அக்டோபர் 2022
தேவாரம் – இறைநூல் ஓரு பார்வை!
பூமிப்பந்தில் நீண்ட நெடிய வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் அடக்கிய தமிழகம், பழங்காலம் தொட்டே தமிழ் இலக்கியச் செல்வங்களை உருவாக்கி, காத்து பிற்கால தலைமுறைகளுக்கு வழங்கியுள்ளனர். அவ்வரிசையில் சங்க இலக்கியங்கள் மற்றும் நீதி இலக்கியங்களுக்குப் பிறகு தோன்றியவையே பக்தி இலக்கியங்கள். ஏறத்தாழ கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தொடங்கியதுதான் பக்தி இலக்கிய காலம்.
பக்தி இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில் தேவாரமும், திருவாசகமும் முதன்மையானவை. சைவ சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர். இவர்களில் முதல் மூவரால் (மூவர் முதலிகள்) பாடப் பெற்ற திருப்பதிகங்களின் தொகுப்பே தேவாரம் என்ற இறை நூலாகும்.
மனித வாழ்வியலின் பயன்களாகக் கருதப்படும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு. இவற்றில் வீடு எனும் இறுதி நிலையை அடையச் சான்றோர்களால் வகுக்கப்பட்ட வழியே இறைத்தன்மையை உணர்ந்து போற்றுதல், அவ்வழி சைவ சமய பெருங்கடவுளான சிவ பெருமானைப் போற்றி மனிதவாழ்வில் சிறக்கவும், இறப்பிற்குப்பின் நற்கதி அடையவும் திருநெறிய தெய்வத் தமிழால் பாடப்பெற்ற திருப்பதிகங்களே தேவாரம்.
தேவாரம் பெயர்க் காரணம் தெய்வத்தைப் போற்றிப் பாடும் பாமாலை என்பதை குறிக்கிறது. மேலும் வாரம் என்ற சொல்லுக்கு இசை நடை என்ற பொருளும் உள்ளதால் தெய்வத்திற்காக இசை பொருத்திப் பாடப்பெற்ற பண்கொண்ட பாடல்கள் எனவும் பொருள்படும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரும் (384 பதிகங்கள்), திருநாவுக்கரசரும் (310 பதிகங்கள்) முறையே மூன்று திருமுறைகள் என மொத்தம் ஆறு திருமுறைகளும், கிபி எட்டாம் நூற்றாண்டில் சுந்தரர் (100 பதிகங்கள்) ஏழாம் திருமுறையையும் பாடப் பெற்றதாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகக் கருத்துக்களை மனதில் ஆழமாக விதைக்கும் இந்த தேவாரத் திருப்பாடல்கள் சோழ மன்னன் இராசராசன் காலத்தில், அவர் ஆணைக்கிணங்க நம்பியாண்டார் நம்பிகள் என்பவரால் சிதம்பரம் நடராசர் கோவிலில் இருந்து மீட்கப்பட்டு தேவாரத் திருமுறைகளாக தொகுக்கப்பட்டது.
இதனாலே, மன்னன் இராசராசன் திருமுறை கண்ட சோழன் என்று போற்றப்பட்டார். மேலும் இப்பாடல்கள் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் மணவிற்கூத்தன் காளிங்கராயன் என்ற சோழப் படைத்தலைவனால் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டதாக தில்லை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
தேவாரத் திருப்பதிகமானது இறைநெறி, இயற்கை எழில், சிவத் திருத்தலங்களின் பெருமை, ஈசனடி தொழுதல் என பல கூறுகளை உள்ளடக்கியதாகவும், தெய்வீகத் தன்மையை இசைபட செந்தமிழில் எடுத்துரைக்கும் அழகியல் இறைக்களஞ் சியமாகவும் திகழ்கிறது.
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே! தேவாரம்
தற்கால அரசியல் சூழ்நிலையில், இவ்வாறு சைவ சமயத்தை போற்றி, தமிழ் வளர்த்த மாமன்னன் ராசராசன் மற்றும் தமிழர்களை இந்து என்றும், தமிழர் மெய்யியல் சின்னங்களான கோயில்களை இந்து அடையாளங்கள் என்றும் கொஞ்சமும் அர்த்தமற்ற, ஒரு மதத்திற்கும் அடக்கும் ஆரிய, திராவிட சூழ்ச்சிகளை தமிழர்களாகிய நாம் ஒருபோதும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ கூடாது.
இந்த போலி அரசியலை முறியடிக்கும் முக்கிய நோக்கிலே, நமது பண்பாட்டு மீட்சிக்காக போராடும் வீரத்தமிழர் முன்னணியின் சீரிய முயற்சியில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருநன்னீராட்டு விழாவில் கோபுரத்தில் தமிழ் ஓங்கி ஒலித்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு திருத்தலங்களில் தமிழ் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு கருவறையில் தெய்வத்தமிழ் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒலித்தது
தமிழர் மறையாம் திருக்குறள் வழியில் அறம் பிறழா தமிழர்கள், நாம் நம் தமிழ் இறை நூல்களான தேவாரம், திருவாசகம், திருமந்திரம் என பற்பல நூல்களையும் அந்தியர்கள் தன்வயப்படுத்துவதை தவிர்த்து அழியா வண்ணம் பாதுகாத்து தமிழும், அறமும் புவியெங்கும் சிறப்படைய வேண்டுமென உறுதியேற்போம்.
திரு. பாரதிராசன் வல்லவன்
செந்தமிழர் பாசறை – அமீரகம்.