spot_img

“தமிழ்நாடு” பிறக்க உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார்

அக்டோபர் 2023

“தமிழ்நாடு” பிறக்க உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார்

சங்கரலிங்கம் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர். 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர், வணிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்தினார்.

சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார். சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

1922 ஆம் ஆண்டு முதல் அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது.

காந்தியடிகளின் தலைமையில் 193031 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.

சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார். திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.

அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!

பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு 9) விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்.

1956 சூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

1) தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும்.

2) சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும்.

3) அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.

4) தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்.

5) தொழில்கல்வி வேண்டும்.

5) இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும்.

7) இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்

8) அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்

9) விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.

10) மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது.

11) வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.

12) பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்.

என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன், சூலை 27த் தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.

அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார். உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடவை விட்டுப் பிரிந்தது.

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.

தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நாட்கள் உண்ணா நோன்பை மேற்கொண்ட காரணத்தால் 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஒரு மனிதனுடைய பிறப்பு எவ்வாறு அமைந்தது என்பது முக்கியமல்ல; அவருடைய இறப்பு எவ்வாறு அமைகிறது என்பதே ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது. என்பதற்கு ஏற்ப தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. துனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு தியாகி சங்கரலிங்கனார் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார். சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது.

மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன், “புதிய மாநிலம் அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் போனது. அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 15.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்து பேசினார்.

‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்திய அரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ – என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா. ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழக்கினர். அதன்படி தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

திரு. இளையராசா முத்தையா,

துணைச் செயலாளர்,

செந்தமிழர் பாசறை வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles