டிசம்பர் 2022
தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர்
ஒருவர் தன் இனத்திற்கு ஆற்றும் பணிகளில் முதன்மையாக விளங்குவது, அவர்தம் மொழியில் உள்ள இலக்கண இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே ஆகும். அப்பணியைத் தன் பிறவிக்கடன் என எண்ணி, ஓலைச்சுவடிகளிலும் ஏட்டிலும் இருந்த தமிழ் இலக்கியங்களுக்கு அச்சு உருவம் கொடுத்த முதன்மையான தகைமையாளர், ஆறுமுக நாவலர்.
ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமாக விளங்கி, விருந்தோம்பலும், நட்பு பாராட்டும் குணமும் உடைய தமிழ் மக்கள் நிறைந்த யாழ்ப்பாணத்தில் 1822ம் ஆண்டு பிறந்தவர், ஆறுமுக நாவலர். தன் பூட்டன், பாட்டன், தகப்பனார் என்று தமிழ் அறிஞர்களின் வழிமரபில் தோன்றியவர் ஆறுமுக நாவலர்.
இளம் வயதிலேயே தன் தந்தையை இழந்த போதிலும் தன் சகோதார்களுடைய உதவியினால் சிறந்த தமிழ் அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் கந்தபுராணம் வீதிகள் தோறும் கேட்டுக் கொண்டிருந்த அக்காலத்தில், உரை சொல்லும் அறிஞர்க்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டு வந்தது. ஊர் கூடியிருக்க, அறிஞர் உரை கூறுவது வழக்கமாய் இருந்தது. அவ்வுரையைக் கேட்க ஆறுமுக நாவலர் தவறாமல் பங்கு கொண்டும், சிறந்த புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டும், பிழையாகச் சொல்லப்படும் உரைகளைக் கண்டிக்கவும் செய்தார்.
தமிழும் வடமொழியும் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தவராய் விளங்கினார் தான் ஆங்கிலம் பயின்ற கல்லூரியிலேயே தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னாளில் தான் பயின்ற கல்லூரியின் அதிபராக இருந்த ஆங்கிலேய பாதிரியாருக்கு, தமிழ் பயிலும் ஆர்வம் ஆறுமுக நாவலராலேயே ஏற்பட்டதனால், அவர் மூலமே தமிழைக் கற்றார். பின்னர் பாதிரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க விவிலியத்தை அவரோடு இணைந்து தமிழில் மொழி பெயர்ப்பதற்கு ஆறுமுக நாவலர் உதவினார். சைவத்தை ஏற்று அதற்காகவே வாழ்ந்த போதிலும் பிற மதத்தையும் மதிக்கும் மாண்புமிக்கவராய்த் திகழ்ந்தார்.
இவர் மிகச்சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் விளங்கினார். தாம் படைத்த நூல்களையும், உரைநடை எழுதிய நூல்களையும் பதிப்பிக்கும். நோக்கம் கொண்டு, அதற்காக அச்சுக்கூடம் ஒன்றை ஏற்படுத்த எண்ணினார். அக்காலத்தில் யாழ்ப்பானத்தில் ஆங்கிலேயர்களிடம் மட்டுமே அச்சு இயந்திரம் இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பல வேளைகளில் குரல் கொடுத்திருந்த காரணத்தினால், தானே அச்சுக்கூடம் ஏற்படுத்தி மட்டுமே தமிழை வளர்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதன் பொருட்டு தமிழகம் வந்த அவர், திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து சொற்பொழிவை ஆற்றினார்.
இவர் வாய்மொழி கேட்ட மக்களும் ஆதினமும் இவருக்கு “நாவலா” எனும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். சொந்த அச்சுக்கூடம் மற்றும் சொந்த அச்சு இயந்திரம் வைத்து தான் மிகவும் நேசித்த தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சுக்கு ஏற்றும் பணியைத் தன் வாழ்நாள் முழுவதுமாகப் புரிந்தவர். இதற்குத் தடையாகத் திருமணம் இருக்கக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்து மணம் முடிக்காமலேயே வாழ்ந்தவர். இவ்வாறு தமிழ்ப்பணி செய்யும் அதே காலகட்டத்தில் சைவ சமயப் பணியையும் சேர்த்தே செய்து வந்தார்.
யாழப்பாணத்தில் அமைந்திருந்த சிறு அச்சுக்கூடம், தனது பெரும் கனவிற்கு சிறிதே உதவிய காரணத்தினால் சென்னைக்கு வந்து பெரிய அச்சுக்கூடம் ஒன்றை ஏற்படுத்தினார். அவ்வாறு சென்னைக்கு வரும் வழியில் திருவாடுதுறை ஆதீனம், தருமபுரி ஆதினம் மற்றும் வேதாரண்யம், சீர்காழி, சிதம்பரம் போன்ற பல்வேறு ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றி வந்தார். சொற்பொழிவு ஆற்றுவதில் வ.உ.சி, திரு. வி.க. ஆகியோருக்கு முன்னோடியாக விளங்கியவர் ஆறுமுக நாவலர்.
