spot_img

நெகிழி(பிளாஸ்டிக்) சூழ் உலகு!

ஆகத்து 2022

நெகிழி(பிளாஸ்டிக்) சூழ் உலகு!

மனித அறிவுக்கு எட்டியவரை இந்த பேரண்டத்தில் உயிரினங்கள் வாழத் தகுதியான இடமாக இன்றளவும் இருப்பது இந்த புவி மட்டுமே, அப்படிப்பட்ட புவியில், பல கோடி ஆண்டுகளாக பல உயிரிகள் வாழ்ந்து வந்தாலும், இந்த மனிதக்கூட்டம் மட்டுமே கடந்த இரு நூற்றாண்டுகளாக வேறு எந்த உயிர்களும் ஏற்படுத்தாத கேடுகளை இப்பூவுலகில் ஏற்படுத்தி வருகிறது.

இப்புவியானது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை மறந்து, அறிவியல் வளர்ச்சிக்காகவும், தனிப் பெரும் முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், தன்னுடைய அதி விரைவான நவீன வாழ்வுக்காகவும், இங்குள்ள நிலம், நீர், காற்று, மலை, காடு, ஆறு, குளம், குட்டை ஏரி, கடல் என எல்லாவற்றையும் கட்டுப்பாடற்ற முறையில், வரையறைகள் இல்லாமல் சுரண்டி சீரழித்துக் கொண்டிருக்கிறது இந்த மனிதக்கூட்டம்.

மனிதர்கள் தங்கள் வாழ்வியல் முறையை, மிக விரைவில் மாற்றிக் கொள்ளாவிட்டால், 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் நிலம், நீர், காற்று இவையனைத்துமே கழிவுகளால் நிரப்பப்பட்டு உயிர்கள் வாழத்தகுதி இல்லாத இடமாக மாறிவிடும், என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சுற்றுச்சூழல் பற்றியும், இப்புவியை வாழ்விடமாகக் கொண்ட பிற உயிரினங்கள் பற்றியும் எவ்வித புரிதலும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கும் எண்ணற்ற பொருட்களை நாம் அன்றாட வாழ்வில் பயண்படுத்தி வருகிறோம் அவற்றுள் மிகவும் பேராபத்து நிறைந்த, நகமும் சதையுமாக பயண்படுத்தும் நெகிழி பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

பகுதி -1:

நெகிழி அல்லது பிளாஸ்டிக்.

நெகிழியின் வகைகள்

பொருட்களின் உற்பத்திக்கு நெகிழி முதன்மை தேர்வாக இருப்பது ஏன்?

நெகிழியின் பேராபத்து.

பகுதி -2:

நெகிழி கழிவுகளின் பெருக்கமும் நுகர்வு கலாச்சாரமும்.

பெரு முதலாளிகளின் வருவாய் பெருக்கத்திற்காக நெகிழி நம் மீது திணிக்கப்படுகிறதா?

நெகிழி மறுசுழற்சி என்பது ஏட்டுச் சுரைக்காயா?

நெகிழியின் ஆபத்திலிருந்து மீள்வதற்கான மாற்றுவழிகள்.

நெகிழி அல்லது பிளாஸ்டிக்:

நெகிழி என்பது பிசைவு கொள்ளும் அல்லது வார்க்கத் தக்க, ஒரு பல்படிப்பொருள் (பாலிமர்).

இது இளகிய நிலையில் தேவையான வடிவத்தை பெற்று பின் இறுகியவுடன் அந்த வடிவத்தை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையுடையது.

நெகிழியின் வகைகள்:

பொருட்களின் உற்பத்திக்கு நெகிழி முதன்மை தேர்வாக இருப்பது என்?

ஒரு நொடிப்பொழுது சற்று நின்று நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களையும் உற்று நோக்கினால், அதில் பெரும்பான்மையான பொருட்கள் நெகிழியால் ஆனது என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. அந்த அளவிற்கு எங்கும் நெகிழி எதிலும் நெகிழி என்றாகிவிட்டது.

வீட்டு உபயோகப் பொருட்கள் தொடங்கி மின் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள், மருத்துவத்துறை சார்ந்த பொருட்கள், வாகனங்கள் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த பொருட்கள், கட்டுமானத்துறை சார்ந்த பொருட்கள், விவசாயத்துறை சார்ந்த பொருட்கள், ஆடைத்தொழில் சார்ந்த பொருட்கள் என அனைத்துத் துறைகளிலும் பொருட்களை உற்பத்தி செய்ய நெகிழி முதன்மை தேர்வாக இருப்பதற்கு காரணம்:

பிற மூலப்பொருட்களான இரும்பு, மரம் போன்றவற்றை விட நெகிழிப் பொருள்களின் விலை மிகவும் குறைவு.

நெகிழியைப் பயன்படுத்தி வெவ்வேறு வண்ணத்தில், வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.

மரம், இரும்பு இவற்றைவிட நெகிழியை எளிதாக வெவ்வேறு வடிவங்களில் வார்க்க முடியும்.

நெகிழியால் ஆன பொருட்கள் எடையின்றி இலேசா கவும். உடையாமல் இருப்பதால் பொருட்களை கையாள்வது எளிது.

நெகிழியால் ஆன பொருட்கள் சூரிய ஒளி, நீர், இரசாயனங்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதால் அதன் ஆயுட்காலம் அதிகம்.

நெகிழி மின்கடத்தாப் பொருள் என்பதால் மின்கசிவு இருக்காது.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நெகிழி கழிவுகள் சிறு துகள்களாக சிதைவுற்று மண்ணில் கலந்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பாதிப்படையச் செய்கிறது.

மண்ணில் உள்ள நெகிழி துகள்கள், மண் நீரை உறிஞ்சும்போது அவற்றுடன் கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. குறிப்பாக நாம் பயன்படுத்தும் குடிநீரில் நெகிழிகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

திறந்த வெளியில் வீசப்படும் நெகிழி கழிவுகள் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளின் உணவில் கலந்து அவற்றை உயிரிழக்கச் செய்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலையங்களான ஆறு, குளம், ஏரி இவற்றில் கொட்டப்டும் நெகிழி கழிவுகள் நீரை மாசுபடுத்துவதுடன், அதில் உள்ள உயிரிகளின் உணவுத் சங்கிலியில் கலந்து அவற்றையும் பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறது.

நெகிழியின் பேராபத்து:

அணுக்கழிவுக்கு அடுத்தபடியாக உலக நாடுகள் என்ன செய்வதேன்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு விழி பிதுங்க நிற்கும் விடயம்தான் நெகிழி கழிவுகள்.

நெகிழி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த எண்ணற்ற வழிமுறைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதை ஆய்வு அறிக்கைகள் உறுதி செய்கிறது. 1950ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதும் தோராயமாக 9.2 பில்லியன் டன் நெகிழிப் பொருட்கள் உருவாக்கப்பட்டு அதில் தோராயமாக 7 பில்லியன் டன் பொருட்கள் நெகிழி கழிவுகளாக நிராகரிக்கப்பட்டு, அதில் பெருமளவிலான கழிவுகள் திறந்தவெளி நிலப்பரப்பு மற்றும் கடலில் பாதுகாப்பற்ற முறையில் குவிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு 2021ல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு நம் சென்னை நகரமே வாழும் சான்றாக உள்ளது. சென்னையில் உள்ள பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கு, பள்ளிக்கரணை, அடையாறு, கூவம் ஆறு போன்ற இடங்களில் உள்ள நெகிழி கழிவுகள் நம் கண்முன்னே உள்ள சான்றுகள். இதை போன்றே உலகம் முழுவதும் உள்ள சிறு, குறு, பெருநகரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் நிலைமை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை உணரமுடியும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான நெகிழி பொருட்கள், புதைபடிம எரிபொருள் மூலம் கிடைக்கும் மக்காத நெகிழி வகை சார்ந்தது. இத்தகைய மக்காத நெகிழி பொருட்களை, நாம் பயன்படுத்தி வீசிய பின்பு, அவை மிக நீண்ட ஆண்டுகளாக மக்காமல் நீரிலும், நிலத்திலும், காற்றிலும் முழுமையாகவோ அல்லது சிறிய நுண்துகளாகவோ இருந்து சுற்றுச்சூழலுக்கும், அதில் வாழும் உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.

கடலில் கொட்டப்படும் தெமிழி கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் கலந்து அவற்றை உயிரிழக்கச் செய்கிறது. சுறா போன்ற மிகப்பெரிய மீன்கள் கடலில் மிதக்கும் நெகிழிகளை உட்கொண்டு உயிரிழக்கும் செய்திகள் தற்போது வாடிக்கையாகி விட்டாது.

கடலில் மிதக்கும் நெகிழிகள் சிதைவுற்று நுண்துகள்களாக மாறி நாம் உண்ணும் உப்பு மற்றும் மீன் இவற்றில் கலந்துள்ளதாகவும் அதன்மூலம் நெகிழியின் நுண் துகள்கள் மனித உடலில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகிறது

குப்பை கிடங்குகளில் நெகிழி கழிவுகள் எரிக்கப்படும். போது நச்சு வாயுக்களை வெளியிட்டு காற்று மாசுபாடு ஏற்படுவதுடன் அதை சுவாசிக்கும்போது எண்ணற்ற நோய்கள் ஏற்படுகிறது.

திறந்தவெளியில் வீசப்படும் நெகிழிகள் சிதைவுற்று மிகமிக நுண்துகள்களாக மாறி காற்றில் கலப்பதால், அதை சுவாசிக்கும் போது நெகிழி கழிவுகள் நம் நுரையீரல் வரை சென்றடைவதாதவும் ஆய்வுகள் கூறுகிறது.

இவ்வாறு நிலம், நீர், காற்று உணவு என எங்கும் நெகிழி எதிலும் நெகிழி என்றாசிவிட்ட நிலையில் ஏற்கனவே உள்ள நெகிழி கழிவுகளையும், இனி வருங்காலத்தில் உருவாகும் கழிவுகளால் ஏற்படப்போகும் பாதிப்புகளை எண்ணிப் பார்த்தால் 22ஆம் நூற்றாண்டில் இவ்வுலகில் உயிர்கள் வாழ்வது கேள்விக்குறியே.

திரு. குப்புசாமி,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறைசவூதி அரேபியா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles