ஏப்ரல் 2024
தமிழ்நாட்டுப் பெண்களின் வாக்கு செங்கொடி படையணிக்கே!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இருபது பெண் வேட்பார்கள் களம் காண்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நாற்பது மக்களவைத் தொகுதிகளில் சரிபாதியை வழக்கம்போல பெண்களுக்கு ஒதுக்கி இம்முறையும் தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறது, நாம் தமிழர் கட்சி. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்க, பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றனர் வேட்பாளர்கள்.
தகுதிவாய்ந்த தனித்துவமான பெண் வேட்பாளர்கள்:
நாம் தமிழர் கட்சி நிறுத்தியிருக்கும் பெண் வேட்பாளர்கள் அனைவருமே பட்டதாரிகள்; பெரும்பாலானோர் அரசியல் பின்னணி ஏதுமற்ற எளிய பின்புலங்களைக் கொண்டோர்; சமூகப் பொறுப்புமிக்கவர்கள்; மக்களிலிருந்து மக்களுக்காக உழைக்க வந்த உங்கள் வீட்டுப் பெண்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள், தொழில்முனைவோர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் மக்கள் பணி செய்ய உறுதியளிக்கும் நாம் தமிழர் கட்சியின் நடைமுறை, இந்திய ஒன்றியத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்குமே சிறப்பானதொரு எடுத்துக்காட்டு.
அதிகாரப்பகிர்வே உண்மையான விடுதலை:
நவீன மக்களாட்சித் தத்துவத்தில், எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சமூகத்துக்கான உரிமைகள் வரையறுக்கப்படுகின்றன. அப்படிப்பார்த்தால் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேல் இருக்கும் பெண்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இருக்குமளவுக்குக் கூட அரசியல் களத்தில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அரசியல் சார்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் கூட ஒப்புக்கும், ஓரளவு எண்ணிக்கைக் கணக்கு காட்டவுமே பயன்படும் நிலையில் எளிய பின்புலத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அரிதினும் அரிதான நிகழ்வாக இருக்கிறது. அப்படி அத்தி பூத்தாற்போலக் கிடைக்கும் பொறுப்புகள் கூட சுதந்திரமான முடிவெடுக்கக்கூடிய முழுமையான அதிகாரம் உள்ளதாகவும், வீட்டு ஆண்களின் தலையீடு இன்றியும் இருப்பது கிடையாது.
இந்தச் சூழலில் தான், அரசியல் கொள்கை வகுப்பு, சட்டமியற்றிச் செயல்படுத்துதல், அதன் விளைவுகளைச் சீராய்வு செய்தல் போன்ற முக்கியமான பல அதிகாரங்கள் கொண்ட சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களாகத் திறமையான பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நாம் தமிழரின் முடிவு, எப்படிப்பட்டது என்பதை உணரமுடிகிறது. வீட்டுக்குள் முடக்கப்பட்டு, நான்கு சுவர்களுக்குள் ஒடுக்கப்பட்டும் பெண்ணுலகிற்குப் பல்வேறு கதவுகளைத் திறந்துவிடும் சமூக நிதி சார்ந்த பார்வை இது என்பதோடு, பெண்கள் முன்னேற்றத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தும் ஒரு உத்தி இது என நாம் உறுதியாகச் சொல்ல இயலும்.
சமூகப்பாதுகாப்பை நல்கும் அரசியல் அதிகாரம்:
கடந்த காலத்தை விடவும் தற்போது பெண்கள் முன்னேற்றம் பெற்று பல துறைகளில் பங்களிப்பு செய்தாலும், கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, சமூகப்பணி மற்றும் அரசியல் துறைகளில் பெண்களுக்கான இடம் பல தடைகளைத் தாண்டித்தான் கிடைக்கிறது. கிடைத்தாலும் அதைத் தக்கவைக்கவும், அடுத்தடுத்த உயர்வுப் படிநிலைகளில் கால்வைக்கவும் பெண்கள் பல ஈகங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதிலும் காலகாலமாக ஆண்கள் கோலோச்சும் அரசியல் துறையில், பெண்கள் எதிர்கொள்ளும் பகடிகள், ஏச்சுப்பேச்சுக்கள், எள்ளல்கள், ஆளுமைக் கொலைகள், அடக்குமுறைகள் சொல்லில் சொல்லி முடியாதவை.
சமவாய்ப்புகள் அளிப்பது இல்லை – சமமாக நடத்தப்படக் கூட இன்னும் இத்துறையில் பன்மடங்கு தூரம் செல்லக்கூடிய அளவில் தான் இன்றைய சமூகக்கட்டமைப்பு உள்ளது. அதிலும் பாசிச பாஜக ஒன்றிய அரசுப் பொறுப்பேற்ற கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் விரும்பத்தகாத அளவு அதிகரித்துள்ளன. வெளிப்படையாகவே நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆணாதிக்கப் போக்கு கொண்ட அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கும், மதம் சார்ந்த அடிப்படைவாதம் மேலிடும் அரசுகளில் இந்நிகழ்வுகள் அதிகரிப்பதற்கும் உள்ள நேரடித் தொடர்பு நாம் அறியாயததல்ல. மாநிலங்களிலும் நிலைமை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சமூக நீதி, பெண்ணுரிமை காக்கும் அரசு எனப் பெருமையடிக்கும் திராவிடக் கட்சிகளின் அமைச்சர்களே பெண்களுக்கெதிராகப் பொதுவெளியில் நடந்து கொள்வதும், மோசமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் அருவெறுக்கத்தக்கதாக இருக்கிறது.
அரசின் அநியாயமான மதுக்கொள்கையும், அதிகரித்து வரும் போதைப்பொருட்களின் பயன்பாடும் தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதை அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்திகள் காட்டுகின்றன. ஒன்றிய மாநில அரசுகளின் பாரபட்சமான அணுகுமுறை, அலட்சியம், மோசமான நிர்வாகம், திறனின்மை காரணமாக பெண்கள் வீட்டுக்கு வெளியே அல்ல – வீட்டுக்குள்ளும் பாதுகாப்பற்ற சூழலைத் தான் எதிர்கொள்கின்றனர். மதவெறியால் கொடூரமாகக் கொலையுண்ட காஷ்மீரத்து ஆசிபாவுக்கும், போதை வெறியினால் சிதைக்கப்பட்ட புதுச்சேரி ஆர்த்திக்கும் இரு அரசுகளும் ஒன்றுபோலவே அநீதி இழைத்துள்ளன.
கடுமையான சட்டங்கள் இருந்தும், அதன்படி தண்டனை பெற வாய்ப்பிருந்தும், அடிப்படையில் தனிமனிதர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு உளவியலில் ஏற்படும் மாற்றங்களே, கொள்கை வகுப்பிலும் பிரதிபலித்துப் பெண்களுக்குச் சமூகப்பாதுகாப்பளிக்கும். அண்மையில் மணிப்பூரில் கலவரம் செய்யும் ஆண்கள் கூட்டத்துக்கு நடுவே ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களைக் காணொளியில் கண்ட பெண்களுக்கு இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மீதும், அரசுக் கட்டமைப்பின் மீதும் எப்படி நம்பிக்கை வரும்? மணிப்பூரில் நடந்த அந்த மனிதத்தன்மையற்ற செயல் மற்ற மாநிலங்களில் நடக்காது என யாரால் உறுதியளிக்க இயலும்?
பெண்களுக்கான சட்டங்களைத் தீட்டுவதும், அதனைச் செயலாக்கம் செய்வதும், சீராய்வு செய்து மாற்றியமைப்பதும் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கும்வரை இந்நிலை தொடரத்தான் செய்யும். கல்வி கற்ற பெண்கள் வேலைக்குச் சென்றோ, தொழில் முனைந்தோ பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டாலும், குடும்பம், வேலையிடம் மற்றும் சமூகத்தில் தொடர்ந்து துரத்தும் பாலினப்பாகுபாடுகள் தொலைய மனமாற்றமே முதலில், குறிப்பாகப் பெண்களுக்கே தேவைப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் வீட்டில் தொடங்கும் பாலின சமத்துவம், பெண்களின் அரசியல் பங்கேற்பை உள்ளடக்கிய அரச நிர்வாகம் வரை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் நல்ல விளைவுகள் நிகழ்ந்தேறும். அந்தப் பயணத்துக்கான பாதையைப் போட்டுக் கொடுத்த முன்னத்தி ஏராக நாம் தமிழர் கட்சி இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றென்றும் அறியப்படும்.
நாம் தமிழர் தரும் நன்னம்பிக்கை:
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி நடைமுறையில் செய்து காட்டிய பெண்கள் சார்ந்த மாற்றங்கள் சாதாரணமானவையே அல்ல. பெண்கள் தலைகாட்டவே அஞ்சும் விதமாக ஆண்களுக்கேயுரிய கொண்டாட்டங்களாக இருந்த அரசியல் பொதுக்கூட்டங்களை, குடும்ப விழாக்கள் போல குழந்தைகளும் பெண்களும் நிறைந்த நிகழ்வுகளாக மாற்றிய பெருமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு. கட்சித்தலைவரே பங்கேற்கும் மேடைகளில் கூட பெண்களை அரைகுறை ஆடைகளுடனும் ஆபாசமான அசைவுகளுடனும் குத்தாட்டம் போட வைத்து, கூட்டம் சேர்க்கும் திராவிடக் கட்சிகளுக்கு நடுவே, ஆண்களும் பெண்களும் சேர்ந்து நிலமதிரப் பறை கொட்டும் நிகழ்வுகளும், ஆண்களுக்கிணையாக நேர்த்தியான உரைவீச்சுடன் தரவுகளைக் கொட்டிப் பேசும் துணிச்சலான பெண்களின் தமிழ்த்தேசியக் கொள்கை முழக்கமும் நாம் தமிழர் கூட்டங்களுக்கேயுரிய தனித்துவமான அடையாளங்கள்.
ஆளுங்கட்சியின் முதல் குடும்ப வாரிசே ஆனாலும், பெண் என்பதால் ஒதுக்கிவைத்து, தகுதிக்கேற்ற அங்கீகாரத்தைக் கேட்டாலும் கொடுக்காத அவலம் நடந்தேறும் அதே நேரத்தில், கேட்காமலேயே நியாயமான அரசியல் அதிகாரப் பங்கீட்டைத் தன் கட்சிப் பெண்களுக்குச் சமரசமின்றி வழங்கும் நாம் தமிழர் கட்சி, ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வடதுருவ விண்மீன். ஒப்புக்குப் பெண்களின் இருப்பைக் காட்ட அதிகாரமற்ற அலங்காரப் பதவிகளில் பேசாப்பதுமைகள் போல ஆளும் அதிகாரம் கொண்ட கட்சிகளே அமரவைக்கும் போது, அதிகாரத்துக்கான பாய்ச்சலில் இருக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் தகவல்தொடர்புப் பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறை ஆகிய இரு வலிமையான படைப்பிரிவுகளுக்குப் பெண்கள் தலைமையேற்று வழிநடத்துவதும், குறிப்பிடத்தக்க வகையில் செயற்கரிய சாதனைகள் செய்வதும், தமிழக அரசியல் களத்துக்கு மிகப்புதிது.
அமைப்புரீதியாக அளிக்கப்படும் பிரதிநிதித்துவம், அரசமைத்த பிறகும் அமைச்சரவைப் பொறுப்புகள் மூலம் வழங்கப்படும் என அண்ணன் சீமான் கூறுகிறார். அதுவும் பெண்களுக்கென்றே ஒதுக்கிவைக்கப்பட்ட சமூக நலம், பட்டியலின முன்னேற்றம் போன்ற வழக்கமான துறைகள் அல்லாது, முக்கியமான துறைகளின் அமைச்சர்களாகப் பெண்கள் நியமிக்கப்படுவர் என உறுதியளிக்கும் துணிவு கொண்ட கட்சி தமிழ்நாட்டில் வேறு இருக்கிறதா? நாம் தமிழர் கட்சி சார்பாகத் தேர்தல்களில் நிறுத்தப்படும் பெண் வேட்பாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களல்லர் என்பதும், அவர்களை நிறுத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்று தர்க்கம் செய்வோர்க்கு, மக்கள் தீர்ப்பே மிகச்சிறந்த விடையாக உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் பத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் ஆறு பேர் பெண்கள்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதியுடன் கூடிய பாலின சமத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றுதலே உண்மையான இன விடுதலைக்கு வழிகோலும் என நம்பும் நாம் தமிழர் கட்சி, ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்டியலின, பழங்குடிப் பெண்களை வேட்பாளர்களாக அதுவும் பொதுத்தொகுதிகளில் நிறுத்தியிருக்கிறது. அதிகாரமிக்க பொறுப்புகளில் அமரும் வாய்ப்புகளைப் பெறாத, இதுவரை அரசியலில் பிரதிநிதித்துவப்படாத சமூகங்களைச் சார்ந்த பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவது, அச்சமூகப் பெண்களுக்கு அசாத்தியமான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதோடு மட்டுமின்றி, புரையோடிப்போன சாதீயப் படிநிலைகளை உடைத்து, புதியதொரு சமூக மாற்றத்துக்கான ஒழுங்கைக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுச்சமூகத்தினரிடத்தும் ஏற்படுத்தும்.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் சார்ந்த வாக்குறுதிகள்:
2019 நாடாளுமன்றத் தேர்தல் வரைவில் பெண்களுக்குத் தனி சட்டமன்ற பாராளுமன்றத் தொகுதிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சரிபாதி இட ஒதுக்கீடு, மாவட்டந்தோறும் பெண்களுக்கு வேலையளிக்கும் புதிய தொழிற்சாலைகள், பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள், பெண்கள் தலைமையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புப் பிரிவு அமைத்தல், ஊடகங்கள் மற்றும் கலைத்துறையில் பெண்களைச் சிறுமைப்படுத்தும் கருத்தாக்கங்களுக்குத் தடை மற்றும் அவற்றுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, வீரமங்கை வேலுநாச்சியார் மகளிர் வைப்பகம் போன்ற வாக்குறுதிகளை இக்கட்சி அளித்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் வரைவில் பெண்களுக்குச் சரிபாதி இடவொதுக்கீடு மற்றும் திருநங்கை திருநம்பியருக்கான உரிய உள் ஒதுக்கீடு, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, 2023இல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடவொதுக்கீட்டுச் சட்டத்தை சமூக நீதியுடன் கூடிய உள் ஒதுக்கீட்டுடன் உடனடியாக நடைமுறைப்படுத்துதல், மணிப்பூரில் நடந்த பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட கயவர்களை விரைந்து தண்டித்தல் போன்ற வாக்குறுதிகளையும் நாம் தமிழர் கட்சி கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டுப் பெண்கள் ஏன் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்?
ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்ற நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு, ஆழமான பொருளடங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறகுகள் நறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட பெண்ணினத்துக்கு விடுதலை, அவர்தம் உள்ளத்தின் உள்ளிருந்து தொடங்க வேண்டுமே தவிர, வெளியிலிருந்து அல்ல. அதற்கான முயற்சியில் தமிழ்ப்பெண்கள் ஈடுபட்டு, தேர்தல் அரசியலில் நாம் தமிழர் சார்பாகக் களம் காணும் பெண்களை வெற்றியடையச் செய்து, அதிகப்படியான பெண்கள் அரசியலுக்கு வருவதைப் பரவலாக்கி, ஒன்றியத்தின் மற்ற தேசிய இனப் பெண்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.
திராவிடக் கட்சிகளின் மதுக்கொள்கையால் சீரழிந்த குடும்பங்களைத் தனது கணக்கற்ற தியாகங்களாலும், காலநேரம் கடந்த உழைப்பாலும் தூக்கி நிறுத்தும் சராசரி தமிழ்ப்பெண்களின் வாழ்வு முன்னேற, ஒன்றியக் கொள்கை வகுப்பில் தமிழ்ப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, மற்ற தேசிய இனங்களுக்கு முன்னோடியாக தமிழ்ப்பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகழ, மணிப்பூர் கலவரம் போன்ற பெண்களை வதைக்கும் கொடூரக் குற்றங்களுக்கெதிராக ஓங்கிக் குரலெழுப்ப, நாம் தமிழர் கட்சியின் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டியுள்ளது. அதன் பொருட்டு தமிழ்நாட்டுப் பெண்கள் நாம் தமிழர் கட்சியின் செங்கொடி படையணியாகத் திரண்டிருக்கும் பெண் வேட்பாளர்களுக்குத் தவறாது ஆதரவளித்து, பெருவாரியான வாக்கு வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை” – தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.