spot_img

தெற்கெல்லைக் காவலர் குமரித்  தந்தை  நேசமணி

சூன் 2023

தெற்கெல்லைக் காவலர் குமரித்  தந்தை  நேசமணி

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் மாகாணத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க மிகத் துணிச்சலான முறையில் பல்வேறு போராட்டங்களும் உண்ணாநோன்பும் நடத்தி, 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கத் தலைமையேற்றுப் பாடுபட்ட ஒரு சிறந்த சமூக ஆர்வலர் மார்ஷல் நேசமணி அவர்கள். இதனால் நாஞ்சில் நாட்டு மக்கள் இவரை குமரித் தந்தை என்று வாஞ்சையோடு அழைத்துச் சிறப்பிக்கின்றனர்.

இளமைக்காலம்:

குமரித் தந்தை மார்சல் அ நேசமணி அவர்கள் தென்தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில்  விளவங்கோடு வட்டம் பள்ளியாடி எனும் நேசபுரத்தில், 1895-இல் சூன் 12-ஆம் தேதி அப்பாவு &- ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்ததனால், இவருக்குக் கேரளத்து நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்தது.

பள்ளி கல்லூரிக் காலம்:

இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர்நிலைப் பள்ளியில் படித்து, பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து

ஒரு வருடம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே காலக்கட்டத்தில் இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டமும் பெற்றார். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில், 1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

எதிர்கொண்ட சமூக வன்கொடுமையும் செய்த சீர்திருத்தங்களும்:

நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்குக் குந்துமனையும் (ஷிtஷீஷீறீ) இடப்பட்டிருந்ததைக் கண்டு வெகுண்டு, முதல் நாளன்றே அதைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையைத் தட்டிக் கேட்டார். அதே போன்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் மேல் சாதி வழக்கறிஞர்களுக்கும் கீழ் சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். தன் வாழ்நாள் முழுக்கவுமே அவர் சமுதாயச் சீர்திருத்தத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.

அரசியல் புரட்சியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலும்:

1943-இல் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1943 முதல் 1947 வரை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார். டிசம்பர் மாதம் 1944-இல் இவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினராகவும், திருவாங்கூர் பல்கலைக்கழக நியமன உறுப்பினராகவும் ஆனார். 1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரஸ்-ஐ ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 முதல் 1952 வரை உள்ள கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரசின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். 1955 முதல் 1956 வரை இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுப் பல பணிகள் செய்தார்.

நாடாளுமன்றச் செயல்பாடும் சிறப்புப் பாராட்டுகளும்:

1957ல் தமிழ்நாடு சட்டமன்றம் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர், நாகர்கோயில் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். அப்போது இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இறக்கும் வரை பணியாற்றினார்.

அரசியலில் இவர் ஆற்றிய முக்கிய பங்கு கன்னியாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். ஆனால், அங்கு பெரும்பாலானோர்  மலையாளம் பேசுபவர்களாக இருந்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, குமரி மாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. திருவாங்கூர் இராஜ வம்சத்தின் ஆட்சியில் சமூகத்தில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ்மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள்.

கன்னியாகுமரி மீட்பு நடவடிக்கைகள்:

கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ்நிலையில்தான் தோன்றின. இந்தச் சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. இந்தப் போராட்டத்தை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் மார்ஷல் அ.நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது. இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறை எதிர்ப்பு தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி பல்வேறு வகையான அரசியல் செயல்பாடுகளிலும்  தாக்கம் விளைவிக்க எண்ணித் தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவம்பர் 1- இல் மொழிவழி மாகாணப் பிரிவினையின் போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் மார்ஷல் அ.நேசமணியும், ப. தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்தனர். அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டமாக மாறியது.

இயற்பெயரும் காரணமும்:

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி கூறுகிறார்:  “கழிந்த பல ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு”. இந்தச் சாதனைகளின் காரணமாக பி. எஸ். மணி, நேசமணி அவர்களுக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இறுதிக்காலமும் நினைவுமண்டபமும்:

இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. செயற்கரிய சாதனைகளைப் புரிந்த மார்ஷல் ஏ.நேசமணி 1968 ஜூன் 1-ஆம் தேதி காலமானார். இறக்கும் வரை இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969-இல் நடந்த இடைத்தேர்தலில் தான், அதற்கு முன்பு 1967-இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கருமவீரர் காமராசர் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முயற்சியால் மார்த்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது.

அன்னாரது பங்களிப்பும் அதை நினைவில் இருத்த வேண்டிய அவசியமும்:

1967 முதல் தமிழகத்தை ஆண்டுவரும் மக்கள் விரோத தமிழ் உணர்வற்ற திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக மற்றும்  ஒன்றிய ஆரியக் கட்சிகளான காங்கிரசு, பாஜக போன்றன சதித்திட்டம் தீட்டி நேசமணி, கருமவீரர் காமராசர் போன்ற பெருந்தலைவர்களைப் பல்வேறு சூழ்ச்சிகளால் தோற்கடித்தனர்; மறக்கடித்தனர்.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த மார்ஷல் ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க..!!

வாழ்க தமிழ் மொழி வானகமும் இவ்வையகம் உள்ள வரை..!!

வளரத் தமிழர் நாடு  தேர்ந்தெடுக்க வேண்டும் நல்ல தலைவரை!!

எத்திசையும் அன்னைத்  தமிழின் குன்றாப்புகழ் மணக்க வைத்திடுவோம்..!!

என்றும் வாழும் கன்னித் தமிழின் திறத்தை உலகுக்கு உணர்த்திடுவோம்!

திரு. சி.தோ.முருகன்,

செந்தமிழர் பாசறை – குவைத்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles