சனவரி 2024
தோழர் கி. வெங்கட்ராமன்
பல வரலாற்று அனுபவங்களைத் தனக்குள்ளே வைத்துக் கொண்டும், பல புரட்சித் தீக்கங்குகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டும், எதிர்காலத்தினது எழுச்சிமிகு மாற்றத்திற்கான விதைகளைத் தன்னுள்ளே புதைத்து வைத்துக் கொண்டும், வெறும் காகிதக் கற்றைகளாக உறங்கிக் கொண்டிருக்கிறன பல புத்தகங்கள். ஆனால் ஒருவர் அத்தகு புத்தங்களை எடுத்துப் படித்துவிட்டால் பின்னர் அப்புத்தகங்கள் படித்தவரை உறங்க விடுவதில்லை. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நமது ஐயா தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களையும், இளம் வயதில் அவர் படித்த புத்தகங்களையும், இன்று அவர் எழுதியுள்ள புத்தகங்களையும் கூறலாம். தமிழ்த்தேசியப் போராளி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் இணை ஆசிரியர், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர், தமிழ்நாடெங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர், ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள்.
தோழர் கி.வெ என்று அறியப்படும் கி. வெங்கட்ராமன் அவர்கள் தஞ்சாவூரில் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமதி. அனுசுயா இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தன் ஐந்தாம் அகவையிலேயே தனது தந்தையை இழந்த இவர், அதன் பின்னர் தனது தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்துள்ளார். தஞ்சை வீரராகவா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சரபோஜி கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கட்சியில் தன்னோடு பயணித்த தோழர் சுகந்தா என்பவரை காதல் திருமணம் செய்துகொள்ள, இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

பிராமணக் குடும்பப் பின்னணியில் பிறந்த கி. வெங்கட்ராமன் அவர்கள், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மிகுந்த ஒழுக்க கட்டுப்பாடுகளோடு குறிப்பாக சிறு வயது முதலே பெரிய அளவில் சாதியப் பாகுபாடுகள் இல்லாமல் தான் தனது தாயால் வளர்க்கப்பட்டார். இளம் வயது முதலே அறிவியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கி.வெ அவர்கள், டார்வினின் மனிதப் பரிமாண வளர்ச்சி பற்றியெல்லாம் படித்த பின்னர், கடவுள் மறுப்பு சிந்தனையுடன் வளர்கிறார். பொதுவுடைமை குறித்த புத்தகங்களைப் படித்துவிட்டு தனது கல்லூரிக் காலங்களிலேயே பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பல போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளார்; அங்குதான் இவருக்கு முதன்முதலில் ஐயா பெ. மணியரசன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை பொதுவுடைமைக் கட்சி தாண்டி பல ஆண்டுகள் பல போராட்டங்கள் பல இயக்கங்கள் கடந்த பின்னரும் இருவரும் இணைபிரியா நண்பர்களாய், இன்றைய நிகழ்கால தமிழ்த்தேசிய இயக்கப் போராட்டத்தின் முன்னோடிகளாய் இருந்து வருகின்றனர்.
தனது கல்லூரிப் படிப்பை முடித்த உடனேயே முழுநேரமும் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பயணிக்க முடிவெடுத்த கி.வெ அவர்கள், பல போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு தஞ்சை மாவட்டத்தில் அன்றைய பொதுவுடைமைக் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அதன் பின்னர், ஒரு சில ஆண்டுகளில் தேர்தல் அரசியலில் பொதுவுடைமைக் கட்சி சந்தர்ப்பவாதமாக இயங்குவதோடு தேசிய இன உரிமைகள் சார்ந்த விடயங்களில், விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகளில், ஈழப்போர் பற்றிய கொள்கை முடிவுகளில் காட்டிய முரண்பாடுகள் காரணமாக ஐயா பெ. மணியரசன் மற்றும் இன்னும் சில தோழர்களோடு சேர்ந்து பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி, இவர்கள் இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சியோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தனர். பின்பு அதிலிருந்தும் வெளியேறி பலகட்ட ஆலோசனைகள், கலந்தாய்வுகள், திட்டமிடல்களுக்குப்பின் தேசிய இனங்களின் உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், தனித்தமிழீழ நாட்டிற்கு ஆதரவாகவும் இறையாண்மை கொண்ட சுதந்திர தமிழ்த்தேசம் அமைய வேண்டும் என்ற இலக்கிலும் தமிழ்த்தேசியப் பொதுவுடமைக் கட்சியைத் தொடங்கினர். இக்கட்சி 2014ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்த் தேசியப் பேரியக்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் ஐயா கி.வெ தனது தலைமையில் 1991 ஆம் ஆண்டு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து அவர்களுக்கு மின்சாரம் தர கூடாது என மாபெரும் போராட்டத்தை நடத்திச் சிறை சென்றார். அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழ்த்தேசியம் அமையப் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், பலமுறை கைது மற்றும் அரசுகளின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டும் தொடர்ந்து போராடி வருகிறார். “ஆரியமும் இந்துத்துவாவும் வேறு வேறன்று; தமிழர்கள் இந்துக்கள் இல்லை; ஆரியம் தான் இந்துத்துவா என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றுகிறது” என்று கூறும் கி.வெ அவர்கள், சிறு வயது முதலே கொண்ட கொள்கையில் உறுதியானவர். தான் சாதி மறுப்பு திருமணம் செய்ததுடன் தனது இரண்டு மகள்களுக்கும் சாதி மறுப்பு திருமணம் தான் செய்து வைத்துள்ளார். திராவிடமும் ஆரியமும் ஒன்றுதான் என்று கூறும் நமது தோழர், அவர்கள் எப்படியெல்லாம் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்கள் என்று தெளிவாக விளக்குகிறார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா பெ. மணியரசன் அவர்களுக்குச் சிறந்த நண்பனாக ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கெடுத்துத் துணை நிற்பவர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள். சொல்லப்போனால் இருவரும் வேறல்ல… ஒன்றுதான் என்கிறார், அண்ணன் சீமான் அவர்கள்.
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் தமிழ்த்தேசியம், சூழலியல், தமிழீழம், வேளாண்மை, உலக அரசியல் எனப் பல தலைப்புகளில் விடுதலைப் போராட்டங்கள், கல்வி அரசியல், சட்டங்களின் தாக்குதல், உணவு உழவு எதிர்காலம், தடம் மாறாத் தமிழ்த்தேசியம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட தனது வாழ்நாளில் இதுவரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் விடுதலைக்காக தமிழ்த்தேசியக் களத்தில் போராடி வருகிறார். நிகழ்கால தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் நமக்கெல்லாம் முன்னோடியாய், வழிகாட்டியாய் நிற்கும் மூத்தவர் ஐயா கி.வெங்கட்ராமன் போன்ற தமிழ்த்தேசியப் போராளிகளை ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டாடிக் கொண்டு சேர்ப்பதன் மூலம் தமிழ் மக்களிடத்தே தமிழ்த் தேசியத்தின் அவசியத்தைப் புரியவைத்து வென்றெடுப்போம் தமிழர் அதிகாரத்தை!
திரு. ப. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.