spot_img

துரோகத்தின் வேர் !!!

மே 2025

துரோகத்தின் வேர் !!!

1,75,000க்கும் மேலான ஈழச் சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப் போரின் முந்தைய ஆண்டுகளிலும், போர்ச் சூழலிலும், போரின் பின்நாட்களிலும் இழைக்கப்பட்ட  துரோகங்கள் எண்ணற்றவை. அத்துரோகங்களினால் விளைந்த இழப்புகள் தமிழினத்தின் வரலாற்றில் என்றும் மறக்கக்கூடாதவை.

ஆரியப்பகையின் இந்தியத்  துரோகம்! அதற்குத் துணைநின்ற திராவிடத் துரோகம்! கருணா தொடங்கி கருணாநிதி வரையான அகப்பகையும், ஆணவப் பகையும் இனத்தைக் கொன்ற மாபெரும் துரோகம்.

அவற்றுள் முதன்மையான துரோகம் தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுத்த கருணாநிதி, செயலலிதா, ப. சிதம்பரம் போன்றோர் இழைத்தது.

எட்டுக் கோடித் தமிழர்கள் திராவிட மாயையில் தேர்ந்தெடுத்த தலைவர்கள்,  அத்தமிழர்களை மானாட மயிலாட போதையில் தள்ளி சமாதானப் பேச்சு நாடகம் போட்டு, எழுச்சியுற்ற தமிழர்களையும் அடக்கி ஒடுக்கி, இனவழிப்பை இருட்டடிப்பு செய்த கருணாநிதியின் அதிகார ஆணவ துரோகம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு, தீவிரவாத அமைப்பு இதனைத் தடைசெய்ய வேண்டும் என்றும்,  போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும் சொன்ன செயலலிதாவின் துரோகம்.

சோனியா – காங்கிரசு விசுவாசி என்ற பெயரில் ஒன்றிய அதிகாரத் திமிரில் தமிழர்களுக்கு எதிரான பல அழிவுத்  திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தியவர் – விடுதலைப்புலிகளைத் திட்டமிட்டு நம்ப வைத்து அழித்த தமிழன் சிதம்பரத்தின் துரோகம்.

ஆரிய எதிர்ப்பு என்ற போர்வையில்  சமூகநீதி, சாதிமறுப்பு, கடவுள் மறுப்பு என ஊதிப் பெரிதாக்கப்பட்ட போலிப்பிம்பமான ஈரோட்டு இராமசாமியும், தமிழ் மொழி மீதான ஆளுமை காரணமாக அண்ணாதுரை, கருணாநிதியும் தமிழினத்தின் தலைவர்களாக உருப்பெற்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் அவர்களைத் தமிழினத்தின்  தலைவர்கள் எனக் கொண்டாடினர்.

தமிழ்த் தலைவர்களை, தமிழர்களை சாதிய ரீதியாக இழிவுபடுத்தி, பிளவுபடுத்தி, மறுபுறம்  எம். சி. ஆர். செயலலிதா, வைகோ போன்ற ஆரிய  திராவிட வழித்தோன்றல்களைத் தலைவர்களாகத் தமிழர்களின் மீது கட்டிய சூது அறியாமல் நாம் அவர்களைக் கொண்டாடினோம். இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

1950ல் பராசக்தி படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி (கதை அவருடையதல்ல என்று ஒரு காணொளியில் நடிகர் திலகம் சிவாசி கணேசன் கூறியிருந்தார்) அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல படங்களில் கதை, வசனம் எழுதியவர். திரைத்துறையில் மட்டுமின்றி தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சாதகமாக பல்வேறு கதை, வசனம் எழுதியும் பேசியும், கபட நாடகம் நடத்தியவர் இவர் என்பதற்குக் கடந்த ஐம்பதாண்டு கால திராவிட  வரலாறே சான்று.

2009 இன அழிப்பு காலம் வரைக்கும், தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்ட மனிதராக இவர் வலம் வந்திட, கருணாநிதி தான் தமிழினத் தலைவர் என்று நம்பி இருந்த காலம் ஒன்றும் இருந்தது.

தமிழகம் மட்டுமல்ல, ஈழமும் ஏன் உலகத் தமிழர்களும் அவர் மீது வைத்திருந்த  நம்பிக்கை, மதிப்பு, மரியாதை, நம்மவர் என்ற பாச உணர்வையும் அவர் தன்னலத்துக்காகத் தூக்கியெறிந்தார்.

அரை நூற்றாண்டுகளாக அரசியலிலும், கால் நூற்றாண்டுகளாக ஆட்சி அதிகாரத்திலும் கோலோச்சி  ஊழலில் திளைத்து, அதிகாரப் போதையில், பதவிப் பேராசையில், ஆணவத்தில் எடுத்த ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாடு நமக்கு அவருடைய உண்மை முகத்தைக் காட்டியது.

நம்பவைத்துக் கழுத்தறுத்த அந்த கோர முகம் இழைத்த துரோகத்தின் விளைவால், ஈழமே நிலைகுலைந்தது; தமிழினம் பேரழிவைச் சந்தித்தது.

2006 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில் திமுகவும் காங்கிரசும்:


ஈழத்தமிழர் மீது தொடர்ச்சியான கடும் மோதல் போக்கினைக் கொண்டியங்கிவந்த காங்கிரசு கட்சியுடன் 2006ல் கூட்டுச் சேர்ந்தார் கருணாநிதி. 2006 தமிழகத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய சக்திகளின் கோரிக்கையினையும் மீறி, ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும் வக்கிரமான காழ்ப்புணர்வைக் கொண்ட காங்கிரசிற்கு தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுத்தார் கருணாநிதி. தேர்தல்களின் முடிவில் அவரது காங்கிரசு உடனான கூட்டணி 234 தொகுதிகளில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றியீட்டியது.

அதன்பின்னர் நடந்த அனைத்தும் துரோக வரலாறு!

தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுகவுடன் பங்காளிகளாக இருப்பது தனது ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்குச் சாதகமானதென்பதை தேர்தலுக்கு முன்னமே கணித்திருந்த சோனியா, வெற்றியின் பின்னர் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

காங்கிரசு கட்சியின் ஈழத்தமிழர் எதிர்ப்புப் போக்கு கருணாநிதி அறியாததன்று; இலங்கையில் பெளத்த இனவாதிகளும், சோனியாவும் தமிழர்மேல் கொடூரமான யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விடத் திட்டமிடுகிறார்கள் என்று 2006 இல் கருணாநிதி நிச்சயமாக அறிந்துதான் வைத்திருந்தார்.

இந்திய ஒன்றிய அரசு கருணாநிதியைப் பற்றித் தெளிவாகக் கணித்திருந்தது. போர்ப் பயிற்சி, நவீன போர்க்கருவிகள், இராணுவ வல்லுநர்களைக் கொடுத்து இலங்கை அரசு வழியாக ஈழப் போராளிகளை அடக்கிவிடத் திட்டமிட்டது போல், தமிழக மக்களின் எழுச்சியைக் கருணாநிதி மூலம் திசை திருப்பிவிடலாம் என அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களின் வழிகாட்டுதல் படியே கருணாநிதியும் நாடகக் காட்சிகளின் ஒவ்வொரு படுதாவையும் இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். பதவியில் நீடிப்பதற்காக எதையும் பலியிடத் தயாராகும் இந்த முதிய நரி கருணாநிதியை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

2008 அக்.14இல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. “15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி செய்யவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்” என்ற தீர்மானம் – அனைத்துக் கட்சிகளின் முடிவாக வந்து டெல்லிக்கும் அனுப்பப்பட்டது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு நெருக்கடியைத் தந்து போர் முடிவுக்கு வருமென அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் இந்தப் போரை இந்திய ஒன்றியம் தான் நடத்துகிறது என்பது கருணாநிதிக்குப் புலனாகியிருந்தது போலவே எல்லோருக்கும் வெளிச்சமாகியிருந்தது. ஒரு வாரத்தில் இலங்கையிலிருந்து, இராசபக்சேயின் தம்பி பசில் இராசபக்சே அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சியைச் சந்தித்து விட்டு, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கான சூழலே இல்லையென விளக்கிவிட்டுப் போனார். போரைத் தொடருங்கள் என்று அவருக்குச் சொன்ன பிரணாப் முகர்சி, கருணாநிதியிடம் என்ன பேசினார் என்பது தெரியாத மூடு மந்திரமானது.

