பிப்ரவரி 2023
தலைமுறை தலைமுறையாக மறுக்கப்படும் நீதி – கீழ்வெண்மணி
ஆண்டுதோறும் வெண்மணி படுகொலை நினைவேந்தல் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. திசம்பர் 25, 1968 ஆண்டு நிகழ்ந்த படுகொலைக்கு, 54 ஆண்டுகள் நாம் நிகழ்த்திய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏதேனும் பொருள் உள்ளதா என்று சற்றே அமர்ந்து எண்ணினால், எந்தப் பொருளும் இல்லை என்பதே விடையாகக் கிடைக்கும். இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் குறைந்தபட்ச நோக்கம், வரும் காலங்களில் வெண்மணி நினைவேந்தல் அன்று, இந்த நாள்(திசம்பர் 25) தமிழகத் தமிழர்கள் தொடர்ந்து திராவிடர்களால், திராவிடக்கட்சிகளால் அவமரியாதை செய்யப்படும் நாள் என்ற உணர்வு தமிழ் மக்கள் மனதில் ஒரு நொடியேனும் தோன்ற வேண்டும்.

54 ஆண்டுகளாக நமது சுமரியாதையை இழந்து நிற்கிறோம். அப்படி என்ன அவமரியாதை அல்லது அநீதி நமக்கு இழைக்கப்பட்டுவிட்டது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உலகில் பல்வேறு தருணங்களில் அரசும், ஆண்டவர்களும் நீதி தவறி மக்களை தண்டித்துள்ளார்கள். காலங்கள் நகரும்போது, முன்பு செய்த தவறுக்கு, தவறிழைத்தவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த மன்னிப்புக்கேட்ட நொடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மன ஆறுதல் பிறக்கும். தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கேட்பது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் ஒரு குறைந்தபட்ச நீதியாகும். உதாரணமாக இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்து, மக்களாட்சித் தத்துவத்தைக் காலில் போட்டு மிதித்துத் தவறிழைத்தார் இந்திராகாந்தி அம்மையார். பின்னாட்களில் காங்கிரசு இயக்கம் அதற்கு வருத்தம் தெரிவித்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வுக்குப் பின்னாட்களில் “ஆங்கிலேயர்கள் வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் உள்ளது.
சில நேரங்களில் எளிய மக்களை தண்டிக்கும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்த வரலாறுகள் உண்டு. வருத்தம் தெரிவிப்பது அல்லது மன்னிப்புக் கேட்பது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குத் தீர்வு இல்லை என்றாலும், குறைந்தபட்ச நீதி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த குறைந்தபட்ச நீதி கூட வெண்மணி நிகழ்வில் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
44 தமிழர்கள் 1968 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டனர்.

கொலைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்படி என்றால் அவர்களை யார் கொன்றது என்ற கேள்விக்கு 54 ஆண்டுகாலமாகத் தமிழர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரத் தவறிய ஆட்சியாளர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. 44 உயிர்கள் கொல்லப்பட்டது அநீதி. கொலை செய்தவர்களை நீதி அமைப்புகள் விடுதலை செய்தது மற்றொரு அநீதி. அநீதி இழைத்தவர்கள் 54 ஆண்டுகள் ஆகியும் தவறுக்கு வருந்தாது அநீதியிலும் அநீதி. வெண்மணி படுகொலையில் நமக்கு கிடைக்கப்போகும் குறைந்தபட்ச நீதி, தவறுக்கு உடன் நின்ற, நீதியை பெற்றுத்தரத் தவறிய திராவிட ஆட்சியாளர்களை வருத்தம் தெரிவிக்க வைப்பதே ஆகும். தமிழர்களின் அரசியல் வளர்ச்சியே திராவிடர்களை அடிபணியச்செய்து வருத்தம் தெரிவிக்க வைக்கும். எனவே தமிழர் அரசியல் வளர்ச்சியே, வெண்மணிக்கான தீர்வு என்பதை, வெண்மணி நினைவேந்தல் நிகழ்வின் உண்மையான சூளுரையாக தமிழர்கள் கொள்ளவேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் வெண்மணி நிகழ்வில், திராவிடர்கள் நாங்கள், தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்கு வருந்துகிறோம் என்ற ஒலி நமது காதுகளை வந்தடைய வேண்டும். அந்த ஒலி, தமிழர்களின் 54 வருட வேதனைக்கு இளைப்பாறுதல் தரவேண்டும்.

மேலே இந்தக்கட்டுரை எழுதப்படுவதின் நோக்கத்தைக் குறிப்பிட்டுவிட்டோம். அப்படியென்றால் வெண்மணி நிகழ்வையும், நிகழ்ந்த கொடூர மரணங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும், தவறிழைத்தவர்களையும் உறவுகளுக்கு நிறுவிக்காட்டுவது நமது கடமையாகிறது. கீழ் வெண்மணி வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1940 களில் இருந்தே விவசாயக்கூலிகளின் போராட்டங்கள் இடதுசாரி இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பண்ணையடியாள் முறைமை எங்கும் நிறைந்திருந்தது. ஏன் அடிமையாக இருக்கிறோம் என்று தெரியாமலே தலைமுறை தலைமுறையாக பண்ணைக்கூலிகளாகத் தமிழர்கள் இருந்துவந்தனர்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
பரிதவித் தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே -இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே!
என்ற பாரதியின் வரிகளே இவர்களின் வாழ்க்கையாக இருந்தது. தஞ்சை மண்ணில் ஒடுக்கப்படும் தமிழர்களுடன் களத்தில் நின்ற மூத்த இடதுசாரித் தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள், பண்ணையாட்களில் ஒருவர் தனது மனநிலையை தன்னிடம் இவ்வாறு பதிவு செய்ததாக சொல்கிறார்.
“எங்க பண்ணையாரு ரொம்ப நல்லவருங்க, மத்த பண்ணையாரு மாதிரி நித்தம் அடிக்கமாட்டாரு, எப்பையாவது தான் அடிப்பாரு”
இதைக் கேட்டு திரு.சீனிவாசன் சற்று அதிர்ந்துவிட்டாராம். களத்தில் நின்ற இடதுசாரித் தலைவர்களிடத்தில் உழைக்கும் மக்கள் வைத்த முதன்மை கோரிக்கை என்ன தெரியுமா? கேட்டால் உள்ளம் பதைபதைக்கும். உழைக்கும் மக்கள் வைத்த கோரிக்கை, மாதத்தில் ஒரு நாளாவது விடுப்பு வேண்டும். அதுவும் அமாவாசை அன்று வேண்டும். ஏன் அமாவாசை அன்று வேண்டும் என்ற கேள்விக்கு, அமாவாசை இரவு இருள் அதிகமாக இருக்கும். நண்பர்கள், உறவுகள் அனைவரையும் இரவில் சந்தித்து உரக்க அழ வேண்டும் என்பதற்காக மட்டுமே. இதுவே அன்றைய உழைக்கும் மக்களின் மனநிலை. சாதிய, வர்க்க பேதங்கள் நிறைந்த மண்ணாக தஞ்சை மண் இருந்தது. பண்ணையார்கள் உழைக்கும் மக்களை கால்நடையினும் கீழாக நடத்தினர்.
1940 களில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், உழைக்கும் தமிழர்களிடத்தில் குறைந்தபட்ச போராட்ட குணத்தை உருவாகியிருந்தது. மக்கள் அரசியல் படுத்தப்பட்டிருந்தனர். தாங்கள் உழைப்புச் சுரண்டல் செய்யப்படுகிறோம் என்று உணர்ந்து இருந்தனர். 1960 களில் இந்தியா முழுக்க பஞ்சம் இருந்தது. இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த காங்கிரசு கட்சி மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துகொண்டிருந்த காலம் அது. அந்த சூழலில், 1957 இல் தேர்தல் அரசியலில் நுழைந்த திராவிடக்கட்சியான திமுக, தங்களைப் பாட்டாளியின் நண்பன் எனக் கூறிக்கொண்டு மாநில உரிமைகள் பேசிவந்தது. தமிழ்நாடு காங்கிரசு அரசும் அறுபதுகளில் நிகழ்ந்த பஞ்சத்தைச் சமாளிக்க இயலாமல் தவித்தது. மக்களுக்குச் சரியாக உணவு வழங்க இயலாத சூழல். இந்த காலத்தில் திமுகவினர் ஆளும் அரசை எதிர்த்துக் கோசங்களும், போராட்டங்களும் செய்தனர். “காமராசர் அண்ணாச்சி, கஞ்சி இல்ல என்னாச்சு” என்ற கோசங்களை தமிழகம் முழுக்க எழுப்பினர்.

நிலவும் பஞ்சத்தைச் சமாளிக்க விவசாயிகள் கூலி உயர்வு கேட்டனர். பெரிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே வழங்கும் 4 படிக்குப்பதில் 6 படி நெல் கூலியாகக் கேட்டனர். இதைப் பண்ணையார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் நெல் அல்ல. தலைமுறை, தலைமுறையாக அடிமையாக இருந்தவன் முதல் முறையாகத் தன்னை கேள்வி கேட்கிறானே என்ற எண்ணம் தான் அவர்களைக் கூலியை அதிகப்படுத்திக்கொடுக்க மறுக்க வைத்தது. பண்ணையார் மற்றும் விவசாயக்கூலிகள் போராட்டங்கள் தஞ்சை மண்ணில் தொடர்ந்து அரங்கேறின. இதனூடாக 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை தலைமையில் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. ஆயினும் காட்சிகள் மாறவில்லை. காங்கிரசில் இருந்த பண்ணையார்கள் அனைவரும் திமுக ஆதரவாளர்களாக மாறினார்கள். மீண்டும் பண்ணையார்கள், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது.
திமுக அமைச்சர்கள், தஞ்சை மண்ணில் தாங்கள் முன்னெடுக்கும் அரசியல் கூட்டங்களை தஞ்சை பண்ணையார்கள் தலைமையிலேயே பெரும்பாலும் கூட்டினார்கள். அது இடதுசாரி இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக்களிடம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரத்தன்மை அடைந்தது. அதை தடுக்க, “கிசான் போலீஸ்” என்ற அமைப்பை அறிஞர் அண்ணா உருவாக்கினார். அதன் இலக்கு திசைமாறிவிட, காவல்துறை அதிகாரிகள், பண்ணையார்களின் ஏவல்துறையாக மாறி உழைக்கும் மக்களுக்கு எண்ணற்ற இடையூறுகளைத் தந்தனர். எளிய மக்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டுப் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டனர். இவ்வாறாக அறுபதுகளின் இறுதி ஆண்டுகள் நகர்ந்தன. ஆயினும் விவசாயிகளின் உரிமைப் போரட்டம் தொடர்ந்தது பண்ணையார்களை நிலைகுலையச்செய்தது. உடனடியாக விவசாயச் சங்கங்களுக்கு எதிராக பண்ணையார்கள் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தனர். அதன் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் நாயுடுவை கோபம் அடையச்செய்தது. நாயுடுவிற்கு கேட்ட கூலிக்கு அதிகம் நெல் தருவதில் சிக்கல் இல்லை. விவசாயிகள் தானாகக் கேட்டதுதான் சிக்கல். நெல் உற்பத்தியாளர் சங்கத்தலைவரான நாயுடுவின் இலக்கு இரண்டே விடயங்களாக இருந்தது. ஓன்று அனைவரையும் விவசாய சங்கத்தில் இருந்து, நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சேர்ப்பது மற்றும் இடதுசாரிச் செயல்பாடுகளை இல்லாமல் செய்வது. திமுக, காவல்துறை மற்றும் மற்ற பண்ணையார்களின் துணைகொண்டு இரண்டையும் அடைய நாயுடு தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார்.
நாயுடுவிற்கு தனது திட்டத்தைத் செயல்படுத்த சரியான நேரம் வந்தது. அகில இந்திய இடதுசாரிகள் மாநாடு 23 முதல் 29 தேதி வரை, திசம்பர் 1968 ஆண்டு கேரளாவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அனைத்து தஞ்சை மற்றும் தமிழக இடதுசாரித் தலைவர்கள் கேரளா சென்றுவிட்டனர். இந்தத் தருணத்தைப் பார்த்து நாயுடு விவசாயிகளுக்கு ஒரு பயத்தை உருவாக்க எண்ணினான். திசம்பர் 25, 1968 இரவு அன்று நாயுடு தனது குண்டர் படைகளுடன் வெண்மணி கிராமத்தில் நுழைந்து கண்முன்னே தெரியும் அனைவரையும் தாக்கினான். அனைவரும் சிதறி ஓடினார்கள். பெண்கள், குழந்தைகள் மற்றும் சில ஆண்கள் ஊரின் கடைசியில் இருந்த இராமையாவின் குடிசையில் நுழைந்தனர். நாயுடுவும், அவனது ஆட்களும் குடிசையில் இருந்த 44 தமிழர்களையும் தீயிட்டுக் கொளுத்திக் கொன்றனர். தீயின் வேதனை தாங்காது தப்பித்து வெளியே குதித்தவர்களை மறுபடியும் தீயினுள் தூக்கி எறிந்து கொன்றனர். அவ்வாறே வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு 44 உயிர்கள் துள்ளத்துடிக்க படுகொலை செய்யப்பட்டனர். தான் செல்வந்தன் என்ற எண்ணமும், ஆளும் அரசு தனக்கு உடன் நிற்பதும், கிசான் காவல் படை தனது ஏவல் படையாகச் செயல்படுவதும், நாயுடுவை எந்த பயமுமின்றி இந்த படுபாதகச் செயலைச் செய்யவைத்தன. பாட்டாளி உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை பேசிய திமுக ஒரு பித்தலாட்டக்கட்சி என்ற விடயம், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே இந்த நிகழ்வின் வாயிலாக தமிழர்களுக்குச் சொல்லப்பட்டது. மக்கள் ஏனோ இன்னும் விழிக்காமல் இருக்கிறார்கள்.
வெண்மணியின் வலிதரும் எச்சங்கள்:
- 44 தமிழர்களைக் கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவனது கூட்டாளிகளும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த உயர் நீதிமன்றம், விடுதலைக்காக சொன்ன காரணங்கள் உலக வரலாற்றிலேயே மிகவும் விந்தையானது.
“நாயுடு மிகவும் பணக்காரர், கார் வைத்துள்ளார், செல்வந்தர், இத்தகைய நிலையில் உள்ளவர் நேரடியாகக் களத்திற்கு வந்து கொலை செய்யமாட்டார்”. இதுவே நாயுடுவை விடுதலை செய்த நீதிமன்றத்தின் பதில். - பாட்டாளிகளின் நண்பன் எனக்கூறிக்கொள்ளும் இடதுசாரி அமைப்புகளால் நாயுடுவிற்கு எந்த தண்டனையையும் வாங்கித்தர இயலவில்லை. அதைவிட பெரிய சோகம் எந்த இடது சாரிகள் எளிய மக்களுக்காகப் போராடி, வெண்மணியில் திமுகவை எதிர்த்தார்களோ, அவர்களே இன்று அற்ப அரசியல் வெற்றிக்காக திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு, திமுகவின் கூட்டணிக்கட்சியாக (ஒட்டுண்ணிக்கட்சியாக) மாறி, திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார்கள்.
- வெண்மணியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்த திமுக இன்று வரை அரசியல் அதிகாரத்தை ஆண்டனுபவித்து வருகிறது. தமிழர்கள் தங்களைக் கொல்ல உடந்தையாக இருந்த திமுகவிற்கு இன்னும் தங்கள் வாக்கைச் செலுத்துவது சோகத்திலும் சோகம்.
- பாட்டாளிகளின், ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றை நம்பிக்கை என தமிழகம் முழுக்க பரப்புரை செய்து வளர்க்கப்பட்ட, வளர்க்கப்படும் “ஈ வெ ரா” அவர்கள், வெண்மணி சம்பவம் நடந்த காலத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக அவரின் தொண்டரடிப்பொடியாழ்வார்கள், சம்பவம் நடந்த காலத்தில் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று முட்டுக்கொடுத்து வந்தார்கள், வருகிறார்கள்.
ஒரு துன்பியல் சம்பவத்தை முடிந்தளவு மேலே சுருக்கமாக குறிப்பிட்டோம். வெண்மணி நிகழ்வை அறிந்த ஓவ்வொரு தமிழரும், வெண்மணி ஒரு முற்றுப்பெறா நிகழ்வு என்பதை உணரவேண்டும். அதன் உண்மையான நினைவேந்தல் திராவிட அரசியலை முற்றுமுழுதாகாத் துடைத்தெறிவதில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும்.
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்,
செய்தித்தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.