இளையோருக்குக கல்விக்கூடங்களின் மூலமும், மூத்தோருக்குச் சொற்பொழிவுகள் மூலமும் அறிவை வளர்க்கவும், அறியாமையைப் போக்கவும் முறபட்டார். தமிழும் சைவமும் தமது இரு கண்களென பாலித்து, அதனை நாடெங்கும் பரப்பும் நோக்கில் கல்விக்கூடங்கள் அமைக்கும் பணியில் தமமை ஈடுபடுத்திக கொண்டார். தனது சொந்த யாழ்ப்பாணத்தில் முதல் கல்விக்கூடத்தைத் துவங்கினார். பின்னர் ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் கல்விக்கூடங்களை ஏற்படுத்தினார். சிதம்பரத்தில் ஆறு ஆண்டுகள் இருந்து தமிழையும் சைவத்தையும் கற்பித்து வந்தார். நிலத்தின் அமைப்பிற்கும் கால அமைப்பிற்கும் ஏற்ப நாட்டு மதுபானங்களின் பயன்பாடு பரவிக் கிடந்த காலங்களில், ஆங்கிலேய வல்லாதிக்க அரசுகளினால் நம்மீது திணிக்கப்பட்ட ஒவ்வாத மதுபானங்கள் பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டன.
அரசுகள் மதுபானத்தை விற்றுப் பெரும் வருவாய் ஈட்டலாம் என்னும் முறைமையை நடைமுறைப்படுத்திய ஆங்கிலேய அரசின் போக்கை எண்ணி வருந்தினார் ஆறுமுக நாவலர். இதனாலேயே, “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுயானம்” எனக் குறிப்பிட்டார். அன்று அவர் கூறிய தீர்க்கதரிசனம் இன்றைய தமிழகத்தின் நிலைக்கும் பொருந்தும் என்பதே நிதர்சனம். 1877 ஆம் ஆண்டில் ஈழத்திலும் தமிழகத்திலும் வறட்சியும், கடும் பஞ்சமும் நிலவியது. இதைக் கண்டு மனவேதனையுற்ற ஆறுமுக நாவலர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் சஞ்சித்தொட்டிகள் துவங்கினார்.
அறிஞர்கள் அக்காலத்தில் கோயில்களில் புராணங்களைக் கற்பித்து மட்டுமே வந்தனர். ஆனால் ஆறுமுக நாவலரோ சொற்பொழிவுகள் மூலம் மக்களைத் தன் பால் ஈர்க்கத் துவங்கினார். 1847 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை சிவன்கோவிலில் முதன்முறையாக சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவைக் கேட்டு மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டோர் ஏராளம் என்றால் மிகையாகாது.
சமய நூல்கள், காப்பியங்கள், இலக்கணம் போன்ற பல்வேறு நூல்களைப் பதிப்பித்தும் எழுதியும் உள்ளார். நூல்களுக்கு எளிமையான உரை எழுதும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார் இதனாலேயே அறிஞர்களால், தமிழ் உரைநடையின் தந்தை” என்று பாராட்டப்பட்டார். இலக்கணம், இலக்கியம், வானியல், தீதி நூல்கள் என அனைத்துமே அக்காலத்தில் கவிதை வடிவம் பெற்றிருந்ததை மாற்றி உரைநடை வடிவம் பெற வழிவகுத்தவர். ஆறுமுக நாவவா.
“தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர் சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை கூரை வேய்ந்தவர் உ.வே. சாமிநாதையா!” என்று திரு.வி.சு. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டுகிறது. தமிழ்த் தேசியம் ஈன்ற தலைமகனை எண்ணி வியப்பதோடு, அவர் காட்டிய வழியில் நடப்பது சாலச் சிறந்தது.
வாழ்நாளையே தமிழ் இலக்கியங்களுக்கு அச்சு வடிவம் கொடுப்பதற்காக அர்ப்பணித்த ஒருவர், தீக்கிரையாகிய தமிழ் இலக்கியக் குவியல்களை யாழ்ப்பாண நூலகத்திலே காண முற்பட்டிருந்தால் அவர் மனம் எங்ஙனம் துடித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. அழிவிலிருந்து ஆற்றல் கொண்டு உயரப் பறக்கத் துடிக்கும் இனமாய் ஒன்று சேர்வோம்.
நாம் தமிழர்!
திருமதி. பவ்யா இம்மானுவேல்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.