்பரணாகவுமே ஆயுதமேந்திய மக்கள் புரட்சி எனும் போராட்ட வடிவத்தைத் தேர்வு செய்தார்.

தமிழீழத்தாயகத்தை சிங்களர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும், காக்கவுமாகப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்கள், விடுதலைக்காகப் போராடுகிற ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக மட்டுமல்லாது, ஒரு நாட்டை அதுவும் சர்வதேசியமும், அனைத்துலக நாடுகளும் அங்கீகரிக்காத ஒரு தேசத்தை நிர்வகித்து, பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், பாலியல் குற்றங்கள், பெண்ணிய அடிமைத்தனம் ஏதுமற்ற நல்லாட்சியை நிறுவிய நிர்வாகத்தலைவராகவும் திகழ்ந்தார். ஒருபுறம், தாயக மீட்புக்குப் போராடுகிற உலகின் ஒப்பற்ற தலைசிறந்தப் போராளியாகவும், மறுபுறம், தங்களது எல்லைக்குள் தன்னிறைவோடு கூடிய ஒரு தனி நாட்டை நிர்வகித்தப் பெரும் புரட்சியாளராகவும் விளங்கினார் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இடதுசாரித் தலைவர்களும், திராவிடக்கழகத் தலைவர்களும் குறிப்பாக ஐயா கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஐயா வைகோ போன்றோர் எல்லாம் தனித்தமிழீழத்தையும் தேசிய தலைவர் முன்னெடுத்த ஆயுதப்போரையும் ஆதரித்து தமிழ்நாட்டில் பேசி வந்தார்கள், தலைவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தார்கள் அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
ஆனால் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பிறகு இவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தபோதும், தம்பி பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் இவர்களிடத்தில் எந்த ஒரு வருத்தமோ கவலையோ கண்ணீரோ இல்லை. மாறாக விடுதலைப்புலிகளை அழித்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவிடம் கைகுலுக்கி விருந்துண்டு பரிசுகளைப் பெற்று தமிழர்களின் நம்பிக்கைத் துரோகிகளாகிப் போனார்கள் என்பதே உண்மை.
ஒரு காலத்தில், இந்திய ஒன்றிய அரசு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றது. குறிப்பாக பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தது. பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசம் என்ற தனிநாடு அமைய காரணமாக இருந்ததை நாம் பெருமையோடு பார்த்தோம். பிந்தைய காலக்கட்டத்தில், அமரர் இராசிவ்காந்தியின் தவறான வெளியுறவுக் கொள்கையினால் இந்திய ஒன்றியம் தன் போக்கை மாற்றிக்கொண்டது.
அதன் நீட்சியாகத் தான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழீழம் அமைவதை இந்தியா விரும்பவில்லை. தலைவர் தமிழீழத்தை நிறுவிவிட்டால் அது இந்தியாவிற்கு ஆபத்து எனவும் தமிழ்நாட்டை பிரித்து ஈழத்துடன் இணைத்து அகண்ட தமிழ்நாட்டை உருவாக்கி விடுவார் என்றும் பொய்ப்பரப்புரைகளை தனக்குள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக விசமப் பரப்புரையை மேற்கொண்டது அதில் வெற்றியும் கண்டது.
இதபோல தமிழர் விரோத நடவடிக்கையின் ஒரு அங்கமாக, அப்போதைய பிரதமர் அமரர் இராசிவ்காந்தி அவர்கள் 1987 ல் இலங்கை அதிபராக இருந்த செயவர்த்தனேவுடன் தன்னிச்சையாக (தமிழ்ப் பிரதிநிதிகள் யாருமே பங்கேற்காத நிலையில்) ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதன் மூலம் இந்தியாவின் துணையில்லாமல் தமிழீழம் அமைக்கமுடியாத நிலையை உருவாக்கி தமிழர் நெஞ்சில் நஞ்சை வார்த்தார்.
பின்னர் அமரர் இராசிவ்காந்தி அவர்கள், அமைதிப்படை என்ற அரக்கப்படையை ஈழத்திற்கு அனுப்பி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம் தொப்புள்கொடி உறவுகளை துள்ளத் துடிக்கக் கொன்றொழித்தார்கள். ஆயிரக்கணக்கான எங்கள் அக்கா, தங்கைகளை, அம்மாக்களை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று போட்டது அந்த அமைதிப்படை இதைக்கண்டு வெகுண்டெழுந்த விடுதலைப்புலிகள் இந்திய நாட்டின் இராணுவத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்தது. அதன் பிறகு 1991, மே21 ல், தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்த அன்றைய பிரதம அமைச்சர் வேட்பாளரான இராசிவ்காந்தி (பிரதமர் இல்லை) எதிர்பாராத விதமாகச் கொல்லப்படுகிறார்.
இராசிவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் மேதகு, பிரபாகரன் அவர்களுமே காரணம் என்று அனைத்துலக நாட்டுத் தலைவர்களிடம் செய்தி பரப்பப்படுகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு பெரும் வல்லாதிக்க நாடு மட்டுமன்றி உலக வர்த்தகத்தில் அறுபது விழுக்காடு கடல்வழி வணிகத்தை இந்தியப்பெருங்கடலையேச் சார்ந்திருந்தது. தங்களது வணிகம் இந்தியாவில் நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தயவால் சிங்களப் பௌத்த பேரினவாத இலங்கை அரசுக்கு உதவியாக போர்க்கருவிகள், பணவுதவிகள், இராணுவப் பயிற்சிகள், நவீன ரேடார்க்கருவிகள் மற்றும் போர் வீரர்களை கொடுத்து தமிழினப்படுகொலையை ஈழத்தில் நடத்தியது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்தும், இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரியும் 2008ம் ஆண்டு இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசிய பேச்சு உலகத்தமிழர்களின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணன் சீமானின் இந்தப் பேச்சுதான் பின்னாட்களில் அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வருவதற்கும், அவர் பின்னால் இலட்சக்கணக்கான தமிழ் இளையோர்கள் திரள்வதற்கும் காரணமாக அமைந்தது. இந்தப் பேச்சின் காரணமாக, அண்ணன் சீமான் அவர்கள், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த மேடைகளில் எல்லாம் தனித்தமிழீழத்தின் அவசியம் பற்றியும், சிங்களரின் இன ஒதுக்கல் அரசியல் பற்றியும், தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றியும், பேசி மக்களுக்கு புரியவைத்தார். அண்ணன் சீமான் அவர்களின் அனலுரைகளால் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்றது.
ஈழத்தில் ஒவ்வொரு நாளைக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழ உறவுகள் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலோ பெரும்பான்மையான மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறதென்பதே தெரியவில்லை. ஊடகங்களில் அங்கே நடந்து கொண்டிருகிற இனப்படுகொலையைப் பற்றிப் பெரிதாக பேசவில்லை. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த இரண்டு பெரும் தமிழினத் துரோகக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தே எம்மினத்தைக் கொன்றொழிக்க முடிவு செய்திருந்தது.
2009, சனவரி 29 ஆம் தேதியன்று இலங்கையில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கையில் “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இறுதிப்போரை இந்தியா தலையிட்டு நிறுத்தக்கோரியும் முழக்கங்களை எழுப்பியவாரே தம்பி கு.முத்துக்குமார் மத்திய அரசு அலுவலகங்கள் அதிகமிருக்கும் சாஸ்திரி பவனுக்குச் சென்று தன் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்கிறார், அவர் தம் கையில் வைத்திருந்த கடிதம் தீயில் படாதவாறு வீசிவிட்டு தன் மூச்சு இந்த உலகைவிட்டு பிரியும் வரை ஈழ உறவுகளை நினைத்து கதறியபடியே இருந்தார் என் உடலை உடனே புதைத்து விடாதீர்கள், அதை ஒரு ஆயுதமாகக் கொண்டு போராடி இலங்கை போரை நிறுத்துங்கள்” என சொல்லிவிட்டு தான் பிறந்த இனத்துக்காக தன் உயிரை ஈகம் செய்தார். மாவீரன் முத்துக்குமாரின் கடிதமும், உயிரீகமும் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மேலும் எழுச்சிப் பெற வைக்கிறது. அவர் தொடங்கி ஐ.நா. மன்றம் வாயிலில் தீக்குளித்த மாவீரன் முருகதாசன் உள்ளிட்ட 18 தமிழ் உறவுகள் தங்கள் உயிரை, ஈழ உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈகம் செய்தார்கள்.
டெல்லி காங்கிரசின் தலைமைக்கு பயந்து தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்கிறார்கள். மாணவர்களின் எழுச்சி அதிகமானதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கிறார். எந்த இடத்திலும் ஒரு நான்கு பேர்கள்கூட சேர்ந்து நிற்க முடியாத அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் கருணாநிதியின் அரசின் காவல்துறையினரால் கட்டவிழ்க்கப்படுகிறது.