“அனைத்துக் கட்சிகள் கூடி எடுத்த முடிவு இது. எனவே மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீங்கள் சொன்னதைப் பரிசீலிக்கிறோம்” என கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளை மதிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச சனநாயகப் பார்வை கூட இல்லாமல், பிரணாப்முகர்சியின் பேச்சு எனக்குத் திருப்தியளிக்கிறது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் நாடகம் போலவே பல நாடகங்களைத் தொடர்ந்து, அரங்கேற்றிக் கொண்டிருந்தவர் – இறுதியில் திடீர் உண்ணா நோன்பு நாடகத்தையும் நடத்திக் காட்டினார்.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த உண்ணா நோன்புப் போராட்டம்:

2009 இல் இனவழிப்புப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்தபொழுது, சோனியாவுக்குக் கடிதம், தந்தி என்று ஆரம்பத்திலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு நாடகங்கள், பின்னர் மனிதச்சங்கிலிப் போராட்டம் என்றும் தொண்டர்களைக் கொண்டு தனது தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்தும், உண்ணாவிரதப் போரட்டம் என்று மெரினா கடற்கரையில் சில மணி நேரங்களே படுத்திருந்தும் எழுந்து வந்துவிட்டார். போர் முடிந்துவிட்டது, இலங்கையரசை அடிபணிய வைத்துவிட்டோம் என்று கருணாநிதி பேசியது முழுப்பொய்யென்பது அவரது கட்சிக்கும் அவருக்கும் நன்கு தெரியும்; ஆனாலும் அதைத் தெரிந்தே செய்தார் அவர்.

போர் முடியாதென்பதும், புலிகள் அனைவரும் கொல்லப்பட்டு, தமிழர் தாயகம் முற்றாக சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்படும்வரை தொடர்ந்து நடக்கும் என்பதும் காங்கிரசினால் அவருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு, அவரின் சம்மதமும் பெற்றபின்பு தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்படியிருக்க, போர் முடிந்தது என்று அவர் கூறியது மக்களை ஏமாற்றி, தமிழகத் தமிழர்களின் உணர்வெழுச்சிக்கு மூடி போட்டதோடு, இவர் சொன்னதை நம்பி பதுங்கு குழியினின்று வெளிவந்து கொத்துக்குண்டுகளுக்கு ஈழத்தமிழர் பலர் இரையாகவும் காரணமானது.

அப்படியிருந்தும் ஊடகவியலாளர் ஒருவர், “நீங்கள் கூறுவதுபோல் யுத்தம் நிற்கவில்லையே… யுத்தத்தினை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்போவதில்லை என்று இலங்கையரசு சொல்கிறதே?” என்று கேட்டதற்கு, தமிழருக்கே அவரது தமிழ்த் திறமையினைக் காட்டி “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்று இவர் மனச்சான்றின்றி மழுப்பிவிட்டவரல்லவா! தன் இன சொந்தங்கள் என அடைக்கலம் தேடி வந்தவர்களை சிறப்பு வதை முகாம்களில் அடைத்து இன்றளவும் அவர்கள் படும் கொடும் துயரத்திற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதியல்லவா!

ஒடுக்கப்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டங்கள்! அடக்கப்பட்ட தமிழர் உரிமைக்குரல்!

தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல்  காங்கிரசுக்கான ஆதரவை  திரும்ப பெறப்போகிறோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார். தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக தமிழ்த் தேசியப் பேராசான் ஐயா. மணியரசன், அண்ணன் செந்தமிழன் சீமான், கொளத்தூர்மணி, அமீர் மற்றும் நூற்றுக்கணக்கான தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. ஐந்துமுறை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர் பாரதிராசா உள்ளிட்ட உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

எந்த ஒரு மக்கள் திரள் போராட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.  போரை நிறுத்து எனத் துண்டறிக்கை கொடுத்ததற்காக அவர் எண்ணற்றோரைச் சிறையில் அடைத்தார்.

’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியது; வழக்குப் பதிவு செய்து அச்சுக் கூடங்களைக் கையகப்படுத்தியது.

போர்க் காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்களில் அச்சடிக்கவிடவில்லை; மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்பட்டன.

சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள்; அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும்; ஒட்டுபவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் புகைப்படத்தைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் தடை இருந்தது. சுவரெழுத்தில் கூட தலைவர் படத்தை அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி. (தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது படங்கள்,  பதாகைகள் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பேரெழுச்சிக்குப் பின்னரே பொதுவெளியில் காட்சிக்கு கிடைத்தன)

போர்க்குற்றங்கள் குறித்த குறுந்தகடுகளை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய குறுந்தகடுகளைப் படி எடுக்க முடியாமல் தடை செய்தது.

போரை நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களைத் தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு. சென்னை உயர்நீதி மன்றத்தின் உள்ளேயே திட்டமிட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, நீதிபதி உள்ளிட்ட பலரை கொலைவெறியோடு அடித்துத் துன்புறுத்தியது திமுக.

ஈகி முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ்த் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்ததோடு பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார் கருணாநிதி. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும் கடன் தொல்லையாலும், உடல்  நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது திமுக அரசு.

மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் மக்கள் கூடும் இடங்களில் அல்லாது ஆள் நடமாட்டமற்ற மாற்று வழிகளில் உடனடியாக நடத்தி முடிக்கப் பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

தமிழீழ போர்க் காட்சிகளை தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார். போர்க்காட்சிகளை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

சென்னை மற்றும் இதர மாவட்ட அரசுக் கருத்தரங்கக் கூடங்களில், தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழிப் பிரச்சனை என எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

சென்னை தேவநேயப் பாவணர் அரங்கத்தில்  ஒவ்வொரு முறையும் காவல்துறை அனுமதி பெற்றே கூட்டம் நடத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.
 
தமிழகக் கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களைக் கைது செய்தனர்.

போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா… அவர்களுக்கு யார் யார் உதவி செய்கிறார்கள் என்று கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், இரத்தம் உள்ளிட்ட இன்றியமையாத நிவாரணப் பொருட்களைத் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் அன்றைய உளவுத்துறை அதிகாரி சாபர்சேட் மூலம் தடை செய்தார் கருணாநிதி.

இறுதிகட்ட போர் நிகழ்வுகளில் கருணாநிதியின் சதிகள்

ஈழத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், டெல்லியின் ஒன்றிய அரசுப் பிரதிநிதிகள், ஐநாவின் தலைமை அலுவலர்கள் ஆகியோருடன் தகவல்தொடர்பில் இருந்த கருணாநிதி மகள் கனிமொழி, அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், பூலித்தேவன் உள்ளிட்ட சில நூறு பேரை வெள்ளைக் கொடி ஏந்தித் சரணடையச் சொல்லி செய்தி அனுப்பினார்.  இதனை நம்பிச் சென்ற அவர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

அனைத்துலகப் போர் விதிகளின் படி சரணடைந்த அவர்கள் போர்க்கைதிகளாகக் கருதப்பட்டு உயிரோடு இருந்திருந்தால், போருக்குப் பின்னான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைகளில் புலிகள் மற்றும் தமிழர் பிரதிநிதிகளாக அவர்கள் பேசியிருக்கக் கூடும். எனவே தமிழர் சார்பாகப் பேச ஒருவர் கூட பிழைத்திருக்கக் கூடாது என்ற இலங்கை அரசின் குரூர எண்ணத்தைச் செயலாக்க  கனிமொழி உதவினார்.

இறுதியில் பிரபாகரன் குடும்பத்திலும் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது எனக் கூறி தம்பி பாலச்சந்திரன் படுகொலைக்கும் துணையாக நின்றவர் கருணாநிதி.

இது மட்டுமின்றி இறுதிப் போர்ச் சூழலிலும், பின்னரும் கருணதுரோகத்தின் நாடகங்களும் இடையூறுகளும், தடைகளும், துரோகங்களும் எண்ணற்றவை.

தலைவர் பிரபாகரனைப் பெற்றெடுத்த அன்னையும் 83 வயது நிறைந்த மூதாட்டியுமான பார்வதி அம்மையார் தமிழகத்திற்கு சிகிச்சை பெறவந்தபோது நெஞ்சில் ஈரமில்லாமல் அவர் வந்த விமானத்திலிருந்து கூடக் கீழே இறங்கவிடாமல் அவரைத் திருப்பி அனுப்பிய நிகழ்ச்சியே, ஈழத்தமிழர் விடயங்களில் கருணாநிதி கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு மிகச்சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு காலத்திற்கும் கருணாநிதி கொண்டிருந்த கொள்கைகளில், அவரின் நிலைத் தன்மை கேள்விக்குறியே. அந்தந்த காலத்திற்கு அவர் பேசும் வீர வசனங்களை அந்தந்த காலத்திற்குரிய தனித்தனி கல்லறைகளில் புதைத்து விடுவார். பழையவற்றைப் புதைத்த கல்லறைகளின் அருகே புதிய கல்லறைகளையும் உருவாக்கி கொள்வார். அதற்குத் தமிழினத் தலைவர் தான் மட்டுமே என்ற பொய்யான அதிகார ஆணவத்தை வளர்த்தெடுத்த பதவிவெறி தான் காரணம்.


“தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்காகப் போர்க்களத்தில் தன் பிள்ளைகளையே சாகக் கொடுத்தார் தேசியத் தலைவர். தன் பிள்ளைகளின் அமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அலைந்து கொண்டிருந்தார் தமிழினத் தலைவர் என நம்பப்பட்ட கருணாநிதி” என்ற புதிய ஒப்புமைச் சொல்லாடலை அவரது வாழ்வியல் தான் உருவாக்கியது.

எழுச்சிகரமாகத் தொடங்கி மயக்கும் வெற்றுச் சொல்லாடல்களாக முடிந்து போன அவரது இழிவரலாறு தான் திராவிட மாடலாகிப் போனது.

கருணாநிதியைப் போல், தமிழினத்தை நம்பச் செய்தவரும் இல்லை; அவரைப் போல் தமிழனத்தை மோசம் செய்தவரும் இல்லை.

வங்கக் கடலின் இந்த முனையில் அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கடலின் இன்னொரு முனையில் ஈழத்து உறவுகள் சொல்லொணாத் துயரத்துக்குள்ளும் மரணத்துக்குள்ளும் போய்க்  கொண்டிருந்தார்கள்.


2008 அக்டோபர் 14 கருணாநிதி  நடத்திய துரோக நாடகத்தின்  பின் ஐம்பதாயிரம் தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. மே 16ல் முள்ளிவாய்க்கால் நெடுக 25 ஆயிரம் பிணங்கள் ஒரே நாளில் விழுந்தன. கடைசியாய் மே17-18ல் ஒரு லட்சம் பேரைக் காவு வாங்கி தீவிரவாதத்தை ஒடுக்கியாயிற்று என்று இராசபக்சே குலுக்கிய கரங்களுக்குள் சிவசங்கர மேனன்,  எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் கரங்கள் மட்டுமல்ல  கருணாநிதியின் கரங்களும் இருந்தன.

“உங்கள் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்” என்ற இராசபக்சேவின் எக்காளம், இந்திய ஒன்றியத்துக்குச் செலுத்திய காணிக்கை மட்டுமல்ல; கருணாநிதிக்குச் செலுத்திய காணிக்கையும் தான்.

உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே! ஈழப்போர் இந்திய ஒன்றியத்தின் துரோகத்தினால் வீழ்ந்தது. அந்த  துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.

ஈழத்தில் சந்திப்போம்!

திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles