spot_img

திருப்பரங்குன்றம் மலையும் சிக்கந்தர் தர்கா வரலாறும்

மார்ச் 2025

திருப்பரங்குன்றம் மலையும் சிக்கந்தர் தர்கா வரலாறும்

திருப்பரங்குன்றம் என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடு என்பது தான். இந்தக் கோயில் திருப்பரங்குன்றம் மலையில் குடைவரைக் கோயிலாக உள்ளது. முருகர் இங்கு வேலோடு காட்சி தருகிறார.

திருப்பரங்குன்றம் மலை இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதி. இந்த மலையைச் சுற்றிலும் பல்வேறு வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையாக வாழும் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இங்கே முருகன் கோயிலைத் தவிர்த்து, இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று சமணத் துறவிகள் இருந்த பகுதி; இதனைத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரித்து வருகிறது. மற்றொன்று குடைவரை சிவன் கோயில்.

மலையைச் சுற்றி கீழே ஜீவ சமாதிகள் பல உள்ளன. சிறிய ஏழு சப்த கன்னிகள் கோயில் உள்ளது. சப்த கன்னிகளுக்கு கீழே ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இது ஆசீவக வழிபாட்டு முறையை ஒத்திருக்கும். அதன் அருகிலேயே சிறிது தூரத்தில் கருப்பண்ணசாமி கோயில் இருக்கும். இந்தக் கருப்பண்ணசாமி கோயில் முக்குலத்தோர் மக்களும், பட்டியல் இன மக்களும் ஒன்று சேர்ந்து வணங்கும் ஆலயம். இங்கே ஆடும் கோழியும் பலி கொடுப்பதும் படையல் இடுவதும் வழக்கம். (அசைவம் சாப்பிட்டு மலையை அசுத்தப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லும் மூடர்களின் கவனத்திற்கு)

திருப்பரங்குன்றத்தில் நான்கு சதவீதம் இஸ்லாமிய மக்களும் நான்கு சதவீதம் கிறிஸ்துவ மக்களும் இருக்கிறார்கள். எல்லோரும் தமிழ் மக்கள்; மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆங்காங்கே அவரவர்கள் வழிபடும் இடத்திற்குத் தக்கவாறு இடங்களைப் பகிர்ந்து கொண்டு ஒத்திசைவோடு வாழ்கிறார்கள்.

இப்பொழுது மலையின் மேலே போனால் ஒரு குன்றில் காசி விஸ்வநாதர் ஆலயம்; அதன் அருகில் ஒரு நீர் சுனை உள்ளது. இதன் அருகில் உள்ள மற்றொரு குன்றில் சுல்தான் சிக்கந்தர் பாட்ஷா அவுலியா தர்கா உள்ளது. மலை மீது சிறிய குன்றுகளாக பல பகுதிகள் உள்ளன, அதில் ஒன்று தான், இந்த சிக்கந்தர் தர்கா உள்ள இடம்.

சுல்தான் சிக்கந்தர் பாட்ஷா அவுலியா தர்கா – தோற்றமும் வழிபாடும்

1286இல் டெல்லியைச் சார்ந்த சுல்தான் சையது இப்ராஹிம் படையெடுத்து மதுரையைப் பிடிக்கிறார். சையது இப்ராஹிம், தளபதி சிக்கந்தர் பாதுஷா அவர்களிடம் மதுரையை ஆட்சி செய்ய ஒப்படைத்துவிட்டு சையது இப்ராஹிம் புறப்பட்டார்.

சிக்கந்தர் பாதுஷா அவர்கள் ஒரு வீர சூஃபி ஞானி. இவர் ஏற்றுக் கொண்ட இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடத்திலே எடுத்துக் கூறி எல்லா மக்களையும் இஸ்லாத்தில் இணைக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

இவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் பக்கத்து நாட்டுப் படைகளின் உதவியோடு மதுரையின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். இந்த நேரத்தில் சிக்கந்தர் தப்பித்து திருப்பரங்குன்ற மலை உச்சியில் போய் பதுங்கி இருக்கிறார்.

சிக்கந்தரைத் தேடி வந்த வீரர்கள், சிக்கந்தர் மலை உச்சியில் இருப்பதை தெரிந்து கொண்டு உச்சிக்குச் சென்று அவருடன் இருந்த சிலரையும் குதிரையையும் கொலை செய்தார்கள். அந்த நேரத்தில் சிக்கந்தர் அவர்கள் தொழுகையில் இருந்திருக்கிறார்.

கையில் வாளோடு இருந்த வீரர்கள் தொழுகை முடிந்த பின்பு இவரைக் கொல்லலாம் என்று நின்று கொண்டிருக்கையில், ஒரு வீரர் மட்டும் தொழுது கொண்டிருக்கும் பொழுதே சிக்கந்தரின் கழுத்தை வெட்டி விட்டார். சிக்கந்தரின் கழுத்தை வெட்டிய வீரனின் கண் பார்வை அந்த நிமிடமே பறிபோகிவிட்டது. “தொழுகையில் இருந்த உங்களை வெட்டியது தவறுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” என்று அழுது கதறி இருக்கிறான். மற்ற வீரர்கள் செய்வதறியாமல் நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள். கண் தெரியாமல் துடித்த வீரனின் மன்னிப்பை ஏற்று, சிறிது நேரத்தில் மீண்டும் கண் பார்வை அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தச் செய்தி விரைவாக மக்களிடத்திலும் மன்னர் இடத்திலும் பரவியது.

மதுரைவாழ் இஸ்லாமிய மக்கள் சிக்கந்தரின் புனிதத்தை முதலிலேயே அறிந்திருந்தவர்கள். அதனால் சிக்கந்தரை அந்த இடத்திலேயே அடக்கம் செய்து பராமரிக்க மன்னரிடம் அனுமதி கேட்டார்கள். மன்னரும் திருப்பரங்குன்றம் மலையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். அதன் பிறகு அந்தப் பகுதியை மக்கள் அனைவரும் மதப்பாகுபாடு இன்றி அவ்வப்போது சென்று வழிபட்டும் வந்தனர். கந்தூரி விழாவும் சிறிய அளவில் எடுத்திருக்கிறார்கள். பொதுவாகவே மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத வேறுபாடு இன்றி வாழ்வது வழக்கமானதால், இது ஒரு பெரிய விடயமாக யாருக்கும் தெரியவில்லை.

சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா கட்டுமானம்

1759 ஆம் ஆண்டு மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கான்சாகிப் என்ற மருதநாயகம் அவர்கள், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா என்ற இந்த இடத்திற்கு வந்து செல்லும் மக்கள் வழிபடுவதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான கட்டடத்தைக் கட்டினார்.

சிக்கந்தர் அவர்கள் இறந்த காலகட்டத்தில் இருந்த அரசனும் சரி, அதன் பின்பு வந்த அரசுகளும் சரி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா பகுதியை, எந்தவித பாகுபாடும் இன்றி மக்கள் அனைவரும் சென்று வரும் பகுதியாகத்தான் பராமரித்து இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள் வரை, சிக்கந்தர் தர்கா இருக்கும் பகுதி இந்துக்களுக்குச் சொந்தமான இடம் என பல இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் சிக்கந்தர் தர்கா உள்ள பகுதி அந்த தர்காவிற்குச் சொந்தமானது என தீர்ப்பு வழங்கி உள்ளது.

மலையில் மிகச் சிறிய ஒரு பகுதிதான் அந்த தர்கா இருக்கின்ற பகுதி. ஆனால் எல்லா மக்களும் சென்று வருகின்ற இப்பகுதியை வைத்துத் தான் சில அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையையே இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் பறிப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். அதற்கு திராவிட கும்பலைச் சேர்ந்தவர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

மத மோதல்களை உருவாக்கும் காரணிகள்

மதவெறி பிடித்த ஒரு சில கூட்டம் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலே இங்கே செயல்படுகின்றார்கள். இரண்டு மதங்களிலுமே இந்த அவலம் இருக்கிறதை நாம் பார்க்கின்ற பொழுது தெரிகின்றது. இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு ஆர்எஸ்எஸ் ஏவலர்களாக வேலை செய்யும் அமைப்புகள், சிக்கந்தர் தர்காவிற்கு அருகாமையில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று சில ஆண்டுகளாகப் புதிய பிரச்சனையை உருவாக்குகிறார்கள். இந்தப் பழக்கம் இந்த மலையில் முதலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பொழுது மலையில் வேறொரு இடத்தில் தீபம் ஏற்றுகிறார்கள்.

தர்காவிற்கு உட்பட்ட பகுதியில் இந்தச் செயல்பாட்டைச் செய்ய வேண்டாம் என்று இஸ்லாம் மக்கள் தடுக்கிறார்கள், அது சரிதான். ஆனால் திராவிட அடிவருடிகளாக இருக்கின்ற சில இஸ்லாமிய நபர்கள், இந்த மலையே எங்களுடைய மலைதான் என்றும் நாங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்குப் போட்டியாக இவர்களும் பேசுகிறார்கள் என்ற தகவலும் இருக்கிறது.

ஆனால் அந்தப் பகுதி மக்கள் இன்றளவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இரண்டு பிரிவுகளிலுமே வெளியில் இருந்து வந்தவர்கள் தான் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஆரியனும் திராவிடனும் செயல்படுகிறான். அந்தப் பகுதியில் இருக்கிற மக்கள் மாமா, மச்சானாக ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.

ஆரியனும் திராவிடனும் என்ன சூழ்ச்சி வேலை செய்தாலும் நாம் தமிழர்கள் என்று ஒற்றுமையாக நிற்போம். தமிழர் நிலத்தில் மதக் கலவரத்துக்கு இடமில்லை என்பதனை மறுபடியும் நிரூபிக்க நாம் தமிழராக ஒன்றுபட்டு வாழ்வோம்.

வள்ளலார் மாணவன் திரு. க. நாகநாதன்,

செந்தமிழர் பாசறை – ஓமன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles