சூலை 2023
தூரிகைப் போராளி ஓவியர் வீர சந்தானம்
வீர சந்தானம் என்பவர் ஓர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். ஓவியர் சந்தானத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாகத் திகழ்ந்தவர். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். தமிழ்த் தேசியத் தலைவர்கள் அனைவரின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றவர். அறம் மீது மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தவர். தமது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழருக்காகவும் உழைத்து எண்ணற்ற நண்பர்களையும், அவர்களின் நம்பிக்கையையும் சேர்த்து வைத்தவர். வீர சந்தானம் என்பவர் மொழி, இனம், நாடு மற்றும் பண்பாடு தொடர்பான விடயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வந்தவர்.
இளமைப்பருவம்:
வீர சந்தானம் அவர்கள் 1947ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து, ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள். அவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தன்னுடைய இளநிலைக் கல்வியை முடித்து, பின்னர் சென்னையில் உயர் கல்வியைத் தொடர்ந்து கற்றார்.
கலை ஆர்வம் :
சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தாலும் கோயில்களில் காணப்படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும், சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசஸ்தானில் பனஸ்தலி வித்யா பீட் பல்கலைக்கழகத்தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் மற்றும் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். இளம் அகவையில் பள்ளி நாடகத்திலும் நடித்தும் உள்ளார்.
அலுவலகப் பணி:
சென்னை ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்து, மத்திய அரசினுடைய நெசவாளர் சேவை மையத்தில் துணை ஆணையராகப் பொறுப்பேற்று வடகிழக்கு மாநிலங்களிலும் மத்திய இந்தியாவிலும் பணிபுரிந்தார். சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தார். 25 ஆண்டுகள் அங்கு பணி செய்த பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார்.
கலைப் பணி:
கல்தூண்களில் இடம் பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி அந்த வடிவமைப்பைப் பதித்து ஓர் அழகான விரிப்பைச் செய்தார். கன்னனூர் கோவில்களில் இருந்த வீரன், குட்டிச்சாத்தான், குளிகன் போன்ற வடிவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை தொகுத்து வடிவமைத்து திரைச் சீலைகளை உருவாக்கினார். தோல் பாவைக் கூத்து இவருக்குப் பிடித்த ஒன்று. தோல் பாவைக் கூத்து பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. திரிபுரா மாநிலப் பழங்குடியினரின் மரபுக் கலை வடிவங்களை ஆடைகளில் அறிமுகம் செய்தார். புதிய உத்திகளைக் கையாண்டு பீங்கான், மெட்டல் ரிலீப் போன்ற பல வகையான பொருள்களைப் பயன்படுத்தி புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கினார் . சகட யாழ், மகர யாழ், காமதேனு எனத் தமிழர்களின் அடையாளங்களை ஓவியங்களாக எழுதியுள்ளார்.
அரசியல் ஆர்வம்:
ஓவியக் கலையில் இருந்த ஈடுபாட்டைப் போலவே தமிழ்த் தேசியம், பெரியாரியம் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தேசிய இயக்கப் பணிகளில் அப்போதே வீரசந்தானம் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். தஞ்சைக்கு அண்மையில் உள்ள விளாரில் “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்” என்னும் கூடத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 இல் நிகழ்ந்த ஈழப் போரின் அவலங்களைச் சித்திரித்துக் காட்டுகின்றன. தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொள்வதற்கு வழி வகுத்தார்.

புகழ் பெற்ற ஓவியங்கள்:
பிகாசோவின் ஓவியங்களைப் போலவே வீர சந்தானத்தின் ஓவியங்களும் வரும் காலத்தில் அழியாத புகழைப் பெறும். குறிப்பாக பட்டீசுவரம் ஆலயத்தில் மற்றும் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் காணப்படும் ஓவியங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
“வாழும் மரம் “ என்ற ஒரு அற்புதமான ஓவியத்தில் மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகள், காய்கள், கனிகள், அக்கிளையில் அமர்ந்து இருக்கும் பறவைகள் என்று உயிர்களின் உலகமாக அதைப் படைத்துள்ளார். கம்பன் காட்டிய அனுமனை மையமாக்கி, அவர் தீட்டிய சித்திரமும் விசித்திரமானது.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்;
துங்க கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா “
என்று பக்தர்கள் பரவசப்படும் பாடலை மனதில் கொண்டு, யானை முகத்தான் யாழ் வாசிக்கும் ஓவியம் மதுரை விமானநிலையத்தில் அண்மையில் அவர் வரைந்த ஓவியம்தான். இது காண்போரைக் காந்தமாய்க் கவர்கின்றது.
திரைப்பட நடிப்பு:
திரை இயக்குநர் பாலு மகேந்திராவின் “சந்தியா ராகம்” என்னும் படத்தில் நடித்துள்ளார் . மேலும் தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி, அனேகன், அவள் பெயர் தமிழரசி ஆகியவை வீர சந்தானம் நடித்த பிற படங்கள் ஆகும்.
விருதுகள்:
காலத்தால் அழியா ஓவியங்களைப் படைத்த வீரசந்தானத்தின் ஆற்றலுக்கு, அகில இந்திய தொழிற்துறை கண்காட்சியின் விருது 1997 ஆம் ஆண்டு கிடைத்தது. சிறந்த ஓவியத்திற்கான தேசிய விருதை 1988 ஆம் ஆண்டு பெற்றார். வன விலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்திற்கான விருதை 1975 ஆம் ஆண்டும், சிறந்த ஓவியங்களைப் படைத்தமைக்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் ஓவியர் வீரசந்தானத்தை அழகுபடுத்தின.
இறப்பு:
வீரசந்தானம் அவர்கள்,13 சூலை 2017 இல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுதந்திரத் தமிழ் ஈழ உயிர் ஓவியங்களை, காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை ஆக்கிய நிகர் அற்ற ஓவியனை மரணம் எனும் காலன் ஈவு இரக்கம் இன்றி கொத்திக்கொண்டு சென்று விட்டான். ஓவியர் வீர சந்தானத்தின் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவர் மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்கிறார். காலத்தால் அழியா இப்பெருமகனாருக்கு நமது வணக்கத்தையும் மரியாதையையையும் செலுத்துவோம்!
திருமதி. சித்ராதேவி,
தலைவி – மகளிர் பாசறை,
செந்தமிழர் பாசறை – குவைத்.