ஆகத்து 2022
திராவிடமெனில் யாது?
திராவிடம் என்ற பெயரில் ஓர் இனமோ மொழியோ நிலமோ இருந்ததில்லை. திராவிடம் என்பது தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் கொள்கையில்லாத ஓர் போலியான சித்தாந்தம், இன்னும் சொல்லப்போனால் தமிழரல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவொன்று (எ.கா) அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் தமிழைத் தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“திராவிடம்” என்ற சொற்பதத்தை தமிழக அரசியல் களத்தினுள் புகுத்தியவர் ஈ.வே.ராமசாமி (பெரியார்). அவர் கால்டுவெல் எழுதிய “தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது திராவிட மொழிக்குடும்பம்” என்ற நூலிலிருந்து எடுத்து “திராவிடம்” என்ற சொல்லை பயன்படுத்தினார். இந்தியாவின் தொன்மையான மொழி சமற்கிருதம், அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றின என்ற தவறான புரிதலால் குழப்பமுற்று தென்னிந்திய மொழிகளுக்கு திராவிட மொழிக்குடும்பம் எனத் தவறாக பெயரிட்டார் கால்டுவெல். பின்னர் அவரே “நான் இந்த திராவிட என்ற சொல்லை குமரிலபட்டர் எழுதிய தந்தீரிகா வார்த்திகா எனும் மனுசமிருதியில் இருந்தே எடுத்தேன்” என்கிறார்.
மனுசமிருதியில் திராவிடம் என்ற சொல் ஆரிய பிராமணர்கனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு கைபர் கணவாய் வாயிலாக நுழையும்போது வடக்குப்பகுதி (வித்திய மலைக்கு வடக்கே இமயமலைக்கு தெற்கே) நோக்கி சென்ற ஆரிய பிராமணர்களை “கவுட பிராமணர்கள்” என்றும், தெற்கு நோக்கி சென்றோரை “திராவிட பிராமணர்கள்” என்றும் மனுசமிருதியில் குறிக்கப்படுகின்றது.
ஈ.வெ.ரா.வின் நோக்கில் திராவிடம் :
தமிழ் தெலுங்கு துளு மலையாளம் கன்னட மொழிகளை பேசக்கூடிய மக்களை திராவிடர்கள் என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார். அதாவது அவர் முன்வைத்தது “இனவியல் கோட்பாடு”
அண்ணாவின் நோக்கில் திராவிடம்
அண்ணாவின் நோக்கில் திராவிடம் இளவியல் கோட்பாடு அல்ல, மாறாக தத்துவக் கோட்பாடு. ஆரிய பிராமணர்களும் திராவிடத் தத்துவத்தை ஏற்பார்கள் எனில், அவர்களையும் தாம் திராவிடராக ஏற்பதாக குறிப்பிட்டார்.
ஈ.வெ.ரா. வைத்தது இனவியல் கோட்பாடு, அதாவது ஆரிய பார்ப்பன எதிர்ப்பு. ஆனால் அண்ணாதுரை, கட்சி தொடங்கும்போதே ஒரு பார்ப்பனரை கட்சியின் கொள்கை வகுப்பாளராக நியமித்தார். எனவே எனது நோக்கிஸ் இவர்கள் இருவருக்குள்ளும் திராவிடம் என்றால் என்ன என்பதில் கருத்து முரண் இருந்துள்ளது. இன்று வரை ஈ.வெ.ரா தொடங்கிய திராவிடர் கழகத்தில் ஒரு பார்ப்பனர் உறுப்பினராக இணைய இயலாது என்பதை அறிக.
கருணாநிதியின் நோக்கில் திராவிடம்:
கருணாநிதியின் நோக்கில் சமூகநீதி பேசும் அனைவரும் திராவிடர்கள், சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்குவது. ஆயினும் தி.மு.க கட்சியில் அதிகம்
ஆதிக்கம் செலுத்துவது இவர் குடும்பத்தினர்தான். இதுவா சமூக நீதி?
கனிமொழியின் நோக்கில் திராவிடம்
திராவிடமென்பது ஒரு வாழ்வியல், மரபு என்கிறார் கனிமொழி. பெண்ணியம் பேசுவதும், சாதி மறுப்பும், சமூக நீதி காப்பதும் கூட திராவிடம் என்கிறார் இவர்.
ஸ்டாலின் நோக்கில் திராவிடம் :
திராவிடமென்பது ஒரு திட்டம் என்கிறார் இவர். என்ன திட்டமோ? மக்களை ஏமாற்றி எப்படி ஆட்சியைப் பிடிப்பதும் எனும் திட்டமோ என எண்ணத்தோன்றுகிறது.
திராவிடத்திற்கான இவர்களது விளக்கம் இவ்வாறு பலவிதமாக நீண்டுக்கொண்டே செல்கிறது என்பது வேடிக்கை. சமூகநீதி, பெண்ணியம், சாதி மறுப்பு, சமத்துவம் இவையனைத்தும் நாங்கள் ஏற்கிறோம்.
ஆனால் இவற்றை தமிழர் என்ற அடையாளத்துடனேயே ஏற்கிறோம். மாறாக எங்களை “திராவிடர்” என்று இனம் மாற்றாதீர்கள் என்பதே தமிழ்த்தேயப் பற்றாளர்களின் நிலைப்பாடு.
“தமிழன் என்றோர் இனமுண்டு,
தனியே அவருக்கோர் குணமுண்டு
அன்பு அவரது வழியாம்
அமிர்தம் அவரது மொழியாம்”
என்கிறார் நமது நாமக்கல் கவிஞர்,
“திராவிடர் என்றோர் இனமில்லை,
தனியே அவருக்கோர் நிலமில்லை,
பொய்யே அவரது மொழியாகும்.
புரட்டே அவரது வழியாகும்”
என்பதே இவர்களுக்கு சரியாகப் பொருந்தும்.
நாங்கள் திராவிடர்கள் அல்ல… பெருமைமிகு “தமிழர்கள்”!
திரு. கு.பாண்டியன்
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.