ஏப்ரல் 2024
தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும்
1930 களில் தொடங்கிய இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழர் எழுச்சி அன்றைய ஆரிய அடிவருடிகளால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அறுபதுகளில் மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து தமிழர்களும் தீவிரமாகப் போராடி இந்தித் திணிப்பை எதிர்த்து நூற்றுக்கணக்கில் உயிர் ஈகம் செய்திருக்கிறார்கள். தமிழர்களின் ஈகத்தைக் காட்டி ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, தமிழர்களின் எழுச்சியை மழுங்கடித்துக் குலைக்கத் திட்டமிட்டு, ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளிலேயே 1971ல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுவிலக்கை நீக்கியது. அன்று முதல் இன்று வரை தமிழர்களை மது போதையிலேயே வைத்திருக்கின்றன திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும்.
1960களில் இருந்த தமிழர்களின் எழுச்சி தொடர்ந்திருக்குமானால் இன்று மிகச் சிறந்த ஒரு சமூகமாக தமிழினம் உயர்ந்திருக்கும். ஈழத்திலும் நமக்கான தனிக் குடியரசு அமைந்திருக்கும். உலகமே வியக்கும் அளவுக்கு தமிழரின் அறிவும் திறமையும் வெளிப்பட்டிருக்கும். ஆனால் கெடுவாய்ப்பாக திருட்டுத் திராவிடர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்கள் நாம் வீழ்ந்தோம்; இன்னும் வீழ்ந்துக் கொண்டிருக்கிறோம். உடலுக்கு வலிமை தரக்கூடிய இயற்கையாகவே கலப்படமற்ற முறையில் கிடைக்கும் தென்னங்கள், பனங்கள் ஆகியவற்றை இழித்துப்பேசி தென்னை, பனை மரங்களை வெட்டச் சொல்லி பரப்புரை செய்ததோடு, இவற்றைத் தடை செய்து செயற்கையான வேதிநஞ்சு கலந்த மதுவை, தமிழர்களின் உடல் நலத்தையும் அறிவு பலத்தையும் கெடுக்கும் விதமாகக் கட்டற்றுத் திறந்து விட்டு, ஒரு பெரும் போதைக்கட்டமைப்பை வளர்த்தெடுத்ததுதான் திராவிடக் கட்சிகளின் சாதனை.
சாராயக்கடையில் தொடங்கி கஞ்சா அபின் குட்கா எனப் பல போதைப் பொருட்களைப் பரவலாக அனுமதித்ததோடு, இன்றைக்கு மிகக் கொடிய மெத் எனும் போதைப்பொருள் விற்பனை திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு உலகம் முழுக்க வேர் பரப்பி இவர்கள் இதைச் செய்து வந்திருக்கிறார்கள். நம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மறைமுகமாக திருடி, இருக்கும் வேலைவாய்ப்புகளில் பிறமொழியாளர்களைப் புகுத்தி, அவர்களுக்குள்ளாகவே இட ஒதுக்கீடு, பதவி உயர்வு எனச் சூழ்ச்சியுடன் திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும்போது, ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுத்து ஏமாற்றி, கிட்டத்தட்ட தமிழர்களை இன்று மிகப்பெரிய சோம்பேறிக் கூட்டமாக, குற்றச் சமூகமாக மாற்றி வைத்திருக்கிறது, இந்த திராவிடம்.
நிலத்தையும் வளத்தையும் காக்க எந்தத் திட்டமும் இவர்களிடம் இல்லை. மலைகளை இரக்கமற்று வெட்டித் தீர்க்கிறார்கள்; ஆற்று மணலைச் சுரண்டிக் கொள்ளையடித்து ஆறுகளை மலடாக்குகிறார்கள். மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்; இயற்கை வளங்களைச் சூறையாடுகிறார்கள்; இதனால் நிலமும் வளமும் அற்ற தமிழினம் ஒரு வாழ்வாதாரம் இழந்த சமூகமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆரியத்தை எதிர்த்துத் தமிழர்களைக் காக்க வந்ததாகக் கூறிக் கொள்ளும் இந்த திராவிடம் தான், ஆரிய பாஜக காங்கிரஸ் கட்சிகளோடு எந்த வேறுபாடும் இல்லாமல் மாறி மாறி கூட்டணி வைத்து தமிழர் உரிமைகளை அடகு வைக்கிறது. இந்த நிலை மாற தெளிவும் அறிவும் பெற்று தமிழ்ச் சமூகம், நாம் தமிழராக ஒன்றிணைந்து இன எழுச்சி கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நிலம் நமக்கும் நம் வழித்தோன்றல்களுக்கும் இல்லாது போகும்.
விவசாயிகளை அழிக்க விவசாயத்தில் இருந்து மக்களை வெளியேற்ற இவர்கள் ஆரியத்துடன் கைகோர்த்தார்கள். நமது நாட்டு மாடுகளை அழிப்பதற்கு ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலைத் தடை செய்தார்கள். அதற்கு மாபெரும் எதிர்ப்பு கிளம்பியதும் அதை மேம்போக்காக தற்போது அனுமதித்து, எத்தனையோ கட்டுப்பாடுகள் விதித்து அதன்படி நடத்தச் சொல்கிறார்கள். A2 என்று அழைக்கப்படும் நாட்டு மாட்டு பாலில் எந்த வித கெடுதல்களும் இல்லை; நற்சத்துகள் நிறைந்தது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு ஜெர்சி மாடுகளின் பாலில் கலப்படம் கொடுத்து, நோயைப் பரிசாக அளிக்கிறார்கள்.
விவசாயிகள் கடனை வாங்கி பெரும் உழைப்பைக் கொடுத்து அறுவடை செய்த விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அரசாங்கக் கொள்முதல் நிலையங்களின் அடாவடித்தனத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகின்றன. இப்படி விவசாயத்தை அழிக்கத் திட்டமிட்டு ஒன்றிய மாநில அரசுகள் அவர்களுக்குள் சண்டை இடுவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. இவர்கள் கடிதம் எழுதுவார்கள்; அவர்கள் கிழித்து போடுவார்கள்; இவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்; அவர்கள் ஆணையம் அமைத்து கிடப்பில் போடுவார்கள்; சூதுகள் பல செய்து காவிரியில் இன்று தண்ணீர் வராமலேயே செய்து விட்டார்கள். ஆற்றிலே நீர் வரத்து இருந்தால் மணல் அள்ள முடியாது – இது திருட்டு திராவிடமாடல்; ஆறுகளில் நீர் வந்தால் விவசாயம் செழித்துவிடும்; அதனால் பூமியைத் துளைத்து எண்ணெய் எடுக்க முடியாது – இது திருட்டு ஆரிய மாடல்.
இருக்கும் கொஞ்ச நஞ்ச விளைநிலங்களையும் எட்டுவழிச் சாலை, சிப்காட், பரந்தூர் விமான நிலையம் என வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அழிக்கின்றனர்; விவசாய நிலங்களை தொழில் முயற்சி என்ற பெயரில் தனிப்பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள்; விமானமே இல்லாத இவர்கள் விளைநிலங்களைப் பறித்து விமான நிலையம் அமைக்கத் துடிக்கிறார்கள்; விளைந்து நிற்கும் பயிர் நடுவே சாலை போடத் துணிகிறார்கள்; இதனால் நமது நிலமும் வளமும் பறிபோகும்; அடுத்த தலைமுறை ஒரு நிலமற்ற இனமாகவே அலைய வேண்டிய வரும். இப்படி திராவிட மாடல் தமிழர்களைப் போதையில் தள்ளுகிறது என்றால் ஆரிய பாஜக தமிழர்களைப் பேதமையில் தள்ளுகிறது.
இந்து ராச்சியம் ராமராச்சியம் என்று வறுமைச் சூழலில் இருக்கும் வடமாநில மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இராவணனின் வாரிசுகளிடத்தில் ராமராச்சியம் எடுபடாது என்று தமிழர்களின் இறையைத் திருடிச் சமைத்து பாஜக வருணாசிரமக் கொள்கைகளுடன் தமிழகத்தில் வாலாட்டிக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் ஆரியத்தை விலக்கி தனித்தன்மையுடன், தமிழ் மொழி, பண்பாட்டுக் கூறுகளுடன் கட்டி எழுப்பிய கோவில்களை இந்து என்ற ஒற்றைப் புள்ளிக்குள் அடைத்து கைக்கொள்ளத் துடிக்கிறது ஆரியம். ஏற்கனவே நம் வழிபாடுகள் தாய்மொழியில் இல்லாமல் வடமொழியில் தான் நடந்து வருகின்றன. மிச்சசொச்சம் இருக்கும் தமிழையும் வழிபாட்டுத்தலங்களிலிருந்து முற்றிலும் நீக்க ஆரியம் நினைக்கிறது.
நேரடி இந்தித் திணிப்பு எதிர்ப்புக்குள்ளாகும் என்று மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையையும், அதனைச் சார்ந்த பல திட்டங்களையும் ஆரியம் கொண்டுவர முயல்கிறது. மேலும் உழைப்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி பல துறைகளில் இந்திக்காரர்களையும் அது திணிக்கிறது. தமிழக அரசும் எவ்வித எதிர்ப்புமின்றி வரவேற்று அவர்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையையும் வழங்குகிறது. எங்கள் கட்சியில் தொண்ணூறு சதவீதம் இந்துக்களே என்று சொன்ன திமுகவும், பாஜகவை முதுகில் ஏற்றிச் சுமந்த அதிமுகவும் இவர்களுக்குத் துணை நின்று தமிழர்களை ஏமாற்றி வருகின்றன. ஆரியத்திடமிருந்து தமிழர்களைக் காக்கப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்தில் கரைந்து மறைந்தே போய், இப்போது தமிழர்களுக்கு எதிராக ஆரியத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.
தமிழர் நாட்டில் தமிழ் மொழியை முதன்மை மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், அரசுத் துறைகளின் புழங்குமொழியாகவும், வழக்காடு மொழியாகவும் பயன்படுத்தத் தடையாக ஆரியமும் திராவிடமும் இணைந்தே செயல்படுகின்றன. இந்தியை முதன்மை மொழியாக்கத் துடிக்கும் ஆரியத்தால், நமது மொழி வளமும் இனமும் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது. எத்தனையோ இந்திய மொழிகளைத் தின்று தீர்த்த இந்தி, தனித்த அடையாளத்துடன் திகழும் தமிழைத் தின்பதற்குப் படையெடுத்து வருகிறது. குலக்கல்வியை எழுச்சியோடு எதிர்த்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், இன்று குலக்கல்வியை ஸ்ரீ பள்ளி என்று திணிக்கும் சூழலும் வந்துவிட அதற்கு திராவிட மாடலும் ஆதரவளிக்கிறது.
கல்வித் துறையில் அந்தந்த மாநிலத்தின் மொழி, பண்பாடு கலை சார்ந்த பாடங்கள் மூலம் கற்பித்தால் தான், அந்தந்த இனங்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களது வரலாறு மற்றும், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, உரிமைகளைப் பேணி, தனித்துவத்தை இழக்காமல் வாழ இயலும். ஆனால், கல்வி உரிமையைப் படிப்படியாக ஒன்றிய அரசு கவர்ந்து கொள்ள அனுமதித்து, ஊழலில் ஊறிய திராவிட அரசுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழர்களின் நீராதார உரிமை வழக்குகளை நீதிமன்றத்தில் இருந்து மடைமாற்றி ஆணையம் அமைத்திருக்கிறோம், நீர்வளத்துறை அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறோம் என்று தன்னிடம் எடுத்து வைத்துக் கொண்டது ஒன்றிய அரசு. இன்று அவர்கள் அரசியல் ஆதாயத்தை முன்னிட்டு கர்நாடகாவுக்கு ஆதரவாகப் பல்வேறு அணைகள் கட்டுவதையும் தமிழகத்துக்கான நீர் உரிமை மறுப்பதையும் திராவிடம் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று கதறிக் கொண்டு வருவோர் இத்தனைக் காலம் எங்கிருந்தார்கள்? கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தானா? இத்தனை காலமாக நாடாளுமன்றத்தில் ஒரு குரலும் எழுப்பாமல், திமுகவும் அதிமுகவும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதைத் தான் திரும்பத்திரும்பச் சொல்கின்றன.
இந்திய ஒன்றியத்தில் பெருமைமிகு பேரினமாக தனித்தியங்கும் தமிழர்களை, தமிழ்நாட்டை அடிமையாக்க என்னென்ன அழிவுத் திட்டங்கள் இருக்கிறதோ, அவை அத்தனையும் இந்நிலத்தில் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளன. காவிரிப் படுகையில் மீத்தேன் ஈத்தேன் ஹைட்ரோ கார்பன் என இயற்கை வளத்தையழிக்கும் செயல்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயத்திற்கு வாழ்வாதாரமான காவிரி நீர் வேண்டுமென்றே நமக்கு மறுக்கப்படும் அநீதி பல்லாண்டுகளாக நடக்கிறது. “சோழநாடு சோறுடைத்து” என்று புகழுமளவுக்கு தமிழகத்தின் உணவுத் தேவையை பெருமளவு உற்பத்தி செய்யும் செழித்த இந்த நிலப்பரப்பு வளமிழந்தால், தமிழர்களும் வளமிழப்பார்கள் என்பதனால் மறைமுகமாக இவ்வாறு காவிரி டெல்டா பகுதி திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.
வெள்ளம், வறட்சி, புயல் என எந்தப் பெருந்துயரால் பாதிக்கப்பட்டாலும், குறைந்தபட்ச உடனடி உதவியைக் கூட ஒன்றிய அரசால் கொடுக்க முடிவதில்லை. கேட்டால் ஆரியம் திராவிடத்தை கை காட்டும்; திராவிடம் ஆரியத்தைக் கை காட்டும். தமிழர்கள் எப்போதும் இந்த வேடிக்கையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முறை துயர் துடைப்பு நிதி கோரப்படும்போதெல்லாம், சராசரியாக நாம் கேட்கும் தொகையில் பத்து விழுக்காட்டளவு கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றால் அது எப்படிப்பட்ட கயமைத்தனம்?
மக்கள் மீது கொடும் வரி விதித்து வழிப்பறி செய்யும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு நியாயமாகச் சேர வேண்டிய தொகையை விடுவிக்காமல் வடக்கு வாழவும் தெற்கு தேயவும் என்பது போல மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. மாநிலங்களில் இருக்கும் நிதியையும் தரகுத்தொகை அடிப்படையில் காலி செய்கிறது திராவிட அரசு. அழிவுத் திட்டங்கள் அனைத்தையும் தமிழர்கள் தலையில் கட்டி, கடல் பகுதி முழுவதையும் தனிப்பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப் பார்க்கிறார்கள். இதனால் நமது கடல் வளம் சீரழிந்து, கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நம் நிலத்தையும் வளத்தையும் கார்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, அக்கொடுஞ்செயலுக்கு ஊதியமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கிய தேசியக் கட்சிகளையும், தமிழக நலன் சார்ந்த விடயங்களின் உறுதியான நடவடிக்கைகள் எடுக்காமல் மக்களை ஏமாற்றிய திமுக அதிமுகவையும் மக்கள் இனியும் ஆதரிக்கமாட்டார்கள்.
பாஜக தமிழ்நாட்டிலும் தனது கலவர அரசியலை, மதவாதத்தோடு மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கால்பதிக்கத் துணையாக திராவிட கட்சிகளும், சாதி கட்சிகளும் உடந்தையாக இருப்பது பெரும் துயரம். நேர் எதிராக நின்று போராடத் துணியாத ஆரியம் இதிகாசக் களத்தில் இருந்து இன்று வரை மறைந்து இருந்து அம்பெய்தும் வேலையைத் தான் செய்துகொண்டிருக்கிறது. வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர். எஸ். எஸின் தேர்தல் அரசியல் முகமான பாஜக, தமிழர்களின் மெய்யியலைத் திருடித் தனதாக்கிக் கொண்ட ஆரியத்தின் இன்றைய அதிதீவிர வடிவமாகும். மதம் என்ற போர்வையில் மதம் பிடித்த இக்கட்சி மக்களை சாதியாக மதமாகப் பிரித்து, சாதீயக் கட்சிகளுடன் இணைந்து தமிழர்களின் குருதியைக் குடிக்க வருகிறது. பாஜக நுழைந்த மாநிலங்கள் எப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்புப் பேரழிவைச் சந்திக்கின்றன என்பதற்கு மணிப்பூர் கலவரங்கள் சமகால சமூக எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
ஈவு, இரக்கமற்று பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என குரூரமாக கும்பலாக தாக்கும் போக்கு வடமாநிலங்களில் அதிகரித்திருப்பது, பொதுமக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடையே கடந்த பத்தாண்டுகளில் மதவெறியை ஆழ்மன நஞ்சாக ஊட்டி பாஜக வளர்த்த விதம் எப்படிப்பட்ட கேடுகளை விளைவிக்கும் என்று எண்ணும்போதே மனம் பதைபதைக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ந்துபோகுமளவு சமூக அவலங்களை நிகழ்த்திக்காட்டும் பாஜகவை மனிதகுல எதிரிகள் என அண்ணன் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டது முற்றிலும் சரியானதே!
தமிழர்கள் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ, பல்துறைகளில் இழந்துவிட்ட நமது உரிமைகளை மீட்டெடுக்கும் நல்ல அரசியல் தலைமையைக் கொண்டுவர, ஆரிய பாஜக, காங்கிரசையும் திராவிட திமுக, அதிமுக கட்சிகளையும் விடுத்து நாம் தமிழராக ஒன்றிணைந்து நின்று வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அடிப்படை மாற்றம் அரசியல் மாற்றம் வர, நமது உரிமைக்குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க, ஒலிவாங்கி (MIKE) சின்னத்தில் வாக்களித்து, நாளைய தலைமுறைக்கு நல்லதொரு வாழ்வை அளியுங்கள்; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சனநாயகப் புரட்சியில் பங்கெடுங்கள்.
புதியதோர் தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நாம் தமிழர்!
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.