ஈழத்திலோ, முப்பது வருடங்களுக்கு மேலாக தனித்தமிழீழம் அமைத்து கோலோச்சி நின்ற மக்கள் இராணுவமான விடுதலைப்புலிகளையும், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட எம் உதிர உறவுகளை, உலகின் போர் மரபுகளை மீறி கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள், பாஸ்பரசு குண்டுகளை வீசி பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிக தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரையும் கொன்று 2009, மே மாதம் 16, 17, மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்களைக் கொன்று, எங்கள் தேசக்கனவான தமிழீழம் முள்ளிவாய்க்காலில் முற்றிலுமாக சிதைத்து அழிக்கப்பட்டது. பறவைகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அமைப்புக்கட்டி போராடி வரும் சர்வதேசச் சமூகம், ஈழத்தில் நடந்த ஒரு திட்டமிட்ட, பாரிய இனப்படுகொலையை கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது. காரணம் நாங்கள் தமிழர்களாக பிறந்தது மட்டுமே.
உலகத்திற்கு வீரத்தைப் போதித்த தமிழினத்தின் மக்கள் ஈழத்தில் இரத்த ஆற்றில் மிதந்தது. ஈழம் முழுமைக்கும் கருமேகங்கள் சூழ்ந்து மயானம் போன்ற காட்சிகள், எங்கு பார்த்தாலும் எம் உறவுகளின் பிணங்கள், இரத்த வாடை நீங்காத எம் தாய்நிலம், இதயத்தில் இரத்தம் வடிகிறது.
இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணரவாளர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பங்கேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் வெடிக்கிறது.
2009ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு முதலைமைச்சராக இருந்த, நாமெல்லாம் தமிழினத் தலைவர் என தலைமேல் வைத்துக் கொண்டாடிய கலைஞர் கருணாநிதி அவர்கள், காலையில் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இவற்றுக்கிடையில் குளிர்ந்த கடற்கரையருகில் தன் மனைவி, துணைவி, இணைவி என்று பக்கத்தில் அரவணைப்பு, வேர்த்திடாதபடி இருக்க இரு பக்கங்களிலும் குளிரூட்டி என கொஞ்சம் கூட மனவலியோ, வேதனையோ படாமல் 3 மணி நேரம் படுத்திருந்து உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்ற பாரிய பொய்யைச் சொன்னதும் பதுங்கு குழிகளில் உயிருக்கு பயந்து ஒளிந்திருந்த குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வெளியே வந்தபோது, கொலைவெறிப் பிடித்த சிங்கள இராணுவம் ஒரே நாளில் 40000 பேரை ஜேசிபி எந்திரத்தை வைத்து ஏற்றியும். உயிருடனும் புதைத்துக் கொன்று போட்டது.
2009ல் நடந்து முடிந்த பாரிய தமிழின அழிப்பு தமிழ்நாட்டில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நம் மொழி காக்கவும், இனம் காக்கவும், நம் மண் காக்கவும் மானம் காக்கவும் இனி எவரையும் நம்பிப் பயனில்லை, நாமே கிளர்ந்தெழுந்து போராட முடிவு செய்தார். தமிழர் தந்தை எனப் போற்றப்பட்ட சி.பா.ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு பிற்காலத்தில் அதனைக் கலைக்காமல் மவுனித்து வைக்கப்பட்ட “நாம் தமிழர் என்ற இயக்கத்தை 2009ல் மீட்டுருவாக்கம் செய்து தொடங்கினார். அதே வருடத்தில் மதுரையில் முள்வேலிக்கம்பிகளை “அறுத்தெறிவோம் வாரீர்” என்று இலங்கை அரசுக்கெதிரான எழுச்சிமிக்க கண்டன கூட்டத்தை நடத்தினார், அக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடினார்கள்.
பின்னர் கொள்கை, கோட்பாடுகளை உருவாக்கி, புலிக்கொடியை வடிவமைத்து தமிழ்நாட்டின் பூகோளச் சூழலுக்கேற்ப அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியை இறுதி செய்த பின், கற்புக்கு அரசி கண்ணகி பெருமாட்டி வாழ்ந்த மதுரை மாநகரில், 2009ல் எந்த மே 18ல் நாங்கள் புலிக்கொடியை வீழ்த்திவிட்டோம், விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், தமிழர்களை தோற்கடித்துவிட்டோம் என எக்காளமிட்டு சிரித்தானோ அதே மே18ல், 2010ல் ஈழத்தில் இறங்கிய புலிக்கொடியை தமிழ்நாட்டில் வானுயர பறக்கவிட்டார் அண்ணன் சீமான் அவர்கள். நாம் தமிழர் இயக்கத்தை, நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியாக பேரறிவிப்புச் செய்தார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற அம்மாநாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டு தீர்மானங்களைப் பிரகடனப்படுத்தினார். அவை, ஈழத்தில் எம் தமிழினத்தைக் கொன்றொழித்த காங்கிரசு அதனுடன் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகம், இன அழிப்பு போரைப் போராடி தடுக்கும் வலிமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழ்நாட்டின் வலிமைமிக்க எதிர்க்கட்சியாக இருந்து வேடிக்கை பார்த்த அதிமுக ஆகிய கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை.
தமிழினத் துரோகி கலைஞர் கருணாநிதி பற்றி பேசும்போது “எந்த பதவி சுகத்திற்காக எம்மக்களின் பிணத்தின் மீது நாற்காலி போட்டு பதவி சுகம் அனுபவித்து, தன் பெத்த பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைந்தீர்களோ, நீங்கள் சாகிற வரைக்கும் அந்த முதலமைச்சர் பதவி உங்களுக்கு கிடைக்காது செய்வோம் என்று ஆவேசமாக முழக்கமிட்டார். 2010ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்மினத்தைஅழித்த திமுக காங்கிரசு கூட்டணியை எதிர்த்தும் தன் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவதற்கான ஒரு கருவியாக அதிமுகவை ஆதரித்தும் பரப்புரைச் செய்தார் அதனால் காங்கிரசின் வேட்பாளர்கள் ஒரு சிவர் மட்டுமே இழுபறியில் வெல்லமுடிந்தது. தமிழர் மண்ணில் காங்கிரசின் முடிவுரையை எழுதத் தொடங்கினார் அண்ணன் சீமான்.
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரசு கூட்டணி அமைத்து 68 தொகுதிகளில் காங்கிரசு போட்டியிட்டது. தமிழர் மண்ணில் காங்கிரசை கருவறுப்போம் என உறுதியேற்று 58 தொகுதிகளில் காங்கிரசு திமுகவுக்கெதிரான பரப்புரையைச் செய்ததன் விளைவு அந்த 58 இடங்களிலும் காங்கிரசு படுதோல்வியடைந்தது. எஞ்சிய ஐந்து இடங்களில் தப்பித்தது. இந்திய ஒன்றிய அரசின் சுதந்திரத்திற்குப் பின்னர் தேசியக்கட்சிகளை புறந்தள்ளி மாநிலக் கட்சிகள் வலிமை பெற ஆரம்பித்தது. அதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் 1967ல் காங்கிரசை வீழ்த்தி திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியைப் பிடித்தது, தொடர்ந்து அதிமுக மதிமுக, தேமுதிக என பல்வேறு கட்சிகள் திராவிடம் பேசி வந்த நிலையில், இனி தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்றும், நாமே மாற்று! நாம் தமிழரே!! என்றும் முழக்கமிட்டு ஒவ்வொரு நாளும் கட்சியின் கொள்கைகள், நாம் தமிழர் என்ற கட்சி அனைத்து மக்களுக்கானது. அதன் அரசியல் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்குமானது என்று தன் கொள்கைகளை முழங்கி வந்த அண்ணன் சீமான் அவர்கள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட மண்ணை மலடாக்கும் பல நாசகாரத்திட்டங்களை மிகவும் காத்திரமாக எதிர்த்து மக்களோடு மக்களாக நின்று போராடி பல வெற்றிகளையும் கண்டார்.
கண்களில் கொதிக்கும் கனல், நெஞ்சில் ஏத்தியிருக்கும் தணல், வார்த்தைகளில் வெளிப்படும் அனல் என அண்ணன் பேசிய கூட்டங்களில் இலட்சக்கணக்கான இளையோர்கள் படை திரண்டனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்த இருக்கின்ற கட்சிகள் தங்கள் கூட்டத்திற்கு பணம், மது, பிரியாணி கொடுத்து கூட்டிய நிலையில் நாம் தமிழர் ஏற்றிருக்கிற தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களுக்காகவும், தனித்துவம் மிக்க தத்துவத்திற்காகவும். நாடி நரம்புகள் புடைக்க நெஞ்சு வெடிக்க, குரல்வளையில் ரத்தம் கசிய, அடர்த்தியான மழை, கொடிய வெயில் என எதற்கும் அஞ்சாமல் தன் இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளை மக்களுக்கு மக்களின் மொழியிலேயே எடுத்துவைக்கும் அண்ணனின் ஆற்றல் மிகப்பெரிய புரட்சியை தமிழ் மண்ணில் உருவாக்கியது.
நாம் தமிழர் கட்சியின் வலிமைமிக்க படைப்பிரிவுகளாக வீரத்தமிழர் முன்னணி, இளைஞர் பாசறை மகளிர் பாசறை, மாணவர் பாசறை, மருத்துவர் பாசறை, வழக்கறிஞர் பாசறை, மீனவப்பாசறை, தமிழ் மீட்சிப்பாசறை என 25 க்கும் மேற்பட்ட பாசறைகளை உருவாக்கி அதனை திறம்பட வழிநடத்தி, எத்தனை எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் அதனை நேர்த்தியாக எதிர்கொண்டு கட்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்ற அண்ணன் சீமான், 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து, ஏழை எளிய, படித்த, பண்புள்ள, மக்களின் மனதையும் மண்ணின் மாற்றத்தையும் விரும்பிய இனவுணர்வு கொண்ட இளம் புரட்சியாளர்களை இனங்கண்டு அவர்களை அரசியல் படுத்தி வேட்பாளர்களாக களமிறக்கினார். திராவிடம் பேசி வந்த மண்ணில் தமிழ்த்தேசியம் பேசி சிறந்த வாதங்களையும், தர்ககங்களையும் முன் வைத்து மக்களிடம் கேள்விகளைக்கேட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு “தமிழராக நினைத்து வாக்கு செலுத்து, சாதியாக, மதமாக நினைத்தால், தயவுசெய்து ஓட்டு போடாதே! அந்த ஓட்டு எனக்கு தீட்டு” என நெஞ்சுரத்தோடு சாதி, மதவெறிக்கு சாட்டையடி கொடுத்தார். அரசியலில் புறக்கணிக்கப்பட்ட சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து, தேர்தலில் போட்டியிட, ஆண், பெண், திருநங்கை என பாலின வேறுபாடுகளின்றி அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
முதன் முதலாக போட்டியிட்ட 2016 சட்டமன்றத் தேர்தலில் 4.5 இலட்சம் வாக்குகளை வாங்கி மக்களின் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கியது நாம் தமிழர் கட்சி. அடுத்து வந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் 18 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்ககங்களிலும் சீரான வாக்குகளைப் பெற்று, வாக்கரசியலில் 4 விழுக்காடு வாக்குகளைப்பெற்று, மற்ற திராவிடக் கட்சிகளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி, அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து தேர்தல்களிலும் களமிறங்கி மக்களைச் சந்தித்தது. தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் கொண்ட கொள்கையில் ஒரு துளியும் சமரசமின்றி, பதவிக்கும் பணத்திற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே களம் கண்டுவரும் நாம் தமிழர் கட்சி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 117 ஆண் வேட்பாளர்கள் 117 பெண் வேட்பாளர்கள் என தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரும் கட்சியாக இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த்தேசியம் அடைந்த பேரெழுச்சியாகும்.
ஆரியத்தையும் திராவிடத்தையும் மரபு ரீதியாகவும் சிந்தாந்த ரீதியாகவும் எதிர்ப்பது தமிழ்த்தேசியம் ஒன்று மட்டும் தான் அதன் நீட்சியாக இன்று தமிழ்த்தேசியமா? இந்தியத் தேசியமா? தமிழ்த்தேசியமா? திராவிடத்தேசியமா? என எண்ணற்ற வரலாற்று / தொல்லியல் ஆய்வுகளைக் கொண்டு, தமிழ்த்தேசியத்திற்கெதிரான இந்த இரண்டு தேசிய சித்தாந்தங்களை அடித்து நொறுக்கி, தமிழ் இளையோர்களைப் புரிய வைத்து, இன்று மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி, நாம் தமிழர் என வீறுநடைப் போடுகிறது.
“செஞ்சுவதில்லை! பிறர்பால் அவர் செய் கேட்டினுக்கும்.. அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே” என்ற ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றுக்கிணங்க… கடந்த 60 வருடங்களாக இராவிடம் எனும் பெயராலும் பெரியார் எனும் பெயராலும் தமிழினத்திற்கெதிராக செய்த சதிகளை, தமிழ்த்தேசியம் எனும் பெருநெருப்பு அழித்துவருகிறது, இதுவே தமிழ்த்தேசியத்தின் பேரெழுச்சியாகும்.
ஆரிய திராவிட பாசிச கும்பல்களின் தமிழர் விரோத அரசியலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களும் இன்று மூன்றாம் பெரும் கட்சியாகவும், பெரும் தலைவராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். வெகுவிரைவில் தமிழ்நாட்டின் முதல் பெரும் கட்சியாகவும், அண்ணன் சீமான் அவர்கள் முதலமைச்சராகவும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழ்மொழிக்கும், தமிழினத்திற்கு அரணாக அமையும் என்பது திண்ணம்.
நன்றி! வணக்கம். நாம் தமிழர்…
திரு. கல்யாண முருகேசன்
பொருளாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.