ஏப்ரல் 2024
தமிழ் வாழ – வர வேண்டும் நாம் தமிழர்!
செந்தமிழர் பாசறை – வளைகுடா ஒருங்கிணைத்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் விழிப்புணர்வு இணைய வழி தொடர் கருத்தரங்கத்தின் மூன்றாம் அமர்வு மார்ச் 1, 2024 வெள்ளி அன்று, தாயக நேரம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
“தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி” என்பதை இலக்காகக் கொண்டு பயணிக்கும் நமது நாம் தமிழர் கட்சியினுடைய தமிழ் மீட்சிப் பாசறையில் இருந்து, நேரடிக் களப் போராளிகள் நால்வர், தத்தமது கருத்துக்களை இந்நிகழ்வில் பதிவு செய்தனர்.
நமது இயக்க வழக்கப்படி அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி சொன்ன பின், செந்தமிழர் பாசறை – குவைத்தின் மழலையர் பாசறை உறவான செல்வன். லோகசுதன் அவர்கள்,
“அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!
சுகம் பல தரும் தமிழ்ப்பா!
சுவையோடு கவிதைகள் தா!
தமிழே நாளும் நீ பாடு!
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல
செல்வங்கள் கலை பலவும் பயிலவரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே!
இசையிருந்தால் மரணமேது?
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு!”
என்ற புலமைப்பித்தன் அவர்களின் பாடலோடு நிகழ்வைத் தொடங்கி வைக்க, அடுத்தடுத்து சிறப்பு விருந்தினர் அனைவரும் செறிவான கருத்துரைகளை வழங்கினர்.
“மொழி விடுதலையும் நாடாளுமன்றத் தேர்தலும்” எனும் துணைத் தலைப்பில் பேசிய புதுக்கோட்டை மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறைச் செயலாளர் பொன்வாசிநாதன் அவர்கள், இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளது மொழிக்கொள்கை எப்படி தமிழைச் சிதைத்து அழிவுறும் நிலைக்குத் தள்ளியது என்பதையும், இதன் பின்புலத்தில் உள்ள சூழ்ச்சிகளையும் தெள்ளத்தெளிவாக விளக்கினார்.
“தமிழில் பேசுவது ஏன் முக்கியம்?” என்ற துணைத்தலைப்பில் உரையாற்றிய தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலத் துணைத் தலைவர் ஆராவமுதன் அவர்கள், ஒவ்வொரு இனத்தவரும் ஏன் தமது தாய்மொழியிலேயே உரையாட வேண்டும், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் ஏன் தவறாமல் தமிழில் பேச வேண்டும் என, பல நுண்ணிய கூறுகளை உள்ளடக்கிய விளக்கங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் இயம்பியதோடு, அன்றாடம் பயன்படுத்தும் சில அயல்மொழிச் சொற்களுக்கு நிகரான அருந்தமிழ்ச் சொற்களையும் பகிர்ந்து சிறப்பானதொரு கருத்துரையை நல்கினார்.
“தமிழ் மீட்சிப் பயணம்” எனும் துணைத்தலைப்பில் பேசிய தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில இணைச் செயலாளர் முனைவர் கரிகாலன் பெ.வெங்கடேசன் அவர்கள், தமிழ் மீட்சிப் பாசறையின் உருவாக்கம், இலக்குகள், செயல்திட்டங்கள், களப்போராட்டங்கள், அளப்பரிய பங்களிப்புகள், ஆகப்பெரும் சாதனைகள் குறித்த வரலாற்றைக் கோர்வையாகத் தொகுத்தளித்து, இப்பாசறையின் பாதை மற்றும் பயணத்தை நாம் கண்ணுற உதவினார்.
இறுதியாக “ஆட்சி அதிகாரத்தில் தமிழும் தமிழரும்” எனும் துணைத்தலைப்பில் நிறைவுரை வழங்கிய தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலச் செயலாளர் கார்த்திகைச்செல்வன் அவர்கள், இன்னும் நாம் தொட வேண்டிய உயரங்கள் என்னென்ன என்பதையும், அதை நோக்கிய நம் செயலாக்கத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும், மிக முக்கியமான சூழலில் பிணக்கற்ற இணக்கத்துடனும், செய்நேர்த்தியுடனும் உடனடியாக முடிக்க வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டார். மேலும் தமிழ்நாட்டில் தமிழும் தமிழரும் மீளவும் ஆளவும் தமிழ் மீட்சி தான் அடிப்படை என்பதையும் தக்க சான்றுகளோடு சுட்டிக்காட்டினார்.
முழுநிகழ்வையும் செந்தமிழர் பாசறை வளைகுடாவின் செய்தித் தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கியதோடு, இக்கருத்தரங்கத்தினை ஒருங்கிணைத்தற்கான நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியை நன்றியுரையில் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக நேரடிக் கள அரசியலிலும், களமுனைகளில் உதவியாக இருக்கும் பின்னணிப் பங்களிப்புகளையும், நம்மைச் சோர்வின்றி ஓடச் செய்யும் தமிழ்த்தேசியத் தத்துவத்தினைச் செறிவூட்டும் அறிவுப்புலச் செயல்பாடுகளிலும் இரு பாசறைகளும் இணைந்து ஒத்திசைவுடன் பல வேலைகளைச் செய்வோம் என்ற உறுதியையும் அளித்தார்.
தாயகத்திலிருந்தும் அயலகத்திலிருந்து இக்கருத்தரங்கத்தில் இணைந்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும், திட்டமிட்டபடி நிகழ்வைச் சிறப்பாக நடத்த உதவிய ஒவ்வொருவருக்கும் செந்தமிழர் பாசறை வளைகுடாவின் அன்பும், நன்றியும்!
மீட்சியுறட்டும் நமது தமிழ் மொழி!
ஆட்சியதிகாரம் பெறட்டும் நாம் தமிழர்!